சீனப் பயணக் கட்டுரைகள் - 25
ஷாங்காய் நகரில் இறுதி நாளான அன்று ஷாங்காய் மியூசியத்திற்கு சென்றோம். அங்கு சீனாவின் ஐயாயிரம் ஆண்டு கால பழமையை சொல்லிச் செல்ல ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மெழுகுச் சிலைகளும், புகைப்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், பழங்கால பொருட்களும் நிறைந்திருந்தன. இந்த ஷாங்காய் மியூசியம் இருக்கின்ற புடாங் பகுதியானது 1950களில் கொள்ளையர்களும், பாலியல் தொழில் செய்பவர்களும், மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தவர்களும் மற்றும் சுகாதாரமற்ற குடிசைப் பகுதிகளுமாக நிறைந்திருந்தது.
ஆனால் 1990ல் சீன அரசாங்கத்தால் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்பு வானூயர்ந்த கட்டிடங்களால் இந்த பகுதி நிறைந்ததோடல்லாமல் சமூக அளவிலும் மிகப்பெரிய கலாச்சார மாற்றம் பெற்ற பகுதியாக மாறியிருக்கிறது.
ஷாங்காய் மியூசியத்தை சுற்றி வந்ததில் சீனாவின் தொன்மைக்குள் புகுந்து வெளி வந்த ஒரு உணர்வை கொடுத்திருந்தது. அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ஓரியண்டல் பியர்ள் டவர் என்கிற ஆயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தைந்து அடி உயரமுள்ள கோபுரம். இந்த கட்டிடம் ஹாங்ஃபூ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 1991ம் ஆண்டு கட்டத் துவங்கி 1995ல் முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே முதல் பெரிய கோபுரமாகவும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. சிறியதும், பெரியதுமான பதினொன்று உருளைகளுடன் கூடிய இந்த மொத்தக் கோபுரமும் மூன்று மிகப்பெரிய தூண்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் பயன்பாடு தகவல் தொடர்பு என்று தோன்றினாலும் சுழலும் உணவகம், பதினைந்து பார்வையாளர்கள் பகுதி, தங்கும் விடுதி மட்டுமல்லாமல் கண்ணாடித் தரையுடன் கூடிய அறையிலிருந்து நிலப்பகுதியை பார்வையிடுவது மிகவும் அற்புதம். பார்வையாளர்கள் பகுதியின் கீழ்த்தளம் 863 அடி உயரத்திலும், மிக உயர்ந்த தளம் 1148 அடி உயரத்திலும் இருக்கிறது. இதற்கு மேல் ஆண்டெனா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓரியண்டல் பியர்ள் டவரினை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஷாங்காய் வேர்ல்ட் பைனான்சியல் சென்டர் என்கிற 1614அடி உயர கட்டிடத்தைப் பற்றி அறிந்து கொண்டோம். இந்தக் கட்டிடம் 1997ல் கட்டத்துவங்கி 2008ல் முடிக்கப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்ட போது உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடமாகவும், தற்சமயம் இது உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக இருக்கிறது.
ஷாங்காய் மாடர்ன் ஆர்கிடெக்சுரல் டிசைன் கம்பெனி லிமிடெட் என்கிற நிறுவனம் இந்த ஓரியண்டல் பியர்ள் டவர் கோபுரத்தை வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளி மற்றும் ஒலிபரப்புவதற்காக கட்டினார்கள். ஆனால் இந்தக் கோபுரத்தின் பின்னணி சுவாரஸ்யமானது என்று மைக்கேல் கூறினார். இந்த உயரமான கோபுரம் கட்டுவதற்கான பின்னணி ஒரு கவிதை என்று சொன்னால் நம்புவீர்களா என்று கேட்டான். எனக்கு சற்று ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. மேலும் அவன் சொன்னான், பிப்பா இசைக்கருவியை பற்றி ஏற்கனவே நீங்கள் கேட்டிருந்தீர்கள்.
அந்த இசைக்கருவியின் இசை ஒரு மரகதத் தட்டில் சிறியதும், பெரியதுமான முத்துக்களை சிதற விடுவது போன்ற ஒலியினை எழுப்புவது போல இருக்கும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 221ம் ஆண்டில் க்விங் வம்சத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட நான்கு தந்திகளை உடைய சீன இசைக்கருவி. ஏழாம் நூற்றாண்டில் இந்த இசைக்கருவி மிகவும் பிரபலம் அடைந்திருந்தது. அந்த காலகட்டத்தில் ஜ்யூஜியாங் மாகாணத்தில் பிறந்த பாய் ஜூயி என்கிற கவிஞர் பத்து வயதில் போர்க்காலத்தில் தன் வீட்டை விட்டு வெளியேறி ஜியாங்நான் பகுதியில் உள்ள ஹான்லிங் அகாடமியின் மெம்பராக பணியாற்றினார்.
இவர் கதைப்பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவராகவும், மனதின் துயரினை பதிவு செய்வதில் வல்லவராகவும் இருந்தார். இவர் தன் வாழ்நாளில் 2800 கவிதைகளை இயற்றியிருக்கிறார். டேங் வம்சத்தினர் காலத்தில் வாழ்ந்த இவர் அவர் வாழும் காலத்திலேயே சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் மிகச்சிறந்த கவிஞராக பாராட்டு பெற்றவர். இவரது காலம் கி.பி.772லிருந்து கி.பி.846வரை. ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு சேக்ஸ்பியர் போல இவர் இவரது காலத்திலேயே சீன மொழியில் மிகச் சிறந்த கவிஞராக மதிக்கப்பட்டார். ஜ்யூஜியாங் நகரின் அரசு உயர் அதிகாரியான பாய் ஜூயி பணியிறக்கம் செய்யப்பட்ட வேதனையில் தன் நண்பர்களோடு யாண்ட்ஸ் நதிக்கரையில் மது அருந்திக் கொண்டிருந்த போது கேட்ட இனிமையான இசைப்பாடல் இசைத்த பெண்ணுக்காக எழுதிய நீண்ட கவிதை பிப்பா பாடல்.
பிப்பா இசைக்கருவியின் மேதைகளான மியூ, கா ஆகியோரிடம் பதிமூன்று வயதிலேயே இசையை கற்றுத் தேர்ந்த ஒரு பெண் தன்னுடைய அழகு மற்றும் புகழை இழந்த பின்பு தேயிலை வியாபாரியை திருமணம் முடித்திருந்தாள். பழமையான சீனாவில் கவிதை எழுதுபவர்களும், கல்விமான்களும் மதிக்கப்படும் அளவிற்கு வியாபாரிகள் மதிக்கப்படுவதில்லை. எனவே அவள் தன்னுடைய தனிமைத்துயரை பிப்பா இசைக்கருவியின் இசை பாடல்கள் வழியாக கரைத்துக் கொண்டிருந்தாள். இந்த பிப்பா பாடல் அந்தப் பெண்ணின் திறமைக்காக எழுதப்பட்ட கவிதை. ஓரியண்டல் பியர்ல் டவர் என்கிற இந்த உயர்ந்த கோபுரம் பாய் ஜூயி என்கிற கவிஞர்க்கு சீன அரசு கொடுத்திருக்கும் கௌரவம்.
இசைக்கருவியின் கவிதை
- பாய் ஜூயி
ஒரு இலையுதிர்காலத்து இரவு
யாண்ட்ஸ் நதிக்கரையில்
படகிலிருந்த என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன்
கோப்பை எங்கள் கரங்களிலிருந்தது
நாங்கள் அருந்தினோம் கலக்கமுற்ற மனதுடன்
இசை எதுவும் அங்கிருக்கவில்லை
ஆனால் காய்ந்த மேபிள் இலைகளும்
நாணலின் கீற்றுக்களும் மேலும் சருகுகளும்
மென்காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன
நிலவொளி நனைந்திருந்த நதிப்பரப்பில்
படகிலிருந்த நண்பர்கள்
என்னைப் பிரிந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது
அருகாமை படகிலிருந்து
பிபா இசைக்கருவியின் இனிய கீதம்
காற்றில் மிதந்து வந்தது
என் நண்பர்கள் அகன்று செல்வதை மறந்து விட்டனர்
மேலும்
நான் எனது இருப்பினை மறந்தேன்
இப்படியான அதிசயத்தை நிகழ்த்தியவரை
நாங்கள் பார்த்தோம்
இசை நின்று விட்டது
எந்த ஒலியுமற்று நிசப்தமாகியது
எங்கள் படகினை நகர்த்தி
எங்கள் விருந்தினை பூர்த்தி செய்யவல்ல
இசைக்கலைஞனை
எங்களோடு அருந்துவதற்காக அழைக்க நெருங்கினோம்
எங்களால் முகம் காண இயலாத அந்த இசைக்கலைஞன்
நாங்கள் மேலும் வற்புறுத்த
விளக்கில் ஒளியில் பாதிமுகமும்
பிப்பாவின் பின் பாதிமுகமாய் தோன்றினாள்
இசைக்கருவியின் நாண்களைத் திருகி
ஒவ்வொரு இழைகளையும் சுருதியேற்றினாள்
இசைக்கும் முன்பே
அவளது இசை காற்றில் மிதந்து வந்தது
அவளது ஒவ்வொரு மீட்டலிலும்
அவளது வாழ்வின் துயரங்களும்
மனக்கசப்பும் ஊற்றெடுத்தது
புருவங்களைச் சுருக்கியபடி
மேலும் இசைத்தாள்
தன்னை
தன் இதயத்திலிருந்து இசைத்தாள்
தன் நீண்ட வாழ்க்கைப் பயணத்தை இசைத்தாள்
இப்போது
மென்மையாக இசைத்தாள்
பின்
துரிதமாக இசைத்தாள்
மேலும் வேகமாக்கினாள் தன்னை
எதிர்பாராத வேளையின் பெரும் மழைச்சப்தமென
எங்கும் பரவியது இசை
காதலர்களின் இரகசிய மொழியென
மென்மையாய் ரீங்கரித்தாள்
சளசளக்கும் பேச்சின்
பெரும் ஓசையினை இசைத்தாள்
சிறிதும் பெரிதுமான முத்துக்கள்
மரகதத் தட்டில்
சிதறித் தெறிக்கும் ஒலியினை இசைத்தாள்
மணம் மிகுந்த பூக்களில் பாடுகின்ற
ஒளிமிகுந்த ஓரியோல் பறவையின்
இனிய இசையினை இசைத்தாள்
மேலும்
விம்மினாள் சோககீதத்தில்
கண்களின் நீர் வழிந்து கொண்டேயிருந்தது
மெல்ல நகர்ந்து செல்லும்
பனிக்கட்டியாய் அதிர்ந்து அடங்கினாள்
இசை முடிந்து விட்டது
தண்ணீரும் நின்று விட்டது
எங்கும் நிசப்தம்
இசைக்குப் பின்பான மௌனம்
ஆழமாய் வசப்படுத்தியது
என் இதயத்தை
சப்தத்தை விட அதிகமாய் உணர்த்திய
மந்திர கணம்
அந்த மௌனம்
ஓசையுடன்
தவறிவிழுந்த பூச்சாடியிலிருந்து
சிதறிய தண்ணீரின் சப்தம்
அல்லது
நிறைந்த கூரிய இலைகளால் ஆன மரங்கள்
அடர்ந்த வனத்தினை
ஊடுருவிச் செல்லும் குதிரையோட்டி
எழுப்புகின்ற சப்தமென
மனதின் துயரம்
உடைந்து சிதறியது எதிர்பாராமல்
ஒரு சமயத்தில்
நான்கு கம்பிகளையும் இசைத்ததில்
மிகைப்பட்ட இசையும் முடிந்தது
பட்டு துணியாலான உறை உரிந்தது
நாண்களை இசைக்கும் மீட்டினை ஓயவிட்டாள்
பிறகு
உறைந்து போல்
அனைத்தும் முடிவுக்கு வந்தன
சாந்தமும்
அமைந்தடங்கிய வெற்றியும்
படகின் தொலைவிலும்
படகின் அருகாமையிலும் படர்ந்திருந்தது
இலையுதிர்காலத்து நிலவு மட்டிலும்
ஆற்றின் பரப்பில் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது
இசைக்கருவியையும்
கம்பிகளையும் மற்றும் மீட்டினையும்
சேகரித்து வைத்தாள் துயரம் நிரம்பியவளாய்
நேர்த்தியும் கம்பீரமுமான அவள்
பின்பு
கௌரவத்துடன்
சொல்லிக் கொண்டாள்
ஸியாமோலிங்
தலைநகரில் பிறந்து வளர்ந்த அவள்
பதிமூன்றாம் பிராயத்தில்
பிப்பா இசையில் தேர்ந்து
இசைக்கருவியில் மேதமை மிகுந்திருந்தாள்
அவளது குரு ஷாங்காயினைப் போல தேர்ந்திருந்தாள்
நகரின் ஓப்பானவர்களுக்கிடையே முதன்மையாய் இருந்தாள்
அனைத்து அழகிய இளம் பெண்களும்
இவளின் அழகில் பொறாமை கொண்டிருந்தனர்
இவளின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அனைவரும் பாராட்டினர்
இவளின் ஒவ்வொரு பாடலின் முடிவும் எதிர்பாராத
எண்ணற்ற பரிசுகளினால் திணறியது
நாளெல்லாம் இசையில் கரைந்தது
அவள் மயங்கிச் சரியும் வரை ஆடினாள் தன்னை மறந்து
மது சிதறியது
ஆடைகள் கரைபடிந்தன
எதிராளர்; தொய்வடைந்தனர்
நாட்கள் நகர்ந்தன
மகிழ்வினை ஏந்திக் கொண்டு
பின்பு
மேலும்
கடந்தன பல நாட்கள் மற்றும் ஆண்டுகள்
பின்பு
மெல்ல நழுவிச் சென்றன
அவளின் இனிய தருணங்கள்
மேலும்
காலம் அவளின் அழகினை கரைக்க
அவளின் சகோதரன் ராணுவத்தில் சேர
அத்தையும் இறந்து விட
உறவுகள் விலகிச் செல்ல
ஆதரிப்பவர் இன்றி
அவளைத்தேடி வருகின்றவர்களின்
பயணங்கள் குறைந்து
பின்
தேய்ந்து மறைந்தது
அவள்
தளர்வுற்ற நிலையில்
தேயிலை விற்பவனைத் திருமணம் செய்து கொண்டாள்
அவனுக்கோ
கவனம் பணத்தில் இருந்தது
ஃபுல்லான் நகரில் தேயிலை வாங்குவதற்கு
தன் காலத்தை செலவிட்டுக் கொண்டிருந்தான்
அவன்
ஒருபோதும் இவளின் தனிமைக்கு வருந்துவதில்லை
அவளோ படகின் கூடாரத்தில் தனித்திருந்தாள்
துணையேதுமில்லை
குளிர்ந்த நீரும் நிலவும் தவிர
பழமையின் கனவுகளிலிருந்து
இப்போது
ஒளியின் ஆழத்திலிருந்து
கண்ணீர் நிரம்பிய முகத்திலிருந்து
திரும்பியிருந்தாள்
அவளின் இசையினால் வாதை நிரம்பியிருந்தது
இப்போது
அவளின் கதையினால்
நான் மேலும் வாதை மிகுந்திருந்தேன்
நாங்கள் புதியவர்கள்
அறிமுகமற்றவர்கள்
ஆனால் சிந்தனையில் ஒன்றுபட்டோம்
நாங்கள் புரிந்து கொண்டோம் ஒருவர் மற்றவரை
ஒரு ஆண்டுக்கு முன்பு
ஜ்யூஜியாங் நகரிலிருந்து தலைமறைவானேன்
அப்போது
எனது கவலை வளர்ந்தது
நகரம் எனக்கு தொலைவாயிருந்தது
இசை அங்கு இல்லை
புல்லாங்குழல் இல்லை
பிப்பா இல்லை இந்த காலங்களில்
இப்போது அருகாமை நகர் பென்சாங்கில் வாழ்கிறேன்
நாணலும் மூங்கிலும் அடர்ந்த ஈரநிலத்தில்
குயிலின் சோக கீதமும்
மந்திகளின் அழுகை குரலும் என்றிருக்கும்
நான்
பகலும் அதன்பின் தொடரும் இரவும்
எதை கேட்பது
மூச்சடைத்துப் போகிறேன்
ஒரு வசந்த கால நதிக்கரையில் அல்லது
இலையுதிர்கால நிலவொளியில்
நான்
தனியே அமர்ந்து
மது அருந்திக் கொண்டிருப்பது வழக்கமாகியது
ஆம்
அங்கே கிராமியபாடல்கள் இருந்தது
கிராமத்தின் புல்லாங்குழலிருந்தது
இருப்பினும்
அந்தக்கலைகள் பண்படாமலிருந்தன
அவை எனக்கு இனிமையாயிருக்கவில்லை
இந்த இரவில்
தேவகீதமாய் என்னுள்
உனது பிப்பா இசை ஒளிர்ந்தது
நீ
மேலும் சிறிது இசையை எனக்காக இசைத்தால்
நான்
உனக்கான பாடலை எழுதுகிறேன்
அவளின் நீண்ட கணம் அமைதியாய்;
என் வார்த்தைகளில் உறைந்திருந்தது
இசைக்கருவியின் கம்பிகளின் சுருதியேற்றினாள்
இசையின் வேறு வழிமுறையில் இசைத்தாள்
இதயத்து உணர்வை
அதன்
துயரத்தை இசைத்தாள்
கண்ணீர் தளும்பியது
துயரங்கள் நிரம்பிய
பழைய கசந்த நினைவுகள் அனைத்தும்
ஒரு கணத்தில்
கண்களின் நீர்துளிகளில் கரைந்தன
ஜ்யூஜியாங்க் நகரின் ஒரு உயர் அதிகாரியின்
நீலநிற ஆடைகளும் நனைந்தன.
சீன தேசத்தின் நண்பர்களும், கதைகளும், வரலாறும், வளர்ச்சியும் வழியனுப்ப இந்தியாவை நோக்கி புறப்பட்டோம்.
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு அனுபவத்தையும், வேறு வேறு பயன்களையும் கொடுக்கும். இரும்புத் திரை நாடு மற்றும் கம்யூனிச நாடு என்று சொல்வதை விட தொன்மங்களின் சீனா என்று சொல்வதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
கலாச்சார சுற்றுப்பயணமான இந்த சீனப்பயணம் சீனாவின் தொன்மத்திற்குள்ளும் சீனர்களது நாகரீக வளர்ச்சிக்குள்ளும் என்னை பயணப்படவைத்திருந்தது. என்னுடைய கிராமத்திலிருந்து சீனாவை வரைபடங்களிலும், தொலைக்காட்சிகளிலும், புகைப்படங்களிலும் பார்த்து ரசித்த நாட்களும் உயிரோட்டமான சீனாவுடன் கலந்து உறவாடிய நாட்களும் எனக்குள் புதைந்து கிடக்கிறது. மொழி, இனம், கலாச்சாரம், அரசியல் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு சரித்திர தேசத்தை ஸ்பரிசித்த உணர்வு இன்றளவும் மேலோங்கியிருக்கிறது. சீனக் கலாச்சாரத்தின் கதைகளும், கவிதைகளும் என்னுடன் கூடவே பயணம் செய்து தொன்மங்களும், கதைகளும், சரித்திரமும் நிறைந்த இந்திய தேசத்திற்குள் கரைந்து விட்டதாக தோன்றுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து நண்பர்களும் கிடைத்திருப்பதில் உண்மையான ஒரு கலாச்சார சுற்றுப்பயணத்தை நிறைவு செய்திருப்பதாக உணர்கிறேன்.
சீனப் பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பு இந்தப் பயணத்தொடரை எழுதுவதற்கு என்னை நேரிலும், தொலைபேசியிலும் மற்றும் தமிழ்ஸ்டுடியோ.காமின் கருத்துப் பதிவு வழியாகவும் பாராட்டி ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தமிழ்ஸ்டுடியோ.காமிற்கு நன்றியும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்களும்.
--சக்தி ஜோதி
கருத்துப் பதிவு மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், இந்த சீனப் பயணக் கட்டுரைக்கு ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும், இந்தப் பகுதியை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்த சக்தி ஜோதி அவர்களுக்கும், தமிழ் ஸ்டுடியோவின் மானமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சக்தி ஜோதி அவர்களை அறிமுகம் செய்த திரு நீலகண்டன் அவர்களுக்கும், தமிழ் ஸ்டுடியோவின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
|