வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


நாநா..

கலாப்ரியா  

‘நரிப்பல் நாராயணசாமி’யும் ராமமூர்த்தியும் வந்த போது, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.” என்னா தம்பீ, மாத்திரை மயக்கம் இன்னும் போகலியா” என்ற சிரிப்புடன் கலந்த குரல் கனவுக்குள் மறுபடி மறுபடி கேட்டது. “இது நரிப்பல்லின் குரலல்லவா” என்றவாறே விழிப்புத் தட்டியது. ‘நாநா’வைப் பார்க்கவே வெட்கமாயிருந்தது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்லி விடுகிறவர் அவர். கெட்ட வார்த்தைக்கு பஞ்சமே இருக்காது. பஸ்ஸை அந்தக் கடைசி நிறுத்தத்தில், சந்திப்பிள்ளையார் முக்கில், நிறுத்திவிட்டு எல்லா டவுண் பஸ் கண்டக்டர்களும், டிரைவர்களும் காபி, டீ, சிகரெட்,பீடி,வெற்றிலை பாக்கு புகையிலை என்று பத்து நிமிட ஓய்வெடுக்கிற இடமும் நாங்கள் சந்திக்கிற இடமும் அதுதான்.

ஒரு காலத்தில் ’டிஎம்.பி.எஸ்’(திருநெல்வேலி மோட்டார் பஸ் சர்வீஸ்) என்று தொழிலாளர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து ஆரம்பித்த பஸ் சர்வீஸ்தான் டவுண் பஸ்களாக ஓடிக்கொண்டிருந்தது.. டி.வி.எஸ்.கம்பெனி பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாமம் போட்ட ஐயங்கார், சதுரமான சிறிய மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட டைம்பீஸ் சகிதம் அவருக்கான ஒரு ஷெட்டில் உட்கார்ந்திருப்பார். பஸ் கரெக்டாக வரவேண்டிய நேரத்திற்கு வந்து, புறப்படவேண்டிய நேரத்திற்குப் புறப்படும். டைம்பீஸைப் பார்த்து விட்டு அய்யங்கார் நிமிர்ந்தால், கரெக்டாக வரவேண்டிய ரெண்டாம் நம்பர் பாளை பஸ்ஸ்டாண்ட் பஸ் வந்து நிற்கும். அவர் தலையை அசைத்தால், ”சரி நேரமாச்சு கிளம்பலாம்” என்று அர்த்தம், பஸ் கிளம்பிவிடும். அவர் வாய் பேசி நான் பார்த்ததே இல்லை. கூட்டம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் கூட்டமும் கிடையாது. வீரராகவபுரம் என்கிற ஜங்‌ஷனுக்கு நடந்தே போய்விடுவார்கள். அதிகம் போனால் சைக்கிள்.

மருத மர நிழலை அனுபவித்த படியும், பசுமையான வய(ல்)க்காட்டிலிருந்து வீசுகிற குளிர்ந்த காற்றை சுவாசித்தபடியேயும் ஜங்ஷன் ரோட்டில் நடப்பது பரமானந்தம் என்பார், சின்னத்தாத்தா.அப்புறம் தனியார் பஸ்கள் என்று பாலசரஸ்வதி டிரான்ஸ்போர்ட், ஆண்ட்ருஸ் பஸ் எல்லாம் வந்துவிட்டது. மூன்றாம் நம்பர், பாலசரஸ்வதி பஸ், கடிகாரம் வைத்த பஸ் என்றே பிரபலமாகிவிட்டது. அதன் உரிமையாளர் பையன் நறுவிசான நடையுடை பாவனையோடு, போத்தி ஓட்டல் முன் நிற்பார். அவர் சாப்பிடுவதும் அவ்வளவு அழகாயிருக்கும். கல்யாணியண்ணனின் வகுப்புத் தோழர். பேட்டைக்கு ஏழாம் நம்பர் பஸ்.அதுவும் அபூர்வம். அப்போதுதான் பேட்டைக்கு ‘ஷண்டிங் சைக்கிளை’ அறிமுகப்படுத்தினார், எங்கள் தெரு முனையில் வாடகை சைக்கிள்க் கடை வைத்திருந்த “வீ.ம” சைக்கிள் ஷாப் கடை முஸ்லிம் பாய். ’வீனா. மானா’ பள்ளிவாசல் மேலரதவீதியில் இன்றும் பிரபலம். அங்கே முஹர்ரம் திருவிழா விமரிசையாக இருக்கும். நான் சிறுவனாக இருந்த போது,’ அல்லாகோயில் திருழா’வான முஹர்ரம், என்றால் ஸ்கூலில் கடைசிப்பீரியட் இருக்காது. அன்று சாயந்தரம் மார்பிள் தாள் ஒட்டிய ஒரு சப்பரம் போல ஒன்றை எடுத்துச் செல்வார்கள். அதில், ஒரு உருவமுமே இருக்காது. முஹரத்துக்கு இரண்டு நாளைக்கு முன் எங்கள் தெருவில் உள்ள வீடுகளிலெல்லாம், ஒரு மௌலவி வந்து ஜீனி வாங்கிப் போவார். இந்து. முஸ்லிம் என்றெல்லாம் பேதம் கிடையாது. முஸ்லிம்களே தெருவில் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், இஸ்மாயில் சாயுபு என்று ஒருவர் மட்டும் உண்டு, அவர் கமெர்ஷியல் டேக்ஸ் ஆபிஸில் வேலை பார்த்தார்.

சீனியை வைத்து ஒரு வகையான உருண்டை செய்வார்கள். லேசான வாசனையோடு குளிர்ச்சியாக இருக்கும். முஹர்ரம் முடிந்ததும் கொஞ்சம் போல் மௌலவி கொண்டுவந்து தருவார். மௌலவி என்பதெல்லாம் இப்போது தெரிந்து கொண்ட நாமகரணங்கள். முஸ்லிம் பாய் என்றுதான் அப்போது தெரியும். இதெல்லாம் இன்றைக்கு ஐம்பது வருஷத்துக்கு முந்திய சமாச்சாரம்.

வீனாமானா ஷண்டிங் சைக்கிள்கடை பேட்டையிலும் உண்டு. அங்கே சைக்கிளை எடுக்கும் போது ஒரு சிகரெட் அட்டையில் அந்நேரத்தைக் குறித்து, ஒரு தேதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் நன்கு அறிமுகமானவர்களுக்கே சைக்கிளை வாடகைக்கு கொடுப்பார்கள். சைக்கிளை இங்கே வந்து ஒப்படைத்துவிட்டு அரைமணிநேர வாடகை பத்துப் பைசா என்றால் இருபது பைசா தரவேண்டும். இரண்டு மடங்கு வாடகை. கொஞ்ச நாளைக்கு ’வீ.ம ஷண்டிங் சைக்கிள் ஷாப்’ பிரபலமாய் இருந்தது. ஒன்றிரண்டு சைக்கிள் காணாமல்ப் போய்விட்டது. அதோடு அதை நிறுத்தி விட்டார்கள். கதை வேறெங்கோ போகிறது. ’நாநா’வும் ராம மூர்த்தியும் செத்துப்பிழைத்த என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். இரண்டு பேருமே யூனிஃபாரத்தில் இருந்தார்கள். பஸ்ஸை நிறுத்திவிட்டு சாப்பிடுகிற நேரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. பெண்கள் கல்லூரியின் இரண்டாவது ட்ரிப்பை முடித்து வந்திருக்கிறார்கள்.

காலையில் ஏழே முக்காலுக்கு அந்தக் கல்லூரிக்கான முதல் ட்ரிப். அதில்தான் எனக்கு ’வேலை.’ அவள் கல்லூரிக்கு காரில் போகாத நாளன்று சீக்கிரமே இந்த ட்ரிப்பில் போய் விடுவாள். ஜங்ஷன் வரை பத்திரமாகக் கொண்டு சேர்த்து விட்டு, டவுணுக்கு வருகிற இன்னொரு பஸ்ஸில் பரசு கண்டக்டராக ஓடுவான், அதில் ஏறி திரும்ப வந்து என் கல்லூரிக்கு சைக்கிளில் மிதிக்க வேண்டும்.எட்டேமுக்காலுக்கு, ரெடியாய் கல்லூரித் தோழர்கள் வீட்டருகே நிற்பார்கள், “வாலெ படிக்கிற ஜோலியப் பாப்போம்” என்பான் ஒருவன். ”இப்பத்தான் அவன் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சுட்டானே.. மினர்வா கைடெல்லாம் வாங்கியிருக்கான்..” என்று இன்னொருவன் கிணடலடித்துக் கொண்டே வர, மேற்காக சைக்கிளை மிதிப்போம். மினர்வா கைட் ஆங்கிலத்திற்கு ரொம்பத் தரமானது. நடையே கடினமாயிருக்கும். இரண்டாவது வருடம்தான் அப்போதெல்லாம் பல்கலைத் தேர்வுகள். முதல் வருடம் பூராவும் தேர்வுகளே கிடையாது. ஒரே சினிமா, ஊர்சுற்றல் என்று கொண்டாட்டமாய்க் கழியும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சினிமாவுக்கு மத்தியானம் கல்லூரியைக் கட் அடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். அதற்கு ஆட்களைக் கிளப்புவது என் முக்கியமான பணி.

மதுரை திரவியம் தாயுமானவர் - இந்து கல்லூரி

இவளைப் பின் தொடர ஆரம்பித்த பின், ”சினிமாவாவது ஒண்ணாவது, மூச்சு விடாதிங்கடா” என்று ஒதுங்கி விடுவேன். ”ஏல, எங்களையெல்லாம் என்ன ஏச்சு ஏசி படத்துக்கு இழுத்துட்டுப் போவே, இப்போ வெத்திலை பாக்கு வச்சு அழைச்சாலும் வர மாட்டேங்கே...” என்று திட்டுவார்கள். நான் காதிலேயே வாங்க மாட்டேன்..: ”ஏல ஆக்கங்கெட்ட கூவை ,’சிநேகிதி’, ’ஐந்துலட்சம்’ மாதிரி காமெடி படமாம்டா, வாடா போவோம்...” என்று அந்த ரவுண்ட் ஹாலின் ஜன்னலெட்டிக் கூப்பிடுவார்கள். தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்து கொள்வேன். ஆங்கில ஆசிரியர் கூட கிண்டலாகச் சொல்லுவார், ”பார்வதி டாக்கீஸில் பெல்லடிச்சாச்சுச்சு நீ போகலியா இன்னும்” என்று. அவருக்கும் சிரிப்புத்தான் பதில். ”இப்பல்லாம் நாப்பது மார்க் வாங்கிருதே, அனொட்டேஷன்ல்லாம் நல்லா எழுதுதே, இப்படீப் படிசேன்னா பி, பி ப்ளஸ் வாங்கிருவே, விட்டுராதெ.. ”என்பார். ”ஆஹா, என்ன மாயமெல்லாம் பண்ணுதுப்பா இந்தப் பொட்டப்பிள்ளை நினைப்பு..” என்று குரல் ஜன்னலருகிலிருந்து வரும், வெளியே சினிமாப் போக காத்துக் கொண்டிருக்கும் தோழர்களிடமிருந்து. ஒரு காலத்தில் நான் அங்கே நின்று, ”ஏல வாலே வெளியே “என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவன்.

’நாநா’, ”தம்பி இந்தாங்க” என்று ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலை நீட்டினார். அண்ணாச்சி இதெல்லாம் எதுக்கு, என்றேன் கண்ணில் நீர் கோர்த்தது. ’நாநா’ சற்று வயதான ஆள். கண்டக்டராக ஓடுபவர். பெண்கள் கல்லூரிப் பஸ்ஸில் அவரைத்தான் போடுவார்கள். யாரையும் ஃபுட் போர்டில் நிக்க விட மாட்டார். பெரும்பாலும், பஸ் புறப்படும் போது தொற்றி ஏறும் பசங்களைத் திட்டுவார். பட்டென்று பஸ்ஸை நிறுத்திவிட்டு. ”ஏம்ல அரைக் கிலோ கறிக்கும் அஞ்சாறு மயிருக்கும் இந்தா அலை அலயுதீங்க, ” என்று. பெண்கள் எல்லாம் தலையைக் கவிழ்ந்து சிரிப்பார்கள். பஸ்ஸில் பிள்ளைகளை யாராவது ‘எர்த்’அடித்தால்(காலால் உரசுதல்) பிள்ளைகள் அவரிடம் சொல்ல, அவர் எழுந்து சண்டைக்குப் போய் விடுவார். ”ஏல, என்ன, பூடம் தெரியாம சாமி ஆடுதீங்களா உன்னிதையும் உங்க ஐயா இதையும் சேர்த்து அறுத்துருவேன் ” என்று. ஆனால் ராம மூர்த்திதான் பெரும்பாலும் கண்டக்டர், அதனால எனக்கும் இன்னொருவனுக்கும் சலுகையுண்டு.. பொதுவாக எல்லா கண்டக்டர்களும் எங்களிடம் நன்றாகப் பழகுவார்கள். இவையெல்லாமே தனியார் பஸ்கள். சம்பளம் ரொம்பக் குறைவு. கலெக்‌ஷன் பேட்டாதான். ராம மூர்த்தியும் பரசுவும் ஆள் நரையானாய் (ஒல்லியாய்) இருப்பார்கள். அதனால் எவ்வளவு கூட்டமென்றாலும், புகுந்து புறப்பட்டு டிக்கெட் தந்து விடுவார்கள். சமயத்தில் ரூட் மாறி கூட பஸ்ஸை ஓட்டி வருவார்கள். இன்று வாத்தியார் படம் எப்போ விடுகிறது என்று நாங்கள் சொல்லிவிடுவோம், ஏனென்றால் எப்போ படம் போட்டார்கள் என்று எங்களுக்குத்தான் தெரியும். சனி, ஞாயிறு கூட்டம் அதிகமிருந்தால் ஆறு மணிக்காட்சியை முன்னதாகவே போட்டு விடுவார்கள்.அதை அனுசரித்து பரசு, பஸ்ஸை தியேட்டர் முன்னால் தேய்த்துக் கொண்டிருப்பான். பயணிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்து விடுவான். எங்களுக்கு டிக்கெட்டெல்லாம் கிடையாது.

எங்கே வேணும்ன்னாலும் இறங்கிக் கொள்ளுவோம்.செக்கிங் வந்தால் மட்டும் டிக்கெட்டை கிழித்து வைத்துக் கொள்ளுவான். கூட்ட நேரத்தில் நாங்களே இன்வாய்ஸ் எழுதுவோம் அவர்களுக்காக. பொதுவாக டிக்கெட் கொடுப்பதில் சில தில்லுமுல்லுகள் இருக்கும், அது எங்களுக்கும் தெரியும். அதனாலும் சலுகைகள் உண்டு. ராமமூர்த்தி சிந்து பூந்துறையில் இருந்தான். அவன் அம்மாவுக்கு, அவனுக்கு கல்யாணம் செய்து வைக்க அப்படியொரு அவசரம். போகிற போதெல்லாம் சொல்லுவாள். தம்பி, இந்தக் காலேஜ் புள்ளைங்க யாரையாவது பார்க்கானா தம்பி, கல்யாணம்ன்னா ஒத்துக்கவே மாட்டேங்கானே, நீங்களாவது படிக்கிற புள்ளைங்க, இவனுக்குத்தான் வேலை இருக்கே, அதும் இவன் மாமா கம்பெனிதானே.. அப்படியொன்னும் நிப்பாட்டீர மாட்டாங்க....” என்று. மாமாட்ட பொண்ணு இல்லையாம்மா என்போம். ”அதெல்லாம் ஓவரான ஆசை” என்பாள்.

அன்றும் ராம மூர்த்தி சொன்னான்,” அம்மா ரொம்ப வருத்தப்பாட்டாங்கப்பா, அந்த தம்பியா இப்படி மாத்திரை சாப்பிட்டுச்சு” என்று கேட்டதாக. நாநா, ’’என்ன தம்பி, சும்மா புள்ளைய தூக்கிட்டுப் போயிர வேண்டாம்....நான்ல்லாம் அந்தக் காலத்துல நாலு மைலு வாழைத்தோப்பு வழியா தூக்கிட்டு ஓடிருக்கேன், அப்படியொன்னும் அவ சுந்தரியில்லையே, இவன் நேத்த்துதான் காமிச்சாண்” என்றார். மீசையை சரியாக ஒதுக்கவில்லை. அதனால் அவர் முகத்துக்கு வெளியே அபூர்வமாய் முளைத்திருக்கும் ஒரு பல் விகாரமாய்த் தெரிந்தது. அவருக்கு அதிசயமாய் ஒரு மேல் வரிசைப்பல் வாய்க்குள் இல்லாமல் முகத்தின் வெளிப்புறத்தில் இருக்கும். அதை மீசையை பெரிதாக வளர்த்து மறைத்திருப்பார். அதனாலேயே அவருக்கு நரிப்பல் நாராயணசாமி என்று பட்டப்பேர். அதுவே சுருங்கி நாநாவாகி விட்டது. அவரை யாராவது சக பஸ்தொழிலாளிகள் கிண்டலடித்தால் ” இன்னொரு பல் இருக்கு பாக்கியா” என்று சட்டையத் தூக்கி அரைநான்கயிற்றால் கட்டியிருக்கும் பேண்டின் இடுப்பு பகுதியை அவிழ்ப்பது போல் முயற்சிப்பார்.. ”எய்யா நீரு காமிச்சாலும் காமிச்சிருவேரு’’ என்று ஓடி விடுவார்கள். இல்லையென்றால் மீசையை ஒதுக்கி பல்லைக் காண்பித்து, ”ஆமாலெ தேச்சு விடு வாலே,”என்பார்.

கண்டக்டர்களிடம் ஒரு பழக்கம். கையில் வள்ளிசாக காசில்லையென்றால், தொப்பியைக் (அது பெரும்பாலும் பைக்குள்தான் இருக்கும்) கழற்றி சக கண்டக்டர்களிடம் நீட்டி ”கவனிக்கிறது.....”என்பார்கள். மற்றவர்கள் மறு பேச்சுப் பேசாமல் இரண்டு ரூபாய் கொடுத்து விட வேண்டும். ஒரு வகையில் இது மொய் விருந்து மாதிரி. ரொம்ப முடியாத பட்சத்தில்தான் இப்படிச் செய்வார்கள். கொடுக்கிறவனிடம் காசில்லையென்றாலும் கலெக்‌ஷனிலிருந்தாவது கொடுத்து விடவேண்டும். அவன் வேறு யாரிடமாவது இதே போல் வாங்கிக் கொள்ளுவான். இரண்டு ரூபாய் மட்டுமே என்பது எழுதப்படாத விதி. கூடவும் கூடாது குறையவும் செய்யாது. இது கடனில்லை. டிரைவருக்காகவும் கண்டக்டர்கள் கேட்பதுண்டு.

நாநா தொப்பிக் காசு கேட்கவே மாட்டார். ராஃபேல் எப்போதும் நாநா சீட் எதிரே உள்ள நீள சீட்டில் உட்காருவாள். அவள் அம்மா ஒரு நர்ஸ். அவர் பிரசவம் பார்க்காமல் எங்களில் 90 சதவிகிதம் பேர் பிறந்திருக்க மாட்டார்கள். சிறு வகுப்பில் ஒரே ஒரு வருடம் எங்களுடன் படித்தாள். நாநா சொல்லுகிற பச்சைபச்சையான ஜோக்குக்கெல்லாம் சத்தமாகச் சிரிப்பாள். கருப்பாய் இருந்தாலும் லட்சணமாய் இருப்பாள். தலை முடியை பலவிதமாக அலங்காரம் செய்து கொள்ளுவாள். அவள்தான் சொன்னாள் “நீ எதற்கு அந்த அழைப்பிதழை ’செல்லா’ மூலம் கொடுத்துவிட்டாய். என்னிடமாவது கொடுத்திருக்கலாம். நான் தனியாகக் கொடுத்திருப்பேன், எல்லார் முன்னிலையிலும் கொடுத்ததால் அவள் அதை கிழித்துப் போட்டு விட்டாள்” என்று. அது கல்லூரியில் நடந்த வள்ளுவர் ஈராயிரம் ஆண்டு விழாவுக்கான அழைப்பிதழ். பல நண்பர்களும், ஒரு நண்பனின் தங்கை மூலமாகப் பலருக்கும் கொடுத்து விட்டார்கள். நானும் அவளுக்குக் கொடுத்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்து ராஃபேல், பஸ் படியில் நின்று கொண்டு பயணம் செய்த என்னிடம் இதை மெதுவாகச் சொன்னாள். அன்றுதான் எங்கள் கல்லூரியின் கடைசித் தினம். நான் அதைக் கேட்டதும் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டேன். உடலை என்னவோ செய்தது. ராஃபேல் “ ஏய், ஏய் ”என்று கூப்பிட்டது கிணற்றடியில் இருந்து கூப்பிடுவது போல் கேட்டது.

ஆயிற்று அதெல்லாம் கழிந்து இன்னுமொரு மாதம். இதோ தேர்வும் எழுதாமல் பதினாறு தூக்க மாத்திரைகளை விழுங்கி தப்பிப் பிழைத்துப் படுத்திருக்கிறேன். நாநாவும் ராம மூர்த்தியும், சாப்பாட்டைத் தியாகம் செய்துவிட்டு பார்க்க வந்திருக்கிறார்கள்.நாநா சொன்னார், ”நல்ல வேளை தம்பி, அன்னக்கிப்பாத்து இவன் ஹைகிரவுண்ட் வண்டியில ஓடிட்டிருந்தான். வீட்டில உன்னைய சோதிச்ச டாக்டரோட சீட்டில்லாமல் ஹைகிரவுண்டில சேக்க மாட்டாங்களாமில்லா, அதை எடுத்துகிட்டு உன்னோட ஃப்ரென்ட்ஸ்ங்க ரோட்டுக்கு ஓடீ வரவும், இவன் வண்டியக் கிளப்பவும் சரியா இருந்திருக்கு. போர்டைக் கழட்டிட்டு வண்டிய எங்கயும் நிப்பாட்டாம ஹைகிரவுண்டுக்கே கொண்டு வந்துட்டான். இந்தா மெம்மோ வாங்கீட்டு நிக்கான்” என்றார். என்னப்பா உண்மையா என்றேன்,. ”அதெல்லாம் இல்லை. நீ ரெஸ்ட் எடு” என்றான் “நாநா அதிசயமா, தொப்பிக் காசு சேர்த்து உனக்கு ஹார்லிக்ஸ் வாங்கீட்டு வந்திருக்காரு சாப்பிடு.,” என்றான் சிரித்தபடியே....”மேகம் வந்தவ தீட்டு மாதிரி ஒன்னொட வாய் நிக்கவே செய்யாதுலெ.. வாலே,” என்று ராம மூர்த்தியை இழுத்துப் போனார் நாநா.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.