யாவரும் கேளிர் - 50
சாமிஅய்யா செல்லாவை நோக்கி நடந்தான் “அய்யா... நம்ம மச்சக்காளை எங்க?” என்றான் செல்லா. சாமிஅய்யா தன்கையில் வைத்திருந்த தப்பை செல்லாவிடம் கொடுத்தான். அதை வாங்க கை நீட்டினான், செல்லா மீண்டும் மச்சக்காளையப்பற்றி கேட்க வாய்திறந்தபோது, சாமிஅய்யா கையில் உள்ள தப்பிலிருந்த மச்சத்தைப் பார்க்கிறான். அப்போது அவனையும் அறியாமல் அவன் மனதுள் ஒர் அதிர்வு ஏற்படுகிறது. அந்த அதிர்வு அடி மனச மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த நாடிநரம்புகளிலும் மின்சாரம் தாக்கியவனாய், “அய்யா நம்ம மச்சக்காள...?” என அவன் வாய்வழியா வந்த சொற்கள் வாழைத்தண்டாய் வழுக்கி தொண்டைக்குழியில் இறங்கியது. அதை சாமிஅய்யாவும் உணர்ந்தார். இருந்தாலும் வருத்தங்களை உள்மனசில் புதைத்துக்கொண்டு “இது நம்ம மச்சக்காள தோலுல செஞ்ச தப்புதான்” என்று சொன்னபோது மடையை உடைத்துக்கொண்டு வெளியேறும் வெள்ளம் ஜல்லிக்கட்டு காளையைப்போல ஒடுமே அதுமாதிரி அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
சாமிஅய்யா நீட்டிய தப்பிலிருந்த மச்சத்தில் கைவைக்கப்போன செல்லாவின் நினைவுகள் மச்சக்காளைமீது அவன் சவாரிசெய்ய வந்தபோது அதன் மச்சத்தை தொடமுயன்று அவன் சப்பாத்திக்கல்லின்மீது தூக்கி எறியப்பட்டது, பின்பு நினைவு திரும்பியபோது பயத்தால் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது பின்னோக்கிய எண்ணங்கள்ஆழ்ந்து மனதை வாட்டியது. அதைக்கண்ட சாமிஅய்யா “என்னப்பா பண்றது மனுசனுக்கு குடுத்த வயச மாட்டுக்கு குடுக்க கடவுள் மறந்துட்டானே. மனுசங்களவிட அதிகமா உழைக்கிறது மாடுங்கதான்... பலமடங்கு பலமும், பயனும் நம்மலவிட அதுங்ககிட்டதான் இருக்கு. அதனாலதான் என்னவோ மாட்டுக்கு மனுசனவிட ஆயுச குறைவா வச்சு படைச்சுட்டான்” என்றபோது சாரதாவின் சாவுக்கு தப்பு அடித்தவர்கள் அங்கேவர அவர்களுக்கு கூலியாக சாமிஅய்யா 500ரூபாய் கொடுக்கிறார். அதில் 200 ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டு இது போதுமென “காலைல தப்பு அடிச்ச வலியபோக்க நங்க நாலுபேரும் ஆளுக்கு ரெண்டு கிளாஸ் பச்சத்தண்ணி கலக்காம சாரயம்அடிச்சா வலியெல்லாம் பஞ்சா பறந்துடும்...” என்று கூறி “நம்ம ஊர்ல நெல்லு எடுப்பாரே வெளங்கொண்டாரு அவருக்கு இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கெடக்குது, அவர தூக்கி மாட்டுக்கொட்டாயில போட்டு வச்சிருக்காங்க... உசுரு தொண்டக்குழியபுடிச்சுக்குட்டு இருக்கு எந்த நிமிஷத்திலயும் நடக்கலாம். அப்ப எனக்கு தப்பு வேணும். அதுக்கு உங்களுக்கு கொடுக்கவேண்டிய முன்னூறு ரூபாய முன்பணமா வச்சுக்குங்க...” என்று சொல்லிவிட்டு வெளியேறினார். அதைக்கேட்ட செல்லாவின் உணர்வுகள் அனைத்தும் வெட்கிப்போனது. தான் செத்தும் தந்தோலால் தன் முதலாளிய காப்பாத்துறதே என்று.
“சாமிஅய்யாவை கெளம்புங்க” என்ற செல்லாவின் வார்த்தைகள் அங்கு நிலவிய ஒருகண மெளனத்தைக் கலைத்தது
“எங்கப்பா?” என சாமிஅய்யா கேட்க
“எங்கூட...” ன்னான்,
பதிலேதும் சொல்லாமல் சாமிஅய்யா இருக்க
“ஏம்பா இனிமே இங்க இருந்து நீங்க கஷ்டப்படுறதவிட எங்கூடவந்து சந்தோஷமா இருக்கலாமே”
“இல்லப்பா நான் இங்கேயே இருக்கிறேன்”
“ஏன் எங்கூட வரக்கூடாதா?”
“அது இல்லப்பா நான் மட்டும் இந்த மண்ண விட்டுவந்து சந்தோஷமாவா இருப்பேன்?, கண்ணு தெரியாம இருந்தும், அண்டர்வேர்குள்ளயே கையாலயே கரக்டா பணத்த எண்ணிக்கொடுக்கும் கணக்குப்புள்ளயும் இந்த ஊர்லதான் செத்தாரு...
ஊருக்குள்ள யார் கதிரு அறுத்தாலும் மொதல்வாய் சாப்புடுற வேலாயிம் இந்த ஊர்லதான் செத்துப்போச்சு...
வீட்டுக்கு யாரு வந்தாலும் வயிறு நெறைய சோறுபோட்டு அனுப்பும் விஜயத்தேவரும் இந்த ஊருலதான் செத்தாரு...
ஆத்துல தண்னிவல்ல, மழைக்காலம்மாறிப்போச்சு, வெயில்காலம் வாட்டி எடுக்குது,
ஊருல அவனவனும் பாட்டன், முப்பாட்டன், வளர்த்து வச்சுட்டுபோண மரமட்டையவித்து வயித்த கழுவிக்கிட்டு இருக்காணுங்க...
ஊருல ஆடுமாடுங்க அடியோடு அத்துப்போச்சி, மாட்டுப்பொங்கல் வைக்ககூட ஒரு மாட்ட காணோம், கன்றும் பசுவும் கட்டிக்கெடந்த கட்டுத்தறியில அதுங்ககால்தடங்க அழிஞ்சு,கவர்மெண்ட் எலவசமா குடுத்த கலர்டிவிய வச்சிருக்கானுங்க...
ஏர், கலப்பை, ஏத்தம், உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல், திருவைன்னு எங்க போச்சினே தெரியல...
கம்பு, கேப்பை, தினை, வரகு, சாமை, சோளம்ன்னு இருந்ததா ஞாபகமாச்சு, நெல்லு நெல்லுன்னு ஒண்ணுமட்டும்தான் இன்னும் உசுரப்புடிச்கிட்டு இருக்குது...
காக்கா குருவிங்க கூடுகட்டக்கூட கருவேல மரத்தக்காணோம்...
தந்திக்கம்பங்களிலாவது கூடுகள கட்டியிருந்த தூக்கணாங்குருவிகளும் செல்போன் அலைதாக்கி மூளவெடிச்சி செத்துப்போச்சாம்.
அட உறவுக்கும் ஒத்துமைக்கும் உதாரணமா சொன்ன மணிகாக்கைகள் அத்துப்போச்சுன்னு கணக்கெடுப்பு சொல்லுதாம்...
கான்சரும், மாரடைப்பும் 35 வயசுக்குள்ளேயே வந்து செத்துப்போறாங்க நம்ம ஊர்ல கடந்த ஒருவருஷத்தில செத்தவங்கள நிறையபேர் கேன்சர் வந்துதான் செத்துப்போயிருக்காங்க...
என்னோட பத்துபேர் பொறந்தாங்க, உன்வயசுப்பசங்களுக்கு எல்லாம் நூத்துல பத்துப்பேருக்குதான் கொழந்த பொறக்குது, மத்ததெல்லாம் மலடாய்போவுது...
மழையே இல்லாமபோச்சி, அதுக்கு ஒரு மார்க்கம் இல்ல,
‘வங்கத்தில் ஒடிவரும் நீரின்மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”ன்னு பாடிவச்சுட்டு செத்துப்போனான் பாரதி.
காவேரி, கோதாவரி, கங்கை, பிரமபுத்திராவால் இன்னோர் இந்தியாவுக்கு தண்ணிய தாராளமா குடுக்கலாம்...இதுயெல்லாம் இப்ப வத்திகிட்டுஇருக்கு,
இது எல்லோருக்கும் தெரிஞ்சும் யாருமே கேக்க நாதியில்ல...
விவசாயம் அழிஞ்சுகிட்டே வருது
அரிசின்னு ஒண்ணு அத்துப்போயிடிச்சின்னா கரண்சியையும், கம்யூட்டரையும், கடிச்சி தின்னவா முடியும்?...
ஆடுமாடுங்க செத்துகிட்டு இருக்குது அதுக்கு எந்தவிடையுமில்ல...
மரங்கள அழிக்கிறாங்க, கிராமத்தை மாத்தறேன்னு மச்சுவீடு கட்டறாங்க. அழகழகான கிராமத்து மன்பாதைகளெல்லாம் அனல்கக்கும் தாரிச்சாலைகளாய்ப் மாறிப்போச்சு... சலங்கைச் சத்தம் கேட்கும் மாட்டுவண்டிகள் அருங்காட்சிகளிலாவது இடம்பெறுமா?
எப்பவாவது பெய்யும் மழைநீரும் வடிகாலாபோயி கடல்ல கலந்து உப்பாபோயி யாருக்கும் ஒதவாம போவுது...
ஊருணிகளையும், குளத்தையும் துத்து மீன்கணக்கா கூறுபோட்டு புறாக்கூடுகளாய் அடுக்ககங்களைக்கட்டி வெலைக்கு வித்துக்கிட்டு இருக்கானுங்க...
நம்ம பாட்டணும் பாட்டியும் வாழ்ந்த கூரைகள் எங்கே?”...
மயில், மாடப்புறா, மைனா, கிளி, மரங்கொத்தி, பாம்பு, குறுநரி எல்லாமே தொலைஞ்சுபோச்சு
கழுதை, குதிரை, மாடுஆடு இவைங்கல தொரத்திப்புட்டு வேம்பு, கருவேல், புளியமரம், மஞ்சனத்தி, வாகையேன அத்தனையும் வெட்டிப்புட்டு மச்சுவீடுகட்டி இந்த மனுஷ ஜென்மம் என்ன செய்யப்போவுதுடா?... உன்வயசு முடியறதுக்குள்ள நீ வேணம்னா பார், கொலையும் கொள்ளையும், பவுனுக்கும், பணத்துக்கும், இருக்காது? குடிக்கிற தண்ணீருக்குத்தான் இருக்கும்...
பச்சத்தண்ணிய பாட்டலில் அடைச்சி மனுசன் என்னைக்கு வித்தானோ அன்னைக்கே அழிவின் பிரளயம் ஆரம்பிசிடுச்சி...
உலகம் விஞ்ஞானத்துல எங்கயோ போயிடுச்சி, நிலாவுல போய்கூட சாப்பிடலாம்ன்னு சொல்லுறாங்க.
அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்துன்னு அயல்நாடுகளுக்கு படிக்கப்போற நாம் இனி நாளைக்கு புதன் செவ்வாய்ன்னு புறப்பட்டுப்போற காலமும் வரும்... இன்னுமொரு சூரியனும் இருக்குன்னு சொல்லுறாங்க மற்ற கிரகத்திலிருந்து மனுசங்க வந்துட்டுப் போறாங்களாம். அவங்களப்பாத்தாக்கூட நம்ம ஆளுங்க அழிச்சிப்புடுவானுங்க...
ஏன்னா நாம அண்டைவீட்டுக்காரங்கிட்டேயே அன்பா இருக்க மறந்திட்டோமே...
அடப்போப்பா எந்த விஞ்ஞானம் வளர்ந்து என்ன செய்யப்போவுது?
காடுகளும், தோப்புகளும், ஏரிகளும், குளங்களும் அழிஞ்சி, ஆடிக்காத்தும், கார்த்திகை பேய்மழையும் மாறியாச்சு...
விவசாயமும் இன்னும் கொஞ்சநாள்ல அழிஞ்சிப்போயிடும் இனி எந்த விஞ்ஞானமும் கிராமங்கள காப்பாத்தாது, கிராமம் என்ற உன்னதமான சொல் மாறதுக்குள்ள மறையறதுக்குள்ள நானும் ஒரு கிராமவாசியா இந்த ஊருல இருந்திட்டு. இதோ இந்த தப்பு கிழியும்போது என் உசிரும் போயிடும். அதுவர நான் பொறந்த இந்த கிராமத்திலேயே இருந்துட்டுபோறேன் என்னை வுட்டுடு”
என்றபோது சாமிஅய்யாவைவிட்டுவிட்டு செல்லா கனத்த மனதோடு தன்கிராமத்தைவிட்டு தொலைதூரம் சென்றுவிட்டான்.
“மாடாய் பிறந்த மச்சக்காளை இறந்தபின்னும் தந்தோலால் ஆன தப்பால் தன் எஜமானனைக் காப்பத்துது. ஆனால் மனுசனாய் பொறந்த இந்த மனிதனுக்கு நன்றி இல்லையே... மாட்டுக்குள் எவ்வளவு பெரிய மனிதநேயத்தை இறைவன் படைத்திருக்கிறான். ” என தலையில் அடித்துக்கொண்டே. அவன் பேயென கறுத்து நீளும் தார்ச்சாலையில் நடப்பதை தவிர்த்து, இந்த வயக்காடுகளெல்லாம் சிமெண்ட் ரோடுகளாய் மாறிப்போவதற்குள் ஒருதடவையாவது தனதுகால்கள் உசுரும் சேறும் கலந்த இந்த வயக்காடுகளின் வரப்புகளில் நடந்து திரிந்திட வேண்டுமென எண்ணி தன்மனசுக்கு தோன்றிய திசையெல்லாம் நடந்து செல்கிறான். மழைபொய்த்து நீர்வற்றி காய்ந்து கிடந்த அந்த வெடிப்பு நிலங்களெல்லாம் தன்கால்களை குத்திக்கிழித்து ரணப்படுத்தினாலும், அந்த ரணங்களை தொட்டு மகிழ்ந்த சுகத்தோடு, தன் மச்சக்காளை மேய்ந்த வயல்வரப்புகளில் நடந்தான். சூரியன் நெருப்பாய் சுட்டெரித்தன. அவன் உடல்முழுதும் வியர்வையால் நனைந்துபோனது. உடல் மெல்ல நடுங்கியது. ஒருமுறை கிராமத்தை திரும்பிப் பார்த்தான். அங்கே நிழல்தரும் மரங்களின்றி, நீர் நிலைகள் இன்றி அடுக்குமாடி கட்டிடங்கள் மட்டுமே தென்பட்டது.அனல் காற்றுமட்டும் குறையின்றி வீசியது பாலைவனமாய். அன்னாந்து பார்த்தான் சுட்டெரிக்கும் சூரியன்மட்டும் அங்கே மீண்டும் அவனது உடல் நடுங்கியது. இப்போது பலம் கொண்டமட்டும் வாய்விட்டு கதறினான் யாராவது காப்பாத்துங்க..ளே,,,ளே, என்று கத்திக்கொண்டே தன் கண்கள் இருள அம்மண்ணில் சரிந்தான்..
இனி இத்தொடர் தொடராது,!
இதுவே முடிவுமல்ல.?
சா.இரவிவர்மன்
தொடரும்...
|