ஆகா! ஆண் குழந்தை
எப்பேர்பட்ட இறுக்கமான மனிதனின் மனதையும் இளகச் செய்யும் இனிமையான நிகழ்வுகள் பல உண்டு வாழ்க்கையில். அந்த நிகழ்வுகளில் அற்புதமானது குழந்தை பெற்று தாயாக/தந்தையாக பரிணாமம் அடைவது. இதைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை, அனைவரின் வாழ்விலும் நிகழ்ந்தது மற்றும் நிகழப்போகின்ற ஒன்றுதான். அனைவரும் அறிந்து வைத்திருக்கும் அற்புதம்தான் அது.
அந்த அற்புதம் என் வாழ்வில் ஏற்பட்ட போது, எனக்குள் சில சிந்தனைகள் தானாகவே ஓடத்தொடங்கியது. குழந்தை எப்படி இருக்கும், யார் மாதிரி இருக்கும், குழந்தையை பார்க்கும் போது எப்படி இருக்கும் என்பது போன்ற சிந்தனைகள் ஒருபுறம் இருக்க, மற்றவர்களிடம் இந்த சந்தோஷத்தை எப்படி பகிர்ந்து கொள்வேன் என நினைக்கும்போது சற்று கூச்சம் கலந்த சந்தோஷமாக இருந்தது. குழந்தை பிறந்தது அந்த விசயத்தை மற்றவர்களிடம் சொல்லும் போது அவர்கள் எந்த மாதிரி கேள்விகள் கேட்பார்கள் அதற்கு நான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பது போன்ற நிகழ்வுகள் மனதில் கற்பனையாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
ஆண் குழந்தையை எதிர்பார்கின்றாயா அல்லது பெண் குழந்தையை எதிர்பார்கின்றாயா? என்று எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். “எதுவாக இருந்தால் என்ன” இது என்னுடைய பதிலாக இருக்கும். பதிலை கேட்டதும் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். அந்த பார்வையின் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை.
குறிப்பிட்ட அந்த நாளில் குழந்தை பிறந்ததும் மற்றவர்களிடம் அந்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்வதற்காக இனிப்புடன் சென்றேன். முதலில் என் உயர் அதிகாரியிடம் சென்றேன் செல்லும் போது அவர் என்ன மாதிரி கேள்விகளை கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று யோசித்துக்கொண்டே கூச்சம் கலந்த சந்தோசத்துடன் சென்றேன். என்னை பார்த்ததும் வாப்பா என்ன குழந்தை என்றார். ஆண் குழந்தை என்றதும், வெரிகுட் வெரிகுட் தப்பிச்சிட்டியே என்றார். தப்பிசிட்டேனா! அப்படினா என்ன அர்த்தம்! இது நான் யோசித்துப் பார்க்காத வார்த்தை. ஏன் அப்படி சொன்னார் என்று அவரிடம் கேள்வி கேட்க இயலாது ஏனெனில் அவர் என் உயர் அதிகாரி, அவரிடம் சரளமாக பேச இயலாது அதனால் என் பல்லின் வெண்மையின் சிறப்பை காட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
அடுத்ததாக என சக பணியாளரிடம் சென்றேன் சொல்லிவைத்தது போல அவரும் “எப்படியோ தப்பிச்சிட்ட” என்று சொன்னதும். தன்னிடம் இல்லாத வீரத்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு அதை வெளிப்படுத்த விரும்பிய சிங்கள ராணுவத்தினருக்கு கிடைத்த அப்பாவி தமிழ் மக்களைப்போல எனக்கு ஒரு அப்பாவி மாட்டிக்கொண்டான் என்ற சந்தோசத்தில் அவரிடம் என் கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக கேட்க ஆரம்பித்தேன்.
ஏன் தப்பித்துவிட்டாய் என்று சொன்னீங்க?
தப்பிக்கும் அளவுக்கு என்ன சிக்கல் ஏற்பட்டு விட்டது?
எனக்கே தெரியாமல் நான் செய்த சாதனைதான் என்ன?
நான் சிக்கலில் சிக்கிக்கொள்ள ஏதேனும் வாய்ப்பு இருந்ததா?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் சொன்னார் “உனக்கு பெண் குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு செலவு இருக்கிறது என்று தெரியுமா” அவரின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை காரணம் வளர்ந்த நாடு முதல் வக்கில்லாத நாடுவரை அனைத்து இடங்களிலும் உள்ள மக்களின் மனதில் இருக்கும் பொதுவான சிந்தனைதான் அது. நாங்கள் தான் தற்போதைய வல்லரசு என்று சொல்லிக்கொள்ள விரும்பும் நாட்டின் நதியில் இருபதுக்கும் மேற்பட்ட இறந்த பெண் குழந்தையின் சடலங்கள் காணப்பட்டதாக செய்திகள் சில மாதங்களுக்கு முன் படித்திருக்கிறேன். பெண் சிசு கொலை என்பது முன்பு கொடூரமான முறையில் நிகழ்ந்து கொண்டிருந்தது அதே வேலைகள் இப்போது நாகரீகமான முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புதைத்து வைத்த விதை செடியாகி மரமாகி பூ பூத்து காய் காய்த்து கணியான பின்பு அதை சாப்பிட்டு பார்த்து அட இந்த பழம் இனிக்க வில்லையே என்றவர்கள் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் விதையிலேயே பழம் இனிக்குமா புளிக்குமா என அறிந்துகொண்டு அதை அழித்துவிடுகின்றார்கள். பெண் சிசுக்கொலை மற்றும் ஆண் குழந்தையின் மீதான ஆசை பற்றி அனைவரும் பேசியிருக்கின்றார்கள். ஆனாலும் நாம் விவாதிக்க சில விசயங்கள் உள்ளன.
மக்களைப் பொருத்தவரையில் ஆண் குழந்தை என்பது நீண்ட கால முதலீடு, பெண் குழந்தை என்பது நீண்டகால செலவு. ஆண் குழந்தைக்காக என்னதான் செலவு செய்தாலும் இறுதியில் இருக்கப்போவது அவன்தானே, என்னதான் செலவு செய்தாலும் பெண் என்பவள் அடுத்த விட்டுக்குப் போகப்போகின்றவள்தானே என்ற நினைப்பு அனைவருக்கும் உண்டு. இதில் வருந்த வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த மடமையான சிந்தனை எப்போதோ மலையேறிவிட்டது என்பதுகூட தெரியாமல் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதுதான். எந்த ஆண்மகன் இப்போது அப்பா அம்மாவை அரவனைக்கின்றான்? அப்படியே அரவனைத்துக் கொண்டிருந்தாலும், தனியார் நிதி நிறுவனத்தில் பணம் போட்டுவிட்டு ஓடிவிடுவானோ என்ற சந்தேகத்தில் வாழும் நபர்களின் மனநிலையில்தான் அந்த பெற்றோர்கள் இருப்பார்கள். காரணம் எப்போது வேண்டுமானாலும் அந்த மகன் அவர்களை கைவிட வாய்ப்பு உண்டு. தாய் தந்தையை மகன் தன் தோலில் தூக்கிக் கொண்டு சென்றதெல்லாம் உண்மையில் நடந்திருக்க வாய்ப்பிலை அதனால்தான் அவற்றை கதைகளின் மூலமாக சொல்லி வருகின்றோம்.
இந்திய கலாச்சாரத்தை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அமெரிக்க கலாச்சாரத்தை நாம் அரவனைக்கத் தொடங்கிவிட்டோம் என்பதை யாரும் மறுக்க இயலாது. மெல்ல மெல்ல பெற்றோரின் துனையில்லாமல் தனித்தனியாக அனைவரும் வாழத்தொடங்கிவிட்டோம். பெற்றோருக்கும் மகனுக்குமான உறவு இப்போது எப்படி இருக்கிறது? பெற்றோர் ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், மகன் வேறு ஒரு ஊரில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பான் மாதமானால் பெற்றோருக்கு பணம் அனுப்புவான். இவ்வளவுதான் பெற்றோருக்கும் மகனுக்குமான தொடர்பாக இருக்கிறது. ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்தை... சேர்ந்திச்சோ சேரலையோ என்ற பாடல் வரிகளைப்போல தான் அனுப்பிய பணம் தந்தையிடம் சேர்ந்துவிட்டதா இல்லை என்ற ரீதியில்தான் மகனின் கவலை அமைந்திருக்கும். எனவே தற்போதைய சூழ்நிலையில் மகன் பிறந்தால் கடைசிவரை தன்னோடு இருந்து தாங்குவான் என்று எண்ணுவது அர்த்தமற்ற சிந்தனை.
அதேபோல, திருமணம் நடந்துவிட்டால் பெண்ணுக்கும் அவளின் பிறந்த வீட்டுக்கும் தொடர்பில்லாமல் போய்விடும் என்ற சிந்தனையும் சிதறிப்போய்விட்டது. அதிகாலையில் பக்தி பாடல்கள் ஒலிக்க ஈரமான தலையுடன் கையில் கோலப் பொடியுடன் வாசலில் அமர்ந்து மங்கலகரமாக ஒரு பார்வை பார்ப்பது, கணவன் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்திருக்க அருகில் நின்று உணவு பரிமாறுவது போன்ற காட்சிகள் மூலம் திரைப்படமும் தொலைக்காட்சியும் பெண்கள் பற்றி தவறான ஒரு உதாரணத்தை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு முடிவு எடுக்க வேண்டுமானால் கணவனை திரும்பிப்பார்ப்பது, எல்லா விசயத்திற்கும் கணவனை எதிர்பார்ப்பது, பிறந்த வீட்டை மறந்துவிட்டு என் குடும்பம் என் மக்கள் என்ற தனிப்பட்ட சிந்தனை கொண்டிருப்பது போன்றவை தற்போதைய பெண்களிடம் இல்லை. உண்மையில் கணவனை விட சற்று அதிகமாக சம்பாதிக்கின்றார்கள். கணவனுக்கு முன்பாக வேலைக்கு புறப்பட்டு சென்றுவிடுகின்றார்கள். குடும்பத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் தற்போதைய சூழ்நிலையில் கணவன் மனைவியின் ஆலோசனை இல்லாமல் தனித்து செயல்பட்டுவிட முடியாது. இரண்டு சக்கரங்கள் பொருத்தியது வாழ்க்கை என்றால் அதில் ஒரு சக்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாள் தற்போதைய பெண். என்னங்க எங்க வீட்டுக்கு கூட்டீட்டு போறீங்களா என்று கேட்கும் நிலை மாறி, வேலை முடிந்ததும் வாகணத்தை பெற்றோரின் வீட்டுப்பக்கம் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகின்றார்கள். எனவே புகுந்தவீட்டினர் மூலமாக எந்த பெண்ணும் கட்டுப்படுத்தப்படுவதில்லை/கட்டுப்படுத்த முடிவதில்லை, தற்போதைய பெண்கள் திருமணத்திற்கு பிறகும் பெற்றோர்களை கவணிக்கின்றார்கள், காப்பாற்றுகின்றார்கள்.
நான் பணிபுரியும் அலுவலகத்தின் மேலாளர் நம் நிறுவனத்திற்கு பெண்கள்தான் பொருத்தமானவர்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இதற்கு காரணமாக அவர் கூறும் விசயங்கள், 1.ஆண்கள் ஒரு இடத்தில் நிலையாக இருந்து வேலை செய்யாமல் வேலை தேடிக்கொண்டே இருப்பார்கள். 2. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆண்களுக்கு போதாது. 3. பெண்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்தாலும் தொடர்ந்து வருவார்கள். 4. பெண்களுக்கு சம்பளத்தை விட பாதுகாப்பே முக்கியம் எனவே சம்பளம் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து ஒரே நிறுவனத்திற்கு வேலைக்கு வருவார்கள். அவரின் கூற்று முற்றிலும் தவறு என்பதை நிரூபித்தார்கள் பெண்கள். அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த அனைத்து பெண்களும் வேறு வேறு நிறுவனங்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைக்கு சென்று அதிர்ச்சி கொடுத்தார்கள். ஆண்கள் மட்டும் தொடர்ந்து அங்கேயே பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். அதிகம் சம்பாதிக்க வேண்டும், வாழ்வில் ஒரு நிலையை அடையவேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கரை உண்டு அந்த அக்கரையில் அவர்களின் குடும்பமும் அடங்கியிருக்கின்றது. வீரியமிக்க அவர்களின் செயல்பாடுகளினால் ஆண்கள் சற்று அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது. இதனால் பெண்கள் திருமணமானதும் கணவனின் வழியில் சென்றுவிடுவாள். பெண் என்பவள் நீண்டகால செலவு என்பது தவறான கருத்து. கணவனக்கு தெரியாமலும், சில துணிவான பெண்கள் தன் கணவனுக்கு தெரிந்தும் தன் தாய் தந்தைக்கு பணம் கொடுத்து உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்
இறுதியாக ஒரு விசயம், ஆண் காப்பாற்றுவான் இல்லை பெண் காப்பாற்றுவாள் என்ற விசயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். ஒரு குழந்தையை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கி, வாழ்வில் ஒரு நிலையை அடைய உதவியாக இருந்து, அவர்களை வாழ்கையில் சாதிக்கச் செய்கின்றோம். ஒன்றுமில்லாத ஒருவனை உருவாக்குமளவிற்கு சக்தி படைத்த நம்மால் நம்மை ஏன் காப்பாற்றிக்கொள்ள இயலாது. நம்மால் உருவாக்கப்பட்டவர்களை நம்பி நாம் ஏன் வாழ வேண்டும்! சரியாக திட்டமிட்டால் வாழ்வின் இறுதி காலத்தை இன்பமாக கடக்க முடியும் நம்மால். அதற்கு தேவையான அனைத்து சக்தியும் அறிவும் நம்மிடம் உள்ளது. அப்படியிருக்க யாரையும் நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை. பிறப்பது ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்வோம். அவர்களுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக்கொடுப்போம், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்களிடமிருந்து விலகி நிற்போம். ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் குழந்தைகளை அரவனைப்போம்
|