தார்க்குச்சிகளின் கதை
சித்திரை முதல் நாளை நாங்கள் வருஷப்பிறப்பு என்றுதான் சொல்வோம். பால்யத்தில் எங்களைப் பெரும் கிளர்ச்சிக்குள்ளாக்கிய விழா நாட்களில் இதுவும் ஒன்று. வருஷப் பிறப்பன்று, ஒரு நல்ல நேரத்தில் நடக்கவிருக்கும் "நாளேர் பூட்டுதல்" என்னும் முக்கிய நிகழ்வை நினைத்தபடியே அன்றைய பொழுது விடியும். ஆனால் அனேகமாக எல்லா வீடுகளிலிருந்தும் வருகிற தோசை சுடும் வாசம்தான் எங்களை எழுப்பிவிடும். ஆண்டு முழுதும் தோசைக்குப் போடுகிற நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதனால்தான் எங்களைப் போன்ற இல்லாத வீட்டுப் பிள்ளைகளுக்கு தோசை ஒரு கனவுப் பலகாரமாக இருந்தது. பல் தேய்க்காமலேயே அடுப்பங்கரைக்குப் போய் அம்மாவிடம் தோசையை வாங்கி எதுவும் தொட்டுக் கொள்ளாமல் சும்மா பிய்த்துத் தின்ற காலத்தின் ருசி இன்றும் நாக்கடியில் புதைந்திருக்கிறது. அப்பத்தா, குளிக்கப் போங்கடா என்று எல்லோரையும் விரட்டி விட்டுவார். ஏதாவது தண்ணீர் உள்ள கிணறாகப் பார்த்து ஒரு குதியாட்டத்துடனான குளியல். என்ஜின் ரூம் மேலிருந்து குதிப்பது, மல்லாக்க நீச்சல் அடிப்பது, முங்கு நீச்சல் அடிப்பது என எல்லாமும் முடித்து கண்கள் அரைச் சிவப்பானவுடன் வெளியேறிவிட வேண்டும். இல்லையென்றால் அடியோ வசவுகளோ எதுவேண்டுமானாலும் கிடைக்கலாம்.
குளித்து முடித்தவுடன் ஏதாவது படர்ந்த கருவ மரமாகப் பார்த்து அய்ந்தாறு வளையாத நேர் குச்சிகளை வெட்டி எடுத்துக் கொள்வோம். இது எதற்கென்றால் இவைகளைக் கொண்டுதான் புத்தாண்டு நாளேர் ஓட்டுவதற்கான புதிய தார்க்குச்சிகளைத் தயார் செய்ய வேண்டும். முதலில் பட்டையை உரித்து கணுக்கள் முதலியவற்றை நீக்கி நேர்த்தியான குச்சிகளாக ஆக்க வேண்டும். பிறகு கட்டி மஞ்சளை எடுத்து குச்சிகளில் பூசி அவைகளை மஞ்சள் குச்சிகளாக மாற்றிக் கொள்வோம். பிறகு ஆசாரியிடம் போய் தார் வைத்துக்கொள்ள வேண்டும். சுப்பையனாசாரிப் பெரியவர் அதிகாலையிலிருந்தே ஊர்க்காரர்கள் எல்லாருக்கும் தார் வைத்துக் கொடுத்தபடியே இருப்பார். யாரும் அவருக்கு துட்டு எதுவும் தர வேண்டியதில்லை. பிறகு மஞ்சளில் முக்கிய நூலால் கொஞ்சம் வெற்றிலைகளை எடுத்து குச்சியின் மேல் பகுதியில் கொடியைப் போலக் கட்டிவிடுவோம். ஊர் முழுதும் புத்தம் புதிய மஞ்சள் தார்க்குச்சிகளில் வெற்றிலைக் கொடிகள். நாளேர் ஓட்டுவதற்காக நல்ல குச்சிகளாக மூன்றை எடுத்து வீட்டில் சாமி மூலையில் வைத்துவிட்டு மீதிக் குச்சிகளைக் கொண்டு விளையாடத் தொடங்கி விடுவோம்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது வீட்டில் மாடுகளே இல்லாத சிறுவர்கள் கூட இந்தப் புத்தனேர் தார்க்குச்சிகளை தயாரிப்பார்கள். சும்மா ஸ்டைலாக கையில் வைத்துக் கொண்டு அலைவார்கள். குழுக்களாகப் பிரிந்து எம்.ஜி.ஆர். நம்பியார் கத்திச் சண்டைகளும் நடக்கும். பெரிய சம்சாரிகள் வீடுகளில் தனி ஆசாரி அமர்த்தி ஏராளமான தார்க்குச்சிகள் தயார் செய்வார்கள். பெரும்பாலும் ஆண்டு முழுவதற்கும் தேவையான தார்க்குச்சிகளை தயார் செய்துவிடுவார்கள். இது போக நாளேர் உழுவதற்காக குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புதிய கலப்பையுடன் கூடிய புதிய அல்லது செப்பனிடப்பட்ட ஏரை பத்து நாட்களுக்கு முன்பே தயார் செய்துவிடுவார்கள். கொண்டாட்டத்தோடு வேலைகளையும் இணைத்துவிடும் கீழைமரபைத்தான் இதில் பார்க்கிறோம். வேளாண்மை என்பது ஒரு தொழில் அல்ல. வேட்டையாடுதலைப் போன்றே வேளாண்மையும் ஒரு வாழ்க்கைமுறை. வேளாண்மை மூலம் இயற்கையோடு தங்கள் முழுவாழ்வையும் இணைத்துக் கொண்டதால் இன்று நாம் சந்திக்கிற தொழில்சார்ந்த மனச்சிக்கல்களும் நோய்மைகளும் முன்பு இல்லை. மழையோடும், மண்ணோடும், காற்றோடும், பருவங்களோடும் இணைந்த உயிரியல்பாக வேளாண்மை இருக்கிறது.
ஊர்ப்பெரியவர்கள் கூடி நல்ல நேரம் பார்த்து எந்தத் திசையில் எந்தக் காட்டில் நாளேர் உழ வேண்டும் என்று முடிவு செய்து தலையாரி மூலம் ஊர்சாட்டி விடுவார்கள். ஒரு சிறிய தமுக்கை முழக்கியபடி வெளியிடப்படும் அறிவிப்பு சடுதியில் ஊர்முழுதும் பரவிவிடும். எல்லோரும் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்குப் பெயிண்ட் அடித்து மஞ்சள் குங்குமப் பொட்டுகள் எல்லாம் வைத்து தயாராகிக் கொள்வார்கள். முதலில் எல்லா மாடுகளும் கண்மாய்க்கரையோரம் இருக்கும் மந்தையில் கூடத் தொடங்கும். மேக்கால் பூட்டி அதில் தலைகீழாக ஏரைக் கவிழ்த்து நிற்க வேண்டும்.
எல்லோரது கைகளிலும் மஞ்சள் தார்க்குச்சி சுழலும். பிரசிடெண்ட் வந்து நல்ல நேரம் வந்தவுடன் தனது வெள்ளைத்துண்டை ஒரு கொடியென அசைத்ததும் மாடுகள் ஏர்களை இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிடும். யாரும் யாரையும் மோதிவிடாமல் ஹை ஹை என்றும் பலவகையான சப்தங்களை எழுப்பியபடி நாங்கள் ஓடிக் கொண்டிருப்போம். எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு அல்லது கீகாட்டுப் பக்கம் நடக்கும் எருதுகட்டு போன்ற வீர விளையாட்டுகள் எல்லாம் கிடையாது. ஒரு எருதுகட்டில் கலந்து கொள்ளும் சந்தோஷத்தை இந்த மஞ்சுவிரட்டு எங்களுக்குக் கொடுத்துவிடும். எங்கள் ஊர்ப்பெரியவர்கள் எப்பொழுதும் கூறுவது: "நம்ம ஊர் மற்ற ஊர்கள் மாதிரி கிடையாது. இங்க அடிதடிகளோ கொலைகளோ நடக்க நாங்கள் விடமாட்டோம். அத்தனை சாதி சனங்களும் தாயா பிள்ளையா எப்பவும் ஒன்னு போல பழகி இந்த ஊரோட பேரைக் காப்பத்தனும். பேராண்டி அருவாளக் கீழ போடு." இது தான் எங்கள் கிராமத்தின் தத்துவம். இப்படித்தான் எங்களை வளர்த்தார்கள். வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வருகிற பெண்கள் பலரும் 'என்ன இந்த ஊர் ஆளுக இப்படிப் பிள்ளைப்பூச்சிகளா இருக்காங்க' என்று தான் ஆச்சர்யப்படுவார்கள். அனேகமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமத்துப் பெருசுகளும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் நடைமுறையில் பூகோளம், தட்பவெப்பம் மற்றும் வாழ்நிலைகளுக்குத் தக்கவாறு இந்தத் தத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஊர்களும் மனிதர்களும் இருந்திருக்கலாம் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
இப்பொழுது மாடுகளும் மனிதர்களுமாக நாங்கள் அந்த பொதுப் பிஞ்சையை (புன்செய் நிலம்) நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். அங்கங்கே பெருசுகள் நின்று ‘பாத்து பாத்து’ என்று ஓட்டத்தை ஒழுங்குபடுத்திக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும். எங்களைப் பொறுத்தவரை இந்தப் போட்டி ஓட்டம்தான் மிக முக்கியம். மந்தையிலிருந்து ஊரைக் கடக்கிற வரையிலுமான ஓட்டம் மிக முக்கியமானது. ஏனெனில் தெருக்களின் இரு மருங்கிலும் நிற்கிற பெண்களும், அவர்களின் முதுகுகளின் பின்னால் ஒளிந்து நின்று பார்க்கிற குமருகளும் (இளம் பெண்களும்) யார் யார் எல்லாம் எப்படிப்பட்ட வீர ஓட்டம் ஓடினார்கள் என்று ஆண்டு முழுக்கப் பேசுவார்கள். மாடுகளும் நாங்களும் இணைந்து ஓடி கண்மூடி முழிப்பதற்குள் நாளேர் உழவேண்டிய பிஞ்சையை அடைந்து விடுவோம். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க யார் யாரெல்லாம் முதலில் அந்தப் பிஞ்சைக்குள் காலடி எடுத்து வைத்தார்கள் என்பதுதான் முக்கியம். இன்னும் இரண்டு மூன்று மாசத்துக்கு இந்தப் பட்டியல் பற்றிய பேச்சு பல இடங்களிலும் நடக்கும். அந்தச் சின்னஞ்சிறிய கிராம வாழ்வில் வேறு என்ன வகையான பெருமைகள் வர முடியும்?
எல்லா ஜோடி மாடுகளும் ஏரைப்பூட்டி உழுவதற்கான தயார் நிலையில் நிற்கும். எல்லாப் பெரியவர்களும் வந்து குழுமிய பிறகு பெண்கள் குலவையிட ‘உழுங்கடா’ என்று ஒரு சப்தம் எழும். பிறகு அது ஒரு நூறு சப்தமாகி எல்லோரும் உழத் தொடங்குவார்கள். சுமார் நூறு ஜோடி மாடுகளும், ஏர்களும் அதை ஓட்டும் மனிதர்களும் ஒரு பத்து ஏக்கர் பிஞ்சையில் நின்றால் ஒரு சால் கூட இல்லை, ஒரு கோடு கீச்சுவதற்கான இடம் மட்டும்தான் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். ஒரு அஞ்சு நிமிஷத்தில் முதல் உழவு முடிந்துவிடும். பிறகு விதை விதைத்து இரண்டாம் உழவு. அத்தனை ஏர்களும் சேர்ந்து உழும் ஆனந்தக் காட்சியைக் காண்பவர்களுக்கு நோக்கங்களற்ற மனித ஒற்றுமையின் தாத்பர்யம் அடிமனசில் பதிந்துவிடும். மனிதர்கள் கூடுவதும், கூடி உழைப்பதுவும் ஒரு களிப்புமிக்க மாபெரும் கொண்டாட்டமாகிவிடுகிறது. ஆதியில் குளிர் இரவுகளில் காட்டுத்தீயைச் சுற்றி ஆடிப்பாடிக் கொண்டாடிப் பெற்ற களிப்பைத்தான் மனிதன் எல்லாக் காலங்களிலும் தேடியபடி அலைகிறான்.
உழுது முடிந்து ஊர்திரும்பும் பொழுதுதான் சித்திரைக் கொண்டாட்டத்தின் முக்கியமான இறுதிப்பகுதி வருகிறது. உழுது முடித்து வருகிற இளைஞர்களின் மேல் அவர்களது முறைப்பெண்களும், கொழுந்தனார்களின் மேல் மதினிகளும், அத்தான்கள் மேல் மைத்துனிகளும், மாமாக்கள் மேல் மருமகள்களும் மறைந்திருந்து மஞ்சள் நீரை ஊற்றுவார்கள். மேலும் இவர்கள் ஓடி ஒளிவதும் அவர்கள் விரட்டி வந்து மஞ்சள் நீரால் நனைப்பதும் என்று, வெகுஇயல்பான ஆண்-பெண் எதிர்பால் ஈர்ப்பை ஒரு களிப்புமிக்க திறந்தவெளி விளையாட்டாக மாற்றி விடுவார்கள். வெயிலில் ஓடிவந்த களைப்பைப் போக்க எல்லாரது வீட்டிலும் பானக்காரம் தயாராக இருக்கும். எந்த வீட்டிலும் யார்வேண்டுமானாலும் பானக்காரம் அருந்தலாம். ஜாதீயம் மீறிய சில அற்புதமான உறவுகளையும் இந்த நாளில் நான் கவனித்திருக்கிறேன்.
தார்க்குச்சி என்பது தமிழக நிலவுடைமை சமூகத்தில் வேளாண் வாழ்வின் தாத்பரியங்களுக்கான குறியீடாக இருந்து வந்திருக்கிறது. இதை ஒரு பழமொழியோடு இணைக்கலாம். 'உழுபவன் கணக்குப் பார்த்தால் ஒரு தார்க்குச்சி கூட மிஞ்சாது' என்னும் அந்தப் பழமொழி பல உண்மைகளை உள்ளடக்கியிருக்கிறது. தார்க்குச்சி என்பது கால்நடைகளை நம்பிய பழம் உழவர்களின் செயலூக்கத்திற்கான குறைந்தபட்ச ஆயுதமாக இருந்து வந்திருக்கிறது. 'காலத்தே பயிர்செய்' என்னும் அடிப்படையைக் கொண்ட பயிர்த்தொழிலில், எப்பொழுதும் ஒரு கூரிய தார்க்குச்சியின் பயத்திலிருக்கும் எருதைப் போலவே விவசாயியும் காலம் தவறாமல், விதைப்பிற்கு முந்தைய கோடை உழவில் தொடங்கி அறுவடை வரைக்கும் படிப்படியாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று எந்திரங்களின் பேருதவி கிடைத்தபிறகும் இந்தக் காலம் தவறாமையை விவசாயி மறந்துவிட முடியாது.
நகர்ப்புற தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருள்களின் பொருளாதாரத்திற்கும் கிராமப்புற விவசாயப் பொருட்களின் பொருளாதாரத்திற்கும் இடையில் இருக்கிற பெரும்பிளவை ஆட்சியாளர்களும் பொருளாதார மேதைகளும் பல நூற்றாண்டுகளாக மறைத்துக்கொண்டே வருகிறார்கள். சாகுபடி மான்யங்கள், வட்டித்தள்ளுபடிகள், குறந்தவிலைக்கு உரம், மின்சாரம் என்று தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு வருகிறோம். விவசாயியின் லாப நஷ்டக் கணக்குப் பேரேட்டில், சும்மா கிடைக்கும் கருவமரக் குச்சியிலிருந்து செய்யப்படுகிற ஒரு தார்க்குச்சி கூட மிஞ்சாது என்பது எவ்வளவு பெரிய சோகம்?
|