வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


வல்லூறு

பூபதி  

பெயர் மறந்துபோன ஒரு ஆங்கிலப்படத்தின் காட்சி மட்டும் மறக்காமல் என்னுள் தங்கிவிட்டது. அது ஒரு போர்க்களக்காட்சி. போர் முடிந்ததும் வெற்றி பெற்ற கூட்டம் களிப்போடு அங்கிருந்து செல்ல, தோல்வியுற்ற கூட்டம் கவலையோடு அங்கிருந்து வெளியேறுகிறது. அடுத்த நாள் காலையில் போர் நடந்த இடத்தை காட்டுகிறார்கள் வித்தை குறைவினாலோ அல்லது வீரத்தின் குறையினாலோ வீழ்ந்த பிணக்குவியல், அங்கங்களும், ஆயுதங்களும் சிதறிக்கிடக்கின்றன. மெல்ல மெல்ல காட்சி மேல் நோக்கி நகர்கிறது, வாணில் சில வல்லூறுகள் தம் வாழ்வு செழிப்படைந்ததை நினைத்து வட்டமிடுகிறது.

அந்த போரில் ஏதாவது ஒரு கூட்டத்தில் நாமோ அல்லது நம் நாடோ பங்கெடுத்திருந்தால் நம் மன உணர்வுகள் எந்த மாதிரியான எண்ண அலைகளை வெளிப்படுத்தும்? வெற்றி பெற்றிருந்தால், அடங்காத ஆனந்தமும், ஆணவமும் உண்டாகியிருக்கும். தோல்வியடைந்திருந்தால் இயலாமையின் காரணமாக இயல்பாகவரும் ஏமாற்றம், அவமானம், தாழ்வு மனப்பாண்மை, அல்லது மீண்டும் பழி தீர்ப்போம் என மனதில் தீர்மானம் நிறைவேற்றியிருப்போம். இந்த இரண்டில் எது ஏற்பட்டிருந்தாலும் வானில் பறந்த அந்த வல்லூறுகளை கவணித்திருப்போமா! நம் செயல் விளைவுகளால் சில வல்லூறுகளின் வாழ்வு செழிக்கிறது என்பதை உணர்ந்திருப்போமா! நிச்சயம் உணரமாட்டோம் ஏனெனில் நாம் பார்வையாளர்கள் அல்ல பங்கெடுத்துக்கொள்பவர்கள்.

பார்வையாளர்களாக இல்லாமல் பங்கெடுத்துக்கொள்பவர்களாக நாம் வாழ்வதால் நமக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களை நாம் உணர்வதில்லை. தோற்றால், வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால், மேலும் வெற்றி பெற வேண்டும் என்ற களிப்புச் சிந்தனையில் நாம் காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இப்படிப்பட்ட சிந்தனைப்பாதையில் நாம் வெல்வதுமில்லை, வீழ்வதுமில்லை ஏமாற்றமே எஞ்சி நிற்கிறது. வாழ்வதென்னமோ வல்லூறுகள்தான்.

இந்த வல்லூறுகளுக்கும் நம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? நம் வாழ்க்கைக்கும் வல்லூறுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால் நம் பிரச்சனைகள்தான் அதன் வாழ்க்கை. நமக்கு பிரச்சனைகள் இருக்கும் வரை வல்லுறுகளில் வாழ்க்கை செழித்திருக்கும். ஒரு வேலை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால்! அப்படி ஒரு சூழ்நிலை உருவாகாது, உருவாகவிடமாட்டார்கள். நம்மை பார்வையாளராக இருக்க விடாமல், ஏதாவது ஒன்றில் பங்கெடுத்துக்கொள்ளச் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படிச்செய்தால்தான் நாம் உணர்ச்சியாளராக இருந்து உண்மையை மறந்திருப்பொம். நாம் பங்கெடுத்துக்கொள்ளும் விசயங்கள் நல்லவைகள் என்ற போர்வையில் இருக்கலாம். அதற்கு நாட்டுப்பற்று என்ற பெயரும் இருக்கலாம்.

தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செய்திகள் சில, நம்மை சில விசயங்களில் பங்குகொள்ளச்செய்து ஒரு சில வல்லூறுகள் தங்கள் வாழ்வை வளமாக்கிக்கொண்டதை வெட்டவெளிச்சமாக்கிக்கொண்டிருக்கின்றன. வல்லூறுகளுக்கு ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர் இருக்கும். நம் ஊரை பொருத்தவரையில் அவைகளுக்கு அரசியல்வாதி என்ற பெயரும் இருக்கிறது.

கார்கில் போர் நடைபெற்ற காலங்கள் நன்றாக நினைவில் உள்ளன. அண்டைநாட்டு தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துவிட்டார்கள் என்ற போது நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்தார்கள். பார்வையாளராக இல்லாமல் அனைவரும் நாட்டுப்பற்று என்ற உணர்வு ரீதியில் நாம் அந்த போரில் பங்குகொண்டோம், உணர்ச்சிகொண்டோம். போரில் நாம் துப்பாக்கியை தூக்க வில்லையே தவிர துன்பத்தில் பங்குகொண்டோம். நம்மால் இயன்ற வகையில் உதவிகளை செய்தோம் பணமாக, பாசமாக... போர் செய்திகளை தினமும் கேட்டுக்கேட்டு அதில் நாம் பார்வையாளர்கள் அல்ல நமக்கும் அதில் பங்குள்ளது என்பதை படபடப்பான மனநிலையில் உணர்ந்தோம். போர் முடிந்ததும் வெற்றி நமதே என ஆர்பரித்தோம். ஆனால் அதோடு அந்த சிந்தனைகளை விட்டு வேறு சில விசயங்களில் பங்குகொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால் அங்கேயும் சில வல்லூறுகள் தங்கள் வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொண்டதற்கான ஆதரங்களுடன் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

போருக்காக ஆயுதம் வாங்கியதில் ஊழல்! என்ற செய்தி வெளியாகியது. இதை எந்த வகையில் சிந்திப்பது என்றே விளங்கவில்லை. நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது கூட அதில் நமகென்ன வருமானம் வரும் என்று தலைவர்கள் எனப்படுகின்ற இந்த வல்லூறுகள் யோசிக்குமா! நாட்டுப்பற்றை பற்றி நமக்கு வழிமொழிய இந்த நாற்றம்மிக்கவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது! போர் விரைவாக முடிந்துவிட்டதே, அதனால் வருமானம் குறைந்துவிட்டதே என வருத்தப்பட்டிருப்பார்களோ! இவர்களைப் பொருத்தவரையில் போர் என்பது நாட்டுப்பற்று என்ற ரீதியில் நடந்ததா! அல்லது வியாபார விசயமாக நடந்ததா என தெரியவில்லையே! நாட்டுப் பற்று என்ற ரீதியில் நம்மை உணர்ச்சிகொள்ளச் செய்துவிட்டு இவர்கள் ஊழல் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த போரில் பங்குகொண்டது மொத்தம் மூன்றுபேர், எதிரிகள், நாம் மற்றும் இந்த வல்லூறுகள். எதிரிக்கும் இழப்பு நமக்கு இழப்பு ஆனால் இந்த வல்லூறுகள் வாழ்க்கையில் மட்டும் செழிப்பு இது எப்படி நிகழ்கிறது. இதற்கு யார் பொறுப்பு? எதிரிகள் என்று கைகாட்டலாம். மோசமான தலைவர்கள் எனப்படுகிற வல்லூறுகள்தான் காரணமென வழிமொழியலாம். ஆனால் உண்மையில் நாம் தான் காரணம். நம் மன நிலைதான் காரணம். நாம் உணர்சிவசப்படுகிறோம். ஆனால் பார்வையாளராக இருந்து உண்மையை உணர்வதில்லை.

நாம் படிக்கும் சில வார்த்தைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவை நம்மை அடுத்த வார்த்தைக்கு அழைத்தும் செல்லாது அங்கேயே தடுத்தும் நிறுத்தாது. மாறாக புதை குழியில் சிக்கிக்கொண்டதைப்போல அந்த வார்த்தைக்குள் நாம் புதைந்துபோவோம். அந்த வார்த்தை மூலமாக நமக்கு புதிதான சிந்தனைகள் தோண்றும். ஒரு கதவை திறந்துவிட்டது போன்ற உணர்வு உண்டாகும். மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களில் இதுபோன்ற வார்த்தைகள் அடிக்கடி தென்படும். சமீபத்தில் நான் படித்த அவரின் பகவத்கீதை உரையில் இருந்த ஓர் வார்த்தை “அலையறியா கடல்” இந்த வார்த்தையை படித்ததும் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை தோன்றும். பூடகமாக இந்த வார்த்தை ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனைக்கு ஏற்ற சில விசயங்களை விளக்கும். என்னைப் பொருத்த வரையில் இந்த வார்த்தையை படித்ததும் ஞாபகத்திற்கு வந்தது நம் மக்களில் பொறுமைதான். மேலோட்டமாக எவ்வளவு பரபரப்பாக சிந்தித்துக்கொண்டும், இயங்கிக்கொண்டிருந்தாலும் நம் மக்கள் அலையறியா கடலைப்போல அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

நாட்டில் என்ன நடந்தாலும் பேசுவதற்கு ஒரு பேச்சு, போக்குவதற்கு ஒரு பொழுது என்ற ரீதியில்தான் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை. அலைவரிசியில் ஆயிரம் கோடி ஊழல் என்றாலும் அலட்டிக்கொள்ளாமல் அலையறியா கடலைப்போல்தன் செல்கிறது வாழ்க்கை. சரி இதுபோன்ற ஊழல் எல்லால் ஊரில் இப்போது இயல்பாக நடப்பதுதானே என்று எடுத்துக்கொண்டாலும். கேட்கும் சில விசயங்கள் மூலமாக நம் பொறுமை எவ்வளவு கேவலமானது என புரிகிறது.

ஆயுதத்தில் ஊழல் என்றார்கள் சரி அலட்டிக்கொள்ள வேண்டாம். அடுத்ததாக போர்வீரர்கள் குடும்பத்திற்காக கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீட்டில் உழல் என்றார்கள் சரி பணம் பார்த்தவன் குணம் அப்படித்தான் இருக்கும் என்றெண்ணிக்கொள்ளலாம். இறுதியாக சவப்பெட்டி ஊழல் என்றார்கள் அட சனியனே என நாம் சலித்துக்கொள்ளவாவது வேண்டாமா! ஒரு படம் ஓடாததற்கு காரணம் என நாம் பட்டியலிடும் விசயங்களின் அளவிற்குகூட நாம் இந்த விசயத்தை நாம் ஆய்வு செய்யவில்லையே! காரணம் நாம் பங்குகொள்ள/உணர்ச்சிகொள்ள அடுத்தடுத்து பணிகள் காத்துக்கிடக்கின்றன, கிரிக்கெட், சினிமா, தலைவன், கொள்கை என்ற வடிவில் நாம் வெற்றி கொள்ள, தோல்வியடைய பல விசயங்கள் உள்ளன. பார்வையாளனாக நாம் பார்க்க நமக்கு நேரமில்லை.

இருள் நிறைந்த ஆழ்கடலைப்போல மக்களாகிய நம் பொறுமை எல்லையில்லாமல் விரிவடைந்துகொண்டே செல்கிறது. அப்படியே விரிவடந்துகொண்டே செல்லட்டும் இருளை நோக்கி. ஆனால் எதுவரை? சவப்பெட்டி ஊழல் மேலும் வளர்ச்சியடைந்து, சவத்தை புதைக்காமல் புசித்துவிட்டார்கள் என்றொரு பிண ஊழல் தோன்றும்வரை.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.