அழகென்பதே விஷமாகுமோ….
ராதாசேகரை ஒரு திருமண வீட்டில் வைத்துப் பார்த்தேன். திருமணம் ஒரு கிராமத்தில் ஏற்கெனவே முடிந்து விட்டது. வரவேற்புத்தான் அந்தப் பெரிய நகரில் நடந்தது. மணமகனின் தந்தை ஒரு அரசு அதிகாரி. ஆனால் ரொம்ப நல்ல மனிதர். கால்க் காசு லஞ்சம் வாங்க மட்டார். வரவேற்புக்கான ஏற்பாட்டைக் கவனிக்க அதிகாரியின் நண்பரான என் அப்பா, என்னை அனுப்பி இருந்தார். திருநெல்வேலியிலிருந்து நானும், பாளையங்கோட்டையிலிருந்து ராதாவும் வந்திருந்தோம். வரவேற்புக்கு பலகாரங்கள் தயாரிக்கும் ராமச்சந்திர ஐயரும் திருநெல்வேலிக்காரர். அவர் ஓட்டல் வைத்து நொடித்துப்போனவர். அவரும் அதிகாரியின் நல்ல நண்பர். ஒரு தனியார் பள்ளியில் வைத்து வரவேற்பு நடக்க இருந்தது. அப்போதெல்லாம் கல்யாண மண்டபங்கள் ரொம்ப அரிது. பள்ளி விடுமுறைக்காலம். அங்கே நிறைய இடம் இருந்தது. ஒரு அறையில் இனிப்புகள் செய்து பாத்திரங்களில் மூடி வைத்திருந்தார்கள். தாம்பாளங்களில் தண்ணீர் விட்டு, அதில் செங்கல் வைத்து, அதன் மேல் பெரிய குத்துப் போணிகளில், இனிப்பை வைத்திருந்தார், ஐயர். எறும்புகளிடமிருந்து இனிப்பைக் காப்பாற்றவே இந்த யோசனை.
திரிபாகம், ஜாங்கிரி, லட்டு என்று மூன்று விதமான இனிப்பு. அது போக மைசூர்பக்கடா, மிக்சர் என்று காரவகைகள். மைசூர் பக்கடா செய்வதில் ஐயர் பிரபலமானவர். அதற்காகவே ஒரு பெரிய ஒட்டலில் சகல மரியாதையுடன் இருந்து, பிறகு அதனாலேயே அங்கே முறைத்துக் கொண்டு, தனியே ஓட்டல் ஆரம்பித்து, நொடித்துப் போனவர். நான் அங்கே போன போது, ஐயரும் ராதாவும் இனிப்புகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். ஐயருக்கு என்னை நன்றாகத் தெரியும். ”வோய் வாரும் வேய், கந்தப் பிள்ளையோட கொடுக்கு, என்னவே உம்ம அனுப்பிட்டாரா, அவரு வரலியா, ”என்றார்.” அப்பா நாளைக்கு வாராங்க” என்றேன். இனிப்பு மணம் மூக்கைத் துளைத்தது. என்னையறியாமல் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டேன் போலிருக்கிறது. ராதா சேகர், ”சாமி, அவருக்கு ஒரு செட் ஸ்வீட் கொடுங்க, டேஸ்ட் பாக்கட்டும்” என்றார். அவராகவே எந்த அறிமுகமும் இல்லாமல், மனதைப் புரிந்து சொன்ன வார்த்தைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஐயர். ”அவனுக்கில்லாததா,”என்று ஒவ்வொன்றிலும் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். கொடுத்துக் கொண்டே இது யார் தெரியுமாடா அம்பி, உங்க அப்பாவோட ஸ்நேகிதர் மருமான், சேகர்ன்னு பேரு, அம்பி அப்படி ஒரு இங்கிதமான பையன்., உங்காத்துப் புள்ளைங்க மாதிரி கிடையாது.” என்றார். எனக்கு கோபமாய் வந்தது. ”உம்ம வாயாலதான நீர் இப்படி ஆயிட்டேரு” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். ஸ்வீட் அற்புதமாய் இருந்தது. ”எப்படிடா இருக்கு” என்றார் ஐயர். ”திரிபாகத்துல பச்சைக் கற்பூரம் மணம் தூக்கலா இருக்குவோய்” என்றேன். ”அதான கந்தப் பிள்ளை பையனா கொக்கா, அம்பி இன்னொரு பீஸ் எடுத்துச் சாப்பிட்டுப் பாரு, சமயத்தில கற்பூரம் ஒன்னு போல கரைஞ்சிருக்காது,” என்று இன்னொன்றைத் தந்தார். அது சரியாக இருந்தது.
ராதா,”அது என்ன சாமி, பச்சைக் கற்பூரம், அதெல்லாமா ஸ்வீட்ல போடுவீங்க” என்று கேட்டான். ஐயர் அறையைப் பூட்டிக் கொண்டே, ”அந்தா அவனண்ட கேளுங்க மருமகனே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். ராதாவும் நானும் அப்படித்தான் சிநேகிதமானோம். அவன் குடும்பத்தில் எல்லார் பேருக்கும் முன்னால் ’ராதா’என்ற பேர் இருக்குமாம். அவன் தாத்தா, “தயாள் பாக் ராதாஸ்வாமியின்” சீடராம். அது எப்படி அதில் சேர்ந்தார் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாம். “உங்கள் மாமா வீட்டில் யாருக்கும் இப்படிப் பெயர் இல்லயே’ என்றேன். அது என்னோட அப்பா தாத்தா வழி, இவர் என் அம்மாவோட கூடப்பிறந்த அண்ணன் என்றார்,” ராதா.
அன்று இரவு, நாஞ்சில் மனோகரன் பேசும் அ.தி.மு.க கூட்டம், தேவி தியேட்டர் அருகே நடந்தது. அவர் அப்பொழுதுதான், தி.மு.கவிலிருந்து விலகி இங்கே சேர்ந்திருந்தார். அதற்குப் போவோமா என்றார் ராதா. போனோம். மனோகரன் வழக்கம் போல் தோரணையோடு, மிஸ்டர் கருணாநிதி, மிஸ்டர் எம்.ஜி.ஆர் என்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார். தொண்டர்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லை. நானும் ராதாவும் அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்தோம். காணாததற்கு என் பால்யகால நண்பனும் அவன் அண்ணனும் திடீரென்று வந்தார்கள். இரண்டு பேருமே எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவர்களுக்கும் ராதா நன்கு அறிமுகம் போல. கூட்டம் ரசிக்கவில்லை. பேசாமல் நான்கு பேரும், பக்கத்திலிருந்த ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்து விட்டோம். அண்ணனும் ராதாவும் ஒரு மேஜையிலும், ’மரியாதை’கருதி(!) தம்பியும் நானும் ஒரு மேஜையிலும் அமர்ந்து கொண்டோம். மேஜையென்ன மேஜை, அவர்கள் ஒரு அட்டைப் பெட்டி மேல், நாங்கள் ஒரு அட்டைப்பெட்டி மேல். கொஞ்ச நேரம்தான், எல்லோரும் ஒன்றாகி விட்டோம். அண்ணனும் தம்பியும்தான் “நீ குறையாச் சாப்பிடு” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எல்லோருமே குறைவாகத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், ஏனென்றால் கையிருப்பு அவ்வளவுதான். ராதா, தெளிவாக அரசியல் பேசிக் கொண்டிருந்தான். ”நம்மை திசை திருப்பறதுதான் அரசாங்கத்தோட வேலை, பாருங்க எப்படி ஒரு புதிய தலைமுறை குடிக்குப் பழகி விட்டோம்” என்றான். சுரீரென்று உண்மை சுட்டது. நான் அப்போதுதான் கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். நிறைய கவிதைகள் பிரசுரமாகியும் இருந்தது. ஒரு தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை ராதா படித்திருந்தான். தெளிவான அரசியல் பேசினாலும் அவனுக்குள் ஒரு கிண்டலான ஆசாமி ஒளிந்திருந்தான். அவன் என்னுடன் நெருக்கமாக ஒட்டிக் கொண்டான்.
ராதா ஒரு தீவிரமான இடது சாரி ஆதரவாளர். அது பற்றி விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கும் ஒன்றிரண்டு தீவிர இடது சாரி நண்பர்களைத் தெரியும். அவன், ”தோழர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன், டப டபன்னு மோட்டர் பைக்கில் வருவார், பேசிப் பார்,” என்றான். ஆனால் அவன் இயக்கத்திலிருந்து சமீபமாகச் சற்று விலகியே இருந்ததாகச் சொன்னான். யாரும் வரவுமில்லை, எந்த ‘பைக்’ சத்தமும் வீட்டு வாசலில் கேட்கவுமில்லை.
இரண்டு மூன்று மாதம் கழித்து நான் ஒரு வேலையில் சேர்ந்திருந்தேன். ஒரு லாட்ஜில் தங்கி இருந்தேன். பக்கத்து அறையில் இன்னொரு நண்பர். ஒரு நாள் காலையில் அந்த அறைக்கு ராதா வந்திருந்தார். ”ஏய் நீயெங்கே இங்க என்று கேட்டார்,”. நான் விபரம் சொன்னேன். “ஏயப்பா பெரிய வேலையாத்தான் புடிச்சுருக்கே” என்று கேலி செய்தார். உண்மையில் அவன் மாமா வாங்கித் தந்த வேலைதான் அது. அவன் கேட்ட போது மறுத்து விட்டாராம். அதுதான் கிண்டலாகப் பேசினான். திடீரென்று,”கார்மேகம் சார்” என்று அந்த அறை நண்பரைக் கூப்பிட்டான், அவர் அவனைப் பார்க்கவும், இடுப்பில் கட்டியிருந்த துண்டை சட்டென்று அவிழ்த்து மூடினான். ”ரைட், உங்களை போட்டொ புடிச்சாச்சு, கேபினட் சைஸில் ப்ரிண்ட் போட்டு நாளைக்கு தாரேன்” என்றான். கார்மேகம் சலித்துக் கொண்டார், ”சும்மா இருக்க மாட்டானே, இவனை உங்களுக்குத் தெரியுமா, தெரியாதுன்னா பழகித் தொலச்சிராதிங்க,’அறுத்துத் தள்ளீருவான்” என்றார்.”யாரு அவரையா தெரியாது, ஏயப்பா, பெருங்கொண்ட கவிஞருல்லா..” என்றான் கிண்டலாக. அது வேற தெரிஞ்சு போச்சா, வெளங்குன மாதிரித்தான்....” என்றார் கார்மேகம்.
இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் முதுகலை படித்தவர்கள். கார்மேகம் பாஸாகி, ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்திருந்தார். ராதா,அரியர்ஸ் வைத்திருந்தான். அதை எழுதவே கார்மேகத்தின் அறைக்கு வந்திருந்தான். இரண்டு மாதம் தங்குவானாம். தினமும் காலையிலும் மாலையிலும் ரகளைதான். காலையில் எழுந்து துண்டைக் கட்டிக் கொண்டேதான் எல்லா வேலையும் செய்வான். கனத்த டர்க்கி டவல், நன்றாகக் காயாமல், ஒரு வித வாசனை வரும்.கார்மேகம் ஒரு நாள் அதை உருகி, தலையைச் சுற்றித் தூர எறிந்து விட்டார். அப்புறம் ராதாவின் சேட்டைகள் அடங்கிப் போயின. சீரியஸாக மட்டுமே பேசுவான். என், மற்றும் அப்போது வரும் கனையாழி, கசடதபற, வானம்பாடி, சதங்கை கவிதைகளைத் தீவிரமாக இருவரும் விவாதிப்பார்கள், நான் மௌனமாய் வேடிக்கை பார்ப்பேன். அவ்வப்போது நான் கலந்து கொள்வேன். அவ்வப்போது ராதாவிடம் கிண்டல் எட்டிப் பார்க்கும். கார்மேகம், ”மவனே இன்னமெ வேட்டியையே உருவி எறிஞ்சுருவேன்” என்பார். அமைதியாகி விடுவான். நான் கூட, ”சரி விடுங்க கார்மேகம்”, என்பேன். அப்புறம் என் ரூமிலேயே இருந்து படிக்க ஆரம்பித்தான். எம். ஏ. ஹிஸ்டரி. ரொம்ப அழகாக பாடத்தைப் பற்றிப் பேசுவான். பிறகு ஏன் ஃபெயிலானான் என்று ஆச்சரியமாய் இருக்கும். கேட்டால், ”உம்ம கதைதான், நம்மளால ஒரு ஃப்ரேமுக்குள்ள படிச்சு எழுத முடியலை” என்பான். ஒருவாறு பரிட்சை எழுதி முடித்து விட்டான். ஆனாலும் எங்களுடனேயே இருந்தான்.
நான் அலுவலகத்திலிருந்து வந்த போது ராதா, ரொம்ப யோசனையுடன் இருந்தான். வெகு நேரமாய்ப் பேசவே இல்லை. அவனருகே, ’இந்தியன் லெஃப்ட் ரிவ்யூ’, பத்திரிக்கை கிடந்தது. நான் அது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. அது கல்கத்தாவிலிருந்து வருவது. நான் அதை எடுத்த போது,”தோழர், அதை அப்புறமாப் படியுங்க”என்று தன் பெட்டிக்குள் வைத்தான். ’யாரும் வந்தார்களா’ என்றேன். தலையை ஆட்டினான்.’தோழரா’, என்றேன். ”இல்லை, அப்பா”,என்றான். அவனுக்கு அம்மா கிடையாது. அப்பாதான் சிறு வயதிலிருந்தே வளர்த்தார். என் மற்ற கேள்விகள் எதற்குமே பதில் சொல்லவில்லை. திடீரென்று, “என்னுடன் துணைக்கு, ஒரு இடத்திற்கு வர முடியுமா,”என்று கேட்டான். எனக்கு சற்று யோசனையாய் இருந்தது.”யாராவது தோழர்களைப் பார்க்கப் போவானோ” என்று நினைத்தேன். எனக்கு அந்த சித்தாந்தங்களின் மீது உடன் பாடும் இல்லை, வெறுப்பும் இல்லை. தைரியமில்லை என்று அவனே சொல்லுவான். அதுதான் உண்மை.
”சரி வா போகலாம்” என்றேன். ”பணம் என்னிடம் ஏதுமில்லை” என்றேன். ”அது பற்றிக் கவலையில்லை, இப்பத்தானே அப்பா வந்து போயிருக்கிறார்,” என்று சிரித்தான். அப்பாடா என்றிருந்தது. அதற்கப்புறம் அவனது கல கலப்பு ஆரம்பித்து விட்டது. ”போய்ட்டு வந்து வேணும்ன்னா ‘கடைக்கு’ கூடப் போகலாம்’’ என்றான். நாங்கள் பஸ் ஸ்டாண்டிற்குப் போன போது, ஒரு பஸ் கிளம்பிக் கொண்டிருந்தது. வேகமாக ஓடிப்போய் ஏறினோம். நகரை விட்டு வெகு தூரம் செல்லும் பஸ், அது. அடிக்கடி பஸ் இருக்காது. எங்கே போகிறோம் என்றே தெரியாது. இன்னும் அவன் முகம் வாட்டமாகவே இருந்தது. கேட்கவும் யோசனையாய் இருந்தது.”ஆமா நடக்கிறது நடக்கட்டும்’’ என்று சும்மா இருந்தேன். புதிதாய் உருவாகி இருக்கும் ஒரு புறநகர்க் காலனிக்கு டிக்கெட் எடுத்தான். வழி போய்க் கொண்டே இருந்தது. பஸ் காலனிக்குள் போகாமல் அதையொட்டிய மெயின் சாலையில் நின்றது. உள்ளே நடந்தே போக வேண்டும். இறங்கும் போது கண்டக்டரிடம் கேட்டான், அடுத்த பஸ் எப்போ வரும் என்று. இதே பஸ்தான், திரும்பி வர இன்னும் முக்கால் மணிநேரம் ஆகும், இதை விட்டால் வேறு பஸ் கிடையாது. வேண்டுமானால், இங்கிருந்து ஒரு மணி நேர நடை, நகரினை ஒட்டிய பகுதி வந்து விடும் என்றார்.
”திடீரென்று ரொம்ப பயந்துட்டியா, எங்க மாமா வீட்டுக்குத்தான் போகிறோம், மாமாவைப் பார்க்கும்படி அப்பா வற்புறுத்தினார், அதுதான் வந்தேன்” என்றான். கொஞ்சம் அப்பாடா என்றிருந்தது. அவனது அத்தை வந்து வரவேற்றார். வீடு பெரியதாகப் புதிதாக இருந்தது. அதன் அமைப்பிலேயே அவர்களது செல்வ வளமை தெரிந்தது. நாங்கள் வரவேற்பறையின் சோஃபாவில் இருந்தோம். மாமா வந்தார். என்னை இன்னாரென்று அறிமுகப் படுத்தினான். அப்பாவை அவருக்குத் தெரிந்திருந்தது “உங்க அப்பாதானே பெரிய டெயிலர் கடை வச்சுருந்தது”, என்று கேட்டார். அப்பா, பத்து மெஷின் வைத்து ஆட்கள் வைத்து பெரிய டெயிலரிங் கடை வைத்திருந்தாராம், நான் பார்த்ததே இல்லை. அவர் தையல் தொழிலாளி ஒன்றும் இல்லை. அவன் வீட்டின் உள்ளே போய் இருந்தான். என்னுடன் பத்து நிமிஷம் பேசி விட்டு அவரும் உள்ளே போய் விட்டார். நான் தனியாய் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தேன்.
”ராதா இந்த காஃபியை அந்த தம்பிக்கு கொடு”, என்று உள்ளிருந்து சத்தம் வந்தது. அவன் வந்ததும் கிளம்பி விட வேண்டும், என்று நினைத்துக் கொண்டு வாசலைப் பார்த்தேன். ஆனால் வந்தது ஒரு பெண். அப்படியொரு அழகு. சிகப்புப் பாவாடை தாவணியில், அச்சடித்த சிலை மாதிரி, கையில் ஒரு கிளி இருந்தால் மதுரை மீனாட்சிதான். கையில் காஃபித் தம்ளர்தான் இருந்தது. அதை என்னிடம் கொடுத்துவிட்டு, சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியொரு அழகான பெண், நம் எதிரில் உட்கார்வாள் என்று எந்தக் காலத்திலும் நினைத்தது கூட கிடையாது. நான் காஃபியை ஒரு வாய் வைத்ததும், ”நீங்கதான் மாமா கூட வந்தவங்களா, நீங்க யாரு, மாமா மாதிரி கட்சிக்காரரா” என்று படபடவென்று கேட்டாள். நான் சொன்னேன், ”இல்லை, எனக்கு கட்சியில் எல்லாம் ஆர்வமில்லை , நான் எம்.எஸ்.சி மேத்ஸ் படிக்கிறேன்” என்று. ”அப்படியா நானும் அதான் படிக்கேன், நீங்க சொல்லுங்க, மாமா கிட்ட, நான் கட்டினா அவரைத்தான் கட்டிக்குவேன், இல்லைன்னா...” என்று பாவாடையின் இடுப்புப் பகுதியில் சுற்றி வைத்திருந்த ஒரு பாட்டிலை எடுத்துக் காண்பித்து விட்டு, அழுதபடி உள்ளே போய் விட்டாள்.
நான் வாயடைத்துப் போய் இருந்தேன். காஃபியை எப்பொழுது சாப்பிட்டேன் என்று கூடத் தெரியவில்லை. இவளைக் கல்யாணம் செய்ய மறுக்கிறானா, அடக் கிறுக்கா, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமே..என்று மனதிற்குள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். ராதா வெளியே வந்தான். அவனுக்குப் பின்னால் அந்த ராதா. அவள் பார்வையாலேயே ”நான் சொன்னது ஞாவகமிருக்கா” என்பது போலிருந்தது. நான் என்னையறியாமல் தலையை ஆட்டிவிட்டு வந்தேன். பஸ் போயிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியெடுத்தது. அவனது அத்தை சொல்லியுமிருந்தாள், ”பஸ் கிடைக்கலைன்னா திரும்ப வந்துருங்க, சாப்பிடக்கூட இல்லையே..”என்று. அவனிடம் சொன்னேன், ”வா சாப்பிட்டு விட்டாவது வருவோம்.” ``பசின்னா என்னான்னு தெரியவேண்டாமா கவிஞரே” என்றான் கேலியாக.
”அது வேறப்பா ஒரு ராத்திரி சாப்பிடாம இருக்கிறதெல்லாம் பசியாயிடுமா” என்றேன். ”என்ன ராதா, என்ன சொல்லுதா,” என்றான். நான் ஒன்றும் பேசவில்லை. உங்க அப்பா எதற்காக வந்தார் என்றேன். ”என்ன, சம்பந்தம் பேசத்தான். நல்ல வேளை உம்ம வேலையில நான் இருந்திருந்தா இந்நேரம் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கும், என்றான். ”அடப்பாவி நான் வேணும்ன்னா வேலையை விட்டுடறேன், எனக்கும் இது பிடிக்கலை” என்றேன். ”ஆனா அந்தப் பொண்ணை விட்டுராதே,”என்றேன். ”என்ன, பொண்ணு அழகா உம்ம “சகி’’ மாதிரி இருக்காளா” என்றான். ”அய்யோ அவள்ல்லாம் இவ கிட்ட வரவே முடியாது. இவங்க ரொம்ப அழகாருக்காங்கடா” என்றேன். ”அடே அப்படியா, நான் அழகாயில்லையே” என்றான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ”ஏய் அவளுக்கெல்லாம் டாக்டர், இஞ்சினியர்ன்னு அழகழகா மாப்பிள்ளை வருவாண்டா, எங்க மாமனாருக்கே அப்படித்தான் ஆசையிருக்கு...”அப்புறம் ரொம்ப சொந்தத்தில கல்யாணம் பண்ணக்கூடாதுடா”என்றான். அய்யய்யோ நான் டாகடராயில்லையே என்று தோன்றியது. அவன் அதைக் கண்டு பிடித்து விட்ட மாதிரிப் பேசினான், உனக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கோ”. ”நானும் என்ன அழகாவா இருக்கேன்” என்றேன்.
பேசிக் கொண்டே நடந்தோம். கொஞ்சம் நிலா வெளிச்சமிருந்தது. தேய்பிறை நிலா. ஒன்றிரண்டு லாரி, பைக் எல்லாம் போயிற்று, கையை நீட்டினால் யாரும் நிப்பாட்டவில்லை. கால் வலித்தது. நகரத்துக்கு இன்னும் ஏழு கிலோ மீட்டர் இருந்தது. ஒரு சிறிய பாலம் வந்தது. அதில் உட்கார்ந்தோம். கீழே மணல்தான் இருந்தது. “வா அப்படி அந்தப் பாலத்துக்குக் கீழே படுப்போம்”, என்றான். அதற்குள் ஒரு லாரி வந்தது. பாலம் என்பதால், சற்று மெதுவாக வந்தது. கேட்டோம், ஏற்றிக் கொண்டார்கள்.நகருக்குள் வந்த போது அந்தத் தூங்கா நகரம் விழித்திருந்தது. பசிக்கும் தாகத்துக்கும் போதுமானது கிடைத்தது. லாட்ஜின் மொட்டை மாடியில்தான் படுப்போம். எதிரே பெரிய பெரிய கோபுரங்களைப் பார்த்ததும், ராதா, கையில் கிளியுடன் நினைவில் தோன்றினாள்.’’கண்டிப்பா அவளைக் கட்டிக்கோடா’’ என்று சொன்னேன். அவன் தூங்கிப் போயிருந்தான்.காலையில் அவனைக் காணும்.
அதற்கப்புறம் அவனைப் பல வருடங்களுக்குப் பின்னரே பார்த்தேன். எப்படியோ விசாரித்து நான் வேலை பார்க்கும் வங்கிக்கு வந்தான். அவனது அப்பாவின் வியாபாரத்தைப் பார்க்கிறதாகச் சொன்னான். உனக்கு தெரியுமா, அந்த ராதா இப்ப லண்டன், லண்டன்ல இருக்கா...மாப்பிளை டாக்டர்...., எனக்குத்தான் ஒருத்தியும் அமைய மாட்டேங்கா...” என்றான் பழைய குசும்பான சிரிப்புடன்.”உம்ம மாதிரி பத்து மாத்திரை கூட சாப்பிட்டுப் பார்த்தேன்..பிரயோசனமில்லை” எனப் பேசிக் கொண்டே இருந்தான், ஒருவர் அவனைத் தேடி வந்தார், “தோழர், போவோமா” என்றபடி. அவனும் விடை பெற்றான். கொஞ்ச நேரத்தில் ஒரு பைக் கிளம்பும் சத்தம் கேட்டது. |