முகவரியற்ற வார்த்தைகள்!
ஒருவன் எவ்வளவு உயர்வான புத்தகங்களை வேண்டுமானாலும் வாங்கி தன் அலமாரியை அலங்கரித்துக்கொள்ளலாம். ஆனால் அதை படிப்பதற்கு தேவையான அறிவும், தகுதியும் வரும்வரை அந்த புத்தகத்தினால் அதை வாங்கியவனுக்கு எந்த உபயோகமும் இருக்காது என்றார் விவேகானந்தர். இது உண்மைதான் சில புத்தகங்களை ஆவலுடன் திறந்து இரண்டு பக்கங்கள் படித்ததும் அட இதைப்போய் வாங்கிவிட்டோமே என்று தோன்றும். ஆனால் அதே புத்தகம் சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து கண்ணில் பட்டதும் அட இப்படி ஒரு புத்தகம் நம்மிடம் இருக்கிறதா! என்ற ஆவலுடன் அதை படித்திருக்கிறேன். இப்படிப்பட்டதொரு அனுபவத்தினால் நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை அவ்வப்போது கலைத்துப்போட்டு மீண்டும் முறையாக அடுக்கிவைப்பேன் இந்த செயலபாட்டில் என்னால் ஒதுக்கப்பட்ட அவமானத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் புத்தகஙக்ளை ஆசையோடு அரவணைத்துக்கொள்ளும் அற்புதம் நிகழும்.
மூச்சுப்பிரச்சனை ஏதேனும் ஏறிட்டு பார்த்துவிடுமோ என்ற பயத்தினால் முன்னெச்சரிக்கையாக மூக்கில் துணியை கட்டிக்கொண்டு தூசுகள் படிந்துள்ள உள்ள புத்தகக்குவியலில் புதைந்துகிடந்தபோதுதான் கண்ணில் பட்டது ”நோயற்ற வாழ்வு” என்ற புத்தகம். குறிப்பிட்ட காலம் ஒரே இடத்தில் இருந்துவிட்டால் அந்த இடம் இருந்தவனுக்கே சொந்தம் என்ற சிந்தனையை முதன் முதலில் தூசுகள்தான் தூண்டிவிட்டிருக்க வேண்டும். புத்தக அட்டையில் தூசுகள் பல காலம் படிந்திருந்ததனால் அட்டையின் நிரத்தை அடியோடு மாற்றியிருந்தது. பழுப்பு நிறத்தில் அட்டையின் ஓரங்கள் சிதைந்திருந்த அந்த புத்தகத்தை அங்கேயே அமர்ந்து படிக்கத்தொடங்கினேன்.
நோய் நம்மை தாக்கியதும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவையான வழிமுறைகள் பற்றி அந்த புத்தகத்தில் வழிமொழியப்பட்டிருந்தது. நம்மைச் சுற்றி நல்லவிதமான சக்திகள் பல சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றன. அந்த சக்திகள் நாம் ஆரோக்கியமாக வாழ வழிகாட்டுகிறது. உடலில் வழி ஏற்பட்டதும் அதை எதிர்த்துப் போராடாதீர்கள். பதட்டமடையாதீர்கள், அந்த போராட்டம் வழியை மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக வலியுள்ள அந்த இடத்தை அமைதிப்படுத்துங்கள். அந்த வலியை உணருங்கள். நம்மைச் சுற்றியுள்ள சக்திகளை கூவி அழையுங்கள் வலியுள்ள அந்த இடத்தில் அமைதியேற்பட அந்த சக்திகளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த சக்திகளின் ஆற்றல்களை உணருங்கள். விரைவில் அமைதியும், ஆரோக்கியமும் திரும்பும் என்று கூறப்பட்டிருந்தது. எனக்கு அவ்வப்போது தலையில் வலியேற்படுவதுண்டு அந்த புத்தகத்தை படித்த பிறகு வலி ஏற்படும் போதெல்லாம் அந்த புத்தகத்தின் வழிமுறையை பின்பற்ற ஆரம்பித்தேன். விளைவு! ஆஹா ஆஹா என்றிருக்கவில்லை ஆ ஆ என்றுதான் இருந்தது. வலி மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. வீட்டில் எலி செத்திருக்கும்போது அதை தூக்கிப்போடாமல், நாற்றம் தாங்காமல் நறுமணப் பொருட்களை பயன்படுத்துவதைப்போல்தான் இருந்தது இந்த வகையான செயல்பாடுகள். அதற்குப்பிறகு கூவி அழைக்கும் அந்த கூறுகெட்ட செயல்பாட்டை விட்டுவிட்டு மாத்திரைகளை மாத்திரமே பயன்படுத்துகிறேன்.
நான் அதை முயற்சி செய்து பார்க்க காரணம். நம்மைச் சுற்றி சில சக்திகள் சுற்றிக்கொண்டிருப்பதாக கூறப்பட்டிருந்த விசயம் என்னைக் கவர்ந்ததாக இருந்தது. அதை கற்பனை செய்து பார்க்கவே மிகவும் வித்தியாசமானதொரு உணர்வாக இருந்ததுதான். அந்த புத்தகத்தில் கூறியிருந்தபடி நல்ல ஆற்றல்கள் நம்மை சூழ்ந்து நிற்கின்றனவா என எனக்கு தெரியவில்லை அல்லது அதை நான் உணரவில்லை. ஆனால் நம் வாழ்கைக்கு உதவக்கூடிய சில நல்ல விசயங்கள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை அமானுஸ்ய விசயங்கள் அல்ல. நம் மனதினுள் செல்ல விடாமல் நம்மால் வழி மறுக்கப்பட்ட சில வார்த்தைகள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன அவற்றை நாம் கூவி அழைக்க வேண்டியதில்லை. அவைகளாகவே நம் கதவுகளை தட்டுகின்றன ஆனால் நாம்தான் மனக் கதவுகளை திறப்பதில்லை.
நம்மால் வழி மறுக்கப்படுமளவிற்ககு அவை நம்மை வசை பாடும் வார்த்தைகள் அல்ல. நம் வாழ்க்கைக்கு பயன்படும் நல்வார்த்தைகள்தான். முகவரி முழுமையடையாததால் கைகள் பல மாறிச்செல்லும் தபால் தலையைப்போல நல்ல வார்த்தைகள் சில நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் நாம் வெறுப்பது அந்த சொற்களை அல்ல அதைச் சொன்னவனையே வெறுக்கிறோம். சொற்களை ஒதுக்குவதன் மூலம் அதைச் சொன்னவனை ஒதுக்குவதை வெளிப்படுத்துகிறோம். ஏன் இந்த வெறுப்பு! எதன் வெளிப்பாடு இது?
அடுத்தவரின் நிலைப்பாட்டை இங்கே நாம் அலச வேண்டியதில்லை. காரணம் நாம் உருவாக்கும் உருவகங்களைத்தான் அவ்வப்போது நாமே உடைக்கிறோம். இதனால் அடுத்தவரைபற்றி நாம் அவதூறு கூறுவது தவறு. பிரச்சனை தோன்றியதும் அங்குமிங்கும் முட்டி மோதி முடிவு கிடைக்காமல் முழித்துக்கொண்டிருக்கும்போது நம் பிரச்சனையில் தொடர்பில்லாத ஒருவரிடம் தொல்லை தரும் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஆலோசனை கேட்கிறோம். மனிதர்களாகிய நம்மிடம் ஒரு விசித்திரம் உண்டு அது என்னெவென்றால் அடுத்தவனுக்கு என்று நாம் யோசிக்கும்போதுதான் அற்புதமான யோசனைகளும், வாழ்க்கைக்குத் தேவையான வார்த்தைகளும் வெட்டிய வாய்க்காலை நோக்கி வரும் தண்ணீரைப்போல தானாக வந்து விழும். இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன் எனக்கென்று யோசிக்கும் போது வராத சிந்தனை அடுத்தவர்களுக்கு ஆலோசனை என்றுவரும்போது மட்டும் சீறிக்கொண்டு வரும். இப்படிப்பட்டதொரு சிறப்பான ஆலோசனையை மற்றவரிடமிருந்து பெற்றதினால் பிரச்சனையில் இருந்து மீளும் நமக்கு, ஆலோசனை வழங்கியவரின் மீது ஒரு அபரிதமான பிடிமானம் உண்டாகிறது. இந்த பிடிமானமானது இனி நமக்கு பிரச்சனை என்று தோன்றினாலே நம் மனம் அந்த பிடித்தமானவரை நினைவிற்கு கொண்டுவருகிறது. இந்த சிந்தனையினால் மெல்ல மெல்ல சொற்களை விட்டு விட்டு அதை சொல்பவனை சொந்தமாக்கிக்கொள்கிறோம்.
சொற்களை விட்டு விட்டு அதை சொன்னவனுக்கு நாம் கொடுக்கும் பிம்பங்கள்தான் எத்தனை வகையானவை! நல்லன், நம்பகமானவன், புனிதமானவன், தலைவன்... இப்படி ஏராளமான பிம்பகங்கள் நம்மால் உருவாக்கப்படுகிறது. நாம் உருவாக்கிய பிம்பங்கள் மீதான நம் பிடிமானமானது நாம் நிர்ணயிக்கும் வாழ்கையை அவர்கள் வாழ வேண்டும் என நிர்பந்திக்கிறது. ஒருவேலை அவர்கள் ஏற்கனவே ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது நாம் கொண்டிருக்க்ம் பிடிமானம் அவர்கள் நிச்சயம் ஒழுக்கமானவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற பிம்பத்தை நமக்கு கொடுத்துவிடுகிறது. நம்முடைய இந்த பிம்பத்தை பிழக்கும் விதமாக அவர்கள் நடந்துகொள்ளும்போது ச்சீ நீயா! அவளுடனா! உன்னைப்போய் புனிதன் என்று எண்ணிவிட்டேனே என்று எழும் எண்ண எழுச்சியில் நாம் உருவாக்கிய உருவகங்களை உடைக்க ஆரம்பிக்கின்றோம். யோசித்துப்பாருங்கள் தலைவன், புனிதன், நல்லவன் என்ன எத்தனை விதமான பிம்பங்களை நாம் உருவாக்கி உடைத்திருக்கிறோம் இதுவரை!. அப்படிப்பட்டதொரு நிகழ்விற்குப் பிறகு அவர்கள் சொல்லிய அல்லது இனி சொல்லப்போகும் அனைத்து நல்ல ஆலோசனைகளையும் அடியோடு ஒதுக்கிவிடுகிறோம். அதற்கு நாம் சொல்லும் காரணம் “நீ ஒழுக்கமா” அவ்வளவுதான் அதற்குப்பிறகு அந்த சிந்தனைகள் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடுகின்றன. அவர்களின் வார்த்தைகளினால் நமக்கு நன்மை ஏற்படும் என்றபோதிலும் நாம் அந்த வார்த்தைகளுக்கு வழிவிடாமல் மனக் கதவுகளை முற்றிலுமாக மூடிவிடுகிறோம்.
இந்த நிகழ்வை ஓஸோ அழகாக ஒரு உவமையின் மூலம் உணர்த்துவார் “காணகத்தில் வழி தெரியாமல் நின்றுகொண்டிருக்கும்போது கணநேரத்தில் உண்டாகும் மின்னல் வெளிச்சத்தில் பாதையை கண்டவன் வெற்றிகரமாக வெளியேறுகிறான். வெளிச்சத்தை விட்டு விட்டு மின்னலை ரசித்தவன் பாதையை தவரவிடுகிறான்” உண்மைதான் நாம் வெளிச்சத்தை பார்த்து வெளியேறுவதில்லை மாறாக மின்னலின் மீது பார்வையை செலுத்துகிறோம். பாதையை தவறவிடுகிறோம்.
அதெல்லாம் சரி, இப்போது அதற்கென்ன, அதனால் ஆவதென்ன! என தோன்றலாம். இப்படிப்பட்டதொரு பண்பினால் நம்மை அறியாமலேயே மூன்றுவிதமான பிரச்சனைகள் உருவாகின்றன. ஒன்று: தகுதி இருக்கிறதோ இல்லையோ, சும்மா இருந்தவனை சுழபமாக உயரத்திற்கு கொண்டு செல்கிறோம். இதனால் பிற்காலத்தில் ஏற்படும், ஏற்படப்போகும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு. இரண்டாது: நல்ல விசயங்களாக நமக்கு தெரிந்தலும் அதை சொன்ன மனிதனை மனதில் கொண்டு அதை ஏற்க மறுத்திவிடுகிறோம். இதனால் நமக்கு தேவையான விசயங்களையே நாம் விலக்குகிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பு. மூன்றாவது: இது மிக முக்கியமானது ஒரு விசயத்தை சொல்பவன் அதற்கு தகுதியானவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்பு பொய்க்கும் போது அந்த விசயத்தை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து விலகிவிடுகிறோம். இதில் முதல் இரண்டு அவ்வப்போது நம்மால் கவணிக்கப்படுகிறது. ஆனால் மூன்றாவதால் உருவாகும் பிரச்சனையை நாம் அதிகம் கவணித்ததில்லை.
சில நேரங்களில் நாய் ஏன் குறைக்கிறது? என்று கேள்வி எழும்போது நரிக்கு உடல் நிலை சரியில்லை என்ற பதில் சொல்லப்படும். ஓ அப்படியா என கேள்வி கேட்பவர் திருப்தி கொள்வதை நீங்கள் கவணித்திருகின்றீர்களா! இல்லை எனில் இனி கவணித்துப்பாருங்கள். சமூகத்தில் திடீரென ஒரு பிரச்சனை வெளிப்படும் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இப்படி ஒரு பிரச்சனையா, ஊழலா! உண்மையா! இதற்கு யார் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என அனைவரும் அதில் கவணம் செலுத்துவோம். ஆனால் அதற்கு நாம் பெரும் பதிலானது மிகவும் கேவலமானதாகவும் அற்பமானதாகவும் இருக்கும். அப்படி இருந்தாலும் ஓ அப்படியா என்று அலட்டிக்கொள்ளாமல் அதை மறந்துவிடுகிறோம். உதாரணமாக ஐயாவை பற்றி அம்மா ஒரு குறை சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த பிரச்சனை தொடர்பாக அதை ஐயாவிடம் போய் கேட்பார்கள். உங்கள் ஆட்சியில் இப்படி ஒரு ஊழல் நடந்ததாக அம்மா சொல்கிறாரே அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? அதற்கு ஐயா சொல்வார் பாருங்கள் ஒரு அட்டகாசமான பதில் ”அதை ஆரம்பித்து வைத்ததே அவர்கள் தானே” கேள்வி கேட்டவர் உடனே திருப்தி அடைந்து அடுத்த கேள்விக்கு தயாராவார். ஏன் அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும்! முதலில் கேட்ட கேள்வி என்ன? அதற்கு இதுதான் பதிலா! எதனால் கேள்வி கேட்டவர் திருப்தி கொள்கிறார்! நாம் ஏன் அந்த பிரச்சனையை அத்துடன் மறந்துவிடுகிறோம்! காரணம் அந்த கேள்வியை எழுப்பியவரே எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை என்ற பிம்பம் அங்கே எழுகிறது. கேள்வி வலுவிழக்கிறது. நம்முடைய எதிர்பார்ப்பு அங்கே நம்பிக்கையை இழக்கிறது. இதனால் அடுத்தடுத்த நிகழ்வுகளை நோக்கி நகர்ந்துவிடுகிறோம். இப்படிப்பட்டதொரு பண்பு நம்மிடம் இருப்பது சரிதானா! இது சரியானதொரு விளைவுகளைத்தான் விதைக்குமா!
ஒரு பிரச்சனை நம் கவணத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதை வெளிப்படுத்தியவர் அதற்கு தகுதியானவராக இருக்கட்டும் அல்லது தகுதியற்றவராக இருக்கட்டும். பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு வினா எழுப்பி விடைதேடி செல்கிறோம். அங்கே முதலில் பிரச்சனையை வெளிப்படுத்தியவரைப்பற்றி மற்றொரு பிரச்சனை வெளிப்படுத்தப்படுகிறது. இப்போது என்ன நடந்திருக்க வேண்டும்! இதோ இப்போது இரண்டு பிரச்சனைகள் அந்த இரண்டிற்கும் நாம் விடைகான முயற்சி செய்திருக்க வேண்டும். போராட்டம் என்பது இரண்டு மடங்காக அதிகரித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அந்த முயற்சி சில பல மாற்றங்களை உருவாக்கியிருக்கும்.
இங்கே யார் ஒழுங்கு! என்ற சிந்தனையில் நாம் சிதறவிடும் சில விசயங்கள். எவ்வளவு பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது! நீ ஒழுக்கமா என ஒவ்வொரு திசையும் எதிர்திசை நோக்கி ஏளனம் செய்துகொண்டிருந்தால் அதில் ஏமாரப்போவது நாம்மின்றி வேறு யாருமில்லை. வார்த்தைகள் யார் மூலம் நம்மிடம் வருகிறது என்ற சிந்தனையை விட்டு விட்டு அந்த வார்த்தைகளுக்கு நம் மனக்கதவுகளை திறந்து வழிவிடுவதன் மூலம் விளையும் நன்மைகளை பற்றி மட்டுமே யோசிப்போம்.
|