கொணக்கம்…
இந்த உடம்புக்கு என்னவோ வந்து தொலைத்து விட்டது. முழங்கை, தோள்பட்டைகளில் வலி. வண்ணதாசனா தி.ஜானகிராமனா நினைவில்லை, ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். சரஸ்வதி பூஜை அன்னிக்குத்தான் படிக்க வேண்டும் என்று மனசு கிடந்து அடித்துக்கொள்ளும் என்று. அதே மாதிரி கைக்கு ’கொணக்கம்’வந்திருக்கும் போதுதான் ஏதேதோ எழுதத் தோன்றுகிறது.’ முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். இல்லைன்னா, கொஞ்சம் இடைவேளை விட வேண்டியதுதான்.
சரி, நாற்பது வருடம் முன்னால் போவோம். கடைசியாய் அந்த வாணியம்பாடிக் கல்லூரிப் பேராசியர், எனக்கு மணி கட்டினார். ” ஸாரி மிஸ்டர்., உங்க ஜாப்ல ப்ரஃஃபஸருக்கு திருப்தி இல்லையாம்...ஹி வாண்ட்ஸ் யூ டூ குய்ட் யுவர் செல்ஃப்....”என்றார். அந்த பயாலஜி டிபார்ட்மெண்டின் ஃபார்மலின் வாசனை ஏற்கெனவே குமட்டிக் கொண்டு வந்தது. அப்துல் காதர் சார், அவர் வயது கணிசமாய்க் கழிந்தாலும் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்திருந்தார்- சொன்னதும் இன்னும் குமட்டிக் கொண்டு என்னவோ போல் இருந்தது. அரசல் புரசலாக காதில் விழுந்ததுதான். எனக்கு அங்கே வேலை வாங்கித் தந்தவர் பணி ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்....ப்ரொஃபசரின் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரின் தற்காலிகப் பதவி, அமெரிக்காவின் பி.எல் 480 ஸ்கீம் முடிவதால், பறி போகிற நிலை....அந்தப் பையனுக்கு வேண்டிய இன்னொரு பெண் ப்ரொஃபஸரின் தளராத முயற்சியில் அவனுக்காக நான் பலிகடாவானேன்.
”அவர்களாக நீக்கட்டும், நீ ஏன் ராஜினாமா செய்ய வேண்டும், சும்மா இருடா” என்று என்னிடம் சொன்னார்கள். அப்பா வேறு காச நோயால் உடல் ‘கொணக்கம்’ கண்டு, சங்கடத்தில் இருந்தார். வேலையை விட அவருக்கு சம்மதமில்லை. எனக்கோ தொடர வேண்டாம், வேறு எங்காவது முயற்சிக்கலாம். என்று தோன்றியது. காணாததற்கு என்னிடம் அன்பாக இருக்கக் கூடிய இரண்டு பேர் மேகாலயாவில் புதிதாக ஆரம்பித்திருந்த யுனிவர்சிட்டிக்குச் சென்று விட்டார்கள். எனக்கு டைப் ரைட்டிங் தெரியாதது பெரிய குறை. அதற்கு உதவி செய்ய நண்பர்களைச் சம்பாதித்திருந்தேன்.. என்றாலும் அதையே காரணமாகக் காட்டி நெருக்கடி தந்தார் அந்த அம்மணி. புதுச் செருப்பு காலைக்கடித்து விட பேண்ட் அணிய முடியாமல் வேஷ்டி கட்டிக் கொண்டு இரண்டொரு நாள் வந்ததை வேறு, ‘வாட் என், இண்ட்டீசெண்ட் ஃபெல்லோ” என்று பத்தவைத்து விட்டார். அம்மணி. ஏதோஒரு ”விருத்தி” (கோபம் போன்ற மனநிலை)யில், ”சரி, எழுதித் தருகிறேன்” என்று சொல்லி விட்டேன். அந்தத் துறையில் நிறைய உட்பிரிவுகள் உண்டு, சுற்றுச் சூழலியல் (ஈக்காலஜி) துறையில் நான் பணியாற்றினேன். அதற்கு அந்த நேரத்தில், இப்பொழுதைய காலம் போல, அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. அதனால் அங்கு சேர்ந்திருந்த ஆராய்ச்சி மாணவர்கள் எல்லோருமே கொஞ்சம் வயதானவர்கள். தவிரவும் வேறு துறையில் இடம் கிடைக்காதவர்கள். நிதி ஒதுக்கீடு நிறைய இருந்தது.
சும்மா துறையை எட்டிப் பார்க்க வந்த பழைய மாணவர்தான் பன்னீர் செல்வம். அவர் எம் எஸ் சி முடித்துவிட்டு சும்மா இருந்தார். சமீபத்தில் கல்யாணம் ஆகியவர். அவர் ரொம்ப வசதியான ஆள் என்றார்கள். வயது முப்பதுக்கு மேல் இருக்கும். ஆனால் ஆள், திருகிவிட்ட ஜமீந்தார் மீசையுடன் போலீஸ் அதிகாரி மாதிரி இருந்தார். நெற்றியில் கேசரிக்கலரில் குங்குமத்தீற்றல், என் சிகப்புக் குங்குமத்தீற்றல் போல, ஏதோ பைக் விபத்தில் முகத்தில் அடி பட்டு, கண்ணின் ஓரங்களில் ரத்தம் கட்டியிருந்தது. அது கூடுதல் பயங்கரத்தை தந்தது. ப்ரொஃபசர் நீ இங்கேயே ஆராய்ச்சி உதவியளராகச் சேர்ந்து விடு என்று சொன்னார். அவரும் உடனே தலை ஆட்டி விட்டார். ஒரு ‘ஜாய்னிங் ரிப்பொர்ட் கொடு’ என்று சொல்லிவிட்டு,’ப்ரொஃப்’ நகர்ந்து விட்டார். ஜாய்னிங் ரிப்போர்ட்டா, என்று இழுத்தார். என்னிடம் தம்பி உங்களுக்கு எழுதத் தெரியுமா என்று ஒரு வெள்ளைத் தாளுடன் அருகே வந்தார். எனக்கென்று அங்கே மேஜை எதுவும் கிடையாது. இரண்டு ‘பௌதிகத்தராசு’களுக்கு இடையே ஒரு ஸ்டூலும் அல்லாத நாற்காலியும் அல்லாத ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தேன். விறுவிறுவென்று எழுதிக் கொடுத்தேன்....” தம்பி பேரையெல்லாம் அழகாய் ஞாபகம் வைத்து எழுதி விட்டீர்களே.. ஒருதடவைதானே எல்லோரும் சொன்னார்கள்,” என்று வியந்தார் அவர். ”எவ்வளவு சம்பளம்ன்னு உங்களுக்கு ஏதும் தெரியுமா” என்றார், ”ஐநூறு ரூபாயா இருக்கும்” என்றேன். ”ஏயப்பா இது போதுமே வாடிப்பட்டி வையம்பட்டி வரைக்கும்”என்றார். எங்கள் ஊர் திருநெல்வேலியில், இந்த மாதிரி சூழல்களில், இது போதுமே கங்கை கொண்டான் கயத்தாறு வரைக்கும்” என்பார்கள். தென்காசிப் பக்கமென்றால், “இதை வச்சு ஒப்பேத்தலாமே.. ஆலங்குளம் அத்தியூத்து வரைக்கும்”என்பார்கள்.
இப்போது பன்னீர் சார், “தம்பி இவங்கள்ளாம் உங்களை நல்லா ஏமாத்தறாங்க... நீங்க சம்மதிக்காதீங்க“ என்றார். அதே போல் சைலேந்திரி என்று ஒரு ஆந்திரா பக்கத்துப் பெண், ரமாப்ரபா போல் அழகாயிருக்கும். அவளுடைய தீஸிசில் வருகிற சில புள்ளியல் கணக்குகளை நான் செய்து தந்திருந்தேன்.. என்னிடம் நேராகக் கேட்கவில்லை...தீசிஸ் டைப் அடித்துத் தருகிற ஒருவர் மூலம் என்னிடம் கேட்டு, நான் செய்து கொடுத்திருந்தேன்..அவளும் வந்து, ”நீங்கள் வேலையை விடப் போகிறீர்களாமே..நான் ப்ரொஃப் கிட்டச் சொல்லட்டுமா.” என்றாள். முதன் முறையாகப் பேசினாள், அவள். சென்னையிலிருந்து ஒரு நண்பர் நீ இங்கே வா நான் முயற்சி செய்கிறேன், உனக்கு வேலை கிடைக்காமல்ப் போகாது என்று கடிதம் எழுதியிருந்தார். சரி ஆனது ஆகிறது என்று ராஜினாமாக் கடிதத்தை நீட்டி விட்டேன். ’ப்ரொஃப்’ நல்ல மனிதர். அம்மணிதான் ரொம்ப தீவிரமாக இருந்தார். ஒரு மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றார்கள் நிர்வாக அலுவலகத்தில். என்னவாவது செய்யுங்கள் என்று அறைக்குத் திரும்பினேன்.
அறைக்கு வெளியே, ஒல்லியாய் தாடியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த சட்டை. பேண்ட் எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. பக்கத்தில் போனதும் புரிந்தது.. அட இவர் நம்ம C.B.I ஆளுல்லா என்று. ஆனா, என்ன இப்படியொரு பரதேசிக் கோலத்தில் நிற்கிறாரே என்று நினைத்தேன். பன்னீர் செல்வம்தான் இவரை அறிமுகப் படுத்தியிருந்தார். அறிமுகமான அன்று அவர் என் அறையில்தான் தங்கி இருந்தார். என் அறை, ஒரு சந்தை மடம். சாயங்காலமானால் அரட்டைக் கச்சேரிக்கு நிறையப் பேர் வருவார்கள். பன்னீர் சார், அறிமுகப் படுத்தும்போதே, அவர் யார் என்பதை ரொம்ப ரகசியமாய் வைத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார். நான் சொன்னேன், ”சார் என் அறையில் ரகசியமெல்லாம் கிடையாதே...அங்க இருக்கிறவங்க, வருகிறவர்களெல்லாம் சளம்பல் கேஸுல்லா”, என்றேன். அதெல்லாம் அவர் பார்த்துகிடுவார், ஸி.பி.ஐ-ன்னா சும்மாவா” என்றார். ஆனால் ஆள் என்னவோ ஒரு மாணவனைப் போலத்தான் இருந்தார். அறைக்குள் நுழைந்ததுமே இங்கே சிகரெட் பிடிக்கலாமா என்று கேட்டார்.. தாராளமாய் என்றேன். ஆஷ்ட்ரே இல்லையா என்றார். “சாமபலைத் தட்ட தரையில்லை என்றால் மட்டுமே பயன் படும் சாதனம்தான் ஆஷ்ட்ரே” என்று சொல்லிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். ஒரு விளைவும் இல்லை. கொஞ்ச நேரம் கழித்து, ” அப்படிச் சொல்றீங்களா ஓஹ்... ”என்று சிரித்தபடியே ஒரு “ 555” சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பிரித்தார்.
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பாடு அவரே வாங்கித் தந்தார். செமத்தியான சாப்பாடு. நான் பேச்சு வாக்கில் அவர் வேலை, காரியம் என்று பேச ஆரம்பித்த போதெல்லாம் நைசாக ‘அது ரகசியம்’ என்பது போல தட்டிக் கழித்துவிட்டார். இந்த ஏரியாவில் சில தீவிர வாத நடவடிக்கைகள் நடப்பதாக லேசாகச் சொன்னார். இது ஏதுடா வம்பு என்று தோன்றியது. தூங்கலாம் என்பது போல் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. சரியாக அப்போது பார்த்து சுப்புராஜ் நாய்னா வந்தார். தலையைச் சொறிந்தபடி, “ஜீ, ஒரு பீடி இருக்குமா” என்றபடியே. அது அந்த விடுதியில் வழக்கம். ராத்திரியானால் மக்கள், பீடிக்கு இறங்கி விடுவார்கள்.அதுக்கு முந்திய ஸ்டேஜ் ‘கூட்டு தம்’.அவர் கேட்டு வாய் மூடும் முன் ஸி.பி.ஐ, தன் ’555’ ஐ நீட்டினார். நாய்னா ‘ஹி ஹி’ என்று மறுத்தார். சும்மா எடுத்துக்குங்க என்றார். நாய்னா இன்னொரு ‘ஹி ஹி’யுடன் இரண்டு சிகரெட் எடுத்துக் கொண்டார். எனக்கு என்னவோ போல் இருந்தது.
அவர் இரண்டு நாள் இருந்தார். பகலில் அறையைவிட்டு வெளியே வரவே இல்லை. மறுநாள் இரவில் அறைக்கு வந்தவர்களுக்கெல்லாம் கொலுச் சுண்டல் மாதிரி ‘555’ கிடைத்தது. மூன்று நாள்த் தாடியுடன், ஒரு அதிகாலையில் கிளம்பி விட்டார். இன்று சாப்பிட்டு பல நாளானவர் போல் இருந்தார். பன்னீர் சார் சொல்லுவார், ’தம்பி அவர் பல வேடங்களில் அலைவார்’ என்று. ஒரு வேளை இது ஒரு வேஷமோ என்று நினைத்தேன். இல்லை நிஜமாகவே பசியுடன் இருந்தார். காபி வாங்கிக் கொடுத்தேன். கதவைச் சாத்திக் கொள்ளலாமா என்று கேட்டு சாத்திக் கொண்டார். பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தார். சரியாக, மீண்டும் நாய்னா வந்து கதவைத் தட்டினார். சென்ற தடவையே எல்லோரும் என்னை இது யாரென்று குடைந்திருந்தார்கள். பன்னீர் சார் உறவினர் என்று மட்டும் சொல்லியிருந்தேன். பீடியும் கையுமாக அவரைப் பார்த்ததும் நாய்னா நழுவி விட்டார். இரவில் சாப்பிடக் கூப்பிட்டும் மறுத்து விட்டார். காலையில் ஆளைக் காணும்.
அவரை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பன்னீர் சார் சொன்னார், மறுநாள் காலையில். அதோடு அன்று மதியம் அவர் வீட்டுக்கு என்னைச் சாப்பிட அழைத்தார். ஒரு வாரமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. வழியனுப்பு உபசாரம். ஒவ்வொருவரும் அன்பைப் ’பொழிந்து’ கொண்டிருந்தார்கள். இம்யூனாலஜி டிபார்ட்மெண்ட் சைலேந்திரி அவளது துறையினருடன், ட்ரீட்டுக்கு வந்து எல்லோருக்கும் ஆச்சரியம் தந்தாள். எளிதில் வர மாட்டாள். அடப் பாவி, இந்த ஒரு வருடமாக உனக்காக விட்ட ஜொள்ளுக்கு கணக்கே இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். போகப் போகிற நேரத்தில் இது என்ன கரிசனம்.....புரியவில்லை.
மதியம் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து ஒரு ஸ்டாப் தள்ளி இருந்த பன்னீர் செல்வத்தின் வீட்டிற்குப் போனேன். அவர் ஏற்கெனவே ஏற்பாடுகளைக் கவனிக்க முன்னாலேயே போயிருந்தார். அவர் மனைவியுடன் சமீபமாகத்தான் அந்த வீட்டுக்கு குடி வந்திருந்தார். அவர் வீட்டுக்கு எல்லோரும் போயிருக்கிறோம். ஒருமுறை நண்பர் ஒருவர், ஊரிலிருந்து மயில்க் கறி செய்து கொண்டு வந்திருந்தார். அவர் ஒரு வேட்டைப் பிரியர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் காந்திகிராமம் பல்கலையில் ஆசிரியர். ரொம்ப சுவாரஸ்யமான ஆள். கத்திரி சிகரெட்தான் குடிப்பார். அவர் கோபப்பட்டால் எல்லோருக்கும் சிரிப்பு வந்து விடும். அவர் இருந்து நண்பர்கள், குபீரென்று சிரித்தால், அவர் “சீரியஸாக’’ எதையாவது சொல்லியிருப்பார் என்று துரத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். நாம் என்ன விஷயமாவாது பேசிக் கொண்டிருந்தால், ”என்ன, என்ன” என்று இடையில் வந்துதான் கேட்பார்.ஒரு நாள் நான் சொன்னேன், ”சார் இப்படி இண்டெர்வெல்லிலிருந்து படம் பார்க்கிறதை எப்ப சார் நிறுத்தப் போறீங்க” என்று. கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் கூச்சலாய்ச் சிரிக்க மொத்த துறையுமே, ஈக்காலஜிக்கு வந்து விட்டது. எனக்கே சங்கடமாய்ப் போய்விட்டது. ஆனால் வாழ்க்கையே நம்மைக் கேலி செய்வது என்பது வேறு ஒரு முரண் நகை. அவர் டாக்டரேட் வாங்கிய கையோடு, கிட்னிஃபெய்லியரில் இறந்து போனாராம், இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் பேப்பரில் விளம்பரம் போட்டிருந்தார்கள். அடப்பாவி, முப்பத்திச் சொச்சம் வயசில், இண்டெர்வெல்லிலேயே உன் முடிவும் வரணுமா என்று தோன்றியது.
ரகசியமாய் மயில்க்கறி சாப்பிட பன்னீர்சார் வீட்டிற்குப் போயிருந்தோம். அப்போது அவர் மனைவி இல்லை. நான் அன்று ஒரு துண்டு சாப்பிட்டதும் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். அவர் கொண்டு வருகிற கோழிக்கறி மிக மிக நன்றாயிருக்கும். இது என்னவோ ரொம்ப மரத்துபோன மாதிரி இருந்தது. தவிரவும் ஏதோ ஒரு மனத்தடை. பன்னீர் சார்,” நான் முருக பக்தன், எனக்கு வேண்டாம்” என்றார். அப்போதும் அவர் சிரிப்புக்கிடையே கோபப்பட்டார்...”ஓஹோ அப்ப நாங்கள்ளாம் பாவத்தைக் கட்டிக்கிடனுமோ“ என்று. மற்றவர்கள் வெளுத்துக் கட்டிகொண்டு இருந்தார்கள். அவர் வீடு எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இப்போது ஒரு பெண் வந்துவிட்டதால் அதற்கான இசைத்தன்மை நிறைந்த அடையாளங்களுடனிருந்து, உள்ளே நுழையச் சற்று தயக்கமாய் இருந்தது. முன்புறத் தார்சாலையொட்டி ஒரு அறை உண்டு. அதனுள்ளிருந்து, மல்லிகை, விபூதி, குங்குமம் எலுமிச்சை என்று கலவையாக ஒரு மணம் வந்தது. சாம்பிராணிப் புகை, அடைத்த கதவிடுக்கின் வழியே வந்து கொண்டிருந்தது.
”சார்”, என்று அழைக்கும் முன்னே பன்னீர் வெளியே வந்து ”வாங்க தம்பி, செருப்பை கீழேயே கழற்றி விடுங்கள், அப்பா பூஜையில் இருக்கிறார்” என்றார். தார்சாலில் இருந்து கீழே இறங்கி செருப்பைப் போட்டுவிட்டு வந்தேன். சாப்பாடு ரொம்ப சாதாரணமாய் இருந்தது....இதற்கென்ன ஏற்பாடு வேண்டிக்கிடக்கு என்று நினைக்கும் போதே அவர் மனைவி- வழக்கம் போல அடுத்த வீட்டு வாசனைப் பவுடர் அதிகம் மணப்பது போல் நன்றாக இருந்தார்கள். சார் இன்னக்கி மாமா வந்துவிட்டதால் மட்டன் சமைக்க முடியலை என்றார். பரவாயில்லை என்றேன். தரையில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு சாப்பிடது நன்றாயிருந்தது. சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ”சார் உங்க கவிதைகளைப் படித்தேன், ரொம்ப நல்லாயிருந்தது....ஆனால் பாவம் கஷ்டமாய் இருக்கு..” கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ ..”ன்னு வசந்தமாளிகை பாட்டு நினைவுக்கு வந்தது...”என்றார் சிரித்தபடி, அவர் மனைவி...பன்னீர் உள்ளே போய் விட்டு வருகிறேன் என்று போனார். அவரது அப்பா உள்ளே வந்தார். பூஜை முடித்து வந்திருக்கிறார். அவரைக்கண்டதும், திருமதி பன்னீர்செல்வம் எழுந்து கொண்டார். நானும் எழுந்தேன். இருவரையும் சைகையால் அமரச் சொன்னார். என்ன நினைத்தாரோ’திருமதி’ யும் எழுந்து உள்ளே போய்விட்டார்.
‘அப்பா’ திடீரென்று பேசத் தொடங்கினார்,” உனக்கு இன்று என்னைப் பார்க்க வேண்டுமென்று இருக்கிறது, ஒரு பேப்பரில் வருகிற எல்லா விளம்பரமும் எல்லார் கண்ணுக்கும் தட்டுப்படாது, அது மாதிரி என் முகம் கண்ணில் படவேண்டுமென்று விதி இருக்கிறவர்களுக்குத்தான் இது லபிக்கும், என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலேதோ ஒரு பயம் வந்தது. பேசாமல் போய்விடுவோமா என்று நினைக்கும் போதே, ”அப்படியெல்லாம் போய் விட முடியாது” என்றார். ஆஹா இது என்னவோ கரிவேலைக்காரன் பேசற பேச்சாயில்ல இருக்கு என்று தோன்றியதை உடனே அழித்து விட்டேன். மனுஷன் சிரித்தார். வாய் கோணியது. எச்சில் வடிந்தது. கையால் துடைத்தார். அப்போதுதான் பார்த்தேன் கை ’கொணக்கி’ இருந்தது. “நாளை மறு நாள் சிறப்பு பூஜை, மந்திர உச்சாடனம் இருக்கு, நீ வரவேண்டும்” என்றார். நம்மை மீறி வந்து விடுவோமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. எதையாவது யோசித்தால் அதை அவர் வாசிக்கிறார் என்பது புரிந்தது. எக்ஸார்ஸிஸ்ட் நாவல் மாதிரி. நான் புட்டாரத்தி அம்மனை நினைத்துக் கொண்டேன். அவர் சிரித்தபடி கொஞ்சம் குங்குமம் தந்தார், தந்து விட்டு, அறைக்குள் போய் விட்டார். நான் குங்குமத்தைப் பூசவில்லை. யோசித்துக் கொண்டிருந்தேன். ’திருமதி’ ஒரு சிறிய இலை நறுக்குடன் வந்தார். அதில் குங்குமத்தை வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர் பேச வாயெடுப்பதற்குள் பன்னீர் வந்து விட்டார். நாங்கள் கிளம்பினோம். வழியில் அப்பாவின் உச்சாடனத்திற்கு வாருங்கள் என்றார். ஆனால் ஏதோ கட்டாயத்தின் பேரில் சொல்வது போலிருந்தது.
மறுநாள் அலுவலகத்திலிருந்து பஸ்ஸில் டவுணுக்குப் போய்க் கொண்டிருந்தேன். எப்போதுமே கூட்டம் அதிகமிருக்கிற பஸ். இரண்டாவது ஸ்டாப்பில் பன்னீர் சாரும் ‘திருமதியும் ஏறினார்கள். உட்கார இடமில்லை. என் அருகே ஒரு இடம் காலியானது. நான் எழுந்து கொண்டு அவர்களை உட்காரச் சொன்னேன். பன்னீர் சார், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் ‘திருமதி‘ படக்கென்று உட்கார்ந்தார். மீண்டு எழ முயகையில் பன்னீர், நீங்க சும்மா உக்காருங்க என்று அழுத்தமாகச் சொன்னார். கூட்டம் நெருக்கியதில் பன்னீர் சார் சற்று நகர்ந்திருந்தார்.’திருமதி’ மெதுவாக, ”சார், நாளைக்கி பூஜை அது இதுன்னு வ்ந்திராதிங்க, மாமா தொல்லைக்கு பயந்துதான் நாங்க ஊரை விட்டே வந்தோம்....இங்கேயும வந்துட்டாரு, என் வீட்டுக்காரருக்கு அப்பாவை மீறி ஒன்னும் செய்ய முடியாது, நல்லபடியா ஊர்போய்ச்சேருங்க. பேசாம நாளைக்கு சாயந்தரம் நடை திறந்ததுமே மீனாட்சி அம்மன் கோயிலில் போய் உக்காந்துருங்க. கோயில் அடைக்கும் வரை வெளிய வராதிங்க, அவரைப் பத்தியும் நினைக்காதீங்க”. என்று மூச்சு விடாமல் சொன்னார்.” சாருக்கும் உங்களை வரச் சொல்வதில் இஷ்டம் கிடையாது, ஆனாலும் அவரால முடியல, அந்தா பாத்தீங்களா, அந்தக்கடையில் நிற்கிற பையனை, மாமாவோட சிஷ்யன், எப்படி நிக்கான் பார்த்திங்களா” என்று வெளியே காண்பித்தார்.வெளியே, ஸி.பி.ஐ. திருமதியிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்க நினைத்தேன்... கேட்கவில்லை. காந்திமதியாகவோ புட்டாரத்தியாகவோகத்தான் இருக்கும். நான் அப்போது அந்தப் உபாசனைப் பைத்தியத்தில்தான் அலைந்து கொண்டிருந்தேன்.
|