புளியமர நண்பர்களும் கண்மாய்த் தோழனும்
எங்களூர்க் கண்மாய் என் சிறு வயதிலிருந்தே என் உற்ற தோழனாய் இருந்து வந்தது. முதல் காரணம், எங்கள் வீடு கண்மாய்க்கரையோரம் இருந்தது. இரண்டாவது காரணம் எங்களுக்கு சோறு போடுகிற எங்கள் தோட்டம் கண்மாயின் அக்கரையில் இருந்தது. தினமும் கணக்கற்ற முறைகள் வீட்டுக்கும் தோட்டத்திற்குமாக கண்மாயைக் கடந்துதான் ஆக வேண்டும். மூன்றாவது முக்கியக் காரணம் அதன் புளியமரக் கரை. இன்றும் கூட ஊருக்குப் போனதும் வீட்டில் பையை எறிந்துவிட்டு முதல் வேலையாக ஒருநடை வேகமாக கண்மாய்க்கரையில் நடந்து எனக்குப் பிரியமான ஒரு புளியமரத்தின் அடியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து எழுந்த பிறகுதான் மற்ற விஷயங்கள்.
காலையில் எழுந்தவுடன் ஓடிப்போய் கண்மாயைப் பார்ப்பதுதான் என் முதல் வேலை. வெம்பா எனப்படும் பனிபெய்யும் காலைகளில் துண்டைப் போர்த்திக் கொண்டு கண்மாய்க்கரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து வெயில் காய்ந்து கொண்டிருப்போம். வெண்ணிறக் கண்மாய் நீரின் மேல் வெம்பாப்பனி, பேய்கள் போல் கால்களற்று உலவிக்கொண்டிருக்கும். சுமார் மூன்று கிலோமீட்டர்கள் நீளமுள்ள கண்மாய், சோலையம்மாள் கோவிலில் தொடங்கி, சுடுகாட்டைத் தாண்டி, முழு ஊரையும் கடந்து, பெரும்புளிய மரங்களின் கரையாகவும், பிறகு ஆலமரங்களின் கரையாகவும், பின் மடையைத் தாண்டி சிறு
புளியமரங்களின் கரையாகவும், கரைப்பத்திரகாளியம்மன் கோவிலையும் தாண்டி, மதுரை நெடுஞ்சாலையோரம் கழுங்கலில் முடிகிறது. கழுங்கல் என்பது உபரி நீரை வெளியேற்றுவதற்கான அமைப்பு.
மடையைத் தாண்டி நீளும் சிறுபுளியமரக் கரையை என்னுடைய சொந்தக் கரையாகவே பாவித்து வந்திருக்கிறேன். எனக்கு மூன்று வயதாக இருந்தபொழுது காளிக்குடும்பர் அவர்களால் நட்டு வளர்க்கப்பட்ட சுமார் 500 புளியங்கன்றுகளூம் இன்று வளர்ந்து ஒரு பெரிய புளிய வனமாகிவிட்டது. காளிக்குடும்பர் ஒரு பிரம்மாண்டமான மண்பானையில் நீர் மொண்டு, முறைவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை எல்லாக் கன்றுகளுக்கும் நீர் கிடைப்பது மாதிரி, குடம் குடமாக தலைச்சுமையாக சுமந்து அந்தப் புளிய மரங்களை வளர்த்தார். அவருக்கு மனைவி கிடையாது. ஒரே மகளான ஈஸ்வரி அக்காவும் ஒரு கிறிஸ்துவ மடத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக ஏதோ ஒரு ஊரில் இருந்தார். காளிக்குடும்பர் இறக்கும் பொழுது எல்லா மரங்களும் உருண்டு திரண்டு பூத்துக் காய்க்கத் தொடங்கிவிட்டன. தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு நீண்ட புளிய ரயில் கரையில் ஊர்ந்து கொண்டிருப்பது போல இருக்கும். எதையும் எதிர்பார்க்காமல்
பலரது கேலி கிண்டலையும் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக அந்த மரங்களை ஏன் வளர்த்தார் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். கண்மாய்க்கரை ஊருக்குச் சொந்தமானதால் எல்லா மரங்களும் பஞ்சாயத்துக்குச் சொந்தமாகிவிட்டது. "அப்புச்சி" என்று என்னைப் பாசமுடன் அழைத்து சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருப்பார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு காளிக்குடும்பரை இப்பொழுது நினைக்கும்பொழுது, ஓர் ஓங்கி உயர்ந்த கருப்புத் தேவனின் பிம்பமே எனக்குள் எழுகிறது.
இந்தப் புளியமரக் கரையில் எனக்குப் பிடித்த மர நண்பர்கள் பலர் வண்ணார் துறையிலிருந்து பத்திரகாளியம்மன் கோவில்வரை வரிசையாக நிற்கிறார்கள். முக்கியமாக புதிய மடையின் மேல்புறம் நிற்கிற கணக்கற்ற கிளைகள் கொண்ட குண்டுமரம்தான் எனது ஆத்ம நண்பன். அம்மா இறந்தபிறகான மன அழுத்தம் அதிகமான பல நாட்களில், அந்த மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்தும் படுத்தும் புரண்டு கொண்டிருப்பேன். அம்மா வந்தாள், அபிதா, புத்தம் வீடு, உயிர்த்தேன், சிறிது வெளிச்சம், மோக முள், தலைமுறைகள் போன்ற எனக்குப் பிடித்த பல முக்கியமான புத்தகங்களை அந்த மரத்துக்குக் கீழ் படித்திருக்கிறேன். யாருமே நடமாடாத மதிய வேளைகளில் கண்களை மூடிப் படுத்தபடி பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன். செம்போத்து மற்றும் குயில்கள் எத்தனை முறை தொடர்ந்து கூவுகிறது என்று எண்ணுவேன். குயிலின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சரியாக வஸந்த காலம் வரும் போது தேனாய் மாறிவிடும். வஸந்தத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் கரகரப்பு கூடி, கடைசியில் மழைக்காலத்தில் குயில் கூவுவதே இல்லை. தண்ணீருக்கு வருகிற மந்தை ஆடுகளின் நகர்வும், செறுமல்களோடு இணைந்த சிறுகுளம்போசையும், புழுக்கை வாசமும் எனக்கு எப்பொழுதும் பிடித்தவை. அப்படியே ஒரு ஆட்டுக்குட்டியாக மாறி ஆடுகளை உரசிக் கொண்டு போக வேண்டும் என்று தோன்றும். ஒரு தொட்டிக்குள் செருகியது போன்ற அந்த மரத்தின் கிளைகளில் மிக எளிதாக ஏறிவிடலாம். ஏதாவது ஒரு கிளையில் உட்கார்ந்து இன்னொரு கிளையில் காலை நீட்டி, அந்தரத்தில் ஆடுகிற கிளைகளோடு ஆடும் ஆனந்தம். கண்மாய்க்குள் இறங்கும் தாழ்ந்த கிளையில் ஜிவ் ஜிவ்வென்று ஒரு ஊஞ்சல். காசுக்கரட்டி என்னும் பல்வர்ணச் சிறு பறவையை இந்தப் புளியமரங்களில் தான் பார்க்கமுடியும். விளையாடும் அணில்கள் பல முறை என் மேல் விழுந்து விரிந்த புத்தகத்தின் மேல் ஓடி மறையும்.
காக்கைக் குஞ்சு என்று ஒரு விளையாட்டு ஆடப் பொருத்தமான சிறுமரங்களாக அவை இருந்தன. முதலில் சாட் பூட் அல்லது பச்சைத் தவக்கா பளபளங்க….. சொல்லி குழுவில் கடைசியாக மாட்டுகிறவன் தான் காக்கைக் குஞ்சைக் காப்பாற்ற வேண்டும். ஒரு சிறு குச்சி தான் குஞ்சு. எல்லோரும் மரங்களில் ஏறிக்கொள்ள குஞ்சுக்காரன் மட்டும் கீழே நிற்பான். அவனை ஏமாற்றிவிட்டு குஞ்சைக் கைப்பற்ற வேண்டும். மரத்தில் ஏறுவதும் இறங்கி ஓடுவதும் த்ரில்லாக இருக்கும். மரத்திற்கும் குஞ்சிற்கும் நடுவில் இருக்கும் யாரையாவது தொட்டுவிட்டால் அவன் தான் அடுத்த காக்காக் குஞ்சு. சமயங்களில் மரத்திலிருந்து இறங்காமல் விளையாட்டில் இருந்து விலகிக் கொள்ளும் ஆனந்தத்தையும் அப்பொழுதே பழகியிருந்தேன். விளையாட்டும் ஆனந்தம். அதிலிருந்து விலகிக் கொள்வதும் ஆனந்தம் என்ற தத்துவ வெளிக்குள் இந்தப் புளிய மரங்கள் தான் என்னை அழைத்துச் சென்றன.
பெரும்பாலும் ஐப்பசி, கார்த்திகை கனமழையில் தான் கண்மாய் நிரம்பும். தெற்கில் உள்ள கரிசல் காடுகளின் மழை நீர் முழுவதும் புதூர் சாலையை ஒட்டிய வாருகால் வழியாக வெள்ளமாய் கண்மாய்க்குள் நுழைவதை ஒவ்வொரு வருடமும் வேடிக்கை பார்ப்போம். குழுகுழுவென்று நுங்கும் நுரையுமாக முட்புதர்கள், உடைந்த மரங்கள் என்று வழியில் உள்ள எல்லா குப்பைகளையும் அள்ளிக் கொண்டு வரும். முக்கியமாக ஏராளமான பாம்புகள் எதிர் நீச்சல் போட்டபடி வெள்ளத்தில் வரும். பையன்கள் வெகு எளிதில் இந்தப் பாம்புகளை கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள். இத்தனை நாளும் காணாத தவளைகள் எங்கிருந்துதான் வருமோ, இரவெல்லாம் கத்திக்கொண்டே இருக்கும். சிறு தூறலும், குளிரும், தவளைச் சப்தமும் கேட்டு வீடுகளுக்குள் சந்தோஷம் நிரம்பிய கதகதப்பான உரையாடல்களும், எதிர்காலம் குறித்த திட்டங்களும், கணவன் மனைவிக்குள் ஒரு புதிய அன்பும் பரவத் தொடங்கிவிடும். அடைமழை மாதம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கண்மாயை நிரப்புவதை அடிக்கடி எட்டிப் பார்த்துக்கொள்வோம். வடக்கே மடைவரைக்கும் நிரம்பிவிட்டது. சிறு வண்ணார் துறை வரைக்கும் நிரம்பிவிட்டது. மொட்டை இருளப்பசாமியை வெள்ளம் தொட்டுவிட்டது. தெற்குக் கிடங்குகள் எல்லாம் நிரம்பி கீழப்பட்டிப் பாதை வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது என்று தினசரி அறிக்கை கொடுத்துக் கொண்டே இருப்பேன் அம்மாவிடம். முழுக்கண்மாயும் நிரம்பி கழுங்கால் போய்விட்டால் போதும். எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர் வற்றாது. எங்கள் தோட்ட விவசாயம் முழுக்க முழுக்க இந்தக் கண்மாயை நம்பித்தான். மட்டுமல்லாமல், எங்கள் விளையாட்டு, நீச்சல், மீன் பிடித்தல், மாடுகளைக் குளிப்பாட்டுதல், ஆட்டு மந்தைக்குக் குடி நீர் என்று தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகவே கண்மாய் இருக்கிறது.
கெத்துக் கெத்தென்று நீர் நிறைந்த கண்மாயில் குளிக்க, துவைக்க என்று பல வாசல்கள் உண்டு. ஆற்றில் துறை எனப்படுவது போல இங்கும் பல துறைகள். எங்கள் வீட்டுக்கு மிக அருகில் ஒரு துறை. அதிலிருந்து நடுக்கண்மாய் முழுவதையும் பல நாட்கள் நீந்திக் கடந்து அக்கரை சென்று வந்திருக்கிறோம். சும்மா கரையில் நின்று மாடு குளிப்பாட்டுபவர்களை, துணி துவைப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்போம். குளிப்பவர்கள் பெரும்பாலும் ஆலமரத்துறைக்குத்தான் செல்வார்கள். ஆலமரத்துறையில் நின்று வேடிக்கை பார்க்க முடியாது. ஏனெனில் அது, பெண்கள் துறையாகவே மாறிவிட்டது. பெரிய வண்ணார்துறை நீச்சலில் கெட்டிக்காரர்கள், துறவிகளைப் போன்று வாழ்க்கை நடத்தும் சில பெரியவர்கள் மற்றும் சில முக்கியமான நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டுமே குளிக்கிற ஒரு சிறப்பான துறையாக இருந்தது. பல சிறந்த உரையாடல்களை இந்தத் துறையின் துவைகல்லில் மோதும் சிற்றலைகளின் பின்னணியில் கேட்டிருக்கிறேன். யாருமே இல்லாத மதிய வேளைகளில் விரிந்த கண்மாய் முழுவதையும் பார்த்தபடி, வந்து போகும் பறவைகளைக் கவனித்தபடி தனிமையற்ற தனிமையை இந்தத் துறையில் பலமுறை அனுபவித்திருக்கிறேன். நீர்ப்பரப்பைத் தொட்டு சிற்றலைகளைத் தள்ளிக் கொண்டு வரும் சிறுகாற்றில் நடுமதிய தனிமைப் பெண் ஒயிலாக மிதந்துவந்து என்னைப் பலமுறை தழுவியிருக்கிறாள். இன்றும் அந்தத் துறை ஒரு உயிருள்ள பெண்ணாகவே தோற்றம் அளித்துக் கொண்டிருக்கிறது.
தை, மாசி கடந்ததும் தூண்டில் போட்டு மீன் பிடிக்கத் தொடங்கிவிடுவோம். தூண்டில் கம்பு, நூல், முள், மயிலிறகுத் தக்கை எல்லாம் சேர்த்து தூண்டில் தயார் செய்வதிலேயே சில நாட்கள் கடந்துவிடும். வயல்காட்டு வரப்பின் ஓரங்களில் இருக்கும் மண் புழுக்களை ஒரு சிரட்டையில் எடுத்துக் கொள்வோம். மண்புழுக்களைக் கிள்ளி முள்ளில் மாட்டி தூண்டி போட்டு அசையாமல் தக்கையையே பார்த்துக் கொண்டிருப்போம். கெண்டை, கெளிறு, குரவை போன்ற மீன்கள் தான் கிடைக்கும். வெள்ளை ஒளி உமிழும் வெளிச்சிமீன் எப்பொழுதாவது அகப்படும். ஒரு சிறு கிடங்கு தோண்டி நீர்விட்டு அதில் அந்த மீனை விட்டிருப்போம். வீட்டுக்குக் கிளம்பும்பொழுது மீண்டும் கண்மாய்க்குள் வெளிச்சி மீனைமட்டும் விட்டுவிடுவோம். அவ்வளவு அழகிய மீன் கண்மாய்க்குள் இருப்பதுதான் சரி. எனக்கு எப்பொழுதுமே சரியாகவே மீன் படுவதில்லை. பையன்கள் எல்லோரும் என்னைக் கிண்டல் செய்வார்கள். பெரியம்மா மகன் விஸ்வநாதன் எக்கச்சக்கமாக ஒரு பை நிறைய மீன் பிடித்துவிடுவான். இரவில் பெரியம்மா வீட்டில் இருந்து குழம்பு வந்துவிடும். கண்மாய் நிறைய மீன்கள் இருக்கும் பொழுது பெரியமழை பெய்து, தண்ணீர் வெள்ளமாக நுழையும் பொழுது எதிர் ஏறும் மீன்களை தூரிவலை கொண்டு பிடிப்பார்கள். எனது நண்பன் பால்ராஜின் அப்பா, அவர்தான் அம்பலக்காரர், தூரி போடுவதில் சூராதி சூரர். நள்ளிரவில் வெள்ளம் வந்தாலும் ராத்திரியே அணைகட்டி தூரி நிறைய நிறைய பல சாக்குகள் மீன்களைப் பிடித்துவந்து அதிகாலையில், ஊரில் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவார். ஊரே அன்று மீன் வாசத்தில் மூழ்கிவிடும். இதேபோல் கண்மாய் அழிவது ஒரு பெரும் நிகழ்வாக இருக்கும். தண்ணீர் முழுவதுமாக வற்றி பெரியதுறையில் மட்டும் நீர் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட நாளில் கண்மாய் அழிகிறது எல்லோரும் மீன் பிடிக்க வாங்க என்று ஊர்சாட்டி விடுவார்கள். பக்கத்து கிராமங்களில் எல்லாம் செய்தி பரவி பல ஊர்க்காரர்களும் வந்துவிடுவார்கள். ஊர்ப்பெரியவர் ஒருவர் துண்டை அசைத்ததும் ஜனம் மொள்ளென்று நீருக்குள் விழுந்துவிடும். ஒரே சகதியும் அளியும் சேறுமாக, கலங்கிய கண்மாய் முழுவதும் தலைகளாய் இருக்கும். இதற்கென்றே எல்லோரது வீட்டிலும் பத்திரமாக ஆண்டுமுழுவதும் தூங்கிக்கொண்டிருந்த வலைகள் பழுதுபார்க்கப்பட்டு அன்று களமிறங்கிவிடும். சிறுவர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும். சும்மா அளிச்சேற்றில் புரண்டு, குதித்து ஆடிக் கொண்டிருப்போம். கழுதைகளா என்று வசவும் அடியும் கூட விழும். சகதியோடு ஆண்கள் வலை கவிழ்த்து, கொட்டும் மீன்களை, பெண்களும் முதியவர்களும் பொறுக்கி சட்டி பானைகளுக்குள் நிரப்புவார்கள். தேவையில்லாத நண்டுகள், தலைப்பிரட்டைகள், நீர்ப்பூச்சிகள் என்று எல்லா இடங்களிலும் பல உயிர்கள் சிதறிக் கிடக்கும். காக்கைகள், பருந்துகள் எல்லாம் வட்டமடித்து முடிந்ததை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும். ஒரு போர்க்களம் போன்ற அத்தகைய நிகழ்வுகளைப் பார்த்து பல நாட்களாகிவிட்டது. சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபொழுது இப்பொழுதெல்லாம் பஞ்சாயத்து போர்டு மீன்களை ஏலம் விட்டுவிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நல்ல வேளை இன்னும் மொத்தக் கண்மாயை ஏலம் விடாமல் இருக்கிறார்களே அது போதும் என்று எண்ணிக்கொண்டேன்.
பச்சைத் தவக்கா
பளபளங்க
பழனி மச்சான்
மினுமினுங்க
ஓரங்கம்
சீரங்கம்
சின்னப் பையா/பொன்னு கையெடு.
|