சீனப் பயணக் கட்டுரைகள் - 9
மலையும் மலை சார்ந்த பகுதியாக அமைந்த கியூசோ மாகாணம் குறிஞ்சி நிலப் பரப்பு என்று தான் சொல்லவேண்டும். உலகிலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து நிலப்பரப்பாகவும் அந்த நிலங்களை சார்ந்த வாழ்க்கையாகவும் பகுத்து அதனை இலக்கியமாக்கியவர்கள் தமிழர்கள் மட்டும் தான். இந்த நிலத்திலிருந்து உலகின் எந்தப் பகுதிக்கு யார் பயணித்தாலும் நமது நிலத்தோடும், நமது வாழ்க்கையோடும் தொடர்புபடுத்தி தான் பார்க்க முடியும். அந்த வகையில் கியூசோ எனக்கு குறுஞ்சி நிலமாக பட்டது.
மலைகளுக்கு உள்ளே அமைந்த நகரத்தையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஒவ்வொரு பகுதியையும் அணுகினேன். உலக நாடுகள் கண்டு வியக்கும் வண்ணமும், அமெரிக்காவை பலவழிகளில் அச்சுறுத்தும் வண்ணமும் தொழில் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மேம்பட்டுக் கொண்டே இருக்கும் சீனாவை எனது நிலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு கணமும் வளர்ந்து கொண்டே இருந்தது.
என்னுடைய ஆர்வத்திற்கு விடையளிக்கும் வண்ணமாக அமைந்தது தான் கியூசோ பல்கலைக்கழகம். சீனாவின் கல்வி முறையின் மேம்பாட்டினை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்தப் பல்க்கலைக்கழகம் ஒன்றே போதும். 19வது நூற்றாண்டில் இந்தியாவில் முதன்முதலாக கல்கத்தாவில்தான் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. நமது பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களின் தனித்துவத்தை மேம்படுத்துவதற்காக கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் என தனித்தனியே நமது பல்கலைக்கழகங்கள் பிரிந்து செயல்படுகிறது. சீனாவில் கியூசோ மாகாணத்தில் 1902ல் உயர்கல்விக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த கியூசோ பல்கலைக்கழகம். 1951ல் கியூசோ மாகாணம் முழுமையும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் இணைத்து உலகத் தரம் வாய்ந்த கியூசோ பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.
211திட்டத்தின்படி அதாவது உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களை சீனாவில் உருவாக்க வேண்டும் என்பதன் சுருக்கமே 211 திட்டம். ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 211 திட்டம் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் மற்றும் நிறுவனத்திறன் மேம்படுத்துதல், சட்டம், தத்துவம் மட்டுமன்றி உடற்கல்வி மேம்பாடு என அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து கல்வியை உலகத்தரமாக்கியதாலேயே சீனா வல்லரசாக உருவாகி உள்ளது.
கியூசோ பல்கலைக்கழகத்தில் ஒரு நாளின் பாதி நேரத்தித்தைக் கழித்தோம். சுற்றிச் சுற்றி வந்தோம். பல்கலைக்கழகத்தில் நூறு பேரை தோந்தெடுத்து எங்களுக்கு இணையாக அனுப்பி வைத்திருந்தனர். எனக்கு துணையாக எமிலி என்ற பெண் வந்தார். இவர் கலை பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவி. ஜியா ஷியாஷ்வா என்பது இவருடைய சீனப்பெயர்.இங்கு படிக்கும் அநேக மாணவர்கள் சீனப்பெயரை இயற்பெயராகவும், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என இரண்டு பெயர் வைத்திருக்கின்றனர். ஜோதி என்ற என்னுடைய பெயரை எமிலி பலமுறை உச்சரித்துப் பார்த்தும் உச்சரிப்பு வராமல் இறுதியாக ஜூடி என்று கூப்பிட ஆரம்பித்தார். ஜூடி என சீனமொழியிலும் எழுதிக் கொடுத்து எனக்கு பெயர் சூட்டு விழாவே வைத்து விட்டார்கள்.
சீனாமொழியில் எண்களின் உச்சரிப்பை எழுதி எனக்கு கற்றுக் கொடுத்தார். ஈ, ஏ, சா, ஸ், ஒ, லியோ, ச்சி, பா, சொ, சிர், என மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். வாண் டூ எங்களை வரிசையில் நிறுத்தி எண்ணும் போது அவருக்கும் முந்தி சீன மொழியில் எண்களை எண்ணுவதற்கு வசதியாக இருந்தது. என்னிடமும் தமிழில் ஒன்று, இரண்டு எப்படி எழுதுவது என கேட்டார். நான் 1, 2, 3…… என்று எழுதி காட்டினேன். அவர் நான் கேட்டது இதை அல்ல தமிழில் எப்படி எழுதுவது என்று கேட்டார். நல்லவேளையாக நான் தமிழில் M.Phil. பட்டம் பெற்றிருப்பதால் ௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, ௧o ., கழு என்று எழுதிக்காட்டினேன்.
பல்கலைக்கழகத்தைச் சுற்றிக் காட்ட எங்களோடு லாவல், கார்ல் வில்சன் மற்றும் லயன் உடன் வந்தனர். நாங்கள் சென்ற நாளில் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் ஆரவாரத்தில் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்து அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பட்டம் பெற்ற அந்த மாணவர்கள் நமஸ்தே, வணக்கம் என சொல்ல பழகிக் கொண்டனர்.
இந்தப் பல்கலைக்கழகம, 9,386 ஏக்கரில் ஒன்பது வளாகங்களில் அமைந்துள்ளது. உலகத்திலேயே மிகச்சிறந்த நூலகம் இங்கு தான் இருக்கிறது. 38 லட்சம் புத்தகங்களும், 1.6 லட்சம் எலக்ட்ரானிக் புத்தகங்களும் நிறைந்திருக்கிறது இந்த நூலகத்தில். இந்த பல்கலைக்கழகத்தில் 45,360 மாணவர்கள் படிக்கிறார்கள். 2,367 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். வெளிநாட்டு மாணவர்களும், வெளிநாட்டு ஆசிரியர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று மாணவர் பரிமாற்றத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 700 வெளிநாட்டு மாணவர்களுக்கு இங்கே கல்வியளிக்கும் விதமாகவும், 300 சீன மாணவர்களை உலகம் முழுவதும் உள்ள கியூசோ பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியும், கல்வி வளர்ச்சியை மேம்படுத்துகிறார்கள். ஆசிரியப் பரிமாற்றத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
உடற்கல்வி பற்றி சொல்ல வேண்டுமென்றால் மிகச் சிறந்த உள், வெளி விளையாட்டு அரங்கங்கள் 2,10,000 சதுரமீட்டரில் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஒலிம்பிக்கில் நூற்றுக்கும் மேலான பதக்கங்களை வென்றதன் இரகசியம் அவர்களது விளையாட்டு அரங்கத்தில் இருக்கிறது. அவர்களின் விளையாட்டு பயிற்சியில் இருக்கிறது. நாங்கள் சென்றபோது உள், வெளி விளையாட்டு அரங்கங்களில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மதிய உணவிற்காக கல்லூரியின் உணவகத்திற்கு சென்றோம். அங்கு உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சிறுபான்மை மாணவர்களுக்கான தனி உணவகம் அமைக்கப்பட்டிருந்தது தான். சிறுபான்மையினரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை மதித்தும் மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாரும் உணவு பரிமாறப்படுகிறது.மதிய உணவிற்கு பிறகு திறந்த வெளியில் கல்லூரி மாணவர்களின் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சியோடு அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.
எனது கைப்பற்றி எமிலியும், கார்ல் வில்சனும் கண்கள் கலங்கி வழியனுப்பினர். மலைகளின் நடுவே இருந்து அந்த மலையை விட்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் மிகச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தில் பாதம் பதித்த மகிழ்ச்சியிலும் சீனாவில் கிடைத்த மாணவ நண்பர்களில் நட்பிலும் மகிழ்ந்து அங்கிருந்து கிளம்பினேன்.
பயணிப்போம்...
|