திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார்.
திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.
"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர்.
யாவரும் கேளிர்
யாவரும் கேளிர் ஆசிரியர் பற்றி
------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
கோபம் வந்த “கொளந்தசாமி காசு பிரிக்க வேண்டாம் போனா மயிராச்சு, வந்தா லாபம் .நீயா நானான்னு பாத்திடுவோம்” என சொல்ல ஆரான் குறுக்கே புகுந்து சீட்டுக்கட்டை களைத்து இருவருக்கும் பிரித்துப் போட்டான். இருவரும் சீட்டுக்களை எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்க ஆரான் சொன்னமாதிரி ஒப்பன் டிக்ளர். நரசிம்மன் செயிச்சிட்டான். தோத்துப்போன கொளந்தசாமி கோபமாக இருக்க “ம்... ஒப்பன் டிக்ளர்ன்னு அப்பவே சொன்னோம்ல கேட்டாதானே” என தூண்டிவிட்ட ஆரானை கடும்கோபத்துடன் கொளந்தசாமி எட்டி உதைக்க அத தடுக்க போன நரசிம்மனையும் உதைக்க கலவரம் பெருசானது.
தீபாவளிக்கு வாங்குன ஆட்டுகறிய மதிய உணவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊர்மக்கள் பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து சண்டை நடக்கும் இடம் நோக்கி செல்கிறார்கள்.ஒருவீட்டின் தாழ்வார முற்றத்தில் மாட்டியிருந்த வேல்கம்பை உருவிய நரசிம்மன், வேல்கம்பால் கொளந்தசாமியின் வயிற்றில் குத்த, வயிறு கிழிந்து குடல்சரிந்து வெளியே வந்துவிட்டது. தனது குடல்சரிந்து கீழே விழுவதை பார்த்த கொளந்தசாமி கண்ணிமைக்கும் நேரத்தில், தன் இடுப்புவேட்டியை அவிழ்த்து, சரிந்தகுடலை உள்ளே தள்ளி வேட்டித்துணியால் இறுக்கிக்கட்டிக்கொள்ளும்போது வெள்ளை வேட்டி சிவப்பாக மாறி அவனின் கம்யூனிசம் வெளிப்பட வெறிநாய்போல சுற்றும் முற்றும் பார்க்க, அதைக்கண்டு பயந்த நரசிம்மன் வேல்கம்பை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஒட்டம் பிடிக்க, வீடும் கடையும் ஒன்றாக வைத்திருக்கும் தனுக்கொடி வீட்டின் முற்றத்தில் மாட்டியிருக்கும் அருவாளை (கிராமங்களில் கொடிய ஆயுதங்களை வீட்டின் முற்றத்தில் வைத்திருப்பது வழக்கம்) எடுத்து கொளந்தசாமி நரசிம்மனை துரத்த, அதைக்கண்ட வேலாயி இரண்டு கொலை விழப்போவுதுன்னு ஓலமிட்டு மூச்சிறைக்க ஒட, அவளின் சத்தம்கேட்டு கயித்துக்கட்டிலில் படுத்திருந்த கண்ணுதெரியாத தாத்தா கட்டிலைவிட்டு எழுந்து வேகமாக அவரின் துணைவன் காந்திதாத்தா கம்புவை தேட அருகிலிருந்த கருங்கல் தடுக்கி கீழே “அய்யோ அம்மா...மா என்ற அலறல் சத்தத்துடன் விழுந்தவர் எழவே இல்லை. அவரின் கால்மூட்டு உடைந்து பலநேரங்களில் நகரத்தில் சாலையில் குறுக்கே செல்லும் நாயை இருசக்கர வாகனம் மோதி துடிக்கும் நாயைப்போல் துடித்துக்கொண்டுருக்க, நரசிம்மனை துரத்திக்கொண்டு போன கொளந்தசாமியும் தன்னை வேல்கம்பால் குத்துன நரசிம்மனின் ஒருகையை வெட்டிவிட்டான். கொளந்தசாமிக்கும் வயிற்றில் அதிக ரத்தம் வெளியேறி மயங்கி கீழே விழ, வெட்டுப்பட்ட நரசிம்மனும் மயங்கி கீழேசாய அதற்குள் கொளந்தசாமியின் மனைவியும் நரசிம்மனின் தங்கையுமான நல்லமுத்துவின் ஒலத்தால் அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டுருந்த ஊர்மக்கள் கூடி இருவரையும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர்.
ஆரான் தனுக்கொடியிடம், “ஒண்ணுமில்லண்ணே நரசிம்மனுக்கு ஒரு கைபோச்சு, கொளந்தசாமிக்கு தண்ணி எரைக்கிற சாலு மாதிரில்ல வயிறு அதான் கீழே விழுந்திருச்சி அவ்வளவுதாண்ணே” என சொல்ல தனுக்கொடி” வெட்டுனது யாரு அருவா என் அருவால்ல ... நேத்துதான் கருங்கல் தூள தூவி அதுல கொஞ்சம் அரளியையும் தேச்சு வச்சேன். பளபளன்னு மின்னுச்சு... ஒரே போடு கை கச்சிதமா கீழே விழுந்திருச்சில்ல...இனிமே கைசேருரது கஷ்டம்ந்தே ஆரான் கீழ கொடவிழலயே அதுக்குள்ள புடிச்சுட்டானே.
தொடரும்...
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.