நாம்!
இந்த நாம் என்ற வார்த்தை யாரை வகைப்படுத்துகிறது! பாதை தடைபட்டதும் மறுபக்கத்தை உடைத்து மாற்றுப்பாதையை உருவாக்கும் ஆற்றல் மிக்க ஆற்றைப்போன்றவர்களை அல்ல, நீர் நிரம்பி வழிவதும், பின்னர் தரை தகர்ந்து போகுமளவிற்கு வற்றிப்போவதும் தன் கையில் இல்லை என்பதை உணர்ந்த குளத்தைப்போன்ற வாழ்க்கையை வாழ்பவர்களை குறிக்கிறது.
இந்த நாம் என்ற வார்த்தையின் வரையறைக்கு உட்படும் மனிதர்களின் வாழ்க்கையில் இரண்டுவிதமான பிரச்சனைகள் உருவாகிறது. அதில் ஒருவகையான பிரச்சனைகள் நமக்கு ஒவ்வாது என தெரிந்ததும் அதில் இருந்து ஒதுங்கிவிடலாம். மற்றொருவகையான பிரச்சனை எப்படிப்பட்டதென்றால், இருளில் ஒளியைத் தேடித் தேடி சோர்ந்துபோய் விடியும்வரை காத்திருப்பதைப்போன்றது. இரண்டாவது வகையான பிரச்சனையில் இருந்து நம்மால் நம் வாழ்வை பிரித்துவிட முடியாது. ஏனெனில் அதுதான் நம் வாழ்க்கையாக அமைந்திருக்கிறது. வேறு என்ன செய்ய இயலும்! ஒன்றும் செய்ய இயலாது, அதுவாக விலகிச்செல்லும்வரை.
கடலில் இருந்த ஒரு மீன் மற்றொரு மீனிடம் தண்ணீர் என்றால் என்ன என்று கேட்டதாக ஓஸோவின் புத்தகத்தில் ஒரு வாக்கியம் வரும். ஆழமான புரிதலுடன் இந்த வாக்கியத்தை வாசித்தால் சிந்தனையை கிளறிவிடக்கூடியது. அந்த மீனின் வாழ்க்கையானது தண்ணீரினால் சூழப்பட்டுள்ளது. அந்த நீர்தான் மீனின் வாழ்க்கையாக அமைந்துள்ளது. அந்த மீன் எவ்வளவு முயன்றாலும் தன்னிடமிருந்து தண்ணீரை தனியாக பிரித்துப்பார்த்துவிட முடியாது. ஒரு வேலை அந்த மீன் நீரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றால், அது தன் வாழ்க்கையையில் இருந்து விலக்கிச்செல்ல முயற்சிக்கிறது என்று அர்த்தம்.
சில நேரங்களில் நம் நிலைமை இந்த மீனின் நிலையை ஒத்திருக்கும். பிரச்சனையில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது. அப்படி முயன்றால் அது நம் வாழ்வை நாம் முடித்துக்கொள்வதாக அமைந்திருக்கும். இப்படிப்பட்ட ஒரு இயலாமை நிலையில் நாம் இருக்கிறோம் என்ற சிந்தனை நமக்கு எப்போதும் தோன்றாது, எப்போதாவது, ஏதாவது ஒரு நிகழ்வை கவனிக்கும்போது அல்லது ஏதாவது ஒரு செய்தி நம் செவியை எட்டும்போது தனாகவே இந்த சிந்தனை தோன்றும்.
நான் சந்தித்த நம்மில் சில பேர்களை, எனக்கு இந்த சிந்தனையை தூண்டிய நிகழ்வுகளை, நாம் என்று சொற்றொடருக்குள் அடங்கிய உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சில வருடங்களுக்கு முன் நான் பணியாற்றிய பம்ப் செட் நிறுவனத்தில் பம்ப் செட்களுக்கு வண்ணம் பூசும் (painting work) பணியை செய்துகொண்டிருந்த நண்பரை நாள்தோரும் பணி நிமித்தமாக நான் சந்திப்பேன். அவருக்கென்று தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருக்கும். Spray gun என்கிற எந்திரத்தின் மூலமாக அவர் பம்ப் செட்களுக்கு வண்ணம் பூசும் போது புகை வடிவில் அந்த வண்ணம் அவரை சூழ்ந்து நிற்கும். மார்கழி மாதம் அதிகாலை பனியில் நின்று கொண்டிருப்பவரை போல இருப்பார். ஆனால் அந்த பனி மட்டும் தினமும் ஒவ்வொரு வண்ணமாக இருக்கும். இந்த பணியின் மூலம் வாழ்க்கை பயணத்திற்கு தேவையான பணத்தை பெற்றுக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் (அதென்னமோ கெட்ட விசயமெல்லாம் இந்த திடீரென்ற வார்த்தையை வழிமொழிந்துகொண்டுதான் வருகிறது) பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அந்த நண்பர் மயங்கி விழுந்துவிட்டதால், மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி என்னை வந்து சேர்ந்தது. ஒரு வாரத்திற்குப்பின் மீண்டும் அவரை நான் பார்க்கும் போது என் முதலாளியிடம் தீவிரமாக எதையோ விளக்கிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக தன்னுடைய வாதம் முதலாளியின் வாதத்தை முந்திவிட்ட சந்தோசத்தில் அந்த அறையில் இருந்து வெளியே வந்த அவரிடம் உடல் நிலை பற்றி விசாரிக்கையில்...
தினமும் பம்ப் செட்களுக்கு வண்ணம் பூச பயண்படும் ரசாயணங்களை சுவாசித்துக்கொண்டிருந்ததால் அவரின் உடல் நிலை மிக மோசமான ஒரு நிலையை அடைந்திருப்பதாகவும் தொடர்ந்து இந்த பணியில் நீடிக்க வேண்டாம் என மருத்துவர் பரிந்துரை செய்ததாகவும் சொன்னார்.
அப்படியானால் நீங்கள் வேலையை விட்டு நிற்கப்போகிறீர்களா?
வேலையை விட்டு நிற்பதா! வேலையை விட்டுவிட்டால் பணத்திற்கு என்ன செய்வது? முதலாளிகூட என் நிலையை புரிந்துகொண்டு இதே நிறுவனத்தில் வேறு பணியை செய்யுமாறு சொன்னார் ஆனால் அப்படி செய்தால் நான் இப்போது வாங்கும் சம்பளம் கிடைக்காது. குறிப்பிட்ட ஒரு தொகையை மாதமானால் கொடுப்பார்கள் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது! இப்போது ஒரு பம்ப்செட்டுக்கு வண்ணம் பூசினால் இவ்வளவு பணம் என்ற ரீதியில் பணியாற்றுவதால் மாதமானால் ஒரு கணிசமான தொகை கிடைக்கிறது. அதனால் தொடர்ந்து இதே பணியைத்தான் செய்யப்போகிறேன் என்று சொன்னார்.
அடுத்த நாள் முதல், ஒரு துணியை மூக்கில் கட்டிக்கொண்டு வண்ணம் பூசிக்கொண்டிருந்தார்...
தீபாவளி அன்று பட்டாசு தயாரிக்கும் தொழிலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவனின் அருகில் பட்டாசிற்கான மருந்துப்பொருள் கொட்டிக்கிடக்கிறது பக்கத்தில் காகித்தால் சுருட்டப்பட்ட உருளைகள் கிடக்கிறது. உருளைகளில் போதுமான அளவு மருந்துபொருள்களை நிரப்பி அதை ஒரு வெடிபொருளாக உருவாக்கிக்கொண்டிருந்தான். அந்த சிறுவனின் முகம், கை, கால் என அனைத்து பகுதிகளிலும் அந்த மருந்துப்பொருள் ஒட்டிக்கொண்டிருந்தது குறிப்பாக அவனின் மூக்கின் கீழ், அந்த மருந்துப்பொருள் காகிதக் குழாயில் மட்டுமல்ல அவனின் மூச்சுக் குழாயிலும் நிறம்பிக்கொண்டிருப்பதை வெளிக்காட்டியது...
ஒரு வேலை அவனுக்கு வேறு வேலை தெரியாமல் இருக்கலாம் அல்லது இந்த பணியை செய்தால்தான் போதுமான அளவிற்கு வருமானம் வருகிறது என்ற எண்ணம், தேவை அவனுக்கு இருக்கலாம். உடல் தன் உபதைகள் மூலம் அவனுக்கு தந்தி அனுப்பியிருக்கலாம், தந்தி கிடைத்திருந்தாலும் தன் நிலைமையால் அவன் தன் பணியை தொடர்ந்து கொண்டிருக்கலாம்.
இந்த இரண்டு நபர்களின் வாழ்க்கையை கவணித்துப்பாருங்கள். தொடர்ந்து அவர்கள் தன் தொழிலை செய்துகொண்டிருந்தால் பிரச்சனை பெரியதாகிக்கொண்டேதான் இருக்கும். சரி வேண்டாம் இத்தோடு விட்டுவிடுவோம் என்று தொழிலை விட்டு விட்டாலும் பிரச்சனை இயலாமை என்ற வடிவம் கொண்டு அவர்களை வறுத்தெடுக்கும். ஏனெனில் அவர்களின் குடும்ப வாழ்க்கைச் சூழ்நிலை அப்படி வலை பின்னியிருக்கிறது. ஏன் வேறு தொழிலா இல்லை! என நாம் வியாக்கியானம் செய்யலாம். நான் முன்பே சொன்னபடி இவர்கள் ஆற்றல் மிக்க ஆறுகள் இல்லை கால மாற்றத்தால் நிகழும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வாழம் குளத்தைப் போன்றவர்கள்.
இதெல்லாம் அடுத்தவன் பிரச்சனை அதனால் நமக்கென்ன என நாம் நினைக்க கூடாது. நம்மைச் சுற்றியும் நிச்சயம் இது போன்ற ஒரு வலை பின்னப்பட்டிருக்கும். தொல்லைதான் ஆனாலும் விடமுடியாத ஒரு உறவு, மனச் சல்லைதான் ஆனாலும் சகித்துக்கொள்ள வேண்டிய முதலாளி, மனமில்லைதான் ஆனாலும் மனைவியையும் வேலைக்கு அனுப்பியாக வேண்டிய சூழ்நிலை, காப்பாற்ற ஆள் இருந்தாலும் குழந்தைகளை காப்பகங்களில் விடவேண்டிய சூழ்நிலை என எதாவது ஒரு வகையில் இந்த வலை நம்மைச்சுற்றி பின்னப்பட்டிருக்கும். இவைகளிடமிருந்து நம்மை நாம் விலக்கிக்கொள்ள முடியாது. ஏனெனில் இவை நம் பிரச்சனைகள் அல்ல நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையை நாம் விலக்கிக்கொள்ள நாம் விரும்பமாட்டோம் வாழத்தான் விரும்புவோம். அதனால் தண்ணீர் என்றால் என்ன என்று கேட்ட மீன் போல்தான் நாமும். பிரச்சனை என்றால் என்ன, அதை எப்படி தீர்ப்பது என அதை ஒரு வாழ்க்கையாகவே எடுத்துக்கொண்டதை அறியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் இந்த வலை பின்னலை சாலை ஓர சுவரில் கண்ணீர் அஞ்சலி என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருந்த இரு பள்ளிச் சிறுவர்களின் படம் ஒரு வித பய உணர்வோடு உணர்த்தியது. குழந்தைகள் கடத்திக்கொலை... இந்த அதிர்ச்சி அலையின் காரணமாக, ஆற்றல் மிக்கவர்கள் தங்களின் பாதையை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் கால நிகழ்வுகளின் காட்சிப்பொருளாக கட்டுண்டு கிடப்பவர்கள் என்ன செய்துவிட முடியும்! சரி இனி நாமே குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்துவிட முடியுமா! அல்லது மனைவியை இனி வேலைக்கு செல்ல வேண்டாம் குழந்தையை மட்டும் கவணித்துக்கொள் என கட்டளை போட்டுவிட முடியுமா! அப்படி கட்டளையிட்டுவிட்டால் இந்த காலத்தில் மனைவி வேலைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தின் அத்தியாயங்களை நாமே புரட்டிவிட முடியுமா! குழந்தைகளை காப்பகங்களில் விட வேண்டாம் என நம்மால் தீர்மானித்துவிட முடியுமா!... முடியாது.
பயமாகத்தான் இருக்கிறது ஆனால் வழக்கமான நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியுமா! மீண்டும் ஒருவனுக்கு துப்பாக்கி குண்டை துனையாக்கிக்கொள்ள ஆசை வரலாம். அப்படி ஒரு காட்சி காணும் வரை, அப்படி ஒரு காட்சியை காணக்கூடாது என்ற சிந்தனையுடன் காத்திருப்பதை தவிர என்ன செய்துவிட இயலும் காலத்தின் காட்சிப்பொருளான நம்மால்! நாம் வாழும் வாழ்கையில், நாம் இருக்கும் நிலையில், நாம்....... வலை பின்னி வாழும் சிலந்தியைப்போல, ஏற்கனவே பின்னப்பட்ட வலையில் நாம்.
|