யாவரும் கேளிர் - 32
அப்பாவிடம் தொலைப்பேசியில் தொடர்பும் கொண்டு, சலீமுக்கு நன்றி கூறி, இரு வாரத்தில் அமெரிக்காவில் நிலையில்லா வாழ்க்கையாகி, வேலைக்கு சென்று அப்பாவின் கனவு பலித்து அம்மாவின் ஆசையை நிஜமாக்க ஜாதகம் பார்க்க தொடங்கி,மகனுக்கு மனைவி தேடும் செய்தியும் செல்லப்பாவின் காதில் கேட்க. அவனின் கனவு வெறும் கனவாகவே? வேலை கிடைத்தாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வருமானம் இல்லை என்பது ஊர்ஜிதம் ஆகியும், அவனின் கொஞ்சம் மகிழ்ச்சி வேலையாவது கிடைத்தனவே என்று.24 மணி நேரமும் இந்தியன் வேலை செய்தாலும் அமெரிக்கர்களின் அரை நாள் ஊதியம்கூட கிடைப்பது அறிதே. மிகப்பெரிய அறிவாளியா இருந்தாலும் சரி, உயர் பதவிகளை அவர்கள் இறுக்க பற்றிக் கொண்டு, கிரீன் கார்டு விதிமுறைகளை கடினமாக்கி, சிகப்பு இந்தியர்களின் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்களிடம் செல்லப்பா நிஜமில்லா எதிர்காலத்தை பற்றி பலமாக யோசித்தான். அவனை அடிக்கடி நினைவு தவற வைத்த நான்கு அறை தள்ளியுள்ள அரிதாவின் நினைப்பில் நிதானித்துவிட்டான்.
கூட சந்தோஷமும் தொற்றிக் கொண்டது அரிதாவை காணும்போது எல்லாம். அவன் ஒரே ஒருமுறை மட்டும் அவன் அவளை பார்த்து ஒதுங்குவது போல் நடித்த போது அவள் நகைத்தாள். அது நாள் முதல் அவளை கடக்கும் நாழிகை முன்பு வரை முடிவில்லா தொடராக சிலாகித்து சிரிப்பாய் சிரிக்க சிலேடையாக தொடங்கி சிதறிய மழைகளின் ஒசைபோல், அவளின் நினைவால் தொலைந்து போன இரவை தேடி, பல பொழுதுகளின் மழலையானதும் உண்டு. அவளை காணும்போது எல்லாம் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை இழந்து குறுகிய பார்வையால் குன்றிப்போனது உடல். அவன் அன்னைக்கு கடிதம் எழுத தொடங்கியவன், காதல் கருவுற்றதால் அன்னைக்கு சொல்ல வேண்டிய சேதி பல தேதிகள் கடந்து சொல்லை மறந்து வெள்ளைத்தால் வெறுமனமே ஏதாவது என் மீது எழுதித் தொலையே என்று அவனிடம் கரிசனம் காட்ட அவனுக்கு வீசும் காமக்காற்றால் காகிதம் கொண்டது அவன்மீது காதல். அதிகாலை நேரம் அவளை எண்ணி அவன் மயங்கும் பொழுது அபி அவனருகே வந்தான்.
இன்னைக்கு வேலைக்கு போகவில்லையா? இல்லை... ஏன்?. வேலைக்கு சேர்ந்து பத்துநாளாச்சு நேத்துதான் அப்பாகிட்ட பேசுனேன். அம்மாகிட்ட பேசமுடியல, ஏன்னா எங்க வீட்டுல இன்னும் யாரும் செல்போன் யூஸ் பண்ணல. எங்க பக்கத்து வீட்டு போன்லதான் எங்க அப்பாகிட்ட பேசுனேன். அம்மா எங்க வீட்ட தவிர பக்கத்து வீட்டக்கூட எட்டிப்பாக்கமாட்டாங்க. நான் எப்பவுமே அவுங்களுக்கு கடிதம் அனுப்புறது தான் வழக்கம். ஒருமுறை தன் கையில் கிடைத்த கடிதத்தை பல முறை பலபேர்கிட்ட கொடுத்து படிக்க சொல்லி கேட்கும்னு என்னோட அப்பா சொன்னாரு. அதான் இன்னைக்கு லீவு போட்டு இருக்கேன், என் அம்மாவுக்கு நிறைய எழுதணும்னு பேப்பர் பேனா எடுத்தா எல்லாம் மறந்து போகுது.
ஏன்,
உங்களுக்கு தெரியாதா?,
அந்த அளவுக்கு காதலா...?
இல்ல... பைத்தியமா இருக்கு.
இதுக்கு பேர் இச்சை.
ஏதோ ஒன்னு எனக்கு அவ வேணும்.
ஒங்க அம்மா அப்பாவோட கனவு, ஆசை...? எல்லாம் வெறும் கனவா?.
இல்லையே. அத நிறைவேத்த தான் இங்க வந்து இருக்கேன்.
அபி சிரித்துக்கொண்டே ஒனக்கு என்ன பைத்தியமா?
ஆமா... அவமேல,
சரி இதயெல்லாம் அப்புறமா வைச்சுக்க முதல்ல சம்பாதி, பிறகு உங்க அம்மா அப்பாவை சந்தோஷப்படுத்து. பின்ன உன் காதல் நாடகத்த நடத்து.
அடப்போங்க சார், உலகம் பொருளாதார ரீதீயா பின்னோக்கி போகும்போது இனிமே நான் என்னத்த சம்பாதிச்சு எப்ப முன்னேருரது. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்.
என்ன முடிவு?
ரகசியம்,
எங்கிட்ட சொல்லேன்,
ரகசியம் என்பது மூணுபேருக்கு தெரிஞ்சு அதுல ரெண்டுபேரு செத்து ஒருத்தர் மட்டுமிருந்தா ரகசியம்,
ரொம்ப செல்பிஷா இருக்கியே,
ஆமாம் உலகத்துல இருக்கிற எல்லா பணக்காரனும் சுயநலவாதியாதான் இருக்காங்க, அவங்கயெல்லாம் ஒரு இடத்த அடஞ்ச பிறகுதான் ரகசியத்த உடைக்கிறாங்க,எங்க அம்மாவோட ஆசை எனக்கு நல்ல பொண்ணு கிடைக்கணும். அவன் மனசாட்சி, அரிதாவவிட நல்லபொண்ணு நிச்சயமா எனக்கு கிடைக்க போறது இல்லை. அப்பாவோட கனவு நான் நெறைய சம்பாதிச்சு அவரு பெரிய பணக்காரரா ஆகணும் அவன் மனசாட்சி, அதான் நான் எப்படியாவது அரிதாவோட மனசுல எடம்புடிச்சுட்டா...அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா... பூட்டிக்கெடக்குற அவ கம்பெனிய நான் தொறந்தா...நான் கோடிஷ்வரன். என் அப்பா பணக்காரனின் தந்தை, அரிதா என் அம்மாவின் ஆசை போக்கி. எனக்கு அவ பொண்டாட்டியா இருப்பதவிட நான் அவளுக்கு கணவனா இருந்துட்டுபோறேனே.
எதிர்காலத்தை நெனைக்காம உங்களோட நோக்கமே தவறான வழியில போகுதோன்னுன்னான் அபி, எனக்கு எதிர்காலத்து மேலே நம்பிக்கை கெடையாது. நான் இருக்கும் வரை சுகபோக சுகவாழ்வா இருக்கணும். இனிமே நான் சம்பாதிச்சு சேர்த்துகிட்டு ஊருக்கு போறதவிட, எனக்கு தேவை அவள ஒரு நா பாத்தேன், மறுநாள்பாத்து அவ சிரிக்க, நீ இவ்வளவு பெரிய கோட்டையை கட்டியிருக்றீயே என்றது அவனின் மனசாட்சி, எப்படி நடக்கும்னு நெனைக்கற?
நடக்கும். நான் நெனைச்சத அடஞ்சே தீருவேன். அதற்கு சரியான சந்தர்ப்பம் இதுதான். அவள் வேதனையை தீர்க்கபோற மருந்து நான் என்று அவனை மறந்து, நீண்ட நேரம் காரிடரில் நேரத்தை தொலைத்த அவனை அபி, சார் வாங்க சினிமாவுக்கு போகலாம் என்றான். அவனும் அவனை தொடர்ந்தான். அபி ஆரம்பித்தான், என்ன பகல் கனவா...?
இல்ல காலங்களால் அழிக்கமுடியாத கனவு, இங்கு வந்ததுல இருந்து என்றபோது அரிதா அரை கதவை அடிக்கடி நோக்கினான். அவன் நடந்து வரும் எதிர் திசையில் அவள் அவனை கடந்து போனால்... இதையெல்லாம் அறிந்த அபி...? எதையோ நெனைச்சுக்கிட்டு வேறு எங்கோயோ போய்கிட்டு இருக்கீங்க, ஆமாம் கொலம்பஸ் இந்தியாவை தேடிப்போய் அமெரிக்காவை கண்டு பிடிக்கலையா? தவறான வழியிலபோய் பழியைசுமக்க போறீங்க. பல லட்சம் மலைவாழ் செவ்விந்திய மக்களை கொன்று குவித்து புதைத்து அதில் வீடு கட்டி வாழும் ஆங்கிலேயர்கள் உலகமக்களின் முன்னோடி என்று சுரங்க நடைபாதையில் மழுங்கிய விளக்கொளி வெளிச்சத்தில் அபி,செல்லா இருவர் மட்டுமே நடக்க அவர்கள்பின் இரு செவ்விந்தியர்கள் துப்பாக்கியை எடுத்து....?
தொடரும்...
|