யாவரும் கேளிர் - 2
சந்தையிலிருந்து நடந்து வந்த அசதியில் மச்சக்காளை குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தது. செல்லப்பா மெதுவாக அதனருகில் சென்று அதன் மச்சத்தை தொட்டான். தூங்கிக்கொண்டிருந்த மச்சக்காளை திடுக்கென்று விழித்து அவன்மீது சீறிப் பாய, செல்லப்பா தொழுவத்தைவிட்டு வாசலுக்கு ஓடினான். நல்லவேளை சாமி அய்யா சங்கிலியால் கட்டியிருந்ததால் செல்லப்பா தப்பினான். தூரத்தில் நின்று கொண்டு அதையே உற்றுப்பார்க்க, மச்சக்காளையும் செல்லப்பாவை முறைத்துப்பார்க்கிறது. மீண்டும் சில்லென்று காற்று அவன்மீது வீசுகிறது. கூடவே மூக்கைத் துளைக்கும் வாசனை வீச, அது மண்ணின் வாசனை என யோசிப்பதற்குள் அவன் மீது ஒரு மழைத்துளி விழுந்தது. வானத்தை அண்ணாந்துப்பார்க்க, அவனது வாயில் மழைத்துளிகள் விழ, அதனை சுவைக்கிறான்.
அதில் எந்த சுவையும் இல்லாததை உணர்கிறான். திடீரென ஒரு மின்னல் வீச கண்ணை மூடிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறான். அதற்குள் பெருமழை வந்துவிட வீட்டில் நுழைவதற்குள் தடுக்கி தரையில் விழுகிறான். குப்புற விழுந்த அவன் வாய்க்குள் மழையில் நனைந்த மண் உட்செல்ல, இதுவரை கண்டறியாத சுவையை உணர்ந்து மகிழ்கிறான். கீழே விழுந்ததில் முழங்கால் முட்டி உடைந்து வலி தாங்க முடியாமல், மீண்டும் ஒரு மின்னல் அடிக்க நொண்டிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான்.
ஊரே அடங்கிவிட்டது. மழை ஓய்ந்து வெள்ளி முளைத்துவிட்டது. மழைத்தண்ணீரில் தவளைகளின் சத்தம் இசையாய் ஒலிக்கிறது. விடியலை நோக்கி செல்ல செல்ல சேவல் கூவுகிறது. இருள் விலகிய முதல் வெளிச்சத்தில், மச்சக்காளை போட்ட சாணத்தை எடுத்து, (இரவெல்லாம் தூறிய மழைத்தண்ணீர் கூரை மீது வைத்திருந்த மண் சட்டியில் நிரம்பியிருந்தது. கிராமங்களில் மழைநீரை சேகரிக்கும், வழக்கம் பன்னெடுங்காலமாக உள்ளது.) சட்டியில் கிடந்த மழைநீரில் கரைத்து வாசலுக்கு தெளிக்கிறாள் சாரதாம்பாள். சாணி தெளிக்கும் சத்தம் கேட்டு சாமி அய்யா எழுந்து வருகிறான். முகம் கழுவிய கையோட மாட்டுத்தொட்டிகிட்ட போகிறான்.
இராத்திரி போட்ட தண்ணியும் தவிடும் மொதுச்சிக் கிடக்குது. சாமி அய்யா கையைவிட்டு கலக்க, பாறாங்கல்லு மாதிரியிருந்த கல்லப்புண்ணாக்கு கரைஞ்சுப் போயிருச்சி. தொட்டி வாசனை மச்சக்காளைய சுண்டி இழுக்குது. சாமிஅய்யா தொழுவத்திலிருந்த மச்சகாளைய அவுக்க, அது அவன பறபறன்னு இழுத்துகிட்டு தொட்டிக்கு ஓடி, வயிறு முட்ட குடிக்குது. சாரதாம்பாள் சோத்துல வடிகட்டின நீராகாரத்தை (நீச்சித்தண்ணி) உப்பு சரியா இருக்குதான்னு ஒருவாய் குடித்துப்பார்த்துவிட்டு சாமிஅய்யாவிடம் கொடுக்கிறாள். அவனும் வயிறு முட்ட குடிச்சுட்டு மச்சக்காளையுடன் வயலுக்கு கிளம்பிட்டான். காலையில கண்விழித்த செல்லப்பாவால் எழ இயலவில்லை. முழங்கால் முட்டிய பார்த்தான். சுளீரென வலி மழைத்தண்ணியோட மண்ணும் புண்ணுமா இருக்கு. தன்கைகளால் இலேசாகத் தொட்டுப்பார்க்கிறான். வலியைப் பொறுத்துக் கொண்டு மெதுவாக எழுந்து மச்சக்காளையைப் பார்க்க மாட்டுத் தொழுவத்துக்குப் போனான். அங்கே மச்சக்காளை இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைகிறான். அவன் வீடு வழியாக அவன் வயதுப் பசங்க கூட்டம் கூட்டமா போவதைப் பார்த்தவன், “ஏலே எங்கப்பா போறீங்க” ன்னு கேட்க கூட்டத்தில் ஒரு பையன் “ஆத்துல தண்ணி வந்துடுச்சில்ல அதான் குளிக்கப் போறோம்” என்று சொல்ல, செல்லப்பாவும் புதுத்தண்ணியில கூத்தாட கிளம்பிவிட்டான். (இப்பவும் கிராமங்கள்ள (தஞ்சை போன்ற மாவட்டங்கள்ல) நடுவுல பாசனத் தண்ணி கால்வாய் இருக்கும்.
ஊரோட கடைசியில பாசனத் தண்ணி முடிஞ்சி காட்டாறு ஒன்னு ஓடும். கோடைகாலத்தில, காட்டாத்துக்குள்ள ஒரு சிலர் சாராயம் எரிப்பாங்க: சிலர் பாத்தியில தண்ணி கொண்டு வருவாங்க... பொதுவா பெரும்பாலான தவறுகள் இந்த காட்டாத்துக்குள்ளதான் நடக்கும். இங்க பாத்தீங்கனா ஊருக்கு நடுவுல ஓடுற ஆத்துக்குள்ள, எப்பவுமே தண்ணி வராத சீசன்ல, அதிகாலைல கிராமத்துக்காரங்க எல்லோரும் அங்கதான் வெளிக்கு உக்காருவாங்க.. அதெல்லாம் சேர்ந்து மேட்டூர்ல தண்ணி திறக்கும்போது வெள்ளக் கலர்ல இருந்தத் தண்ணி ஊருக்குள்ள வந்து செம்மண் கலர்ல ஓடிட்டிருக்கும்...எப்பவுமே ஊர்ல முந்திரிக்கொட்டை சின்னு னு ஒருத்தன் இருப்பான். அவன் தண்ணியப் பாத்த உடனே, நமக்கு முன்ன யாரும் குளிக்கக் கூடாதுன்னு தண்ணிக்குள்ள குதிச்சு குளிக்க ஆரம்பிச்சுருவான். ஆனா பாருங்க முந்தின நாள் ராத்திரி அங்கதான் அவன் வெளிக்கு உக்காந்திருப்பான்.)
தண்ணீர் கரைபுரண்டோட ஊரே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. வைக்கோல கொளுத்தி மாட்டுத்தோலாலான தப்பை (பறையடி மேளம்) சூடுபண்றான் சீனி. ஆத்துல குதிச்சு கும்மாளம் போடறான் செல்லப்பா. சீனியின் தண்டோரா சத்தம் காதைப் பிளக்கிறது.
"தண்ணி கடைக்கோடிக்கு போறவரைக்கும் யாரும் ஒரு வாரத்துக்கு மடத் தொறக்கக் கூடாது…இது கவர்மெண்டு ஆர்டரு….” (இந்த தப்பு சத்தம் ஊருக்குள் நடக்கும், ஊர் பஞ்சாயத்துக்கும் அந்தியில எழவுக்கும் இந்த தண்டோரா கேட்கும்.) (கோயில் திருவிழாவுக்கு காப்பு கட்டியாச்சுன்னா ஒரு சத்தம். இரவில் காமன் கதை படிக்க ஒரு சத்தம்னு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு சத்தம்.
இந்த தப்பு சத்தம் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் இசைக்கருவி)
ஒரு நாள் கடக்க...
மாலைநேரம். பள்ளிக்கூட மணி அடிச்சாச்சி. புத்தகப்பையை எடுத்துகிட்டு புழுதி பறக்க வீட்டை நோக்கி ஓடுகிறான். செல்லப்பா. அவனுக்கு தெரியும் அய்யா வயலுக்கு போயிருப்பார்னு. வீட்டுக்குள்ள புத்தகமூட்டைய எறிஞ்சிட்டு மச்சகாளைய பார்க்க மாட்டுத்தொழுவத்துக்கு ஓடினான். அங்கே அது இல்லாதது கண்டு திடுக்கிட்டான்.
தொடரும்...
|