“லங்கொட கோடா”.....
இப்பொழுது போல் அவ்வளவு பஸ் வசதிகள் கிடையாது அப்பொழுது. ஒன்றிரண்டு எக்ஸ்பிரஸ் பஸ்கள்தான். அதுவும் சென்னையிலிருந்து வரும். இரவில் பத்து மணி வாக்கில் ஒரு பாஸஞ்சர் ரயில் புறப்படும்.அது காலை ஐந்து மணி வாக்கில் ஊர் வந்து சேரும். ஜங்ஷனிலிருந்து டவுணுக்கு சிட்டி பஸ் போக்குவரத்து ஆரம்பிக்க ஆறு மணி ஆகி விடும். அதனால் பெரும்பாலும் சுல்தானியா ஓட்டலில் ஒரு டீ குடித்து விட்டு “நடடா ராஜா நடடா” என்று நடந்து விடுவேன்.கிட்டத்தட்ட மூன்று மைல்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான ரயில்வே தொழிற்சங்கம் ஒரு பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது. ஒரு வாரம் போல ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் ஏகப்பட்ட சாதாரண பஸ்களை மாநில அரசு இயக்கியது, (இந்திராவின் ஆலோசனைப்படி. ஆனாலும் ஆட்சி பின்னால் கலைக்கப்பட்டது) அதிலிருந்துதான் 100 மைல்களுக்கு அப்பால் உள்ள ஊர்களுக்கும் சாதாரண பஸ்கள் தொடர்ந்து,அதிகமாக இயக்கப்பட்டன.அது பெரிய வசதியாகி விட்டது. மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து கொண்டிருந்தவன் வாராவாரம், வாரமிருமுறை என்று ஊருக்கு வந்து விடுவேன். அப்போதுதான் வேலையும் கையை விட்டு போய்க் கொண்டிருந்தது. ஆனித்திருவிழாவையொட்டி ஊரில் பொருட் காட்சி தொடங்கியிருந்தது.
பதின் வயதில் பொருட்காட்சியைப் போல் சந்தோஷம் தரும் விஷயம் எதுவும் கிடையாது. சாயந்தரமாகி, பொருட்காட்சிக்குள் நுழைந்தால் ஒவ்வொருவனின் ‘புறா’வையும் கூட்டமாகப் பின் தொடர்ந்து ‘பத்திரமாக’ வெளியே அனுப்பி விட்டு அடுத்த புறாவின் பின்னால் அலையத் தொடங்கும் ‘பொறுப்பான’ உத்தியோகம். ”ஏண்டா இப்படி பின்னாலேயே வந்து தொலைக்கிறீங்க” என்ற வெறுப்பான பார்வையைக் கூட “ஆஹா அவ நம்மளைப் பாக்காடா” என்று எடுத்துக் கொண்டு வெட்கமில்லாமல் திரிவோம். ஓரிரு சமயம் ஒன்றிரண்டு பேருக்கு கனிவான பார்வையும் கிட்டி விடும்., அன்று பூராவும் அவன் தலை கீழாய்த்தான் நடப்பான்.இதெல்லாம் இருபது வயதுக்கு முந்திய,கல்லூரி வாழ்க்கையை ஒட்டிய நடைமுறை. இருபதுகளில், வேலை தேடிக் கொண்டிருந்த காலங்களில் நடைபெற்ற பொருட்காட்சிகள் அவ்வளவு சோபிக்கவில்லை. அதற்குள் ‘இன்னாருக்கு இன்னாரென்று’ கரை ஒதுங்கி, கரையத் தொடங்கிய காலம் வந்து விட்டது. நான்,
அவளின் பார்வைகள்
காயங்களுடன்
கதறலுடன்
ஓடி ஒளியும் ஒரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்.- என்று கவிதை எழுதி புலம்ப ஆரம்பித்து விட்டேன்.
இன்னும் ஓரிரு நாட்களில் பொருட்காட்சி ஆரம்பிக்க இருந்தது. வேலையற்றவர்களாய்,தெருவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.அப்போதுதான் சித்திரைப் பொருட்காட்சி முடிந்திருந்தது. அது முடிந்த கையோடு ஸ்டால் போடுபவர்கள் ஆனித்திருவிழாவுக்கு வந்து விடுவார்கள்.இது முடிந்தால் தூத்துக்குடி மாதா கோயில் திருவிழா பொருட்காட்சி. இல்லையென்றால் குழித்துறை வாவுபலி பொருட்காட்சி. ஸ்டால்காரர்களின் வாழ்க்கையே ஒரு பெரிய நாவல் எழுதக் கூடிய அளவு சுவாரஸ்யம் கொண்டவை. சித்திரைப் பொருட்காட்சிக்குச் சென்று வந்திருந்த ஒருவன், “நம்ம ஏதாவது ஸ்டால் போடுவோமா” என்று கேட்டான்.அப்பொழுதுதான் மாநகராட்சி தேர்தல்கள் முடிந்து நாங்கள் வேலை பார்த்த கட்சி நகராட்சியில் அசுர பலத்துடன் இருந்தது.அதனால் ஒரு ஸ்டாலைக் கேட்டால் கவுன்சிலர் உதவுவார் என்று நினைப்பு. ”தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதில்லையா”.ஸ்டால் போட பணம்...? என்று மற்றொருவன் இழுக்க,அவன் திட்டத்தைச் சொன்னான்.நமக்கு ஸ்டால் எல்லாம் வேண்டாம்.மைதானத்தில் பத்துக்குப்பத்து இடம் போதும். கொஞ்சம் பலகைகள் வைத்து ஒரு மேஜை போல, ஒன்று. அப்புறம் நூறு ரூபாய்க்கு சில்லறைகள், கொஞ்சம் செம்பு அல்லது இரும்பு வளையல்கள். நாலு புறமும் கனத்த பந்தல் கம்புகளால் தடுப்பு கட்டி வைக்க வேண்டும் அவ்வளவுதான்.
மேஜையில் நாணையங்களை ஒட்டிவிட வேண்டும். ஒரு ரூபாய்க்கு மூன்று வளையங்கள்.வளையத்தை வாங்குபவர்கள் கம்புக்கு அப்புறம் நின்று ஒட்டிவைக்கப்பட்ட காசுகளின் மீது வளையத்தை எறிய வேண்டும் காசின் மீது சரியாக வளையம் விழுந்தால், அது எவ்வளவோ அதைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ரூபாய் ‘கம்பெனிக்கு’. பெரும்பாலும் வளையத்திற்குள் காசு வருமாறு யாராலும் எறிய முடியாது, என்றான். ஒரு சாவி வளையத்தை வைத்து தெருவிலேயே பரீட்சை செய்து பார்த்தோம்.யாராலும் வளையத்திற்குள் காசு வரும் மாதிரி போடமுடியவில்லை எல்லோருக்கும் இது பிடித்திருந்தது. யோசனை சொன்னவன் ரொம்ப துணிச்சலானவன். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அப்போதைய காங்கிரஸ் எம்.பி வீட்டிலேயே ஏறி கருப்புக் கொடி கட்டியவன்.தீவிரமான கட்சி அபிமானி.கவுன்சலரிடம் சாயங்காலம் எல்லோரும் போய் ஸ்டால் கேட்பது என்ற .’இனிமையான’முடிவுடன் மதியச் சப்பாட்டுக்கு ‘சபை’ கலைந்தது.
நான் சாப்பிட்டுவிட்டு, ”தேடிவந்த மாப்பிள்ளை” என்று நினைவு, மாட்னி வசூல் என்னவென்று பார்க்க லெக்ஷ்மி தியேட்டருக்கு கிளம்பினேன்.பொதுவாக இந்த’சோலி’க்கு யாரும் என்னுடன் வரமாட்டார்கள்.போகும் வழியில் சேர்மன் வீட்டின் முன், பெரிய கார் ஒன்று நின்றது,கேரளா பதிவு எண்ணுடன். ஒரே பரபரப்பாய் இருந்தது.ஒன்றிரண்டு தெரிந்த தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள் . என்ன விஷயம் என்று விசாரிக்காமலே சொன்னார்கள்.வந்திருந்தது சங்கணாச்சேரி முனிசிபல் சேர்மன்.ஸ்கில் கேம்ஸ் என்ற பெயரில் பொருட்காட்சிகளில் பலவகை கேம்ஸ் , ரிக்கார்ட் டான்ஸ் எல்லாம் நடத்துவதில் கேரளாவில் ‘ரொம்பக் கெட்டிக்காரர்’ என்று சொன்னார்கள்.இந்த வருடம் ஆனித்தேரோட்டப் பொருட்காட்சியில் தம்போலா, பின்(டார்ட்) எறியும் விளையாட்டு என்று புதிது புதிதாக வரப்போவதாகப் பேசிக் கொண்டார்கள்.
அதுவரை சினிமா தியேட்டர் முன்னால் மூனு சீட்டு, வட்டமாக வெட்டிய சிகரெட் அட்டையில் எண்கள் எழுதி கவிழ்த்துப் போட்டிருப்பார்கள். பத்துப்பைசா கொடுத்து அதில் ஆறு அட்டைகள் எடுத்து அதன் எண்ணிக்கையைக் கூட்டினால் வரும் எண்ணுக்கு. என்ன தொகை என்று ஒரு சார்ட்டில் குறித்திருக்கும்.அதைத் தருவார்கள் நீங்கள் என்ன விதமாக ஆறு அட்டைகள் எடுத்துக் கூட்டினாலும், அதில் முக்கால் வாசிக்கு மேல் ‘பிளாங்கி’யாகத்தான் இருக்கும். இது போக, பர்மா அகதிகளாக வந்த நிறையப் பேர் அறிமுகப் படுத்திய ’ரூலெட்’ என்று, கொஞ்சமான சூது விளையாட்டுக்களே நகருக்கு அறிமுகம்.நாங்கள் போட உத்தேசித்திருந்த வளையம் எறியும் விளையாட்டு வெறும் ஜுஜுபி என்று புரிந்தது.அதற்கும் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிருப்பதாகச் சொன்னார்கள். நான் அவர்களிடம் எங்கள் ’மகத்தான யோசனை’யைச் சொல்லவில்லை.சாய்ந்தரம் கவுன்சிலரைப் பார்க்க அழைத்த போது, ”போங்கடா, அதெல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு நடக்கு, எக்ஸிபிஷன் வரட்டும் பாருங்க” என்று சொன்னேன்.அப்படியும் சிலர் கவுன்சலரிடம் கேட்டு, அவர் அந்த ஸ்டால்ல வேலை வாங்கித் தருகிறேன் பத்து ரூபாய் சம்பளம் என்றாராம்.அதையும் வேண்டாமென்று வந்து விட்டார்கள். அப்புறம் இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து தெரிந்தது, அது எவ்வளவு மடத்தனம் என்று.
பொருட்காட்சி ஆரம்பித்ததும்தான் தெரிந்தது. செங்கணாச்சேரி பார்ட்டியின் பிரலாபங்கள். ரிக்கார்ட் டான்ஸுக்கும், மாடல் ஸ்டுடியோவிற்கும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. தினசரி, பிரபல நடிகர்கள் நடத்தும் நாடகங்கள் கூட படுத்துவிட்டன.பெரிய பெரிய அரங்குகள் மாதிரி அமைத்து ’பின் எறிதலும்’ ’தம்போலாவும்’ நடந்து கொண்டிருந்தது. சில பெரியவர்கள் சொன்னார்கள், ’இதெல்லாம் அரதப் பழசுடா,அந்தக்கால ’பாம்பே ஷோ’விலேயே உண்டுடா’’என்று. இது இரண்டு மூன்று வருடம் தொடர்ந்தது.சேர்மனும் கவுன்சிலர்களும் அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அப்புறம் அதுவே பழகி விட்டது.கூட்டத்தோடு கூட்டமாக ரிக்கார்ட் டான்ஸ், மாடல் ஸ்டுடியோ (சினிமாப் படம் எப்படி எடுக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்களாம். ஆனால் அதுவும் ரிக்கார்ட் டான்ஸ்தான்.)எல்லாம் ஒளிந்து ஒளிந்து பார்த்துவிட்டு வந்தோம்.வேறென்ன செய்ய முடியும்.
|
தம்போலா ரொம்ப பிரபலமாகிவிட்டது.எட்டணாவுக்கு ஒரு டிக்கெட்வாங்க வேண்டும். அதில், மூன்று வரிசையில் விட்டு விட்டு எண்கள் இருக்கும்.ஒரு ஷோவுக்கு ஐநூறு டிக்கெட்டிற்கு மேல் விற்பார்கள்.விற்பனை முடிந்து மணி அடித்ததும் ஆட்டம் ஆரம்பிக்கும். மைக்கில் அறிவிப்பார்கள் ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது, என்று. ஒருவர் ஒரு குடுவையிலிருக்கும் டோக்கன்களை குலுக்கி எதையாவது எடுத்து அதிலுள்ள எண்ணை வாசிப்பார். நாம், நம் டிக்கெட்டில் அது இருந்தால் அதை சாக்பீஸால் அல்லது பேனாவால் ‘டிக்’ செய்ய வேண்டும்.இப்படியே அவர் ஒவ்வொன்றாக எடுத்து தொடர்ந்து வாசிப்பார், நமது டிக்கெட்டில் ஏதாவது ஒரு வரிசையின் எண்கள் அனைத்தும் அடிபட்டால், “எங்கிருந்தாவது ஒரு கூச்சல் வரும்,அடிச்சாச்சு” என்று. பெரும்பாலும் ஒரு பைத்தியக்காரத் தோற்றமுள்ள ஒருவர் ஓடிவருவார்.அவருக்கு நூறு ரூபாய் பரிசு கிடைக்கும்.இன்னும் அவருக்கு சான்ஸ் உண்டு.இன்னும் வாசிப்பார்கள்.இன்னொரு வரிசை யாருக்காவது முழுதுமாய் அடிபடும், அவருக்கு நூறு ரூபாய். மூன்று வரிசையும் எப்போதாவதுதான் யாருக்காவது அடிபடும், அவருக்கு முன்னூறு ரூபாய் பரிசு.முதலில் இதற்கு கூட்டம் சேரவில்லை. போகப்போக பொருட்காட்சியின் பாதிக்கூட்டம் இங்கேதான் இருந்தது. மூடை முடையாக சாக்பீஸ் துண்டுகள் ஒவ்வொரு நாளும் செலவாகியது.பரிசு விழாத சீட்டுக்கள் பொருட்காட்சியெங்கும் சிதறிக் கிடந்தன. ராசியான இடத்திற்கு வெட்டுப்பழி குத்துப்பழியாய் சண்டை. சிலர் சீட்டுக்கு அடியில் வைத்து டிக் அடிக்க வசதியாய் சிறு சிறு அட்டைகள் கொண்டு வந்தார்கள். சிலர் அதை விற்பனை செய்து பிழைப்புத் தேடிக் கொண்டார்கள்.
சிலர் அட்டைக்குப் பதிலாய் செருப்பில் வைத்து டிக் செய்தார்கள்.எங்களுக்குப் பழக்கமான பார்பர், ’பெருமாள்’ கடையை எப்போடா அடைப்போம் என்று ஓடி வந்து விடுவார்.அவர் கடையில் மின்சாரம் கிடையாது.காற்றோட்டமான கடை.என்னைக் கண்டு விட்டால் போதும் தம்பி உங்க செருப்பை இங்கனெ கழட்டிப் போடுங்க என்று என்னைக் கூப்பிட்டு அருகே உட்கார வைத்துக் கொள்ளுவார்.அதில் வைத்து டிக் அடித்த ஒரே ஒரு நாள் அவருக்கு இருநூறு ரூபாய் கிடைத்ததுதான் காரணம்.ஒருவர் ஒரு டிக்கெட் வாங்கியது போய் பத்து டிக்கெட்டுகள் வரை வாங்கி, துணைக்கு ஆள் வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள். பொழுதுபோக்கு என்பதெல்லாம் பழங்கதையாய் ஆகி பொருட்காட்சி என்றாலே “ஸ்கில் கேம்ஸ்”என்று ஆகி விட்டது.
நான் ஊரிலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கிய போது, மணி எட்டுத்தான் ஆகியிருந்தது.அன்றுதான் அந்த வருடப் பொருட்காட்சி ஆரம்பமாகி இரண்டு மூன்று நாள் ஆகியிருந்தது.. வழியிலேயே, பையோடு உள்ளே நுழைந்து விட்டேன். ஒருவாரம் லீவு எடுத்திருந்தேன். இந்த வருடம் ஆச்சரியமாய், தெருவில் உள்ள உறவினர் இருவர் லட்சக்கணக்கில் முதல் போட்டு பல விளையாட்டுகளை எடுத்திருந்தனர். அதில் வேலைக்கு இருந்ததெல்லாம் வேலை கிடைக்காத நண்பர்கள். மற்றவற்றில் அற்புதமான ’கேரளாக்கன்னிகள்’. ‘அம்மிணி’ அதில் ஒன்றில் நின்று கொண்டிருந்தாள்.அவளெல்லாம் அப்படி நிற்க வேண்டிய அழகில்லை.சுருண்டமுடியும், வெண்ணிறமும்,மெல்லிய சங்கிலியும், சந்தனக்கீற்றுமாய் அப்படியொரு அழகாய் இருந்தாள்.பச்சாதாபமாய் இருந்தது.கொஞ்ச நேரம் அவளையே அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.”ஏல விடுரா, அதை ஏற்கெனவே ஏற்கெனவே அவன் ப்ராக்கெட் போட்டுட்டாண்டா” என்று ஒரு நண்பனின் பெயரைச் சொல்லிப் பின்னாலிருந்து சில நண்பர்கள் முதுகில் தட்டினார்கள். அதைக்கேட்டு அம்மிணி சிரித்தாள்.அவனும் ரொம்ப அழகாயிருப்பான். அவள் அவனிடம் மயங்கியதில் ஆச்சரியமில்லை. ” ஏண்டா மூனு நாளில் என்னடா நடந்துருக்கு இங்க” என்றேன். ”வா சொல்லறோம்” என்று ரவுண்ட் போக ஆரம்பித்தோம்.”பையில என்னமும் இருக்கா” என்றான், இருப்பதிலேயே வளர்ந்தவன். இருந்தது.
”வா தம்போலா பக்கம் போயிரலாம்” என்று ஒதுங்கினான்.போகும் போதே இரண்டு காஃபி டோக்கனைக் கொடுத்து ப்ரூஸ்டாலில் இரண்டு கிளாஸில் காஃபி வாங்கிக் கொண்டான்.காஃபி குடிக்கியா என்றான். ” ‘அதுக்கு’ முந்தி இது எதுக்கடா” என்றேன். ”அது தெரியும்டா”, என்று காஃபியைத் தூரக் கொட்டி விட்டு வெற்று கிளாஸுடன் நைசாக ப்ரூ ஸ்டாலை விட்டு நகர்ந்தான்.:”எப்படிலே மூக்கில வேத்துருமோ, ஆள் வர்றதுக்கு முன்னயே” என்றேன்.:”ஆமா, ஒங்க காலு நேரா அம்மிணி கிட்ட போய் நின்னுச்சுல்லா அது மாதிரித்தான்”.என்று சிரித்தான். ப்ளாஸ்டிக் டம்ளர் வராத பொற்காலமது. “சரி காஃபி டோக்கன்லாம் ஏதுடா என்றேன்.”இரு, எவ்வளவு கதையிருக்கு, அவசரப்படுதியே” என்றபடி தம்போலா ரசிகர்களுக்குப் பின்னால் போனோம். அங்கே ‘வாடிக்கையாளர்களுக்காக பெரிய தண்ணீர் ட்ரம்’ ஒன்றை ஒரு உயர ஸ்டாண்டின் மேல் வைத்திருந்தார்கள். கிளாஸைக் கழுவி ஒன்றில் தண்ணீருடன் வந்தான் ”வா உக்காரு,என்று கீழே உட்கார்ந்தான்.சுற்றி இதே போல் இரண்டு மூன்று குழு உட்கர்ந்திருந்தது.எடுரா என்றான்.பையிலிருந்து எடுத்தேன்.ஏயப்பா அரைக்கும் மேல இருக்கும் போல இருக்கே என்று அருகில் இருந்து சத்தம் வந்தது.சிங் நின்று கொண்டிருந்தான்.சீக்கிரமே மது விலக்கு மறுபடி அமலாக இருந்தது. அதனால் கொஞ்சம் ஸ்டாக் பண்ணியிருந்தோம் மதுரையில்.அதில் ஒன்றுதான் இது. சிங் ஒரு மிட்டாய்க்கடைக்காரரின் தம்பி.ஆள் நல்ல உயரம், நல்ல சிகப்பு, ஒட்ட வெட்டிய க்ரூகட்,ஒரு மாதிரியான கொத்து மீசை, தொடை தெரிய மேலேற்றி மடித்துக் கட்டிய வேட்டி.நின்று கொண்டே இருந்தான்.
சாப்பிடுதீங்களா என்றேன். நீங்க முடியுங்க என்றான். உக்காருங்களேன் என்றேன். சிரித்தான்.”மீண்டும் சொல்லவே, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முதுகிலிருந்து பளபளக்கும் அருவாள் ஒன்றை எடுத்து நைசாகக் கீழே வைத்து விட்டு வேட்டியை அவிழ்த்து அருவாளை மறைத்தபடி உட்கார்ந்தான்.பயமாய் இருந்தது.யாரோ இரண்டு பேர் அவசரமாக வந்து,”ஏல கொத்து மீசை சீக்கிரம் வா, ஸ்டாலில் யாரோ தகராறு பண்றானாம் என்றார்கள். ’நம்ம வளர்ந்தவன்’, இந்தா சிங்கு நீ தொழிலைப்பார்க்கப் போ என்று அவனிடம் ஒரு கிளாஸை நீட்டினான். அதில் எதுவும் சேர்த்திருக்கவில்லை. “ஏல ஒரு வாரத்துக்கு இதுதாண்டா, இருக்கற காசையெல்லாம் போட்டு வாங்கியிருக்கேன்” என்றேன். “தலைவா காலியாச்சுன்னா சொல்லுங்க, வடக்கு ஓரமா பன்னீர் விக்கி, வாங்கீருவோம்” என்றபடியே போனான் சிங். அதற்குள் தலைவனாகி இருந்தேன்.சரி வீட்டுக்கு போக வேண்டாமா, எனக்கு வேண்டாம்” என்றேன் ”எங்கடா, அண்ணன்காரன் வந்துருக்கான். அம்மாவே, சித்தி வீட்டுக்குப் போயிருப்பா,சின்னஞ்சிறுசுக நம்ம வேற தொல்லையா,வா, சாப்பிட்டுட்டு, ரத்னால மன்னாதிமன்னன் போட்டிருக்கான் செகண்ட் ஷோ பார்த்துட்டுப் போனா சரியா இருக்கும் என்றான்.எனக்கு மனசில்லை. மறுத்துவிட்டேன்
தம்போலா அரங்கிலிருந்து மைக்கில் “லங்கொட கோடா” என்று சத்தம் வந்தது.அதைத் தொடர்ந்து யாரோ “அடிச்சாச்சு, அடிச்சாச்சு,” என்று எழுந்து ஓடினார்கள். ஏல இன்னும் “லங்கொட கோடாவை” விடலியா என்றேன்.’லன்கொட கோடா’ என்றால் ஒன்பதாம் நம்பர். அது தம்போலா பாஷையாகி விட்டிருந்தது. அதற்குள் மற்ற இரண்டு பேர் கையில் மசால் பட்டாணியுடன் வந்தார்கள். இந்தக் காலமாய் இருந்தால் “நண்பேண்டா” என்று கொண்டாடி இருக்கலாம்.அதைத் தொட்டுக் கொண்டு அவன் ரெண்டு ரவுண்ட் முடித்ததும் கிளம்பினோம்.
|
பின் அடிக்கிற ஸ்டாலில் கொஞ்சம் விளையாடப் போகலாம் என்றான் ஒருவன். அவன் கொஞ்சம் காசு ஓட்டமுள்ளவன்.வழியில் நம்பரில் பிரம்பு வளையம் எறிகிற ஸ்டாலில் நின்றுகொண்டிருந்தவன் சிரித்தான்.அதில் பத்து ரூபாய்க்கு டபுள். கேட்கிற நம்பர் மீது எறிய வேண்டும்.அவனிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை மாற்றச் சொன்னான் , வளர்ந்தவன். எதுக்குடா என்றேன். ”பேசாம சொல்லறதைச் செய், குடுக்கிறதை அப்படியே வாங்கிட்டு வா” என்றான். அவனும் நண்பந்தான்.நூறு ரூபாயை நீட்டி சில்லறை என்றேன். அவனும் தந்தான்.தரும்போது ஒரு விரலை காட்டினான். புரிந்தது. பத்து ரூபாயைக் கொடுத்து ஒரு வளையம் வாங்கி ஏழாம் நம்பர் மீது “குறி” பார்த்து வீசினேன். அது இரண்டில் விழுந்தது.” இதுக்கு குறி வேற பாக்கணுமா” என்று வளர்ந்தவன் சிரித்தான்.நகர்ந்தோம்.ரூபாயை எண்ணிப் பார்த்தேன் 160 ரூபாய் இருந்தது.அவனுக்கு முப்பது நமக்கு முப்பது என்றான் வளர்ந்தவன். நாங்க ஏற்கெனவே மாற்றி விட்டோம் நீ புது ஆளா வந்திருக்கியா அதனாலதான் உங்கிட்ட சொன்னோம், என்ன நடக்குன்னு கேட்டயே இதான் நடக்கு.” என்றான்.திருடனிடமே திருடிக் கொண்டிருந்தார்கள்.ஆகா இப்படியொரு வழி இருக்கும்ன்னு தெரிஞ்சா அந்தக்காலத்தில் பத்து ரூபாய் சம்பளத்துக்கு ஸ்டாலில் நின்றிருக்கலாமே என்று தோன்றியது. இன்னும் பலவழிகளில் ஸ்டால் முதலாளிக்குத் தெரியாமல் பணம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதெல்லாம் போகவும் லாபம் கிடைத்ததென்றால் எவ்வளவு மக்கள் எவ்வளவு பேர் ஏமாந்திருக்கிறார்கள் என்றும் தோன்றியது.
’பின்’ அடிக்கிற ஸ்டாலுக்குள் போனோம். சிங் வேடிக்கை பார்ப்பவன் போல் நின்று கொண்டிருந்தான். யாராவது நான் ஜெயித்த கலரில்தான் வைத்தேன் என்று தகராறு வரும். உண்மையாகவும் இருக்கும்.பெரும்பாலும் வம்பு செய்யாமல் கொடுத்து அனுப்பி விடுவார்கள். எங்கே போகப்போறான், கழுதை ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு இங்கேயே வந்துதான் இழக்கப்போறான் என்று ஸ்டால் நடத்துபவர்கள் சொல்வார்கள். அதையும் மீறி பெரிய கை கலப்பு மாதிரி வந்தால், சிங் உள்ளே வந்து விடுவான்.லேசாக தோளைப்பிடிக்கிற மாதிரித்தான் இருக்கும். ஆனால் உடும்புப் பிடியாக பிடிப்பான். வாங்க அண்ணாச்சி என்று நைசாக வெளியே அழைத்துப் போய் விடுவான். பேச்சுக் கொடுத்தபடியே ஆளரவமற்ற இருட்டுக்கு அழைத்துச் சென்று அருவாளை எடுப்பான். இதற்குள் இரண்டு மூன்று பேர் சூழ்ந்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட நபர் பயத்தில் வெலவெலத்திருப்பான். கையில் இருக்கும் காசை வாங்கி விட்டு நகர்ந்து விடுவார்கள்.சிங் எங்கே போகிறான் என்றே தெரியாது.ஆனால் அவனிடம் அருவாளும் இருக்காது, கொஞ்ச நேரத்தில் ஸ்டால் பக்கம் நிற்பான்.
மறுநாள் சீக்கிரமே அந்த ஸ்டாலுக்கு வந்து விட்டோம், அம்மிணியைப் பார்த்த பின் தான். ஸ்டாலுக்குள் நுழைந்ததும் நான், ”வழக்கமான முறையில் ஆடுவோமா” என்றேன்.நான் வழக்கமாய் ஒரே கலரில் ஒரு ரூபாய், அடுத்து இரண்டு ரூபாய் அடுத்து நாலு ரூபாய் என்று வைத்துக் கொண்டே போவேன். ஏதாவது ஒரு கட்டத்தில் போட்ட பணத்துடன் ஒரு ரூபாய் அதிகம் கிடைக்கும். ஆனால் ஸ்டால்காரர்கள், இவன் என்னவோ செய்கிறான் என்று பயப்படுவார்கள்.அதனால் நாங்கள் போனாலே இந்தாங்க காஃபி டோக்கன் என்று தந்து விடுவார்கள். அதே உத்தியைத்தான் இப்போதும் செய்கிறீர்களா என்றேன்.ஆமாம் என்றார்கள்.பிறகு எதுக்கு ஆட வேண்டும் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். சிங் பன்னீர் சாப்பிடப் போவோமா என்றான்.வேண்டாம்ப்பா என்றேன் எனக்கு அவனது நெருக்கம் பயமாயிருந்தது.முன்னாலெல்லாம் முதல் நாள் தலைவர் படத்துக்கு வரும்போது, பாவமாய் இருப்பான்.மரியாதையாய் கடையில் உட்கார்ந்து அல்வா வெட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பான்.ஒரு துண்டு வெட்டினால் நிறுக்கவே வேண்டாம். கரெக்டாக இருக்கும். யாராவது குறைவா இருக்கே என்றால் கால் கிலோதானே கேட்டீங்க என்று தராசில் போடுவான், கரெக்டாக இருக்கும். அவன் எப்போது இப்படி ஆனான், என்று தெரியவில்லை.கட்சியை விட்டு தலைவரை விலக்கிய பின், படங்களே வராததால் இப்படி ஆனானா... இல்லை புதுக்கலாச்சாரத்தினாலா.....அண்ணன் தம்பிக்கு இடையில் அடிக்கடி சண்டை வருமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
தினமும் ஏதாவதொரு ஸ்டாலில் ’சில்லறை மாற்றுவது,’ அம்மிணியிடம் பேச்சுக் கொடுப்பது என்று ஒரு வாரமும் கழிந்தது. அம்மிணி சிரிப்பதோடு நிறுத்திவிடுவாள். ஒரே ஒருநாள் மட்டும் ‘அவனைப் பார்த்தா வரச் சொல்’ என்கிற மாதிரி பேசத்தொடங்கினாள். அதற்குள் அவளது பாதுகாவலன் வந்து எந்தா என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தான். நான் தள்ளி வந்தேன். ஏதோ சொன்னான். நான் கோபமாய்ச் சண்டையிடப் போனேன்.அம்மிணி வேண்டாம் என்பது போல் சைகை காண்பித்தாள்.வளர்ந்தவனும் வாடா ராத்திரி லாட்ஜில போய் ரைடு விடுவோம் என்றான். எல்லாப் பெண்களும், பக்கத்தில் உள்ள துவாரகா லாட்ஜில் தங்கி இருந்தார்கள். அதன் குத்தகைதாரர் தெரிந்தவர்.என்னால் பெரிதாக சண்டையெல்லாம் போட முடியாது ஆனால் எளிதாக சண்டை இழுத்துவிடுவேன்.எப்போதும் ஒரு அசட்டுத் தைரியம்.அம்மிணியும் அவனும் ரொம்பவும் நேசித்தார்கள். ஊர் ஊராய் பொருட்காட்சிகளுக்கெல்லாம் பின்னாலேயே போனான் அவன் என்று கேள்வி. நான் ராத்திரி ஊர் போயிடலாம்ன்னு இருக்கேன்டா ட்ரெயினில் போகிறேன் என்றேன். அன்று சங்கர் கணேஷ் கச்சேரி இருந்தது.மனம் என்னவோ போலிருந்தது.ஒரு தம்போலா டிக்கெட் வாங்கிவிட்டு உட்கார்ந்தோம்.ஒருவன் முகமெல்லாம் ரத்தத்தோடு வந்தான்.”ஏல இதுதான் ஸ்கேட்டிங் படிக்கிற லட்சணமா” என்று வளர்ந்தவன் கேலி பண்ணினான்.அவன் போன பின், ”இவன் ஒரு அம்மிணியை ஸ்கேட்டிங் ஸ்டாலில் கணக்கு பண்றாண்டா” என்றான்.நான் பேசாமலிருப்பதைப் பார்த்து, வா என்று வெளியேஅழைத்துப் போனான்.
அன்று வரை மன்னாதிமன்னன் ஓடிக் கொண்டிருந்தது.முதல் தடவையில் கூட ஒருவாரம் ஓடியதா தெரியவில்லை. செகண்ட் ஷோ படம் போடத் தொடங்கியிருந்தார்கள்... .நல்லவேளை அச்சமென்பது மடமையடா என்று டி.எம்.எஸ். முழங்க ஆரம்பிக்கையிலேயே போய்விட்டோம். பல்லக்கிலிருந்து பத்மினி எட்டிப்பார்க்கையில், வளர்ந்தவன், ” ஏல அம்மிணி டா” என்றான். ”ச்சே அவ இதை விட அழகு” என்றேன்.அதற்கப்புறம் படம் பார்த்த நினைவே இல்லை. படம் முடிந்து விட்டது என்று இரண்டு பேரையும் யாரோ எழுப்பி விட்டார்கள்.
http://www.youtube.com/watch?v=RSAOn_SpJnI |