நிலவின் கடைசிக்கிரணங்கள்….
சபரிமலைக்கான சாலை முப்பது வருடத்திற்கு முன்னால் இவ்வளவு அகலமாக இருக்காது. முதலில் ஒரு வருடம் பெருவழியில் போனோம். அது ஒரு அற்புதமான அனுபவம். அதற்குப் பின், சாலக்காயம்- பம்பை என்று மலைச்சாலை வழியே செல்வது எளிதாகவும் நேரம் மிச்சமுமாக இருந்தது. அலுவலக லீவுப் பிரச்சனையும் இல்லை... ஆனால் உண்மையில் பெருவழிக்கான தெம்பும் தைரியமும் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஒரு முறை போனதே பசுமையாய் நினைவில் தங்கி விட்டது. நாற்பதுமைல் காட்டுக்குள் நடப்பதும் காட்டுவழியும், சுமையும், ஏற்ற இறக்கமும், அசுகாதாரச் சூழலும் இந்த எளிய வழியை தேர்ந்தெடுக்க வைத்து விட்டது என்றே சொல்லவேண்டும்.
ஐந்தாவது முறை, எங்கள் குழு சபரிமலை சென்றுவிட்டு குருவாயூர், சோட்டாணிக்கரா, பழனி எல்லாம் சென்று வருவதாகத் திட்டமிட்டுக் கிளம்பினோம். அன்று எருமேலி போய் விட்டு பம்பை போவதற்குள் இருட்டத்தொடங்கிவிட்டது. சாலக்காயத்திற்கு முன் பிலாப்பள்ளி என்ற ஊர். பிலாப்பள்ளியிலிருந்து சாலக்காயம் வரையிலான பாதை ரொம்பக் குறுகலானது. இருள் கவியும் நேரத்திற்கு முன், அந்தப் பாதையைக் கடந்து விட வேண்டுமென்று பஸ் டிரைவர்கள் முயற்சிப்பார்கள். எதிரே வருகிற கேரளா பஸ் டிரைவர்கள் அநாயசமாக வருவார்கள். நாம்தான் ஒதுங்கி ஜாக்கிரதையாகச் செல்ல வேண்டும். பம்பை வரைதான் பஸ்செல்லும். அதிலிருந்து சன்னிதானத்திற்கு நான்கு மைல் நடந்துதான் ஏறவேண்டும். இரவில் மலை ஏறுவது சற்று வசதி. வியர்வையைச் சரிக்கட்டுகிற லேசான பனியும் அவ்வளவாய் இல்லாத கூட்டமும்,வளைந்து நெளிந்து ஏற்றமாய்ச் செல்லுகிற பாதையை, உணரவிடாதபடி இருளும் உதவிகரமாகவே இருக்கும்.
பம்பையில் இப்போது போல கட்டணக் கழிப்பிடங்கள் எல்லாம் கிடையாது. எல்லாம் திறந்தவெளியில்தான். கரையோரம் உள்ள கடைகளின் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் கொஞ்ச தூரத்துக்கு தெரியும். அதற்குப் பிறகு இருட்டுத்தான். வெள்ளம் வரும் காலங்களில் உருண்டு வந்த கற்கள் மைதானமாய் நிரவிக்கிடக்கும். இருளில் அவை காலைப் பிரட்டிவிடும். பம்பையில் எங்களை இறக்கி விட்ட பஸ், இடமிருந்தால் அங்கேயே அதற்கென காட்டைத் திருத்திப் போட்ட சமதளத்தில் நிற்கும். அதில் பெரும்பாலும் இடமிருக்காது. அதனால் வண்டியை சாலக்காயத்திற்கோ பிலாப்பள்ளிக்கோ திருப்பி அனுப்பி விடுவார்கள். சன்னிதானத்திற்குபோய் திரும்பி வந்ததும், போலீஸில் சொன்னால், இங்கிருந்து மைக்கில் சொல்லுவார்கள். அது அங்கே கேட்கும். அதற்குப்பின் பஸ் வந்து நாங்கள் அவசர அவசரமாக ஏறி, திரும்ப வேண்டும். காவல்துறையினர் நிற்கக் கூட விடமாட்டார்கள், பஸ்ஸை வேகமாகக் கிளப்புவதிலேயே குறியாக இருப்பார்கள்.
பம்பையில் இறங்கியதும், ஆற்றோரமாய் வெளிச்சம் தெரிகிற இடத்தில் இருமுடியையும், ஜோல்னாப்பைகளையும் இறக்கி வைத்துவிடுவோம். குருசாமியும், முன்பே மலைக்கு வந்து பழகிய ‘பழமலை’ச்சாமிகளும், “சாமிமார்களே, பூப்பறிக்கிற சாமிகள்(எ)ல்லாம் அதை முடிச்சுட்டு, ஜாக்கிரதையா குளிச்சுட்டு அரைமணி நேரத்தில வந்துரணும், கன்னி சாமிகள் பழமலைசாமி கூடப் போய்ட்டு இதே இடத்துக்கு வந்துடனும்” என்று சொல்வார்கள். டாய்லட் போவதைத்தான், ‘பூப்பறிக்கிறது’ என்பார்கள். பெரும்பாலும் டார்ச் லைட் கொண்டு போவோம். அதுவும் சிறிய ‘பென் டார்ச்’. அநேகமாய் அது கொஞ்ச நேரத்திலேயே உயிரை விட்டு விடும். அப்புறம் கல்லிலும் ‘பூ’விலும் மிதித்துக் கொண்டுதான் ’பூப்பறி’க்கப் போக வேண்டும். ’ஏதோ கனவு கண்டால் வெளியே சொல்ல முடியாது’ன்ன மாதிரி, எதையும் மிதித்தாலும் பேசாம நடந்துருங்க என்று பழமலை சாமிகள் சிரித்தபடியே சொல்லுவார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் காலில் எதுவும் மிதிபடாமல் இருளிலும் நடந்து விடுவார்கள்.
|
அந்த வருடம் வளர்பிறை நிலா வெளிச்சமாயிருந்தது. பூப்பறித்து, குளித்து முடித்து ஈரவேட்டியுடன் மறுபடி இருமுடிகட்டு தூக்கிக் கொண்டு மலையேறத் தொடங்கினோம். ஈர வேட்டியும் சட்டை போடாத மார்பும் கொஞ்ச தூரத்திற்கே குளிராய் இருக்கும். இருளில் ஏறுவது தெரியாமல் நல்ல ஏற்றத்தில் ஏறும்போது வேர்த்து விறு விறுக்க ஆரம்பித்ததும், அதுவே சுகமாயிருக்கும். எங்கள் குழுவில், முரளி என்று ஒரு சாமி தவறாமல் சென்னையிலிருந்து வருவார். அவர் ஒரு இஞ்சினியர். ஆள் கன்னங்கருப்பாய் இருப்பார். தாடி, மீசை, நன்றாக வளர்ந்து நீலவேஷ்டியில் அவரைப் பார்க்கையில் சாட்சாத் கருப்ப சாமி போலவே இருக்கும். ஆனால் ரொம்ப அன்பான மனிதர். கோபமே வராது. கன்னி சாமிகளையும், குழுவுக்குப் புதிதான சாமிமார்களையும், அரவணைத்துப் போவார். இத்தனைக்கும், முதல் நாள் இரவு கட்டுக் கட்டும் தினத்தன்றுதான் சென்னையிலிருந்தே வருவார். மறுநாள் இரவுக்குள் எல்லோரிடமும் நன்றாகப் பழகி விடுவார். எல்லோரும் தங்களுடைய சுமை தவிர குழுவுக்குரிய சமையல் பாத்திரங்களையும் ஆளுக்கு கொஞ்சம் சுமக்க வேண்டும். பெரும்பாலும் இந்தச் சுகமான சுமைகளை கன்னி சாமிகளிடமே ஒப்படைப்போம். தவிர குருசாமி சொல்லிவிட்டால் அது யாராயிருந்தாலும் எடுத்துக் கொள்வோம். அது ஒரு சுய கட்டுப்பாடு. பாதி மலையில் சிலர் சுமைகளைத் தூக்க முடியாமல் தவித்தால், முரளிசாமி தானே வாங்கிக் கொள்ளுவார். மிக செங்குத்தான நீலி மலை உச்சி வரும் போது முரளி சாமியிடம் ஏகப்பட்ட சுமைகள் சேர்ந்திருக்கும். அதற்குப் பின்னர், சற்று ஆசுவாசமடைந்து சுமைகளை மறுபடி அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளுவார்கள்.
கடினமான ஏற்ற இறக்கங்களில் அவர், மற்ற சாமிகள் எல்லாம் தன்னை கடக்கிறார்களா என்று பார்க்க, நின்று விடுவார். அநேகமாய் எல்லோரையும் அனுப்பிய பின் அவர் மறுபடி மலை ‘சவட்ட’த்(ஏறத்) தொடங்குவார். ஆனால் எல்லோருக்கும் முன்னால் சன்னிதானத்தில் நிற்பார். மலை ஏறும்போது நம் அருகே நம் குழுவைச் சேர்ந்தவர்தான் வருகிறார் என்று தோன்றும். ஆனால் எல்லோரும் கருப்பு அல்லது கருநீல வேஷ்டி, தாடி மீசையுடன் இருப்பதால் இரவில் வித்தியாசமே தெரியாது. கண்கள் வேறு காலிலேயே இருக்கும், திடீரென அருகில் பார்த்தால் யாரோ ஒரு அறிமுகமேயில்லாத சாமி நம்முடன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க சரணம் சொல்லிக் கொண்டு ஏறிக் கொண்டிருப்பார். ”இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு சாமி” என்றுதான் பெரும்பாலும் கேள்வி வரும், பதிலும், “இந்தா வந்துட்டு சாமி” என்று வழக்கம் போலத்தான் இருக்கும்
அந்த வருடம் எங்களுடன் குளத்தூரான் என்கிற சித்தப்பா சாமியும், ஓமநல்லூர் மணி என்கிற ‘மாமாசாமி’யும் புதிதாக வந்தார்கள். இரண்டு பேருமே எனக்கு முன்பிருந்தே மலைக்குப் போகிற பழமலைச் சாமிகள்தான். நான் வேகமாகவும் ஏற மாட்டேன், மெதுவாகவும் ஏறமாட்டேன். ஒரே கியரில் சாதாரணமாக ஏறுவேன். சிலர் காட்டுத்தனமாக ஏறுவார்கள். சிலர் ரொம்ப மெதுவாக. ஆனால் எல்லோரும் பத்துநிமிட இடைவெளியில் சன்னிதானத்தில் நிற்போம். நாங்கள் உச்சிக்கு ஏறவும் அந்த வருட நிலா அழகாக மலையில் தன் கடைசிக் கிரணங்களைப் பால் போல் பொழிந்து கொண்டிருக்கவும் சரியாய் இருந்தது. இது எப்போதாவதுதான் வாய்க்கும். அப்போதெல்லாம் ”சபரிமலையில் வண்ணச் சந்திரோதயம்....” என்று கண்ணதாசனின் வரிகள் தவறாமல் நினைவுக்கு வரும். செட்டியார் இங்கே எங்கே வந்தார் இப்படி அழகாகப் பாடி வைத்திருக்கிறாரே என்று தோன்றும். கஷ்டப்பட்டு ஏறிவந்த உடல் வருத்தம், வரிசையான விளக்குகள் மத்தியில் அந்த மந்தகாசவதனனைப் பார்த்த பின் சட்டென்று நீங்குவது ஒரு தனீ அனுபவம். ”உடலைப் பொறுத்து அறிவு என்பது அதன் செயலாற்றும் திறனே” என்னும் உண்மை சட்டென்று விளங்கும்...
மறுநாள் அருமையான ஐயப்ப தரிசனத்திற்குப் பின், மலையிறங்க தாமதமாகிவிட்டது. பம்பைக்கு வந்து சேரும்போது மாலை முற்றிலும் மயங்கி இருள் வந்து விட்டது. பஸ்ஸுக்கு இரண்டு மூன்றுமுறை மைக்கில் அறிவிப்புச் செய்தும் வருகிற வழியாயில்லை. பயணத்திட்டப்படி சீக்கிரம் கிளம்பினால்தான், குருவாயூரில் காலையில் நிர்மால்ய தரிசனம் பார்க்க முடியும். அதற்கு, ”சந்தியாகாலத்தில் நீராடி அவன் சன்னதிக்கு முன்...” காத்திருக்கிற சேர நன்னாட்டிளம் பெண்களைப் பார்ப்பது கண்ணனைப் பார்ப்பதை விட அழகு. (மலையில் நெய்யபிஷேகம் முடிந்ததும் விரதம் முடிந்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளுவோம்...எல்லாம் மனித மனம் செய்து கொள்ளுகிற சமாதானம்தானே.) போலிஸ்காரர்கள் அங்கே நாங்கள், ஐம்பது பேர் கூட்டமாய் நிற்பதைக் கண்டு வேகம் வேகமா கிளம்பணும் சாமிமாரே என்று விரட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கு உரிய பஸ்களும் மைக்கில் அழைக்க அழைக்க வந்து ஏற்றிச் சென்ற வண்ணம் இருந்தார்கள். எங்கள் பஸ் வருகிற வழியாய் இல்லை. போலீஸ் விரட்டலுக்காக, நகர்ந்து நகர்ந்து நாங்கள் வழக்கமாய் நிற்கிற “பெட்ரோல் பங்க்க்கிற்கு எதிர்த்த இடத்திலிருந்து’ தள்ளி நின்றோம்.
அப்போதுதான் ஒரு போலீஸ்காரர் சொன்னார், ”உங்களில் யாராவது இன்னொரு பஸ்ஸில் ஏறி பிலாப்பள்ளி போய் உங்கள் பஸ்ஸைக் கூட்டி வாருங்கள். டிரைவர் தூங்கிக்கொண்டு இருப்பார்,” என்றார். ஏதோ ஒரு குழுவினரை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. அதில் நானும் நம்பி என்றொரு சாமியும்...ஏறினோம். போலீஸ்காரர்தான் ஏற்றி விட்டார். அதனால்தான் ஏற்றிக் கொண்டார்கள் அந்த கேரளாவைச் சேர்ந்த குழுவினர். இருளில் பஸ் போகுமிடமே தெரியவில்லை. வேகமாக வேறு ஓட்டினார் அந்த டிரைவர்.ஒரு வழியாக பிலாப்பள்ளி தாண்டி ஒரு அரை கிலோ மீட்டர் தாண்டி இறக்கி விட்டார். சரியான இருட்டு. குளிர். ஆள் நடமாட்டமே இல்லை கொஞ்சம் தள்ளி ஒரு போலீஸ்காரர், ஒரு குறுகிய வளைவில் சில காய்ந்த காட்டு மரங்களை வெட்டிப் போட்டு தீயுண்டாக்கி அந்தக் கணப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்கையில் பாவமாயிருந்தது.கையில் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.அவர் அருகே போய், பிலாப்பள்ளி என்று இழுத்ததும், அவர், இந்த நேரத்தில் இங்க நிக்கக் கூடாது, இது கடுவா இறங்கற நேரமாக்கும், சீக்கிரமா ஓடுங்க” என்று விரட்டினார்.பஸ் வந்த பாதையில் திரும்பி வேகமாக நடந்தோம். புலி, மற்ற காட்டு மிருகங்களுக்காத்தான் துப்பாக்கி வைத்திருக்கிறார் போலிருக்கிறது. ஒரு வழியாய் நாலைந்து கடைகளும் அதன் பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும் வா வா என்றழைத்தது. அங்கே போய் பஸ்கள் எல்லாம் எங்கே நிற்கிறது என்று விசாரித்தோம். இங்கே பஸ்கள் எதுவும் இல்லை. நேற்றும் இன்றும் அவ்வளவு கூட்டமில்லாததால், பஸ்கள் எல்லாம் சாலக்காயத்திலேயே நிற்கின்றன என்றார்கள். அங்கே இடம் போதவில்லையென்றால் மட்டுமே இங்கே நிறுத்துவார்கள் என்றதும் அதிர்ச்சியாய் இருந்தது. என்னசெய்வது என்று தெரியவில்லை.
|
மணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு கேரளா அரசு பஸ் வந்து நின்றது. இதை விட்டால் இனி பஸ் கிடையாது...பேசாம பம்பைக்குப் போய் உங்க கூட்டுக்காரர்களோட சேந்துக்கோங்க என்றார்கள். அவசர அவசரமாக அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். பஸ்ஸில் எல்லா ஜன்னல்களையும் குளிருக்காக இறுகச் சாத்தியிருந்தார்கள். உட்கார இடமிருந்தும், டிரைவர் அருகே போய் நின்று கொண்டோம். தப்பித் தவறி எங்கள் பஸ் எதிரே வந்தால் நிறுத்தி விடலாம் என்று திட்டம். அது போலவே எதிரேயே வந்தது. ஆனால் நிறுத்த முடியவில்லை. ஒரு வினாடியில் கடந்து விட்டது. அடடா மாட்டிக் கொண்டோமே என்று பயமாய்ப் போய் விட்டது. வழியெங்கும் இருட்டு. குறுகலான பாதை, டிரைவர் நிறுத்தமுடியாது, இறங்கவும் செய்யாதீர்கள் என்று பம்பையில் இறக்கி விட்டார்.
மறுபடி பம்பை. அசாத்தியக் குளிர். ஒரு நீல ஜிப்பா போட்டிருந்தேன். அதை டெயிலர் பிரகாஷ் தந்திருந்தான், “குளிருக்கு அடக்கமாயிருக்கும் சாமி என்று சொல்லி ”. அதில் ஒவ்வொரு ரூபாய் நோட்டாக ஏழு ருபாய் இருந்தது. காபி, டீ என்று சாப்பிட சில்லரையாக வைத்திருந்தேன். மற்ற பணமெல்லாம் ஜோல்னாப் பையில் இருந்தது. கூட வந்த நம்பிசாமியிடம், பணம் இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கு ஆனா என்ன செய்ய என்றார். ஒன்று அவர்களைப் பின் தொடர்ந்து குருவாயூருக்கு வேறு பஸ்ஸில் போகவேண்டும். அப்படிப்போனாலும் அவர்களைப் பிடிக்க முடியாது. அவர்கள் நிற்காமல் போவார்கள். அரசு பஸ் ஒவ்வொரு ஊராக நின்று போகும். சரி வீட்டுக்கு திரும்பப் போய்விடலாம் என்றால் இருமுடி இல்லாமல் போகலாமா, என்று மனதுக்கு பயமாயிருந்தது. மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நிலா முக்கால் வாசியாக வளர்ந்திருந்து மேற்கு அடிவானத்திலிருந்து 45 டிகிரி உயரத்தில் இருக்கும். ஒன்றிரண்டான விளக்குகள், நெளிந்து மேலேகும் மலைப்பாதையில் மினுங்கிக் கொண்டிருந்தன.
கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒன்றிரண்டு குழுவினர் புதிதாக வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஏதாவது ஒரு கூரைக்கு கீழ் உட்காரலாம் என்றால், நம்மை தேடி யாராவது வந்தால் கண்டுபிடிக்கச் சிரமம். சன்னிதான நடை சாத்திய பின், அறிவிப்புகளைச் செய்யும் ஒலிபெருக்கி நிறுத்தப் பட்டு விட்டது.நான் அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேயே இருப்போம். என்றேன். பனி உக்கிரமாய் இருந்தது. வெட்டவெளியில் காலைக் கட்டி தலையை முழங்காலுக்குள் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ”கையது கொண்டு மெய்யது தழுவி...” என்ற சத்தி முற்றப் புலவர் பாடல் நினைவு வந்தது. பனம்படு கிழங்கு என்ற வார்த்தை மனதில் ஓடியது.. மனசுக்கு உடல் படும் துயரம் தெரியவா செய்கிறது. போர்த்திக்கொள்ள ஒரு துண்டு கூட இருவரிடமும் இல்லை.இருக்கிற காசை வைத்துப் புனலூர் வரை போகலாம். விடிந்து விட்டால், எப்படியாவது ஊர்க்காரர்கள் யாராவது எந்தக் குழுவிலாவது வரலாம், அவர்களிடம் பத்து ரூபாய் கிடைத்தாலும் பட்டினியாகவாவது ஊர் போய் விடலாம் என்றெல்லாம் எண்ணம் ஓடியது.
சோதனைக்கு வயிற்றைப் பிசைந்து கொண்டு வந்தது. ஆகா இது ஆபத்துல்லா என்று தோன்றியது. நம்பி சாமியிடம், ”சாமி வயிற்றைப் பிசைகிறதே” வெளியே’ போய் வரட்டுமா என்றேன். அவர் என்னை விட ரொம்பச் சின்னவர். ”சாமி, அடக்கிப் பாருங்க சாமி” என்றார்.”முடியாது சாமி, ஒன்று செய்யுங்கள், நீங்கள் இங்கேயே இருங்கள் நான் கீழே ஆற்றோரமாய் பூப்பறித்துவிட்டு வருகிறேன். எனக்கு ஒரு பத்து ரூபாய் தாருங்கள் கையில் எதற்கும் இருக்கட்டும்” என்றேன். அவர் மேலும் பயந்து விட்டார். ”சாமி ரெண்டு பேர்தான் இருக்கோம் நாமளும் பிரிஞ்சிட வேண்டாம்” என்றார்.
நான் அடக்கமுடியாமல், வந்தது வரட்டும் என்று ”நான் போய்விட்டு வந்து விடுகிறேன்”. என்று கீழே இருளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றைப் பார்த்து வேகமாய் நடந்தேன். நெளிந்து ஓடும் ஆற்றின் மேனியில் கரை விளக்குகளின் வெளிச்சம் அலைந்து ஆற்றை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது. அவை எல்லாம், தர்ப்பணம் பண்ணி வைக்க கரையோரமாய் உட்கார்ந்திருக்கும் அய்யர்களின்(!) கூடாரத்தில் இருந்த விளக்குகள். அதையெல்லாம் தாண்டித்தான் ’போக’வேண்டும். அதற்குப்பின் நல்ல இருட்டு. உருண்டையான கல்கள் காலை இடறி விட்டன. அவசரம், சுமை ஏற்றிப் போகும் கழுதைகள் ‘பூக்களை’ மேய்ந்து கொண்டிருந்தன. இருளில் ஒன்றின் மேல் இடித்துக் கொண்டேன், ‘புர்ரென்றது”. இனி நடக்க முடியாது என்று அவசரமாக் குத்துக்காலிட்டேன். பாதியில் பக்கத்தில் பெரிய கல்லாக விழுந்தது. அப்புறம்தான் புரிந்தது. அந்தக் கழுதைக்கு சொந்தக்காரர்கள், சுமை தூக்குபவர்கள், அருகே கூடாரமிட்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. மலையாளத்தில் திட்டியபடி ஒருவன் கையில் கல்லோடு அருகே வந்தான். ”அங்கூட்டுப் போடா” என்றபடி. அநேகமாய் முடித்திருந்தேன்.. இன்னொரு கல்லையும் என் காலருகில் எறிந்தான். எழுந்து கால் கழுவ ஆற்றில் இறங்கினேன். தொப்பென்று வழுக்கி விழுந்தேன். நல்ல வேளை ஆழமில்லை. ஆனால் உடை பூராவும் நனைந்து விட்டது. யாரோ ஓடி வந்து தூக்கி விட்டார். “சாமி, இவனுகல்லாம் கோட்டிக்காரப்பயலுக சாமி” என்றார். எப்படியோ அவர் கையைப் பிடித்து எழுந்து முதலில், இருக்கிற ஏழு ஒற்றை ரூபாய் நோட்டுக்களையும் பாதுகாக்க முனைந்தேன்.
“பாத்துப்போங்க சாமி நமக்கு வாசுதேவநல்லூர்தான் வருஷந்தோறும் சுமை தூக்கவும், டோலி சுமக்கவும் வந்துருவோம். இவனுகளுக்கு எங்களைக் கண்டாலே ஆகாது” என்றெல்லாம் பேசிக் கொண்டே ஜிப்பாவையும் வேட்டியையும் பிழிய உதவினார். பேர் கேட்டேன் ‘வேற என்ன, மாரிதான் ’ என்றார். வாசுதேவநல்லூரில் வீட்டுக்கு ஒரு மாரி உண்டு ஊரே மாரியாத்தாளின் ஊர்தான். ஒரு பீடி குடிக்கீங்களா என்றார் பல்லோடு பல் அடிக்க குளிரோடு நின்று கொண்டிருந்தவனுக்கு அது தேவ வாக்காய் இருந்தது, பற்ற வைக்கக் கூட முடியவில்லை. அவரே பற்ற வைத்தார்.. பசியெடுக்க ஆரம்பித்திருந்தது. அவரிடம் பத்து ரூபாய் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுவோமா என்றிருந்தது. ஆனால் அவர்கள் எல்லாம் காசை கையில் வைத்திருக்க மாட்டார்கள் அன்றன்று கிடைக்கிற காசை அங்கே ஓட்டல் நடத்துகிறவர்களிடம் கொடுத்து வைத்து விடுவார்கள். மண்டல சீசன் முடிந்து ஊர் திரும்பும் போது, ஒரு ஐயாயிரம் வாக்கில் சேர்ந்து இருக்கும், அந்தப்பணத்தை வாங்கிக் கொண்டு போவார்கள். மறுபடி மகர விளக்கு சீஸனுக்கு வந்து விடுவார்கள். நன்றி சொல்லி விட்டு நகர்ந்தேன்.
நம்பி சாமி, “அடடா இது வேற சோதனையா, சாமி, ஒழுங்கா விரதம் இருந்தமா” என்றார். சரி ஒரு டீ குடிங்க என்றார். பக்கத்தில் இருந்த கடையில் ஒரு கட்டஞ்சாயா குடித்தோம். கடைகாரரிடம் ரூபாய் நோட்டை கொடுத்து வென்னீர்ப்பானையில் ஒட்டி காய வைத்து தரச் சொன்னேன். கரியாகி விடக் கூடாதெயென்ற பயத்துடன். பாய்லர் என்றால் பரவாயில்லை, இது பானையில் கொதிக்கிற வெண்ணீர். அவர் சட்டையையும் கழற்றி தரும்படி மலையாளத்தில் சொல்லி, சைகையிலும் சொன்னார். அப்படியே ஜிப்பாவை கரி படியாமல் பானை மேல் போட்டு சற்று காய வைத்துக் கொடுத்தார். மீண்டும் வெட்டவெளிக்கே வந்தோம்.
மணி நான்கை நெருங்கி இருந்தது. முதல் அரசு பஸ் ஐந்து மணிக்கு சாலக்காயத்திற்கு வரும் என்றார்கள். அங்கிருந்து பமபைக்கு நடந்து வரவேண்டும் ஒரு கிலோ மீட்டர் போல இருக்கும். ஒன்று அதில் யாராவது வர வேண்டும். அல்லது நாம் கிளம்ப வேண்டும். நிலா மறைந்து கொண்டிருந்தது. “இது என்ன சோதனை,....என்ன தப்பு பண்ணினோம்”என்று மனம் அரற்றியது. ஐயப்பா...எப்படியும், யார் வரலைன்னாலும் இந்நேரத்திற்குள் முரளி சாமியோ, சித்தப்பா சாமியோ, வாரமல் இருக்க மாட்டார்களே என்று நினைக்கவும், மூன்று பேர், கையில் எவரெடி லாந்தர் பாட்டரி சகிதம் வந்தார்கள். கருப்பசாமி மாதிரி முரளிசாமி நடுவில். இரு புறமும், ஓமனல்லூர் மணி மாமா சாமியும் சித்தப்பாசாமியும். சித்தப்பா சொன்னார், ”நான் சொன்னேன் பார்த்தியா மணி, மகனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், எங்கயும் தேட வேண்டாம், இருந்த இடத்திலேயே காசப்ளாங்கா மாதிரி இருப்பான்” என்று. குபீரென்று முரளி சாமியைக் கட்டிக் கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்தேன். அவரும் உட்கார்ந்த வாக்கிலேயே கட்டிப்பிடித்து ஆறுதலாய். ”என்ன பழமலைச் சாமியெல்லாம்..... இப்படி.. தைரியமா இருக்க வேண்டாமா” என்றார்.. இல்லை உங்களை நினைத்தேன், நீங்க சினிமா மாதிரி வந்து நிக்கீங்க.. அதான்..“ என்று அரை குறையாய்ச் சொல்லவும், மறுபடியும் ஒரு அழுகை என்னையறியாமலே வந்தது. இந்தாங்க மருமகனே, என்று மணிமாமா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து நீட்டினார்.
ஆழமாய் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு மேற்கே மலையைப் பார்த்தேன். நிலா முழுதாய் முங்கி, அதன் கடைசிக் கிரணங்கள் தன் ஒளி ரேகையை கொஞ்சங்கொஞ்சமாய் அழித்துக்கொண்டிருந்தது. மலை முடி முற்றாக இருளில் கலந்தது.
(’இரவு’-கட்டுரைத் தொகுப்பில் வெளிவர உள்ள கட்டுரை)
|