வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


தெளிவு நிலை

பூபதி  

மழைக்காலம் மற்றும் கோடைக்காலத்திற்கு ஏற்ப நான் பணிக்கு செல்லும் முறையில் மாற்றம் ஏற்படும். எங்கள் வீட்டின் அருகில் பேருந்து வசதிகள் கிடையாது. முப்பது நிமிடங்களாவது நடந்தால்தான் சாலை வசதிகளின் சலுகைகளை அனுபவிக்க முடியும். கோடைக்காலம் என்றால் மிதிவண்டியை பயன்படுத்தி பிரதான சாலைவரை சென்று அங்குள்ள மிதிவண்டி பாதுகாக்குமிடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் செல்வது வழக்கம். மழைக்காலம் என்றால் மிதிவண்டியை பயன்படுத்த இயலாது. காரணம் நாங்கள் இருக்கும் பகுதி களிமண்கள் நிறைந்த விவசாய பூமி. மழை நீர் தொட்டதனால் ஏற்படும் கிளர்ச்சியில் களிமண் பாதைகள் தன் சமநிலையை இழந்துவிடும். அந்த கிளர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் காலம் வரை அந்த பகுதிகளை பயன்படுத்த யாரையும் அந்த பாதைகள் அனுமதிப்பதில்லை. வாகனங்களில் சென்றால் வழுக்கி விழுந்துவிடுவோம். நடந்து செல்ல முயற்சி செய்தால் காலணிகன் காலம் முடிந்துவிடும். எனவே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப நாம்தான் பாதை மாறி செல்ல வேண்டும். களிமண் பாதைகள் தன் கிளர்ச்சிக்காலத்தை முடித்ததும் அதன் சந்தோசத்தின் எல்லையை பசுமையான செடிகளின் மூலம் வெளிப்படுத்தும். பார்க்கும் திசை எல்லாம பச்சை நிறமாக இருக்கும். மென்மையான குளிர் காற்று வீச, அந்த பாதையில் பயணமாகும்போது யாரோ நம்மை ஆதரவாக அனைத்துக்கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

கண்ணில் பட்ட பசுமையான செடிகளினால் காலமாற்றத்தை புரிந்துகொண்டு, மிதிவண்டியை பயன்படுத்தி பணிக்கு சென்றுகொண்டிருந்த சமயமது. களிமண் பகுதியை கடந்து, காற்றை கற்பழித்துவிட்ட வாகண புகை நிறைந்த பாதையை அடைந்தது, அந்த பகுதியில் இருந்த மிதிவண்டியை பாதுகாக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். அந்த மிதிவண்டி பாதுகாக்குமிடம் ஒரு பெண்மணியால் நடத்தப்படுகிறது. வசதியான இடம் என்று சொல்ல முடியாது. ஒரு குறுகலான சந்தில் தென்னை கீற்றுகளால் வேயப்பட்ட சற்று நீளமான குடில்போல் இருக்கும். மிதிவண்டியை அங்கு நிறுத்துவதனால் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் மிதிவண்டி தன் பளபளப்பை இழந்துவிடும். வெயில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது. மின்சார வசதியும் இருக்காது. சூரியன் இல்லாவிட்டால் இரவுக்கென்று தனியாக நேரம் காலம் கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் எப்போதும் ஒரு மந்தமான இருள் அங்கு இருந்து கொண்டே இருக்கும்.

தனிமை, நிசப்தம், இருள் இம்மூன்று மட்டுமே இருக்கும் அந்த மிதிவண்டி பாதுகாக்குமிடத்தில் அன்று நான் நுழைந்தும் வாசலில் நின்று கொண்டிந்த அந்த பெண்மணி, கடைசியில் கொண்டுபோய் நிறுத்து என்றார். இது தினமும் நான் கேட்கும் கட்டளை என்பதால் நானாகவே கடைசி பகுதியை நோக்கி மிதிவண்டியை தள்ளிக்கொண்டு போனேன். திடீரென்று ஆ அய்யோ ஆ ஆ என்று அலரல் கேட்டது. இதயம் நின்று பின்னர் இயங்கியது போன்ற ஒரு உணர்வு, பயத்தில் அங்கேயே மிதிவண்டியை நிறுத்திவிட்டு ஒரு வினாடியில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அது ஒரு ஆணின் குரல். என்னவென்று அந்த பெண்ணிடம் கேட்கலாமா! என்று யோசித்துக்கொண்டே கேட்காமல் வெளியே வந்துவிட்டேன். வெளியே சப்தமிடும் வாகணங்கள், வெளிச்சம், மக்கள் என பார்வையில் பட்டதும் இதற்கெல்லாம் நான் பயப்படுவேனா என்ற போலியான தைரிய உணர்வு ஏற்பட்டது. நிதானத்திற்கு வந்ததுபோல் தோண்றியதும். அருகில் புறப்பட இன்னும் நேரமிருக்கிறது என்றரீதியில் நின்று கொண்டிருந்த பேருந்துதில் ஏறி அமர்ந்துகொண்டேன். என் நன்பனும் அந்த பேருந்தில் தான் பயணம் செய்வான் என்பதால் அவனுக்கும் இடம் பிடித்துக்கொண்டேன். அவன் பெயர் சதீஷ். தினமும் இருபது நிமிடம் என்னுடன் பயணம் செய்வான். அவன் வந்ததும் அந்த பேருந்தே சற்று பரபரப்பாகிவிடும் காரணம் அவனால் இரண்டு கால்களையும் பயன்படுத்த இயலாது கைகளில் செருப்பை மாட்டிக்கொண்டுதான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். பெரும்பாலும் அந்த வழியில் செல்லும் யாராவது ஒருவரின் வாகணத்தில் வந்து இறங்குவான். இறங்கியதும் அங்கு நின்று கொண்டிருப்பவர்களின் உதவியால் உள்ளே வந்து அமர்வான். பார்த்து பார்த்து மெதுவா என்ற வார்த்தைகள் கேட்டாலே என் நன்பன் வந்துவிட்டான் என்று அர்தம்.

உண்மையிலேயே அவன் என்னுடன் இருக்கும் அந்த இருபது நிமிடங்கள் எனக்கு இம்சையாகத்தான் இருக்கும். இடைவிடாமல் பேசிக்கொண்டே வருவான். அவன் பேச்சில் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைதல், வாழ்வில் அங்கிகாரம், நிலையான பணிக்கான தேர்வுகள், புதிய பணிநிலைகள் போன்ற விசயங்கள்தான் நிறைந்திருக்கும். பெரும்பாலும் சொன்ன விசயங்களையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருப்பான். நல்ல விசயங்கள் என்றாலும் தினமும் கேட்பதால் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ஒருவிதமான பதட்டம் அவனிடம் எப்போதும் இருக்கும். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மனதினுள் “உனக்கு என்னதாண்டா பிரச்சனை” என்று சலித்துக்கொள்வேன். அவனை ஒரு ஊனமுற்றவனாக நான் நினைத்தது கிடையாது. பல வருடங்களாக அவனை எனக்கு தெரியும். முதன் முதலாக பார்த்தபோது மட்டும் அடப்பாவமே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப்பிறகு அவனின் ஊனத்தை பற்றி நான் சிந்தித்தது கிடையாது. அவனின் தேடல் என்ன? அதற்கான அவசியம் என்ன? என்பதில் எனக்கு அதிகம் ஆர்வமில்லாததால் அவனின் வார்த்தைகளின் வலியை அல்லது வலிமையை நான் புரிந்துகொள்ள முயற்சித்ததில்லை. ஓகோ, அப்படியா, சரி என்று அவனை சமாளித்துக்கொண்டிருப்பேன். அவன் இறங்க வேண்டிய இடம் வந்து, அவன் இறங்கியதும் ஒருவிதமான செளகரியமாக மனநிலை எனக்கு கிடைக்கும். அப்பாடா என்ற உணர்வு ஏற்படும்.

மாலையில் மீண்டும் அதே மிதிவண்டி பாதுகாக்கும் இடத்திற்கு வந்தேன் எப்போதும் போல சாதாரணமாக உள்ளே செல்ல முடியவில்லை. காலையில் கேட்ட அந்த அலறல் சத்தத்தின்மீதான அச்சம் சற்று மிச்சமிருந்தது. ஆனால் எந்த சத்தமும் கேட்கவில்லை. பின்பு நாட்கள் செல்ல செல்ல இது ஒரு வழக்கமான நிகழ்வாக மறிவிட்டது. என் நன்பனின் புலம்பல் போல இது ஒரு வகையான அலறல் அவ்வளவுதான் என்று மனம் பழகிவிட்டது. இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கையில் ஒரு நாள் மாலை பேருந்தில் இருந்து இறங்கி மிதிவண்டியை எடுப்பதற்காக அந்த இடத்திற்கு சென்றேன். மாலையில் அனைவரும் மிதிவண்டி எடுக்க வருவதால் சற்று கூட்டமாக இருந்தது. வழக்கம் போல அந்த ஆண் குரல் கேட்டது. ஆனால் பழகிவிட்ட காரணத்தால் நான் பயப்படவில்லை. ஆ பசிக்குதுடா, யாராவது சோறு போடுங்க என்று சத்தமாக புலம்பிய அந்த குரலை கேட்டுக்கொண்டிருக்கும்போதே உள்ளே யாரோ விழும் சத்தம். அந்த பெண்மணி எதுவும் நடக்காதது போல மிதிவண்டி எடுக்க வருவோர்களிடம் இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார். என்ன சில்லறை இல்லையா! சரி இந்தாங்க நாளைக்கு மீதி தாங்க என்றபடி இயல்பாக இருந்தார். திடிரெண்று கத்திக்கொண்டே உள்ளே இருந்து ஒரு ஆண் தவழ்ந்தபடி வந்தார். வெற்றுடம்பு பராமரிக்காத தலை, குளித்ததே இல்லை என்பதை நிரூபிக்கும் முகம், இடுப்பில் ஒரு அழுக்கு துணி சுற்றப்பட்டிருந்தது. ஏன் தவழ்ந்தாடி வருகிறார்! இரண்டு கால்களும் இல்லை, நிச்சயமாக ஊனம் இல்லை ஏதோ விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும். அவரின் தொடைப் பகுதி விபத்திற்கான அடையாளங்களை காட்டியது. வயதானவர் என்று சொல்லிவிட முடியாது. நடுத்தரமான வயதுதான். அவரைப்பார்த்து அடப்பாவமே என்று பரிதாபப்படுவதை விட ஆச்சரியம்தான் ஏற்பட்டது அந்த பெண்மணியை பார்த்து. பெண்மணி எதற்கும் அசைந்துகொடுக்காமல் தன் பணியில் தீவிரமாக இருந்தார். அவரின் புலம்பல் தொந்தரவாக உணரவே சற்றென்று உள்ளே சென்று எதையோ தட்டத்தில் போட்டு அதை அந்த ஆளை நோக்கி தூக்கிப்போட்டார் பாருங்கள் அதிர்ச்சியில் உரைந்துப்போனேன். நல்லோர்கள் நாய்க்கு உணவு போடும்போது கூட நல்லவிதமாகவே போடுவார்கள். இதென்ன இவ்வளவு அலட்சியம்! பணம் சம்பாதிக்கும் திமிரா! யோசித்துக்கொண்டிருக்கையில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் கேட்காமலே விளக்கம் கொடுத்தார். “எல்லாம் கை, கால் நல்லாயிருக்கும் வரைதாங்க” எதாவது ஒன்னு சரியில்லைனா இப்படித்தான் வாழ்ந்தாகனும் இதுதான் வாழ்க்கை. மனதினுள் ஒருவகையான இறுக்கம் நிலவியது. எங்கேயோ படித்த ஞாபகம் கணிகொடா மரங்கள் தீயிலிடப்படும். நம்மாள் எந்த மாதிரியான நன்மை இந்த சமுதாயத்திற்கு, குடும்பத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ அது தொடரும் வரைதான் நமக்கு கிடைக்கின்ற மரியாதை தொடரும்.

நல்லவிதமாக பழகிக்கொண்டிருகும் மக்கள் நம்மால் எந்தவித பயனும் ஏற்படாத சூழ்நிலை உருவாகி விட்டால் வேறுமாதிரி மாறிவிடுவார்களா! அப்படியென்றால் இப்போது நமக்கு மற்றவர்களிடமிருந்து கிடைத்துக்கொண்டிருக்கும் அன்பு, அரவனைப்பு மாறக்கூடியதா! அனைத்தும் பயன்சார்ந்து அமைந்ததா! என்னுடைய இந்த சூழ்நிலை மாறிவிட்டால், எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், எனக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டால், என்னால் மற்றவர்களுக்கு பயன் ஏதும் இல்லாமல் போய்விட்டால்... சிந்தனைகள் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தது. மெல்ல மெல்ல பயம் என்னை சூழ்ந்து நிற்க ஆரம்பித்தது. என் மனம் தானாகவே சிந்தனை செய்துகொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டு மனதில் ஒரு நிறத்தை நினைத்து பின்னர் கண்களை திறந்துபார்த்தால் நாம் நினைத்த வண்ணம் கொண்ட பொருட்கள் மட்டுமே அதிகமாக தெரியுமல்லவா! அதுபோல பயத்தின் காரணமாக நான் பார்க்கும் அனைத்தும் எனக்கு மேலும் பயத்தையே உண்டுபண்ணியது. தன்னால் இனி முடியாது என ஓய்ந்துபோய் தன் மரியாதையை இழந்த மக்களே அதிகம் என் பார்வையில் பட்டார்கள். திடீரென்று என் நன்பன் சதீஷின் வார்த்தைகள் எனக்கு புரிவது போல் தோண்றியது. அவனுடைய பதட்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது. அவன் ஏன் அடிக்கடி அங்கிகாரம், ஒரு நிலையை அடைதல் குறித்து பேசிக்கொண்டிருந்தான் என்று புரிய ஆரம்பித்தது. அவனின் ஊனமாக வாழ்வியலின் தன்மை புரிந்தது.

வல்லமை மிக்கவர்கள் இப்போதெல்லாம் விண்ணிலிருந்து இறங்கி வந்து வழிகாட்டுவதில்லை மாறாக மனிதர்களாக பிறந்து மக்களோடு மக்களாகத்தான் வாழ்கிறார்கள், வாழ்ந்து காட்டுகிறார்கள் நாம்தான் அதன் அர்த்தங்களை புரிந்துகொள்வதில்லை.

அடுத்த நாள் மீண்டும் மிதிவண்டியில் சென்றேன் ஆனால் காடு, களிமண் என்று எதையும் ரசிக்கத் தோண்றவில்லை. ஏதோ ஒரு இறுக்கத்தில் சென்று கொண்டிருந்தேன். என் நன்பனை பார்க்க வேண்டும் அவனிடம் பேச வேண்டுமென தோண்றியது. மிதிவண்டி பாதுகாக்குமிடதினுள் நுழைகிறேன் இப்போது அந்த மனிதனை பார்த்து எனக்கு பயமில்லை என்னை நினைத்துதான், என் நிலையை நினைத்துதான் எனக்கு பயம் ஏற்பட்டது. பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். என் நன்பனுக்காக இடம் பிடித்திருந்தேன். ஆனால் அவன் வரவில்லை. பேருந்து புறப்பட நேரமானது, தம்பி யாராவது இங்க உட்காருவாங்களா என விசாரித்துக்கொண்டு வேறு ஒருவர் என் அருகில் அமர்ந்துகொண்டார். வாழ்க்கை விசித்திரமானது அருகில் இருப்பவைகளின் அவசியம் நமக்கு புரியும் போது அவை நம்மை விட்டு விலகிச்சென்று விடுகின்றன.

என் நன்பனை அதற்குப்பிறகு சிறிது நாட்கள் நான் பார்க்கவில்லை. அவனுக்கு என்ன ஆனது, ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. தினமும் அவன் என் அருகில் அமர்ந்து புலம்பிய வார்த்தைகளை மீண்டும் கேட்கவேண்டும் போல் இருந்தது. எனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்துவிட்டால் என்னைச் சுற்றியுள்ளவார்கள் மாறிவிடுவார்களா! இந்த கேள்வி மனதினுள் அவ்வப்போது ஓடிக்கொண்டே இருந்தது. அங்கு ஒரு வலிமையன முற்றுப்புள்ளி இருப்பது போல் தோண்றியது. மாலையில் வீடு திரும்பும்போது இருளத்தொடங்கியிருந்தது. என் மனமும் இருண்டுபோய்தான் இருந்தது. விடியாத இரவொன்றில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வுடன் வீட்டை அடைந்ததும், என் நன்பன் தொலைப்பேசியில் அழைத்ததாகவும் மீண்டும் அவனே தொடர்பு கொள்வதாக கூறியதாகவும் சொன்னார்கள். வழக்கத்திற்கு மாறாக அவன் மிது ஒரு பரிதாபம் தோண்றியது. அது பரிதாபமா அல்லது எனது பயமா என்று தெரியவில்லை. என்னவாகிவிட்டது அவனுக்கு என்று யோசித்துக்கொண்டிருக்கையில் தொலைபேசி அழைத்தது - டேய் நான் சதீஷ் பேசுறேண்டா, எனக்கு அரசாங்க வேலை கிடைத்துவிட்டது என்றான். இனி விடிந்துவிடும்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.