கனவின் இருள் பெய்யும் பாவைக்கூத்து இரவுகள்
இப்படியெல்லாம் நடந்ததா என்னும் வியப்புடன் எழும் நினைவுகள் எல்லாமே ஒரு கனவைப் போல்தான் தோற்றம் கொள்கின்றன. முக்கியமாக எனது இளம் வயதில் இரவு நேரங்களில், பனிக்காலங்களில் நடந்த நிகழ்வுகள் எல்லாமே ஒரு பனியைப் போலவே என்னுள் மிதந்து அலைகின்றன. கடுமையான வெயிற்காலங்களில் நடுமதியக் கானல்நீர் நெளிவுகளில் மிதக்கும் மாயக்கனவுகளில் மனம் அழிந்து நினைவுகள் அழிந்து ஏதேனும் ஒரு பெருமரத்தடியில் விழுந்து கிடக்கிறேன். இருட்டு கசமாய்க் கட்டிய எனது பால்யத்தின் இரவுகளில், ஊரில் பாவைக்கூத்து நடந்த குளிர்ந்த இரவுகள் எல்லாமே அச்சுக்குலையாமல் இப்பொழுதுவரை அதே இருட்டுடனும், அதே மினுக்குக்கூடார வானுடனும், அதே ஆனந்தத்துடனும், அதே துயரங்களுடனும் எனக்குள் ஆழப் பதிந்து கிடக்கின்றன. என்னுள் இருக்கும் அறவுணர்வு மிக்க புனைவு மனிதனை உருவாக்கியதில் இந்தப் பாவைக்கூத்து நிகழ்வுகளுக்கு பெரும்பங்கு இருக்கிறது.
பாவைக்கூத்து என்னும் தோற்பாவைக் கூத்து எங்கள் கிராமத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். ஒற்றை மாடு பூட்டிய கூட்டு வண்டியும், சாமான்கள் ஏற்றிய வண்டியுமாக இரண்டு வண்டிகளில் பாவைக் கூத்து வந்திருக்கும் செய்தி ஊருக்குள் நொடியில் பரவிவிடும். பெரும்பாலும் அவர்கள் நீராவிப் பக்கத்தில் இருக்கும் ரெட்டியார் மடத்தின் முன்புதான் இந்த வண்டிகளை நிறுத்தியிருப்பார்கள். வெட்ட வெளியில் அடுப்புக்கூட்டி சமைத்துக் கொண்டு மடத்தில் தூங்கிக்கொள்வார்கள். 'பாவக்கூத்து வந்திருக்காம்ல' என்று சந்தித்துக் கொள்கிறவர்கள் எல்லோரும் அந்த ஆனந்தச் செய்தியைப் பரிமாறிக் கொள்வார்கள். செய்தி ஊரைத்தாண்டி பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் பரவிவிடும். ஊடக விளம்பரங்களின் உலகில் வாழும் நமக்கு, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தோன்றும். கூத்தில் பார்வையாளர்களும் பங்குபெறுதல் என்பதையும் தாண்டி பாவைக்கூத்து அந்தக் கிராமத்தவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. அந்த வண்டிகள் ஊருக்குள் நுழைந்ததிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரில் தங்கி, கூத்து நடத்தி, ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம் முடித்து ஊரைவிட்டுக் கிளம்புகிறவரை, அந்தக் குடும்பம் ஊரின் முழுப்பாதுகாப்பில் இருக்கும். ஒளிரும் வெண்திரைக்குப் பின்னால் இசையுடன் உயிர் பெற்று ஆடும் தோற்சித்திரப் பாவைகளிடம் மயங்கிக் கிடந்த பலரது அன்பிலும் உபசரிப்பிலும் அவர்கள் அந்த ஊர்க்காரர்களாகவே மாறிவிடுவார்கள்.
|
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் குழந்தைகளும் கொண்ட அந்தச் சிறிய குடும்பமே கூத்து நடத்துகிற குழுவாகவும் இருக்கும். ஊருக்குள் நுழைந்தவுடன் அவர்கள் முதலில் சந்திப்பது ஊர்க் கீதாரியைத்தான். கீதாரி என்பவர் யார்? ஊரில் உள்ள ஆடுகள் வளர்ப்பவர்களுக்குத் தலைவராக இருப்பவர்தான் கீதாரி. எங்கள் ஊரில் எப்பொழுதும் இருக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கும் அவைகளை மேய்த்துத் திரிகிற எழுபது எண்பது இடையர்களுக்கும் அவர்தான் தலைவர். பகல் முழுவதும் காட்டிலேயே அலையும் அவர்கள் வெவ்வேறு ஜாதிக்காரர்களாக இருந்தார்களும் ஒரு பெரிய குடும்பமாகவே இருப்பார்கள். குடியானவர்களுக்கும் இடையர்களுக்கும் ஏற்படுகிற பல்வேறு வகையான மோதல்களை சுமுகமாகத் தீர்ப்பவரும், ஆட்டுக்காரர்கள் எல்லோரையும் எல்லா சமயங்களிலும் காப்பவராகவும் இருப்பவர் கீதாரி, எங்கள் ஊரின் கீதாரிக் கவுண்டர் ஒரு காவல் தெய்வத்தின் ஸ்தானத்தில் இருப்பவர். பாவைக்கூத்துக் குடும்பம் நேரே அவரை வீட்டில் போய்ப்பார்த்து காலில் விழுந்துவிடுவார்கள். வாங்கப்பா, வாங்க தாயீ வந்துட்டீங்களா என்று வேறு தேசம் சென்ற அவரது சொந்தப் பிள்ளைகளை வரவேற்பது போலவே இருக்கும். எல்லாம் சாப்டுங்க முதல்ல. சாப்ட்டு முடிச்சிட்டு, ஆத்தாட்ட அரிசி தான்யம் வேண்டியதெல்லாம் வாங்கிக்கிட்டு சமையல ஆரம்பிங்க, மத்தத ரவைக்கு வந்து பேசிக்குவோம் என்று கிளம்பிவிடுவார். காலையில் இரண்டு மணி நேரமும் இரவில் இரண்டு மணி நேரமும் மட்டுமே வீட்டில் இருக்கும் இந்த ஆட்டுக்காரர்கள், கையில் ஒரு கம்புடன் சதா அலைபவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஸ்ரீராமனின் கதையை நடத்துவதற்கான எல்லா உதவிகளையும் செய்வார்கள். பாவைக் கூத்து நடக்கும் இடத்தைச் சுத்தப் படுத்தி மேடு பள்ளங்களை எல்லாம் சமப்படுத்துவது, டெண்ட் கட்டுவதற்கான கழிகளை ஊன்றி, டெண்டை சுற்றி வளைத்துக் கட்டிக் கொடுத்து, கூத்து நடக்கும் திரைமேடையை அமைத்து, திரைக்கு முன்பு மிருதங்கம் சிங்கி வாசித்தடியே பாடும் இசைக்குழு உட்கார்வதற்காக சிறுமேடையிடுவது என எல்லா வேலைகளையும் ஊர்க்காரர்களே செய்து கொடுப்பார்கள். கீதாரி வீடு மட்டுமல்ல, ஊரின் பலரது வீட்டிலிருந்தும் அரிசி, பருப்பு, காய்கறி என்று அவர்கள் போதும் போதும் என்று சொல்கிறவரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
|
பாவைக்கூத்துக்கும் கீதாரிக்கும் உள்ள உறவு பல இழைகளால் பின்னப்பட்டதாகும். தோற்பாவைக் கூத்தின் அடிப்படையே தோல் என்பதை நாம் அறிவோம். பதப்படுத்தப்பட்ட ஆட்டின் தோலில் வரையப்பட்ட சித்திரப்பாவைகள் தானே கூத்தையே நடத்துகின்றன. ஸ்ரீராமரின் கதையை நடத்தி அவருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படுகிற நாளிலே மழை கொட்டும் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. நானே இரண்டு மூன்று முறை பட்டாபிஷேக நாள் மழையில் நனைந்திருக்கிறேன். எந்தப் பருவகாலமாயினும் சரி, ஆடுகளுக்குத் தேவையான புல்வெளிகளை மழை மட்டுமே உருவாக்க முடியும். அதுவும் கோடை மழை என்பது உழவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட பல மடங்கு முக்கியம் இடையர்களுக்கு. சித்திரை வெயிலில் காடே கருகிப்போயிருக்கும் நாட்களில் ஆடுகளுக்குப் புல்லும் இலைதழைகளும் எப்படிக் கிடைக்கும்? கொஞ்சம் அகத்தி, ஆமணக்கு இலைகள், கருவக்காய்கள், உடைமர நெற்றுகள் என்று எப்படியெப்படியோ ஒவ்வொரு நாளையும் ஓட்டுகிற ஆட்டுக்காரர்களுக்கு இந்தக் கோடைமழை ஒரு பெரிய பிருந்தாவனத்தையே கொடுத்துவிடும். முன்னிரவில் கிடை அமர்த்திய பிறகு இருளைப் பிளந்து கொண்டு வேகவேகமாக ஓடிவந்து 'நேத்து விட்டுப்போன இடத்திலிருந்து' ராமகதையோடு தினமும் கலந்துகொள்வதின் மூலம் அவர்களால் கோடையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு பரிபக்குவத்தை வெகுஎளிதில் எட்டிவிடமுடியும்.
|
பாவைக்கூத்து தொடங்கி முதலில் கொஞ்ச நேரத்திற்கு வெறுந்திரை முன்பு அமர்ந்து பெண்கள் ஆர்மோனியம் மற்றும் மிருதங்கம் வாசித்தபடி கொஞ்சம் பாட்டுகளைப் பாடுவார்கள். மிருதங்கம் மற்றும் சிங்கியின் சப்தம் இரவைத் துளைத்து கிராமம் முழுதும் மிதந்து ஆட்களை அழைத்து வந்தபடி இருக்கும். டிக்கட் கொடுக்கத் தொடங்கியவுடன் முதலில் நுழைவது தினமும் எங்கள் குழுவாகத்தான் இருக்கும். பாவைகள் ஆடும் அரங்கினுள் வெறும் பெட்ரோமக்ஸ் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும். வெற்று வெண்திரையையே நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். வாசலில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருப்பவர்தான் பிறகு வந்து கூத்தை நடத்தப் போகிறார் என்று எங்களுக்குத் தெரியாது. ஓரளவு முக்கால் அரங்கு நிரம்பியவுடன் ஒருவர் வந்து பெட்ரோமக்ஸை இறக்கி காற்று அடித்து முழுவெளிச்சமும் வரவழைப்பார். சரி கூத்து தொடங்கப்போகிறது என்று புரிந்துகொள்வோம். பிறகு ஆட்டக்காரர் உள்ளே வந்து அன்றைய கதைக்குத் தேவையான பாவைகளைப் பெட்டியிலிருந்து எடுத்து அவருக்கு வசதியான வரிசைகளில் அடுக்கத் தொடங்குவார். அடுக்கப்படும் பாவைகளின் அசைவுகளைக் கொண்டு அது ராமர் லட்சுமணன் அனுமான் என்று நாங்கள் சத்தம் போட்டுக் கொண்டிருப்போம். திடீரென குண்டோதரன் திரையின் ஒரு மூலையில் தோன்றி "சைலோன்ஸ் சின்னப் புள்ளைகளெல்லாம் சத்தம் போடக் கூடாது சைலோன்ஸ்" என்பான். பின்னாடியே உச்சிக்குடுமி வந்து தனது குடுமியைத் திரையில் சுழற்றிவிட்டு குண்டோதரனை ஒரு போடு போடுவான். போவான்ல, புள்ளைகள்னா அப்படித்தாம்பா இருக்கும். நீ மொதல்ல கதையை நடத்து, பொறவு பாப்போம்." என்று இன்னும் ஒரு போடு போட்டுவிட்டு மறைவான். பிறகு கூத்து தொடங்கிவிடும். முதலில் தொந்திக் கணபதி வந்து ஒரு ஆட்டம் போடுவார். அதுதான் விநாயகர் துதி என்று பின்னால் தெரியவந்தது. அதுபோல கதை நடக்கும்பொழுது முன்பாட்டுக்காரர் (திரை முன்பு உட்கார்ந்து பாடுபவர் முன்பாட்டுக்காரர்) பாடும் பெரும்பாலான பாடல்கள் கம்பராமாயணப் பாடல்கள் என்பதும் அவை குறிப்பிட்ட பண்களிலும் தாளங்களிலும் அமைந்தவை என்பதுவும் எனக்குப் பின்னால்தான் தெரியவந்தது.
கீதாரி, பிரெசிடெண்ட் போன்ற முக்கியமான ஆட்கள் வருகிறவரை நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே நடந்துகொண்டிருக்கும். உச்சிக்குடுமி, குண்டோதரன் என்னும் இரட்டையர்களால் நகைச்சுவைக் காட்சியில்தான் பல நடப்பு விஷயங்கள் அலசப்படும். உலகம் முழுதும் உள்ள நாட்டார் மரபுக்கலைகளில் இப்படிப்பட்ட இரட்டைக் கதாபாத்திரங்களின் மூலம் அதிகாரத்தின் அழுத்தங்கள், முன்வரிசையில் உட்கார்ந்து பார்க்கிற அதிகாரத்தின் பிரதிநிதிகளிடம் மெல்லிய நகைச்சுவையாக சமர்ப்பிக்கப்படும். இதில் ஒருவன் அடிக்கிறவன். இன்னொருவன் சதா அடிபடுபவன். எதேச்சதிகார சமூகங்களின் இறுக்கிப் பூட்டப்பட்ட எல்லா
அடுக்குகளிலும் உறைந்து கிடக்கும் கேட்பாரற்ற ஆள்பவன்-ஆளப்படுபவன் என்னும் இரட்டை நிலையை மெல்ல அசைக்கும் எத்தனிப்பாகவே இந்த நகைச்சுவை இணைகள் இருந்திருக்கின்றனர். இதுவே தமிழ்த்திரையுலகில் கவுண்டமணி செந்தில் இணையாகத் தொடர்ந்தது. வடிவேலு விஷயத்தில் அடிபடுபவர் வடிவேலாகவும் அடிகொடுப்பவர் இந்த சமூகமாகவும் நேரிடையான இணைமோதலாக மாற்றப்பட்டிருப்பதை ஒரு முக்கியமான மாறுதலாக அவதானிக்கலாம். நிற்க.
முழு அரங்கும் நிறைந்ததும், உச்சிக்குடுமி குண்டோதரனை நாலு அறை அறைவதோடு இருவரும் ஓடிப்போய்விடுவார்கள். பிறகு ஒரு முழுப்பாடலுடன் கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு பாத்திரமும் தோன்றும்போது அதற்கான சிறப்புப் பாடல்களும் இசையும் பிரத்யேக ஒலிகளும் எழும்ப, அந்தப் பாவை ஒரு சிறிய நடனம் ஆடி வந்தனம் தெரிவித்து திரையின் ஒரு ஓரத்தில் சாய்ந்து நிற்கும். தெருக்கூத்தின் வடிவத்தையும் கட்டமைப்பையும் முழுவதுமாக தனக்குள் உள்வாங்கியிருப்பதாலேயே இதைப் பாவைக்கூத்து என்று அழைத்திருக்கிறார்கள். தஞ்சாவூர்ப்பகுதி மராட்டிய ராவ்களால் நடத்தப்பட்ட இந்த தோற்பாவைக்கூத்து, தஞ்சை மற்றும் ஆற்காடு மாவட்டங்களின் தெருக்கூத்துக்கள், தென்னகத்தின் குறவன் குறத்தி ஆட்டங்கள், கேரளத்தின் கதகளி என்று பல நிகழ்த்துக் கலைகளினாலும் தன்னை செழுமைப்படுத்தியிருக்கிறது. கதையின் முக்கியப் பாத்திரங்களான ராமன், லட்சுமணன், அனுமார், பத்துத்தலை ராவணன் போன்ற பாத்திரங்கள் பெரும் ஆரவாரத்துடன் வருவார்கள். அதுவும் லட்சுமணனும் அனுமாரும்தான் எங்கள் சிறுவர் பட்டாளத்தை மிகவும் கவர்ந்த கதா பாத்திரங்கள். ஒரு குரங்காக இருந்து கொண்டு அனுமார் நடத்துகிற சாகஸங்கள் எங்களை பெரும் ஆரவாரத்தில் ஆழ்த்திவிடும். அந்தநேரம் மனிதனில் இருந்துதான் குரங்கு தோன்றியிருக்கும் என்று நாங்கள் பேசியிருக்கிறோம்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் காட்சிக்குப் பொருந்துகிறமாதிரி நன்கைந்து பாவைகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் முதல்முறையாக ஒரு பாத்திரம் திரைக்கு வரும் நடனத்தின்போது அந்த எல்லாச் சித்திரங்களையும் காட்டிவிடுவார்கள். ராமனுக்குத்தான் அதிகப்படியான பாவைகள் இருக்கும். பச்சை நிறத்தில், நீல நிறத்தில், மண் கலரில், தீப்பிழம்பு போன்றதொரு பாவை என்று விதம்விதமாக டக்டக்கென்று ஒலிப்பின்னனியோடு தோன்றி மறைவார்கள். ராமன் ரூபத்தை மாற்றுகிறார் என்போம். எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபம் பிடிக்கும். எனக்கு எப்பொழுதுமே நீல நிற ராமனே பிடித்தவன். ஆபரணங்களுக்காக சிறுசிறு துளைகளிட்டு வெகு அலங்காரமாக இருப்பார்கள். வண்ணங்கள் மிகச் செழுமையாகவும் மிகச் சரியாகவும் இருக்கும். பெட்ரோமக்ஸ் வெளிச்சத்தில் பச்சை நிற ராமர் பெண்கள் எல்லோருக்கும் பிடித்தவராக இருந்தார். கிழங்கள் பலதும் ராமா ராமா என்று கண்களை ஒற்றிக் கொள்வார்கள்.
அனுமாருக்கு, இலங்கையில் யார் கண்ணிலும் படாமல் பறக்கும் குட்டி அனுமன், விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பெரீய்ய அனுமார், வாலைச் சுருட்டி பெரிய சிம்மாசனமாக்கி உட்கார்ந்து இராவணன் சபையில் வழக்காடுகிற அனுமன், அசோக வனத்தில் சீதாதேவியின் முன் சாந்த சொரூபியாக நிற்கும் சிறிய அனுமன், எப்பொழுதும் காட்சியளிக்கும் நீல நிற அனுமன் என அனுமனுக்கும் பல ரூபங்கள் உண்டு. அனுமன் பாவைகளுக்கென்று பயன்படுத்தப்படும் சிறப்பு ஒலிகள் ஹாலிவுட் படங்களில் விண்வெளி ஓடங்களுக்கான இசையைப் போன்று இருக்கும். கடல் கடக்க அனுமனும் மற்றும் பிற குரங்குகளும் சேர்ந்து பெரிய பெரிய பாறங்கற்களைத் தூக்கிக் கொண்டுவந்து பாலம் அமைப்பார்கள். லட்சுமணன் மயங்கி விழுந்ததும் அவனுக்காக சஞ்சீவி மலைக்குப் பறந்துபோய் அங்கே அந்த மூலிகையின் பெயர் மறந்ததும் அந்த மலையையே தூக்கிக் கொண்டு வருவார் அனுமன். மலை பக்கத்தில் வந்ததுமே மூலிகை வாசம்பட்டு, இறந்த லட்சுமணன் விழித்துவிடுவான். ராமர், ஏம்பா மலையையே தூக்கிட்டு வந்துட்ட, நாளைக்கு மக்கள் சிரமப்படுவார்கள். அந்த மலை எங்கு இருந்ததோ அங்கே கொண்டுபோய் வைத்துவிடு என்பார். இதத் தூக்கீட்டு திரும்பப் பறக்கனுமா, முடியாதுப்பா என்று காலால் சஞ்சீவி மலையை ஒரு எத்து எத்துவார். அது பறந்துபோய் இமயமலையிலேயே விழுந்துவிடும். வழியில் பிய்ந்து விழுந்த மலைகள் தான் இந்தக் குருமலை, சிறுமலை, நீலகிரி மலைகள் எல்லாம் என்று கூறுவார்கள். இத்தகைய ஹாலிவுட் படங்களுக்கு இணையான சாகசக் காட்சிகளில் நாங்கள் மயங்கிக் கிடந்ததில் வியப்பில்லை. இராவணன் இந்தச் சிறுகுரங்கின் வாலில் துணிகளைச் சுற்றி தீ வையுங்கள் என்பான். அனுமன் வாலில் துணிகளைச் சுற்றச் சுற்ற வால் நீண்டுகொண்டே போகும். இலங்கையில் உள்ள எல்லாத் துணிகளையும் சுற்றிவிடுவார்கள். பிறகும் வால் முழுதும் சுற்றப்படாமல் இருக்க, போய் சீதாதேவியின் ஆடையை எடுத்து வாருங்கள் என்பான் ஒருவன். உடனே வால் முடிந்துவிடும். தீப்பற்றிய வாலுடன் அனுமன் பறந்து பறந்து இலங்கை முழுவதையும் தீ வைத்துக் கொளுத்திவிடுவான் இலங்கையே தீப்பற்றி எரியும். இதெல்லாம் நாங்கள் அப்பொழுது இரசித்த சூப்பர் காட்சிகள்.
|
இராவணன் சீதையை ரதத்தில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது எதிரில் சாம்பவன் என்ற பெரிய முதிய பறவை ரதத்தை மறிக்கும். ராவணா நீ செய்வது பெரிய பாபம். உனது அழிவை நீ தேடிக்கொள்ளாதே அன்று பலவாறாக சொல்லிப்பார்க்கும். அவன் கேட்காமல் அந்த முதிய பறவையின் இறகுகளை வெட்டத் தொடங்குவான். அது சாகும்வரை அவனோடு மூர்க்கமாகப் போராடும். சாம்பவன் போர் மட்டும் ஒரு அரைமணி நேரம் நடக்கும். சாம்பவனுக்குத் தரப்படுகிற குரலும் ஒலிக்கோர்வையும் கேட்பவர்களை நடுங்கச் செய்யும். மறு நாள் முழுவதும் நாங்கள் ஒருவருக்கொருவர் சாம்பவன் குரலிலேயே பேசிப் பார்ப்போம். சண்டைக் காட்சிகளை ரசிக்கும் பழக்கம் இப்படித்தான் நமக்கு வந்திருக்க முடியும். பாரதப் போரைவிடவா பெரிய சண்டைக் காட்சிகளை நம்மால் படம் எடுக்க முடியும்? சமீபத்தில் கூட ஆப்கன் யுத்தத்தையும் ஈராக் யுத்தத்தையும் ஈழப் பேரழிவையும் நாம் காணவில்லையா? பெருங்கதையாடல்களின் காலம் முடிந்துவிட்டதா என்ன?
ஸ்ரீராமன் காட்டுக்குப் புறப்படுவதிலிருந்துதான் கதை தொடங்கும். அயோத்தியே அழுது புலம்பும் என்று தொடங்குகிற கூத்து முழுவதும் தொடரும் அடுக்கடுக்கான துயரங்களால் நிரம்பிய ராமகதையை, இசையோடும் வண்ணங்களோடும் காணூடக நிகழ்த்துக் கலையாகக் காண்கிற கிராமத்து மனிதர்களின் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் கணக்கற்ற துயரக்கட்டிகள் ஒவ்வொரு நாளும் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கும். கதையின் இறுதியுச்சமாக (climax) ஒரு பெரும் போரும் அதில் இராவணன் கூண்டோடு அழிவதும் இராமன் வெற்றியடைவதும் என பாவைக்கூத்து ஒரு பெருந்திரள் உளவியற் சிகிச்சையாக மறிவிடுகிறது. இராமனிடமிருந்து கசியும் நல்லுணர்வு கதை முழுதும் நிறைந்து, பலவகை நல்விழுமியங்களை கலாச்சார ரீதியில் கிராம சமூகங்களில் வெகு எளிதில் விதைத்து விடுகிறது.
ராமாயணப் பாவைக்கூத்தின் மாயக்கதைப் பின்னல்களின் எல்லா இழைகளும் எல்லாக் காட்சிகளும் எல்லா நிகழ்வுகளும், பாவைகளின் ஒவ்வொரு அசைவும் அதனோடு இணைந்த இசைக்குறிப்புகளும் ஒலிப்பாவுகளும் என்னைப் பேரளவில் மயக்கி வைத்திருந்தன. காட்டில் ஒரு பர்ணகசாலையை சீதைக்காக கட்டுவார்கள். அடடா, பல வர்ணங்களும் இணைந்த அந்த சித்திரத்தை திரையின் ஒரு ஓரத்தில் வைத்திருப்பார்கள். மாரீசன் மானாகி ஓடித்திரிவதும் அதைக்கண்டு சீதை மயங்குவதும் என ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து இராவணன் சீதையை சிறையெடுப்பது வரை (கடத்தல் என்ற சொல் அப்பொழுது இல்லை) அந்தப் பர்ணகசாலை ஒவ்வொரு உட்காட்சியிலும் திரையில் வெவ்வேறு இடங்களில் எப்படி வைக்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன். இராவணன் சீதையைக் காவி ரதத்தில் ஏற்றுகிற காட்சியில் அந்தப் பர்ணகசாலை அவனிடம் போரிட்டுத் தோற்றுக் கதறி அழுது திரை முழுதும் பிய்த்து எறியப்பட்டு சிதறிப் பறந்த காட்சியை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. சத்யஜித் ரேயைப்பற்றி படிக்கும் பொழுது அவர் படப் பிடிப்புக்கு முன்னாலேயே, அன்று எடுக்க இருக்கும் காட்சிகளை கோட்டோவியங்களாக ஸ்கெட்ச் செய்துவிடுவார் என்று படித்திருக்கிறேன். ஆனால் இங்கே இந்தக் கூத்துக் கலைஞர் ஒரே ஆளாக அவரே எல்லாப் பாத்திரங்களுக்கும் குரல் கொடுப்பதோடு, பாவைகளை இயக்குவதோடு, சிறப்புச் சப்தங்களையும் எழுப்பி, திரையின் மொத்தக் கட்டமைப்பிலும் ஒரு சிறப்பான கவனத்தையும் செலுத்தி இன்று ஒரு திரைப்படம் உருவாக்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செய்யும் உழைப்பை அவர் ஒருவரே செய்துவிட்டது எவ்வளவு பெரிய ஆச்சர்யம். சிவாஜிராவும், முருகன்ராவும், ஜெயாம்மாவும், எப்பேர்ப்பட்ட மகத்தான கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு ரெட்டியார்ப் பெரியவர் இரண்டு குறுக்கம் கரிசல் காட்டை முருகன்ராவுக்கு எழுதி வைத்தது எவ்வளவு சரியான விஷயம்.
பட்டாபிஷேகம் அன்று ஒரு பெரிய பூஜையே நடக்கும். கீதாரி சார்பில் கூத்து நடத்திய எல்லோருக்கும் புதுத் துணிகள், ஒன்று அல்லது இரண்டு பெரிய கிடாய்கள் கொடுப்பார்கள். பாவைக்கூத்தை முழுவதுமாகப் பார்த்து பெரு மயக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பொருளை, தான்யத்தை, பருப்புவகைகளை ஏன் தங்க மோதிரங்களைக்கூட பரிசளிப்பார்கள். கூத்து முடிந்த பிறகும் பல நாட்களுக்கு ஊரில் தங்கியிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் விருந்து நடக்கும். நாங்கள் நீராவிப் பகுதியச் சுற்றி அலைவோம். பழுதுபட்ட பாவைகளைச் செம்மை செய்வதை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்போம். கிடைக்காரர்கள் கொடுத்த தோல்களில் புதிய பாவைகளைச் செய்வார்கள். சாயம் போன பவைகளுக்கு வர்ணம் ஏற்றுவார்கள். நாங்கள் பனை ஓலைகளில் இதே மாதிரிப் பாவைகளைச் செய்து ஒரு கிழிந்த வேட்டியைக் கட்டி லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கட்டி நாங்களே கூத்து நடத்துவோம். எங்களைவிட சிறுபிள்ளைகளிடம் பத்துப் புளிய முத்துக்களை வாங்கிக்கொண்டு கூத்துப் பார்க்க அனுமதிப்போம். முடிந்தவரை ஒரிஜினல் பாவைக்கூத்தை மிமிக்ரி செய்து நாங்கள் நடத்தும் கூத்தைப் பார்த்து பலரும் சிரித்துவிட்டுப் போவார்கள். சிலர் மட்டும் ஏசுவார்கள். பாவைக்கூத்துக்காரர்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிற நாளில் எங்களை பெரும் சோகம் அப்பிக்கொள்ள, மெயின் ரோடுவரை வண்டிகள் பின்னாலேயே நடந்து, அந்த வண்டிகள் மறைகிறவரை பார்த்துக் கொண்டே இருப்போம்.
மதுரை நிஜ நாடகக் குழுவின் இயக்குனர் மு.ராமசாமியிலிருந்து பலரும் தோற்பாவைக்கூத்து பற்றிய மிக விரிவான ஆராய்ச்சி நூல்களையும் குறும்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் பாவைக்கூத்தின் ஆன்மாவை இந்தச் சிறு கட்டுரையில் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். இந்த இடத்தில் சமீபத்தில் என்னை வெகுவாகப் புண்படுத்திய ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது. கமலஹாசனின் 'தசாவாதாரம்' படத்தில் ஒரு பாடல் காட்சியில் இந்தப் பாவைகள் தீப்பிடித்து எரியும் காட்சியைப் பார்த்து எனக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை. கலாச்சாரத்தின் நுண்ணிய வேர்களை அறியாத மடையர்களால்தான் இப்படிப்பட்ட காட்சிகளை எழுதவும் படமாக்கவும் முடியும். திரைப்படம் எடுப்பவர்கள் படத்தின் வெற்றிக்காக எதையும் செய்வார்கள் என்பதற்கு சாட்சியமாக இந்தச் சிறு காட்சியே போதும். பாவைக்கூத்து போன்ற பல நாட்டார்கலைகளை சினிமாதான் அழித்தது என்பதை சிம்பாலிக்காக காட்டுகிறார்களோ என்னவோ? அந்த ஸ்ரீராமனுக்குத்தான் வெளிச்சம். |