திருடன் போலீஸ் விளையாட்டு
வணக்கம், நான் இந்த ஏரியா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகின்றேன். அதற்கான அடையாள அட்டை இதோ... பணி நிமித்தமாக உங்களிடம் சில விபரங்களை பெற வேண்டியிருக்கிறது. உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்... இப்படி ஒரு காவலர் பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம் கேட்பவர் நிச்சயம் மயங்கி விழுந்துவிடுவார். காரணம் இப்படி காவலர் ஒருவர் பேசுவதை கற்பனையில் கூட எதிர்பார்க்க இயலாது. யதார்த்தத்தில் ஒரு காவலரின் பேச்சு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
குற்றங்களை தடுக்கின்றோம் என்று செயல்படும் காவலர்களின் செயல்பாடுகளே ஒருவகையில் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகிவிடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. “போலீஸ் உடையில் வந்து கொள்ளை அடித்தனர், போலீஸ் உடையில் வந்து பணம் பறித்தனர், போலீஸ் உடையில் வந்து... “என்ன காரணம் இப்படி நடக்க? ஏன் மக்களுக்கு உண்மையான காவலருக்கும், போலியான காவலருக்கும் வித்தியாசம் தெரியவில்லை? தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் முரட்டுத்தனமான நபர்கள், காவலர்கள் போல் நடிப்பதில்லை. காவலர்களின் நடவடிக்கை அந்த முரட்டுத்தனமான நபர்களின் செயல்பாடுகளைப்போல் இருப்பதால் இந்த வேசம் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறது. இதனால் மக்களால் சரியான காவலர்களை அடையாளாம் காண முடிவதில்லை.
ஒரு வேளை வந்திருக்கும் காவலர் உண்மையானவர் என்ற பட்சத்தில், அவரிடம் நீங்கள் காவல் துறையை சார்ந்தவரா? அதை எப்படி நாங்கள் நம்புவது என்று யாராவது கேட்டுவிட்டால் அவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். இப்படி கேள்விக்கே இடம் அளிக்காமல் இருக்கும் காவலர்களின் உடையில் யார் வந்தாலும் அவர்களிடம் மக்கள் ஏமாற்றமடைவது இயல்பு தானே.
காவலர்களின் அன்பு எப்படிப்பட்டதென்றால், கொஞ்ச நாளைக்கு முன்பு தன் சட்டைக்குள் எதையோ வைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குள் ஒரு பயணி நுழைந்ததைப் பார்த்த அங்கிருந்த காவலர், டேய் - இங்க வாடா – என்னடா உள்ள வச்சிருக்க – எங்கடா போற என மிக சத்தமாக அந்த பயணியை அதட்ட, சத்தம் கேட்டு அருகில் இருந்த பயணிகள் எல்லோரும் அந்த பயணியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மிகுந்த அவமானத்துடன் அந்த பயணி அவரிடமிருந்த பொட்டலத்தை பிரித்துக்காட்டினார். பயணத்தின் போது சாப்பிட வைத்திருந்த உணவுப் பொட்டலம் அது. உணவுப் பொட்டலம் என தெரிந்ததும் அந்த காவலருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
அந்த பயணியிடம் உங்களின் சட்டைக்குள் என்ன வைத்திருக்கின்றீர்கள், அதை வெளியே எடுத்து காண்பிக்க முடியுமா என்று மரியாதையாக கேட்க வேண்டும் என்று சொல்ல வில்லை சக மனிதனிடம் பேசுகிறோம் என்ற சாதாரணமான வார்த்தைகளில் பேசியிருந்தால் உணவுப்பொட்டலம் என தெரிந்ததும் சரி போ என்று சொல்ல முடிந்திருக்கும். ஆனால் இங்கே விசயம் என்னவென்று அறிந்துகொள்வதற்கு முன்பாக அதிகார தோரணையில் பேசிவிட்டதால், அதை பொது மக்களும் பார்த்துவிட்டதால் அந்த அதிகாரியின் தன்முனைப்பு பாதிக்கப்பட்டு விட்டது. எந்த தவறும் செய்யாத தன்னை அவமதித்துவிட்டாரே என்ற கோபத்தில் அந்த காவலரை முறைத்தபடி அந்த பயணி நின்றிருந்தார்.
சூழ்நிலையை சமாளிக்க அந்த காவலர் மேலும் கடுமையாக அந்த பயணியை விரட்ட ஆரம்பித்தார். அந்த பயணி என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்படியே முறைத்துக்கொண்டு நின்றுவிட்டார். இதனால் அந்த காவலருக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. உடனே தடியை எடுத்து அந்த பயணியை அடிக்க, அடித்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் அந்த பயணி அடிவாங்கிக்கொண்டு அங்கேயே நின்று விட்டார். சூழ்நிலையை புரிந்துகொண்ட மற்ற காவலர்களும் அங்கே வந்து அந்த பயணியை பிடித்து வெளியே தள்ளி ரயில் நிலையத்திற்குள் வரவிடாமல் செய்துவிட்டார்கள்.
இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் காவல் துறையில் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் உயர் அதிகாரிகள் அல்ல, கடை நிலையில் இருக்கும் காவலர்கள் இவர்கள். யாரையாவது இவர்கள் மரியாதையாக அழைத்தால், அன்று முதல் சுனாமி வருவது நின்றுவிடும். எதிரில் நிற்பவர் எப்படிப்பட்ட வயதினராக இருந்தாலும் ஏய் – என்ன – வா இங்க என்பது போன்ற ஒருமைச் சொற்களில்தான் இவர்களின் அழைப்பு இருக்கும்.
நாங்கள் உங்களின் நண்பர்கள் என்று இவர்கள் அறிக்கை மூலமும், விளம்பரப்படுத்தி தெரிவிக்கும்போதே இவர்கள் மக்களிடம் கொண்டிருக்கும் உறவு எப்படியிருக்கிறது என்று நமக்குத் தெரிகிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நம்மிடமே இவர்கள் அதிகார பலத்தை காட்டும் போது, சட்டத்தால் குற்றம் சாட்டப்பட்டவரை பிடிக்கச்செல்லும் போது இவர்களில் அதிகார பலம் எப்படி இருக்கும்! நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது அதில் ஒரு பெண் ’அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன் ஒரு காவலர் என் வயிற்றில் உதைத்ததில் கரு கலைந்துவிட்டது’ என கண்ணீருடன் கூறினார் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று யாரும் மறுத்துக்கூற வில்லை.
பொருப்பான பதவியிலுள்ள ஒருவர் தன்னுடைய கடமையை செய்துமுடிக்க அவருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த அந்த அதிகார பலம் அவரின் பதவியை சார்ந்ததே தவிர அந்த நபருக்குரிய தனிப்பட்ட பலம் அல்ல.
அதிகார பலத்திலுள்ள யாவரும் தங்களுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை தனக்கு கிடைத்த அதிகாரமாகவே நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்களே தவிர, அது தன்னுடைய பதவியை சார்ந்த அதிகாரம், கடமையாற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்ற ரீதியில் யாரும் நினைப்பதில்லை. இந்த விசயத்தை மக்களில் எத்தனை பேர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்! புரிந்திருந்தாலும் எத்தனை பேரால் தங்களுடைய புரிதலை வெளிப்படுத்த முடிகிறது! அதிகார பலம் மக்களை அச்சம் கொள்ளச் செய்கிறது. எல்லாம் உங்களின் நன்மைக்காகத்தான் என்று சொல்லிக்கொண்டு எல்லோர் நலனையும் சோதித்துப் பார்த்துவிடும் இவர்களை யார் கேள்வி கேட்பது?...... யாருக்கு துணிவிருக்கிறது...?
இவர்கள் தங்களின் அனுகுமுறையை மாற்றிக்கொள்ளாத வரையில், இவர்களின் பேரைச்சொல்லி, இவர்களின் உடையணிந்து நடக்கும் திருடன் போலீஸ் விளையாட்டுக்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். |