சூது
காயு ருட்ட லானார் – சூதுக் களி தொடங்க லானார்
மாய முள்ள சகுனி – பின்னும் வார்த்தை சொல்லுகிறான்
‘நீ அழித்த தெல்லாம் – பின்னும் நின்னிடத்து மீளும்
ஓய் வடைந்திடாதே – தருமா ஊக்க மெய்து’ கென்றான்
கோயிற் பூசை செய்வோர் – சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
வாயிற் காத்து நிற்போன் – வீட்டை வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான நீதி யவை உணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான் – சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்
– மகாகவி பாரதி
|
இன்றைய காலகட்டத்தில் இரண்டு நபர்கள் சந்தித்து உரையாடினால், பங்குச்சந்தை பற்றி இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் அவர்களது உரையாடால் நிறைவடையாது, அது பெரியவர்களின் உரையாடலாக இருந்தாலும் சரி, கல்லூரி மாணவர்களின் உரையாடலாக |
இருந்தாலும் சரி. எளிதாக பணம் சம்பாதிக்கலாம், மற்ற தொழிலை செய்துகொண்டே இதில் முதலீடு செய்ய முடிவது போன்ற காரணங்களால் பங்குச்சந்தை மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொருமுறை பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து பலபேர்கள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வரும்போது, பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம், அதில் முதலீடு செய்வதை விட முட்டாள் தனம் வேறு இல்லை என்பது போன்ற சொற்களும் தவறாமல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அபாயம் என்பது எல்லா தொழில்களிலும் உள்ளது. சினிமாதுறை, விவசாயம் மற்றும் மீன்பிடிக்கும் தொழிலில் இருக்கிற அபாயத்தைவீட பங்குச்சந்தையில் அபாயம் குறைவுதான். பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் அதை நாம்தான் சூதாட்டம் போல் பயன்படுத்துகிறோம்.
தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விசயங்கள்:
பங்குச்சந்தையில் மூழ்கி முத்தெடுக்க மிகப்பெரிய படிப்பாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படிப்பறிவில்லாத பாமர மக்கள் கூட பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் கண்டிப்பாக பங்குச்சந்தையின் அடிப்படை விசயங்களை தெரிந்திருக்க வேண்டும். பங்குச்சந்தை என்றால் என்ன அதன் நடைமுறை என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையில் ஏமாற்றப்பட்ட நபர்களைப் பற்றிய விசயங்களை படித்துப் பார்த்தீர்களேயானால், அவர்கள் படித்த, பெரிய நிறுவணத்தில் உயர் பதவியில் பணியாற்றுகிறவராக இருப்பார்கள். ஒருவர் என்னை தொடர்பு கொண்டு தான் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதாக தெரிவித்துவிட்டு, தான் ஒருவரிடம் பங்குகளை வாங்கச்சொல்லி பணம் கொடுத்தேன் எனக்கு வரவேண்டிய பங்குகள் இதுவரை வரவில்லை, அந்த பங்குகள் என்ன ஆனது என எப்படி தெரிந்துகொள்வது’ என்று என்னிடம் கேட்டார். இதை உங்களால் நம்பமுடிகிறாதா!. ஆனால் இதுதான் உண்மை. பங்குச்சந்தையில் பணமாக யாரிடமும் கொடுக்க கூடாது காசோலையாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதவர்கள் இவர்கள். பங்குச்சந்தையில் ஏமாற்றப்பட்டவர்களில் பலர் படித்தவர்கள்தான். பாமரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒவ்வொருமுறை பங்குகளை வாங்கிய பிறகும், விற்ற பிறகும் அதற்குறிய படிவத்தை கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். பங்குச்சந்தையின் அடிப்படையான விசயங்கள் அறிந்து வைத்திருப்பவர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான விசயமல்ல.
பொருப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்:
மற்ற எந்த தொழிலிலும் இல்லாத ஒரு அலட்சிய போக்கு பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் உண்டு. மற்ற தொழில்களில் கடுமையாக உழைக்கும் மக்கள் பங்குச்சந்தையில் மட்டும் அந்த உழைப்பை வெளிப்படுதுவதில்லை. |
|
என்ன செய்கிறோம் என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை ஆனால் என்ன செய்தாலும் பணம் அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எதை வாங்குகிறோம் எதை விற்கிறோம் என்ற உணர்வே பலருக்கு இருப்பதில்லை. எந்த பங்குகளை வாங்குகிறோம்? நாம் வாங்கும் விலைக்கு ஏற்றதுதான அந்த பங்கு? என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் காய் விற்கும் வண்டிக்காரனிடம் பெண்கள் பேசுவதை கேட்டுப்பாருங்கள். பத்து ரூபாய்க்கு காய் வாங்குவார்கள் அதற்கு வண்டிக்காரனிட சண்டை போட்டு, விவாதித்து தாங்கள் நினைத்த விலைக்கு வாங்குவார்கள். வாங்கும் காய்களின் மதிப்பறிந்து விலை கொடுப்பார்கள். நல்லா இருக்கும் என்று நினைத்து சொன்ன விலைக்கு வாங்குவதில்லை. காய் வியாபாரத்திலேயே இவ்வளவு கேள்வி கேட்க்கும் போது, பங்குகளை வாங்கும் போது எவ்வளவு கேள்விகளை நாம் கேட்க வேண்டும்!.
குறிப்புகள்
பங்குச்சந்தையில் பிரபலமான ஒரு விசயம் tips. பங்குச்சந்தையில் ஈடுபடும் அனைவருக்கும் அவசியமான விசயம் இது. பொறுமையாக உட்கார்ந்து எந்த துறையை சார்ந்த பங்குகளின் விலை அதிகரிக்கும் அதில் எந்த நிருவனத்தின் பங்குகள் சிறப்பானதாக உள்ளது என ஆராய்ச்சி செய்து தங்களுடைய நேரத்தை வீனாக்கிக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. தேவையான விசயங்களை யாராவது சொன்னால் அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான செய்திகளை கொடுத்து பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பங்குகளை வாங்குங்கள் என செய்தி வந்தால் எந்தவித யோசனையும் இல்லாமல் வாங்கிவிடுகிறார்கள். வாங்கிய பங்குகின் விலை இறங்கிய பிறகுதான் அது எந்த நிறுவனத்தின் பங்கு, அதன் விலை மீண்டும் எப்போது ஏறி வரும் என ஆய்வு செய்வார்கள். இந்த வேலையை வாங்குவதற்கு முன்பு செய்திருந்தால் நஷ்டமடைந்திருக்க மாட்டார்கள்.
பணம் கொடுத்து எந்த பங்குகளின் விலை அதிகரிக்கும் என்ற செய்தியை மற்றவர்களிடமிருந்து பெறும் மக்கள், எந்த பங்குகளின் விலை அதிகரிக்கும் என தெரிந்தவர்கள், அந்த பங்குகளை வாங்கி லாபம் அடையாமல், அந்த செய்தியை மட்டும் மற்றவர்களுக்கு விற்கும் தொழிலை மட்டும் ஏன் செய்கிறார்கள் என மக்கள் சிந்திப்பதில்லை. சில பேர் இந்த செய்தியை இலவசமாக கொடுப்பார்கள். தாங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகளின் விலையை அதிர்கரிக்க இது போன்று இலவச செய்திகளை கொடுத்து மக்களை அந்த குறிப்பிட்ட பங்குகளை வாங்க வைக்கிறார்கள். எல்லோரும் அந்த குறிப்பிட்ட பங்குகளை வாங்கும் போது விலை தானாக அதிகரித்து வரும். அப்போது வாங்கி வைத்திருக்கும் பங்குகளை விற்றுவிட்டு அவர்கள் அந்த பங்கிலிருந்து வெளியேறிவிடுவார்கள். அதில் முதலீடு செய்த மக்கள் மாட்டிக்கொள்கிறார்கள். மற்றவர்களின் செய்திகளை நாம் பயன்படுத்தினாலும் குறைந்த பட்சம் நாம் வாங்கும் பங்குகள் மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளா? இலாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறதா? அது எந்து துறையை சார்ந்தது? தற்போது அந்த துறை எப்படியுள்ளது? என்பது போன்ற சாதாரணமான கேள்விகளையாவது கேட்டுப்பார்த்து பங்குகளை வாங்க வேண்டும்.
ஒரு இடம் விற்பனைக்கு உள்ளது என யாராவது செல்போனில் செய்தி அனுப்பினால் உடனே அந்த இடத்தை மக்கள் வாங்கிவிடுகிறார்களா! நிச்சயமாக உடனே வாங்கமாட்டார்கள். அந்த இடம் பற்றி முழு விபரங்களை கேட்டு தெரிந்துகொள்வார்கள், ஏன் விற்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வார்கள், ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்வார்கள், முக்கியமாக வாங்கிய பிறகு நல்ல விலைக்கு திரும்ப நம்மால் அதை விற்க முடியுமா என அனைத்துவிதமாகவும் சிந்தித்த பிறகே வாங்குகிறாகள் ஆனால் பங்குச்சந்தையில் மட்டும் இந்த பங்குகளை வாங்குகள் என சொல்லியதும் எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே வாங்கிவிடுகிறார்கள். பின்னர் நஷ்டமடைந்ததும் புலம்புகிறார்கள். டிப்ஸ் என்பது ஒரு செய்திதான் அதை உறுதிபடுத்திய பின்புதான் அந்த பங்குகளை நாம் வாங்க வேண்டும்.
பங்குச் சந்தையில் ஊடகங்களின் பங்கு:
பங்குச்சந்தையின் செய்திகளை இப்போது அனைத்து தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் வெளியிடுகிறார்கள். பங்குச்சந்தை பற்றிய செய்திகளை நாம் தெரிந்துகொள்ள நாம் பங்குச்சந்தை தொடர்புடைய ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் தொலைக்காட்சி, செய்திதாள்களில் வரும் பங்குச்சந்தை விபரங்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது. சத்யம் நிறுவனம் நிப்டி 50-யிலிருந்து நீக்கியபோது அந்த செய்தியை பங்குச்சந்தையிலிருந்தே நீக்கிவிட்டார்கள் என பல ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் எனவே சரியான செய்திகளை பெற பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட ஊடகங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
சந்தையின் தேவை:
கொஞ்ச நாளைக்கு முன்பு மீன் சந்தைக்கு சென்றிருந்த போது, சைக்கிளில் சென்று மீன் விற்கும் இரண்டு நபர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அழுக்கு ஆடை அணிந்து, பீடி பிடித்துக்கொண்டிருந்த நபர் இவ்வாரு சொன்னார் “மத்தி மீன் இரண்டு வாரத்திற்கு சந்தைக்கு வாராது என எனக்கு போன வாராமே தெரியும். அதனால போனவாரம் தேவையான அளவு மத்தி மீன் வாங்கி வச்சுட்டேன், இந்த வாரம் முழுவதும் நல்ல விலைக்கு விற்று விடுவேன்”. எவ்வளவு புத்திசாலித்தனமான நடவடிக்கை இது. முதலில் சந்தை பற்றிய அவ்வப்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அந்த செய்தியின் மூலமாக சந்தையின் தற்போதைய தேவை என்ன என்பதை தெரிந்து அந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். படிக்காதவரான அந்த நபர் தனக்கு தேவையான செய்திகளை கேட்டறிந்து பயன்படுத்தும் போது, தொழில் நுட்பம் வசதிகள் பெருகியுள்ள இந்த காலத்தில் படித்த மக்கள் பங்குச்சந்தை பற்றிய செய்திகளை பெறுவது மிகவும் சுலபம், கொஞ்சம் உழைக்க வேண்டும் அவ்வளவுதான்.
விட்டதை பிடிக்கும் முயற்சி:
|
சகுனி சொன்னது போல் பங்குச்சந்தையில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலான மக்கள் விட்டதை பிடிக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன தவறு செய்தோம் என்பதை தெரிந்துகொண்டு அதை சரியான |
முறையில் தற்போது பயன்படுத்துகிறார்கள் என்றால் அதை பாராட்டலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் தாங்கள் என்ன தவறு செய்ததனால் முன்பு நஷ்டமடைந்தோம் என உணருவதே இல்லை. மீண்டும் மீண்டும் அதே தவறை கடன் வாங்கிச் செய்கிறாகள். கடன் வாங்கி பங்குச்சந்தையில் ஈடுபடுவதை வீட அபாயமான விசயம் வேறொன்றுமில்லை. விட்டதை பிடிக்கும் முயற்சியில் தருமர் போல இருப்பதையெல்லாம் இழந்துவிடுகிறார்கள். நஷ்டமடைந்தால், எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்துகொண்டு நிதானமாக செயல்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டுமே ஒழிய ஒரே நாளில் தவறுகளை சரிசெய்ய முயற்சிக்க கூடாது.
சந்தை ஆய்வாளர்கள்:
சந்தை பற்றிய ஆய்வு என்பது வானிலை அறிக்கை போன்ற ஒரு விசயம்தான். மழை வருவதற்கான எல்லா காரணிகளையும் ஆராய்ந்து மழை வரப்போகிறது என சொல்கிறார்கள் ஆனால் ஏதாவது ஒரு விசயத்தில் மாற்றம் ஏற்பட்டு மழை வராமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. அதுபோலதான் பங்குச்சந்தை பற்றிய ஆய்வுகளும். பங்குச்சந்தையில் விலை அதிகரிப்பதற்கான காரணிகளை ஆராய்ந்து ஒரு முடிவை அறிவிக்கிறார்கள். ஆனால் பங்குச்சந்தையை பாதிக்கும் காரணிகள் கணக்கில் அடங்காது ஏனெனில் பங்குச்சந்தையானது தற்போது உலக முழுவதிலும் தொடர்புடையதாக இருக்கிறது. ஏதாவது ஒரு நாட்டில் போர் அபாயம் ஏற்பட்டாலோ, பொருளாதாரம் சரிந்தாலோ அது இந்திய சந்தையையும் பாதிக்கும். ஒட்டுமொத்தமாக அனைத்து பங்குகளின் விலை இறங்கும்போது, எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும் அதனுடைய பங்குகளின் விலையும் இறங்கத்தான் செய்யும் எனவே இது போன்ற ஆய்வுகளை ஒரு செய்தியாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே ஒழிய இதை அடிப்படையாக வைத்து வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது. ஒருவர் சந்தை பற்றி எழுதிய கோட்பாடுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பில்லை. இது போன்ற ஆய்வுகளை புத்தகமாக் எழுதிதான் பணம் சம்பாதிக்கிறார்களே தவிர அதை பயன்படுத்தி சந்தையில் அவர்கள் பணம் சம்பாதிப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
பங்குச் சந்தையின் வீழ்ச்சி:
பங்குச்சந்தையில் விலை தொடர்ந்து நான்கு நாட்கள் இறங்கினால் இனி இந்த தொழில் அவ்வளவுதான். பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது, பாதாளம் நோக்கி செல்கிறது என ஆளாளுக்கு பேசிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். உண்மையில் இப்படிப்பட்ட வீழ்ச்சி என்பது நமக்கு ஒரு சரியான வாய்ப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து பங்குச்சந்தையை நாம் கவனித்து எந்த பங்குகளெல்லாம் தரமான பங்குகள், எந்த பங்குகளையெல்லாம் விலை குறைவாக கிடைத்தால் வாங்கலாம் என்கிற விபரத்தை நாம் எப்போது வைத்திருக்க வேண்டும். இது போன்று வீழ்ச்சி ஏற்படும்போது நாம் வாங்கலாம் என தீர்மானித்திருந்த பங்குகளை வாங்க வேண்டும். இப்படி வீழ்ச்சியில் வாங்கிய பங்குகளின் விலை மிக விரைவாக நாம் வாங்கிய விலையை விட இரண்டு மூன்று மடங்குகள் அதிகமாக உயரும். எனவே பங்குச்சந்தையின் வீழ்ச்சி என்பது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு அதை கண்டு பயப்பட தேவையில்லை.
லாபம் தரும் தைரியம்:
சில நேரங்களில் நாம் துணிந்து செயல்பட வேண்டியிருக்கும், அங்கு யோசித்துக்கொண்டிருக்க நேரமிருக்காது. சத்தியம் நிறுவனத்தின் பங்குகள் 12 ரூபாய்க்கு வந்த போது துணிந்து வாங்கியவர்கள் நல்ல லாபத்தை அடைந்தார்கள். இனி இந்த நிறுவனம் அவளவுதான் என ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தவர்கள் அந்த வாய்ப்பை தவறவிட்டார்கள். புத்தியுள்ள மனிதெரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்ற பாடல் பங்குச்சந்தைக்கு பல நேரங்களில் பொருத்தமாக இருக்கும்.
பங்குகளை வாங்கிவிட்டோம் உடனே விலை அதிகரித்து லாபம் வந்துவிடும் என்ற பொறுப்பற்ற சிந்தனை கூடாது. அடிப்படை விசயம் கூட தெரிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் ஈடுபட்டு, நஷ்டமடைந்த பிறகு பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லாமல் இதுவும் ஒரு தொழில்தான் என்பதை புரிந்துகொண்டு மற்ற தொழில்களில் நாம் உழைக்கும் போது எவ்வளவு உழைப்பை வெளிப்படுத்துகிறோமோ அதே அளவுக்கு பங்குச்சந்தையிலும் நாம் வெளிப்படுத்த தயங்கக்கூடாது. இதை ஒரு தொழிலாக செய்து பயனடைவது நம் கையில்தான் உள்ளது.
|