காலத்தைத் துரத்திய மனிதர்கள்
பூமியை நம்பி வாழ்கிறவர்கள், பூமியைப் போலவே எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றவர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக வானம்தான் இந்தப் பாடத்தை எங்களுக்குக் கற்றுத் தருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மேகங்களே அற்ற வெற்று வானத்தையே அன்னாந்து, அன்னாந்து பார்த்துக் கொண்டு இருந்தோம். அதிகாலையில் எழுந்தவுடன் கண்மாய்க்கரைக்கு ஓடிப்போய் கிழக்கு வானத்தில் ஏதாவது மேகம் தெரிகிறதா, இல்லையா என்று பார்த்து சின்னத் தாத்தாவுக்கு சொல்ல வேண்டியது என் வேலை. கிழக்கு வானத்தில் சூரியன் செம்பிழம்பாய் எழுந்தவுடன் ஒரு சிறு குட்டி மேகமாவது தென்பட்டால் போதும். மழை கருக்கொண்டுவிட்டது என்று அர்த்தம். கீழ் திசையில் காலை மேகங்கள் குவிந்து விட்டால், அன்று மாலையே மழை நிச்சயம் என்று தாத்தா சொல்லிக் கொடுத்திருந்தார் . இன்றைக்கும் ஒரு மேகமும் இல்லை என்ற தொடர்ந்த செய்தியால் திருனையில் படுத்த படுக்கையாய் இருந்த தாத்தாவின் மரணம் நெருங்கிக் கொண்டே வந்தது.
முதல் வருடம் ஆடிப் பட்டம், ஐப்பசி அடைமழை, கார்த்திகை கனமழை, மார்கழி கர்ப்போட்டம் எல்லாம் பொய்த்து பங்குனியை எட்டியபோது, பஞ்சம் பற்றிய பயநிழல் ஊரைக் கவ்வத் தொடங்கியது. சித்திரை மாத கோடை மழை பற்றிய நம்பிக்கைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். கோடை மழை என்பது இடியும் மின்னலும் கொண்ட பேய்மழை. வானம் முழுசும் கிழிந்து கொட்டோ கொட்டென்று கொட்டிவிடும். இடியில் பல பனை மரங்கள் கருகிப் போய்விடும். மின்னலில் ஆடு மாடுகளோடு கருகியவர்களும் உண்டு. ஒரே நாள் மழையில், கண்மாய் நிறைந்து விடுகிற பெருமழை என்று பலவாறாக ஒவ்வொருவரும் கோடை மழை பற்றிய நினைவுகளில் நீந்தினார்கள். சித்திரையின் பின்னேழு, வைகாசியின் முன்னேழு, ஆக, பதினான்கு நாட்கள் அக்னி நட்சத்திரமும் கழிந்தது. கோடைமழை இல்லை என்றாகிவிட்டதால் அடுத்து ஆடி பதினெட்டாம் பெருக்கை எதிர்பார்க்கத் தொடங்கினோம். கரிசல் காட்டில் பதினெட்டாம் பெருக்கு என்பதெல்லாம் அதிகற்பனை. அகண்ட காவிரிக்காரர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். காலம் எங்களைத் துரத்தியது போய், காலத்தை நாங்கள் துரத்த ஆரம்பித்தோம்.
இரண்டாம் வருடமும் மழைக்காலம் பொய்த்தது. ஊரில் எல்லா வீட்டுக்குள்ளும் பஞ்சம் நுழைந்து கொண்டது. குலுக்கைகளில் இருந்த தானியங்கள், அடுக்குப் பானைகளில் இருந்த பயறு வகைகள் எல்லாம் காலியாகிவிட்டன. நிலமற்ற கூலிக்காரர்கள் தஞ்சாவூர்ப்பக்கம் பொழைக்கப் போய்விட்டார்கள். ஆட்டுக்காரர்கள், ஆடுகளோடு குழந்தை குட்டிகளையும் கூட்டிக் கொண்டு நாஞ்சில் நாட்டுப்பக்கம் போனார்கள். பெரிய விவசாயிகள் விருதுநகர், சாத்தூர் கமிஷன் கடைகளிலும், மூவன்னா போன்ற அந்தப் பகுதியின் பெருங்கொண்ட முதலாளிகளிடமும், நிலப்பத்திரங்களைக் கொடுத்து கடன் வாங்கத் தொடங்கினார்கள். சிறு விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கண்பிதுங்கி நின்றார்கள். பல சொத்துக்கள் கை மாறத் தொடங்கின. கிராமப் பொருளாதாரம் என்பது ஒரு பெரும் பொய் என்பதை தெள்ளத் தெளிவாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தது பஞ்சம். இந்தப் பஞ்சத்தை நாங்கள் எப்படி சமாளித்தோம்?
கடைகளில் மக்காச்சோள மாவு மட்டும் தாராளமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. அந்த மஞ்சள் கலர் உப்புமாவை ஒருக்காலமும் மறக்க முடியாது. ஏற்கனவே அம்மா ஓர் உப்புமா பைத்யம். தினமும் மூன்று முறை அந்த மஞ்சள் உப்புமா செய்வதில் அவருக்கு அலுப்பே கிடையாது. சாப்பிடுகிற நாங்கள் தான், இதையே மனுஷன் திம்பானா என்று புலம்பிக் கொள்வோம். ஒரு நாள் குலுக்கைக்குள் இறங்கி கடைசியாக இண்டு இடுக்குகளில் இருந்த கேப்பையை (கேழ்வரகு) சேகரித்து ஒரு இரண்டு மூன்று படி தேற்றினேன். ஒரு வாரத்துக்கு ஒரு நேரம் கேப்பைக் களி அல்லது கூழ். கேப்பை எப்பொழுதுமே எனக்குப் பிடித்த தான்யம் தான். பச்சைக் கேப்பைக் கருதுகளைக் கொண்டு வந்து தீயில் வாட்டி, மணிகளை உதிர்த்து உரலில் ஆட்டி சுடுகிற வடை ஒரு கனவுத் தின்பண்டம். பச்சைக் கருதை சுடுகிற போது எழும் மணம் இன்னும் மூக்கைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஊர்க்காரர்கள் எல்லோரது கவனமும் திடீரென எறும்புகள் மேலும், எலிகள் மேலும் குவிந்தது. எறும்புப் புற்றுகளைத் தோண்டி அவைகள் பெரும்பாடுபட்டு சேர்த்து வைத்திருக்கும் தானியங்களைக் கொள்ளை அடித்தார்கள். இதைவிட எலி வளைகளில்தான் பெருங்கொள்ளை கிடைத்தது. கொடிக்கொடியாக மேப்பில் பார்க்கிற ஆறுகளின் வடிவில் இருக்கும் எலிகளின் நகரில் ஒரு மூடைத் தானியம் கூடக் கிடைத்திருப்பதாக பேசிக் கொண்டார்கள். அத்துடன் அந்த எலிகளையே வேட்டையாடி +சுட்டுச் சாப்பிட்டார்கள். கீழத் தெருவில் ஒரு குடும்பத்திற்கு பூனைக் குடும்பம் என்ற பெயர் உண்டாகியது. முதலில் காட்டுப் பூனைகளையும் பிறகு ஊர்ப் பூனைகளையும் சாப்பிட்டு, அந்தப் பெரிய குடும்பம், பஞ்சத்தைக் கடந்து கொண்டிருந்தது. ஊரில் இருந்த எல்லாக் கோழிகளும் சேவல்களும் காணாமல் போய்விட்டன. வெள்ளெலி, அணில், புறா, காடைகள், வௌவால், காசுக்கரட்டி, சிட்டுக் குருவிகள் என கிடைக்கிற எல்லாவற்றையும் உண்ணத் தொடங்கியிருந்தார்கள்.
தூரத்துக் காடுகளில் கூர்ந்து பார்த்துக் கொண்டே போனால் ஒரே ஒரு சிறிய விரல் நீள இலை மட்டும் தெரியும். அங்கே தோண்டினால் கிடைப்பது தான் சனாக்கிழங்கு என்ற சாகாக்கிழங்கு. கொஞ்சு தமிழில் சாகாக்கிழங்கு என்று பெயர் வைத்தவன் கவிஞனாகத் தான் இருக்க வேண்டும். நீரே அற்ற அந்தப் பஞ்சத்திலும் ஒற்றை இலையோடு சாகாமல் இருக்கும் அந்தத் தாவரம், எங்களையும் சாக விடாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தது. இந்தத் தாவரத்திற்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று அம்மாயி சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த சாகாக் கிழங்கைக் கொண்டு வந்து ஆட்டி குளக்கட்டை அவித்து, வெறும் வத்தலில் அரைத்த சட்னியோடு சாப்பிட்டு, பல குடும்பங்கள் பகல்களைக் கடந்து கொண்டிருந்தன. எங்கள் வீட்டிலும் ஒரு நாள் பெரியம்மா கொடுத்த கிழங்குகளைக் கொண்டு அம்மா குளக்கட்டை செய்தாள். நாக்கில் நமநம என்று எரியும் அந்தக் கிழங்கை முதலில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அந்தக் குளக்கட்டை ஒரு முழு நாள் பசியையும் தாங்கியபடி அடிநாக்கில் ருசித்துக் கொண்டே இருந்ததை மறு நாள்தான் கண்டுபிடித்தோம். புளியமுத்துவை வறுத்து ஊறப்போட்டுவைப்பார்கள். ஒரு நாள் கழித்து தோல் கழன்றுவிடும். சிறு பிள்ளைகளுக்குக் கிடத்த பஞ்சகாலத் தின்பண்டம் புளியங்கொட்டைகள் தான். எனக்கு மிகவும் பிடிக்கும் ஒருமுத்தை வாய்க்குள் வைத்து கொஞ்சங் கொஞ்சமாக ஒரு அரைமணி நேரம் மென்ற பிறகு, சுவையான் கூழாகிவிடும்.
மழைக்காக ஊர் மக்கள் எடுத்த முயற்சிகளை நினைத்தால் இப்பொழுது வேடிக்கையாக இருக்கிறது. கழுதைக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். தெப்பக்குளம் அருகில் உள்ள பிள்ளையாரை மூன்று நாட்கள் தண்ணீருக்குள் முங்க வைத்தார்கள். ஆடு வெட்டி எல்லைப் பொங்கல் வைத்தார்கள். கரைப்பத்திரகாளிக்கு முளைப்பாரியிட்டு விழா எடுத்தார்கள். இரவுகளில் பாரதம், ராமாயணம், பவளக்கொடி மணிமாலை, அல்லி அரசாணிமாலை எல்லாம் படித்தார்கள். வானம் எதற்கும் அசைவதாக இல்லை. பஞ்சாங்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார்கள். பல சாமியாடிகள் மௌனமாகவே ஊளையிட்டபடி ஏதொன்றும் சொல்லாமல் மலையேறினார்கள்.
மூன்றாவது வருடம் தான் கொடிய பஞ்சம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. வற்றவே வற்றாத ஊர்க்கிணறு முழுதுமாகத் தூர்ந்துவிட்டது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நாட்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தன என்று யோசித்து, இன்று ஞாபகங்களின் உள்ளறைகளைத் திறக்கவே பயமாக இருக்கிறது. நீரின்றி எப்படி அமையும் உலகு? ஊர்க்காரர்கள் எல்லோரும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்தார்கள். பகலில் யாரும் நீர் எடுக்கக் கூடாது. அதிகாலையில் மட்டும் ஒரு வீட்டுக்கு ஒரு குடம் என்கிற ரீதியில் ஒரு ஏற்பாட்டைச் செய்து அதற்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடந்தார்கள். வற்றிய கண்மாயின் அக்கரையில் இருந்த மலையரசன் தோட்டத்தில் கடைசிவரை வற்றாமல் தண்ணீர் இருந்து, ஊர்மக்களின் தொண்டையை நனைத்துக் கொண்டிருந்தது. மூன்றாம் ஆண்டு கார்த்திகையும் மழையற்றுக் கடந்த போது வாழ்க்கை பற்றிய பல அடிப்படையான கருத்தாக்கங்கள் அழியத் தொடங்கின. குறிப்பாக நம்பிக்கைகள். எல்லா நம்பிக்கைகளும் வெறும் நம்பிக்கைகள் மட்டும் தானா? இயற்கையின் ஒரு பகுதி தானே மனிதனும். கடவுள் முதலான பல பொய் நம்பிக்கைகள் உதிரத் தொடங்கின. இயற்கையை மனிதன் நம்ப முடியாத போது, மனிதனைப் பிணைத்திருக்கும் இயற்கையின் நாபிக்கொடி அறுந்து கொண்டே வந்தது. இயற்கையின் கொடிய தண்டனைக்கு ஆளாகும்படி நாங்கள், மனிதர்கள், என்ன தவறு செய்தோம்? பஞ்சம் பலவகையான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது.
மூன்றாவது ஆண்டும் முடியும் தருவாயில், மழை அற்றுப் போனதற்கு, நாங்களே காரணம் என்று, வெகு நாணயமாக ஒத்துக் கொண்டோம். ஏதோ ஒரு தவறு செய்திருக்கிறோம் ஆனால் அது என்ன என்று புரியவில்லை. ஊர்ப் பெரியவர்கள் மடத்தில் உட்கார்ந்து, முன்னிரவுகளில், இந்த ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களைக் குற்றவாளிகளாக்கிக் கொண்டு, பஞ்சம் என்னும் புரிபடாத அந்த இயற்கை நிகழ்வில் அவர்களும் பங்கேற்றுக் கொண்டார்கள். இன்று கோபன்கேகனில் கூடிய கோட்டு சூட்டு அணிந்த, எல்லாம் புரிந்த, உலகின் அதிகார மையப் பெரியவர்கள் இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். உருப்படியாக எந்த முடிவும் எடுக்க முடியாமல், பூமி அழியட்டும் என்று அவர்கள் எல்லோருமே வேக வேகமாக விமானம் ஏறி பறந்துவிட்டார்கள்.
|