மீண்டும் ஆரம்பத்தை நோக்கி!!
ஒரு தனி மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் ஏற்படும் பிரச்சனையை மூன்றுவிதமாக பிரிக்கலாம். ஒன்று அவனுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை. இரண்டாவது வாழ்வியல் தேடலுக்கான சூழலில் உருவாகும் பிரச்சனை அதாவது அவன் சார்ந்துள்ள நிறுவனம் போன்ற தொழில் ரீதியான பிரச்சனை. மூன்றாவது அவனுடைய சொந்த வாழ்விற்கும் தொழில் சூழலுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவனை தாக்கும் பிரச்சனகள்.
முதலாவது பிரச்சனையான சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையை நம்முடைய உறவு ரீதியில் எதிர்கொள்ளலாம். அதாவது இது போன்ற பிரச்சனையில் நம்மை தனி நபராக நாம் உணர வேண்டியதில்லை ஏனெனில் நமகென்று நான்கைந்து பேர்களாவது உறவு என்ற வகையில் இருப்பார்கள். அவர்களின் உதவியைக்கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாம். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக நாம் எந்த வகையிலும் உதவுபவர்களுக்கு பிரயோஜனப்படக்கூடிய நபராக இருக்க வேண்டியதில்லை. காரணம் உறவின் உருக்கமான சிந்தனை அப்படிப்பது. என்ன இருந்தாலும் நம்ம பையன்/நம்மைச் சார்ந்தவள் நாம்தானே ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு எப்போதும் இருக்கும். இருக்கிறது என்று நம்புவோம்.
இரண்டாவது பிரச்சனையான தொழில் ரீதியான பிரச்சனையை உறவு ரீதியில் தீர்க்க இயாலாது. அல்லது நிச்சயம் நமக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவுபவர்களுக்கு எதாவது ஒருவகையில் நிச்சயம் நாம் பிரயோஜனப்படக்கூடிய நபராக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதை நம்பி இவருக்கு உதவுவது என்றொரு சிந்தனை தோன்றிவிடும். பணப்பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் எதை நம்பி கொடுப்பது! திரும்பப் பெருவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது! எனவே பிரயோஜனப்படக்கூடிய நபராக இருந்தால் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். பெரும்பாலும் உறவு ரீதியான உணர்ச்சியெல்லாம் அங்கு இருக்காது. இருந்தாலும் ஏதாவது ஒருவகையில் இந்த பிரச்சனைக்குறிய தீர்வுகளை நம்மால் தேடிக்கண்டைந்துவிட முடியும்.
மூன்றாவது பிரச்சனையான சொந்த வாழ்விற்கு தொடர்பில்லாத, வாழ்வியல் தேடலுக்கான பிரச்சனையாகவும் இல்லாமல், தனிப்பட்ட என்ற சொல்லுக்குள் அடங்காத சமுதாய ரீதியான பிரச்சனையை எப்படித்தீர்ப்பது? நாம் சார்ந்துள்ள உறவு முறைகளாலும், தொழில் ரீதியான அமைப்புகளாலும் நமக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையிருந்தாலும் அவர்களால் உதவி செய்துவிட முடியாது. நமக்காக கவலைப்படலாம், அக்கரை கொள்ளலாம் அவ்வளவுதான் அதை தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. இதுபோன்றதொரு இக்கட்டான் சுழ்நிலையில் நம்மை ஆள்பவர்களை தவிர நமக்கு அடைக்கலம் கொடுக்க வேறு ஆள் இல்லை.
நம்மை ஆள்பவர்கள் நமக்கு உதவுவார்கள் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பில்லை. அவர்களிடம் உதவியை எதிர்பார்க்க நமக்கு உரிமை கூட இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இப்போது காலம் கடந்த சிந்தனையாகிவிட்டது. ஆள்பவர்களின் கடமையுணர்ச்சியெல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டது. அந்த பொய்யாப்புலவன் சொன்ன இரண்டடிதான் இப்போது நடைமுறையில் உள்ளது.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
இந்த குறளுக்குறிய பொருளை இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நாம் சொல்லுகிற சொல் அதை ”கேட்பவருக்கு” எந்த வகையிலாவது பயனுள்ளதாக இருக்க வேண்டும். நம்முடைய சொல் அவர்களுக்கு பயனில்லாமல் வெரும் கூக்குரலாகவோ, கூச்சலாகவோ அமைந்துவிட்டால், அதற்கு அவர்கள் பொருப்பல்ல. பிறகு நம்மக்கு அவர்கள் உதவவில்லையே என அவர்கள்மீது நம்மால் குற்றம் சாட்ட முடியாது. அவர்களின் கடமையையும் நம்மால் காரணமாக கூற முடியாது. ஆதாயம் இல்லாத உதவியோ, கடமையோ இனி அரசிடம் கூட சாத்தியமில்லை. அரசு உங்களுக்கு உதவ வேண்டுமென்றால் அதற்கான பயனுள்ள காரணங்கள் ஏதாவது இருக்க வேண்டும். அல்லது அது போன்ற காரணங்கள் உதவியை எதிர்பார்ப்பவர்களால் வெளிப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் எங்கள் எண்ணிக்கை இவ்வளவு நாங்கள் தேர்தல் சமயத்தில் இந்த இந்த தொகுதியில் உங்களுக்கு உபயோகப்படுவோம் என்ற வகையில் உங்களின் வார்த்தைகள் அமைய வேண்டும். அப்படிச்செய்தால்தான் இந்த மூன்றாவது பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட முடியும். அப்படியில்லாமல் சமத்துவம் என்ற போர்வையில் அவர்களுக்கு பயன்படாத சொற்களையே நாம் சொல்லிக்கொண்டிருந்தால் சமாதியில்தான் இருப்போம்.
ஈழப் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவனின் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் இந்த மூன்றாவது பிரச்சனை எளிதாக புரியும் நமக்கு. அது அவனின் தனிப்பட்ட சொந்த பிரச்சனை இல்லை, அவன் பணிபுரியும் நிறுவம் சார்ந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இது ஒரு பொதுவான சமுதாய தாக்குதல். இந்த பிரச்சனையில் அவனின் சொந்த பந்தங்களால் ஒன்றும் செய்ய இயலாது. அவனின் நிறுவனம் சார்ந்த அமைப்புகளாலும் ஒன்றும் செய்ய இயலாது. அவர்களால் வெறும் அக்கரையையும் அனுதாபத்தையும் மட்டுமே வெளிப்படுத்த இயலும். பார்த்து போயிட்டு வாப்பா என்பார்களே அப்படிப்பட்டதொரு வாக்கியங்களை மட்டுமே அவர்களால் வழங்க முடியும். இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களால் அரசைத்தவிர வேறு யாரிடமும் அடைக்கலமும், ஆதரவும் கேட்க முடியாது. ஆனால் அரசு அவர்களுக்கு உதவ வேண்டுமென என்ன கட்டாயம் இருக்கப்போகிறது இந்த காலத்தில்! மீனவனின் பேச்சில் கேட்பவர்களுக்கு எந்த மாதிரியான பயனுள்ள சொற்கள் இருக்கிறது சொல்லுங்கள்! ஒன்றுமில்லை வெறும் அவலக்குரல் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது இந்தகாலத்தில்? ஆட்சியை பிடிக்க முடியுமா அல்லது ஆட்சியை கலைக்க முடியுமா?
பயனுள்ள சொல் என்றால் அரசியல் அரங்கில் என்ன அர்த்தம் இருக்கிறது! நீ எந்த மதத்தை சார்ந்தவன்? சிறுபான்மையினரா? பெரும்பான்மையினரா? நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவனா? என்ன சாதியை சார்ந்தவன்? அது அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்க உதவக்கூடிய சாதியா? அல்லது யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய சாதியா? அவர்களின் எண்ணிக்கை என்ன? இதுதான் இப்போதைய நிலமை. இந்த பட்டியலில் நீ பயனுள்ளவனாக இருந்தால் இதோ தீர்ப்பு என திரண்டு வருவார்கள். இந்த வகையான காரணங்கள் எதுவுமில்லாமல் வெறும் மனிதம், மனித நேயம், இனம் என்ற காரணங்களுக்காக மட்டும் யாரும் உதவ காத்திருப்பதில்லை.
ஆனால் இதுபோன்று அதாயம் இருந்தால் மட்டும்தான் அரசு கூட நமக்கு ஆதரவாக இருக்கம் என்ற சூழ்நிலை இனி வரும் காலத்தில் எப்படிப்பட்டதொரு சமூதாயத்தை உருவாக்கும்! நமக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது அதை தீர்க்க சொந்தபந்தங்களால் உதவ முடியாது, தொழில் ரீதியானவர்களாலும் உதவ முடியாது. அரசும் ஆதரிக்காது, வேறு யார் இருக்கிறார்கள், நமக்கு எங்கிருந்து உதவி வரும், நமக்கென்று யாருமே இல்லையா என்று சிந்திக்கும்போது “நம்ம பையந்தான்” இவன் என உதவிக்கு வரும் நான்கு பேரும் நம் சாதி சனத்தினராகத்தான் இருப்பார்கள். நம்மாளுக்கு ஒரு பிரச்சனை என்ற வாக்கியத்தின் வழியாக ஒரு கூட்டம் ஒருங்கிணைகிறது. சாதி என்ற ரீதியில் சாதிக்க முயற்சிக்கிறது. ஒருவருக்கு உதவி கிடைக்க, அவர் சார்ந்துள்ள சாதி எண்ணிக்கையும், அதன் வலிமையும்தான் காரணமாக என்று அவர்கள் உணரும்போது எப்படிப்பட்ட சிந்தனை மேலோங்கி நிற்கும். அவர்களின் சாதிய சிந்தனை மேலும் தீவிரமடையும். மற்றவர்களிடமிருந்து விலகி நிற்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் நினைக்கும்போது அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. தன்னை காப்பாற்றிக்கொள்ள தனக்கு உதவி செய்ய, தான் சார்ந்துள்ள சாதியினரின் எண்ணிக்கையும் அதன் வலிமையும் தற்போதைய சமுதாயத்தில் தேவை என்கிற நிலை உருவாகிறபோது எப்பேர்பட்ட மனிதனும் அதற்கு இசைந்துகொடுப்பான். யோசித்துப்பாருங்கள் தற்போது எதற்கு நாம் சாதிப்பெயரை பயன்படுத்தவில்லை? சாதாரணமான விசயங்களில் இருந்து அசாதாரமான விசயம் வரை அனைத்திலும் சாதிய சிந்தனையை பிரயோகிக்கிறோம். இந்த வகையான அனுகுமுறையின் மூலம் குறிப்பிட்ட அந்த பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்தி அதன் மூலமாக தீர்வுகளை பெறுகிறோம். இதே மீனவர் பிரச்சனையை ஒரு சாதிய ரீதியில் சிந்தித்துப்பாருங்கள். சாதிய வடிவில் அந்த பிரச்சனை வெளிப்பட்டு இருந்தால் இப்படியா ஆரப்போட்டு ஆட்களை கொல்வார்கள்! குறிப்பிட்ட சாதிக்காரர்களை கொல்கிறார்கள் என ஒரு சாரர் போராட்டத்தில் குதித்தால் இந்த அமைதிப்பூங்கா அலராமல் இருக்குமா! அப்படி ஒரு சாதிய சிந்தனையில் இல்லாமல் பொதுவாக தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் என சொல்லப்படுவதால் மட்டுமே இது ஒரு இயல்பான விசயமாக இருந்துவருகிறது. இப்படிப்பட்ட ஒரு பொதுவான கூக்குரலில், பிரச்சனையில் தலையிடுட்டால் யாருக்கு நன்மை யாருக்கு நன்மை இல்லை என்ற தெளிவானதொரு விளக்கம் இல்லை அதானல்தான் அனைவரும் விலகி நிற்கிறார்கள்.
முன்பிருந்த சாதிய சிந்தனைனகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நீ வேறு நான் வேறு என்ற நிலை மாறி தற்போது ஒரு பொதுப்படையான சிந்தனை உருவாகியுள்ளது. அதனால்தான் இன்ன சாதிக்காரன் இறந்தான் இந்த சமூகத்தை சார்ந்தவன் இறந்தான் என்று சொல்லப்படாமல், பொதுவான சொற்களை மட்டுமே பிரயோகிக்கின்றோம். இந்த பொதுவான சிந்தனைக்கு அவ்வப்போது ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான சாதிய சிந்தனைகள் தற்போது இருந்தாலும் நாகரீகம் என்ற பெயரிலாவது நடிக்கவாவது செய்கிறோம். ஆனால் இப்படி பொதுவாக சொல்லப்படுகிற விசயங்களை பொறுமையாக கவணித்துக்கொள்ளலாம் என அரசு அமைதியாக இருந்துவிட்டால் அதன் விளைச்சல் மோசமானதாக அமைந்துவிடும். அரசின் இந்த அலட்சிய சிந்தனைகளால் நாம் எங்கிருந்து வந்தோமோ மீண்டும் அந்த திசை நோக்கி திரும்பி நிற்கின்றோம். எதை அநாகரீகம் என்று அழித்துவிட நினைக்கின்றோமோ அதுதான் நம்பிக்கைக்குறிய ஒரே வழி என்ற தவறான சிந்தனையை மோலோங்கிவிடும். தீவிர சாதிய சிந்தனையில் இருந்து வெளியேறி மீண்டும் அதை நோக்கிய நின்று கொண்டிருக்கிறோம். நாம் பொதுபடையான தன்மையிலிருந்து விலகி மீண்டும் சிறு சிறு கூட்டமான மனிதர்கள் மாறிவிடுவதும் மாறாமல் இருப்பதும் அரசின் அக்கரையில்தான் அமைந்திருக்கிறது.
இனி ஒரு குழுவாக வாழ வேண்டியதில்லை அனைவரும் ஒரு குடும்பம் என்கிற சிந்தனையை மட்டுமே நாம் விதைக்க வேண்டும். அதை அவ்வப்போது அரசு நிரூபிக்க வேண்டும். உன்னை காப்பாற்ற நீ என்ன சாதி என எனக்கு தெரிய வேண்டியதில்லை, உன் சாதியின் எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை, அரசை அசைத்துப்பார்க்கும் சக்தியா நீ என ஆலோசிக்கத்தேவையில்லை, உன் அலறல் கேட்கும் போது அரசு நிச்சயம் தன் கடமையை செய்யும் என்றொரு நிலை உருவாக வேண்டும்.
மத்தி, கெண்டை, அயிலை என அவர்கள் பிடிக்கும் மீன்களை வகைப்படுத்தலாம். இந்த வகைப்படுத்தல் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் அவர்களையே இந்த வகைப்படுத்தல்களுக்கு உட்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானால் அது அவர்கள் வாழ்க்கையை மட்டுமல்ல அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடும்.
இது அனைத்துவிடக்கூடிய அளவிலான சிறு நெருப்புதான். அதை அனைத்துவிடுவதும் அனையாமல் அப்படியே விட்டு அளவுக்குமீறி செல்லவிடுவதும் அரசின் கையில்தான் உள்ளது. நீதிக்கு புறம்பாக கொல்லப்படும் அனைவரும் நிச்சயம் அநீதியின் விதைகளாக விரிவடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
|