முதலாளி(த)த்துவம்
சண்முகம் சார் வேலையை விட்டு போறாராம், உண்மையா! அலுவலகத்தில் அனைவரின் பேச்சு அன்றைக்கு இதுதான். கிளை அலுவலகத்தில் இருந்துகூட பலபேர்கள் தொலைப்பேசியில் அழைத்து சண்முகம் சார்... உண்மையாகவா? ஏன்? என அதிர்ச்சி, ஆச்சரியங்களோடு கேள்விகேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏன் ஏதாவது பிரச்சனையா? இவ்வளவு காலமா இருந்திட்டு திடீர்னு ஏன்? கழுத்து அறுபட்டு துடித்து அடங்கிய கோழியைப்போல தன் நாற்காலியில் தலையை தொங்கப்போட்டபடி அமர்ந்திருந்தார் 48 வயது நிரம்பிய சண்முகம். அவர் இருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி, அறுத்த கத்தியில் உள்ள ரத்தத்தை துடைப்பதைப்போல தன் மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மனதினுள் வெற்றிச் சிரிப்பை சிரித்துக்கொண்டிருந்தான் 18 வயதான முருகன்.
காலையில் ஏழு மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டு மணி, சில நேரங்களில் ஒன்பதை தாண்டினாலும் உடல்தான் சோர்வடையுமே தவிர முருகனுக்கு மனம் சோர்ந்ததில்லை காரணம் அவனுக்கு அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. வேலை பிடித்திருந்ததென்றால், இந்த துறையில் பணியாற்றினால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற அறிவுபூர்வமான ஆர்வமல்ல, அப்படி யோசிக்கும் பக்குவமும் அவனுக்கு இல்லை. வேறென்ன காரணம்! முருகன் இந்த பணிக்கு வரும்போது வயது 14, அதுவரை பள்ளிக்கூடம் மட்டுமே அறிந்திருந்த அவனுக்கு அந்த அலுவலகத்தில் அணிவகுத்திருந்த கணிணிகள் அவன் கண்களுக்கு வேறுவொரு உலகத்தை காட்டியது. அண்ணா இதுல என் பெயர் வருமாண்ணா! என் பெயருக்கு சிவப்பு கலர் கொடுண்ணா... பிரம்மாண்டமான ஆங்கிலப்படத்தின் திரையை அறுத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததைப்போன்ற பிரமிப்பு அவனுக்கு ஏற்பட்டது. கல்யாண மண்டபம் போன்ற தோற்றத்தைக்கொண்ட அந்த அலுவலகத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கணிணிகளை காலையில் துடைப்பது அவனுடைய வேலைதான். ஒவ்வொன்றை தொடும்போதும் ஒரு வகையான பூரிப்பு, நாமும் ஒருநாள் இதில் மற்றவர்களைப்போல பணியாற்றுவோம் என்ற சந்தோசம்.
சிறுவன் என்பதால் சிரமமில்லாமல் அனைவரின் அன்பையும் எளிதாக பெற்றுக்கொள்ள முடிந்தது. மனதை வசியம் செய்யும் சூழ்நிலையில், அன்பானவர்களுடன் பணியாற்றுவது அவனுக்கு சந்தோசமாக இருந்தது. அங்கிருந்த அனைத்தும், அனைவரும் அவனுக்கு பிடித்திருந்தது, சண்முகம் சாரைத்தவிர.
ஆகவே நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என ஒலிபெருக்கியில் ஓங்கிக் குரல் கொடுக்காவிட்டாலும், பணிபுரியும் இடத்தில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் ஒரு வகையில் அரசியல்வாதிகள்தான். அந்த அலுவலக அரசியலில், சூழ்ச்சியின் சூத்திரத்தை நன்கு அறிந்தவர் சண்முகம். சண்முகம் சார்தான் அந்த அலுவலத்தில் ஆரம்பத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறவர். அதிக சம்பளம் வாங்குபவரும் அவர்தான். முதலாளிக்கு எல்லாமே சண்முகம் சார்தான். சண்முகம் இந்த டீ கொடுக்கிறவங்களை மாற்றனுமே! சண்முகம் இந்த கணிணி ஏன் வேலை செய்யவில்லை என்று பாருங்கள்? சண்முகம் நாளைக்கு சென்னை வரை நீங்க போயிட்டு வரனுமே... இப்படி எதற்கெடுத்தாலும் முதலாளிக்கு சண்முகம் சார்தான். இப்படி பலவகையான வேலைகளை பல வருடங்கள் செய்துகொண்டிருந்ததாலோ என்னவோ சண்முகம் சாருக்கு அனைத்து விசயங்களிலும் மிகச்சிறந்த அனுபவம் ஏற்பட்டது. எதைப்பற்றி கேட்டாலும் விளக்கமாக சொல்லிவிடுவார், முடிந்தால் செய்துகொடுத்துவிடுவார். யாராவது அவரிடம் உதவி கேட்டால், உடனே உதவி செய்வார். ஆனால் இதுகூட தெரியலயா! நீ யெல்லாம் என்னய்யா ஆம்பிள்ளை! உனக்கு யாருய்யா பாடம் சொல்லிக்கொடுத்தா! என மட்டம்தட்டிக்கொண்டேதான் அந்த வேலையை செய்வார். பக்கத்தில் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தால் இந்த வார்த்தைகளை மிக சத்தமாகவே சொல்வார். உதவி கேட்டவர் இதற்கு இந்த வேலையை இவர் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்வார்.
முருகனுக்கு சிறுவனாக வேலையில் சேரும்போது சண்முகம் சாரின் வசைவுகள் எந்தவித சஞ்சலத்தையும் ஏற்படுத்தியதில்லை. திட்டிவிட்டாரே என்ற வருத்தம் மட்டுமே அவனிடம் எஞ்சி நிற்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவரின் வசைவுகளை அவன் அவமானமாக கருத ஆரம்பித்தான். அவன் அதை அசட்டையாக எடுத்துக்கொண்டாலும்கூட சுற்றியிருப்பவர்களின் ஆறுதலான பேச்சுக்களே அவன் எவ்வளவு அவமானப்பட்டுவிட்டான் என்பதை எடுத்துக்காட்டிவிடும். ஏண்ணா அவர் திட்டிட்டே இருக்காரு? சண்முகம் சார் பற்றி பேச்சுக்கள் எழும்போதெல்லாம் முருகன் மற்றவர்களிடம் கேட்கும் கேள்வி இது. இந்த கேள்வியின் மூலம்தான் சண்முகம் சாரை சரியாக கணித்துக்கொள்ள முடிந்தது அவனால். சண்முகம் சார் ஒருவகையான தாழ்வு மனப்பான்மை கொண்டவர். பள்ளிக்கூட வாழ்க்கையை பாதியில் நிறுத்திக்கொண்டவர். சண்முகம் சார் மற்றவர்களை திட்டுவதன் மூலம் நிரூபிக்கும் விசயம் இதுதான் ”நான் படிக்கவில்லை, ஆனால் அதிகம் படித்த உன்னைவிட அதிகம் அறிந்தவன் நான்”
கொக்கு மீனுக்காக காத்திருப்பதுபோல சண்முகம் சார் தன்னை நிரூபிக்கும் சந்தர்பங்களுக்காக காத்திருப்பார். அவர் தொடர்பான விசயங்களில் ஈடுபடும் நபரை ஏதாவது ஒரு சந்தர்பர்த்திலாவது திட்டிவிடுவார். அவர் திட்ட ஆரம்பித்தால் அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றாக கேட்கும். “நீ யெல்லாம் என்ன படிப்பு படிச்சி கிழிச்ச, படிச்சவனாட்டம் உடை அணிந்துகொண்டால் மட்டும் போதாது” என்றுதான் ஆரம்பிப்பார். எடுபிடி வேலையில் இருப்பதால் அவரிடம் அதிகம் சிக்குவது முருகன் தான்.
முருகன் அலுவலகத்தில் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது, டேய் முருகா இங்க வா நீ என்னடா ஆபீசர்மாதிரி உட்கார்ந்திருக்க போய் டீ வாங்கிட்டு வா என்பார். வருடங்கள் செல்ல செல்ல அவரின் குத்தல் பேச்சுகள், மட்டம்தட்டும் எண்ணம் முருகனை வெறுப்படயவும் வெறிகொள்ளவும் செய்யத்தொடங்கின. திட்டமிட்டே தன்னை மட்டம் தட்டுவதை உணர்ந்துகொண்ட முருகன் ஒரு சமயத்தில் ச்சே என்னடா வாழ்க்கை இது பேசமல் வேலையை விட்டு போய் விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது. முதலாளி நம்மை ஏன் கூப்பிட வேண்டும். ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்ற அச்சமும், முதலாளி நம்மை கூப்பிடுகிறாரே என்ற பூரிப்பும் ஒரே நேரத்தில் முருகனுக்கு ஏற்பட்டது. ஒரு வித படபடப்போடு முதலாளி முன் போய் நின்றான்
உட்கார்,
பரவாயில்லைங்
நீ வேலைக்கு வந்து எவ்வளவு வருசமாச்சு
நாலு வருசம் ஆச்சு சார்
என்ன வேலை பழகியிருக்க?
.........
மத்தவங்க சொல்லும் விசயங்களையே இன்னும் எவ்வளவு நாளைக்கு செய்வே?
.........
சரி, இன்னையிலிருந்து நான் குடுக்கிற வேலைகளையும் சேர்த்து செய். ஒரு நோட்டு எடுத்துக்க, யார் யார்கிட்ட நான் என்ன வேலை கொடுத்தாலும் அதை நீ எழுதி வைத்துக்கொள். அவர்கள் சொல்லும் தேதியில் அந்த வேலைகளை செய்துமுடிக்கிறார்களா, தாமதப்படுத்துகிறார்களா, செய்துமுடிப்பதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பது போன்ற நிலவரங்களை நீ என்னிடம் அவ்வப்போது வந்து சொல்ல வேண்டும். என்ன செய்கிறாயா?
சரிங்க சார்
முருகன் தன்னை முதலாளி அழைத்து பேசியதே பெரிய அங்கிகாரம்போல் உணர்ந்தான். அலுவலகம் முழுவது செய்தி பரவியதால், டே முருகா முதலாளி கூப்பிட்டாராமே என்னடா விசயம் என அனைவரும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். சண்முகம் சாரும் விசாரித்தார் ஆனால் வழக்கம் போல அந்த விசயத்தையும் தான் உயர்வானவன் என்பதை வெளிப்படுத்த பயன்படுத்திக்கொண்டார்.
அடுத்த நாள் காலையில் ஒரு புதிய நோட்டோடு முதலாளி முன் போய் நின்றார் முருகன். வந்துட்டியா, வெரிகுட், ம்ம் சரி எழுதிக்க சண்முகத்திடம்... சண்முகத்திடம்.... சண்முகத்திடம்.... என பெரும்பாலான பணிகள் அனைத்துமே சண்முகம் சாரிடம் கொடுத்திருந்தார். இதெல்லாம் எப்போது முடியும் என்று சண்முகத்திடம் கேட்டு அந்தந்த பணிக்கு அருகில் அவர் சொல்லும் தேதியை எழுதிக்க, அவர் சொன்ன தேதியில் முடிக்கிறாரா என எனக்கு அவ்வப்போது வந்து சொல் அதுதான் உன் வேலை சரியா என முதலாளி பேசி முடித்ததை கூட கவனிக்க வில்லை முருகனின் மனதினுள் ஒரு புதிய உத்வேகம் உருவாகியிருந்தது. சண்முகம் சாரை வேலை முடித்துவிட்டீர்களா என நான் கேட்க வேண்டுமா! சபாஷ் என மனதினுள் தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொண்டான். ஏற்கனவே பழிவாங்கும் வெறியில் இருந்தவன் கையில் ஆயுதத்தை கொடுத்து அடிடா என சொல்லியதைப்போல் உணர்ந்தான்.
மனதினுள் பழிவாங்கும் வெறியோடு, வெளியில் வழக்கமான அதே பணிவோடு சண்முகம் சாரிடம் போய் நின்றான்.
சொல்லுப்பா என்ன விசயம்?
தன்னிடமுள்ள நோட்டை காண்பித்து, சார் உங்ககிட்ட முதலாளி இந்த வேலையெல்லாம் கொடுத்திருக்காராம் எந்த தேதியில் இந்த வேலைகலெல்லாம் முடியும் என தேதி கேட்க சொன்னார்.
என்னது! அதை ஏன் உன்கிட்ட சொன்னார்?
தெரியல சார். இனிமேல் இந்த மாதிரி செய்ய சொன்னார்.
சண்முகத்திற்கு மிகுந்த அவமானமாக போய்விட்டது. ஒரு சின்னப்பையன்... என்கிட்ட... என்கூட வா என முருகனை அழைத்துக்கொண்டு முதலாளியிடம் சென்றார்.
சார் நீங்க எது கேக்கிறதா இருந்தாலும் என்கிட்ட நேரடியா கேளுங்க. இந்த மாதிரி சின்ன பையன்கிட்ட சொல்லி கேட்க வேண்டாம்.
சண்முகம் சாரின் இந்த நேரடியான அனுகுமுறையை சற்றும் எதிர்பார்க்காத முருகனுக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய்விடுமோ என உதறல் எடுக்க ஆரம்பித்தது.
இல்லை சண்முகம். என்னால எல்லா வேலைகளையும் தொடர்ந்து கவனிக்க முடியாது. அதற்குத்தான் அவனை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். இதுல அவமானப்பட என்ன இருக்கு! கேட்ட சொல்லுங்க, போங்க வேலையை பாருங்க.
சண்முகம் சாருக்கு மேலும் அவமானமாக போய்விட்டது தன்னை யார் என்று நிரூபிக்க முதலாளியிடம் போனால அவர் இந்த சின்ன பையன் முன்பு அலட்சியமாக நடந்துகொண்டுவிட்டாரே!
அதற்குப்பிறகு சண்முகம் சாருக்கு தினமும் முருகனால் இம்சைதான். சார், முதலாளி அந்த வேலையை ஏன் இன்னும் முடிக்கலைனு... முருகன் தானும் ஒரு சிறந்த அரசியல்வாதிதான் என்பதை மெல்ல மெல்ல மற்றவர்களுக்கும் தனக்கும் காட்டிக்கொண்டான். எந்த சூழ்நிலையில் சண்முகம் சார் முன் போய் நின்றால் அவர் கோபப்படுவார் எனபதை நன்கு அறிந்து அந்த சூழ்நிலையில் அவர் முன் போய் நின்றான்.
சண்முகம் சார் காலையில் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்ததும் அவர் முன் போய் நின்று கோபப்படுத்துவதை வழக்கமான ஒரு பணியாகவே ஏற்படுத்திக்கொண்டான் முருகன். சார் அந்த வேலை... டேய் உனக்கு இது மட்டும் தாண்டா வேலை எனக்கு அப்படியில்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கு, காலையில் வந்ததும் வந்து நிற்காதே போ என சண்முகம் சார் தன்னை கடிந்துகொண்டாலும் முருகனுக்கு மனதினுள் காலையில் வந்ததும் கடுப்பாக்கிவிட்டோம் என்ற சந்தோசம்.
தினமும் இப்படி... பல மாதங்கள் தொடர்ந்ததில், சோர்ந்துபோய் ஒரு நாள் முருகனை பக்கத்தில் வைத்திக்கொண்டு தன் சக பணியாளரிடம் சண்முகம் வருத்தமாக பின்வருமாரு சொல்லிக்கொண்டிருந்தார். “அது ஒன்னுமில்லையா ஒரு லெவலுக்கு மேல போய்விட்டோம்னா நமக்கு சம்பளம் கொடுத்து இவங்கனால சமாளிக்க முடியாது அதனால வெளிய போன்னு வெளிப்படையா சொல்றதுக்கு பதிலா இந்தமாதிரி சின்ன பசங்கள வைத்து அவமானப்படுத்துறாங்க நாமலா புரிந்துகொண்டு மரியாதையா வெளியே போயிட வேண்டியதுதான்”
சண்முகம் சார் சொன்ன வார்த்தைகளை கேட்கும்போதே முருகனுக்கு சந்தோசமாக இருந்தது. ஒருவேலை உண்மையாகவே சண்முகம் சார் வேலையை விட்டு நின்றுவிட்டால்! ஆகா அதைவிட வேறென்ன சந்தோசம் இருக்கிறது.
சில மாதங்களில் சண்முகம் சார் அறிவித்துவிட்டார், நான் சொந்தமாக தொழில் தொடங்கலாம என்று இருக்கிறேன் அதனால் அடுத்த மாதம் பணியில் இருந்து விலகிக்கொள்கிறேன். முதலாளி பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை சரிங்க சண்முகம் பார்த்து பண்ணுங்க என்று சொன்னதோடு சரி.
அந்த விசயத்தை கேள்விப்பட்டதால்தான் இன்று அலுவலகம் முழுவதும் பரபரப்பாக பேசிகொண்டிருக்கிறார்கள். முருகனுக்கு தான் திட்டம் போட்டு பழிவாங்கிவிட்டதில் மிகுந்த சந்தோசம். ச்சே எப்படியெல்லாம் நம்மல திட்டியிருப்பார். முதலாளி கொடுத்த வாய்ப்பை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தி சண்முகத்தை வீழ்த்தியதன் சந்தோசம் அடங்கும் முன் முதலாளியிடமிருந்து முருகனுக்கு அழைப்பு வந்தது.
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி எடுபிடியாகவே இருப்ப, நாளைமுதல் சண்முகம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளையெல்லாம் நீ பார்த்துக்க, சம்பளமும் கணிசமாக உயர்த்தியிருக்கிறேன். பார்த்து பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்ன சரியா என்று மென்மையாக சிரித்தார் முதலாளி.
அடுத்த நாள் காலையில் முருகனுக்கென்று தனியாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவனுக்கென்று சில பொறுப்புகள், சம்பள உயர்வு... பரவாயில்லடா எப்படியோ முன்னுக்கு வந்திட்ட என பலரின் பாரட்டுகளுக்கிடையே நாற்காலியில் அமர்ந்தான். கூடியிருந்த கூட்டம் கலைந்து அவரவர் தங்கள் பணியை பார்த்துக்கொண்டிருந்தார்கள். முருகனும் தனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை எப்படி சிறப்பாக செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, அவனுக்குப் பின் பணியில் சேர்ந்த ஒரு சிறுவன் தன் கையில் ஒரு புதிய நோட்டோடு முருகனின் அருகில் வந்து நின்றான்..... |