யாவரும் கேளிர் - 16
மெல்ல மெல்ல பகலை விழுங்கத் தொடங்கிவிட்டது இரவு. சூரியன் வேறோரு கண்டத்திற்கு வெளிச்சம்போட சென்றுவிட்டது. அது விட்டுப்போன எஞ்சிய ஒளியில் திருவோடேந்திய பரதேசிகள் தாமரை ஏரியில் தங்கள் திருவோடுகளை கழுவிக்கொண்டு இருக்கிறார்கள். திருவோடு என்பது யாழ்ப்பாண தேங்காய் ஒடுகள்.(ஈழத்தின் விழுமியத்திருநகர் யாழ்ப்பாணத்தில். நடுநிசியில்கூட ஒருபெண் பொன்நகையணிந்து பயமின்றி நடந்துசெல்லும் நகரம் உலகில் யாழ்நகர் மட்டுமே அன்று. (இன்று?)
மேலும் யாழ்நகர் பனைவெல்லத்துக்கு பெயர்போனது. உலகின் பழமையான நூலகங்களில் யாழ்ப்பாண பொதுசன நூலகமும் ஒன்று. இந்நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட மிகப்பழமையான 95,000 நூல்கள் 1981-ம் ஆண்டு மே மாதம் 31-ம் நாள் சிங்கள இராணுவத்தால் எரிக்கப்பட்டது. இவ்வழகிய யாழ் இன்று பாழ்பட்டுக்கிடக்கிறதே என எண்ணும்போது நெஞ்சம் பதறுகிறது. (மொகலாயர்கலால் இந்து சாம்ராஜ்யங்கள் அழிந்துகொண்டு இருந்தபோது, அக்பர் காலத்தில் அழிந்தது போக எஞ்சியதை காப்பாற்றினார். இந்து கோயில்களையும், மற்றும் அரண்மனைகளையும், அக்பருக்கு பின் வந்தவர்களாலும் பல அடையாளங்கள் அழிந்து போயின என்பது வேறுவிஷயம், அதுபோல தற்போது இலங்கையில் அழிந்து கொண்டுருக்கும்! தமிழின் அடையாலங்களை யார் காப்பாற்றுவார்களோ.......?
இத்தனை சிறப்புமிக்க யாழ்ப்பாணத்தை நினைத்துப்பார்க்கும்போது இன்னும் இங்குள்ள தமிழனுக்கு யாழ்ப்பாணத் தேங்காயின் திருவோடுகள் மட்டுமே எதிர்காலத்தில் ஞாபகத்திற்கு வரும்போலும்!. யாழ்ப்பாண தேங்காய் நம்மூரில் விளையும் தேங்காயைவிட அய்ந்து மடங்கு பெரியது.
ஒளியும், ஊரின் ஒலியும் அடங்கியது. அந்திமயங்கிய அவ்வேளையில் பரதேசிகள் தாமரை ஏரியில் திருவோடு கழுவும் தண்ணீர் சத்தம்கேட்டு அங்கே வந்த போலிஸ், “இங்கே இருந்து சீக்கிரமா எல்லாரும் கெளம்புங்க, கொலைகாரனே ஒத்துக்கிட்டதால எங்களுக்கு கொஞ்சம் வேலை கம்மியாச்சு. இந்த ஊரு கொலகார ஊரு. எப்ப எவன வெட்டுவான்னு யாருக்கும் தெரியாது” என்றதும் அவர்கள் அங்கிருந்து கிளம்புகின்றனர். கதிர் அடித்த தேவர்வீட்டு களத்து மேட்டில நெல்மூட்டைகள் அடைந்துக் கிடக்கிறது. நெல்மூட்டைகள் நடுவே காவலுக்குக் காத்துக்கிடந்த வேலாயி கெழவி, தன் உயிரைப்பிடித்துக்கொண்டு விடியற்பொழுதை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
சாலையில் சைக்கிள் சத்தம், வேலாயி கெழவி எட்டிப்பார்க்கிறாள். சாமிஅய்யா தன்மகனை பட்டணத்து பள்ளியில் சேர்த்துவிட்டு சைக்கிளில் வந்துகொண்டு இருக்கிறான், அச்சமயத்தில் யாரோ களத்துமேட்டுப்பக்கமிருந்து மூச்சிரைக்க ஒடிவருவதைப்பார்த்து சைக்கிளைவிட்டு கீழே இறங்கினான். அங்கே வேலாயி கெழவி மூச்சிரைக்கப் பேசுகிறாள். "ஊரெல்லாம் ஒரே போலிஸ் கூட்டம் மூலைக்கு மூலை நிக்குறானுங்க நீ ரோட்டு பக்கம் போவாம, சவுக்குத்தோப்புவழியா குறுக்காலா பூந்து போயிடு” என்று சொல்ல அவன் “ ஏ...ன் எதுக்கு? ஊருக்குள்ளே போலிஸ்கூட்டம்?” “மொதல்ல வீட்டுக்கு போப்பா... மத்தத சாரதா வெளாவரியா சொல்லுவா” என்றாள். வேலாயி கெழவி மேலும் பதட்டத்துடன். அப்போது தூரத்தில் வந்த போலிஸ் ஜீப்பைக்கண்டு இருவரும் மறைகின்றனர்...
வீட்டிற்கு வந்த சாமிஅய்யா மிகப் பதட்டத்துடன் தன்வீட்டுக்கதவைதட்ட, வந்தவன் தன்கணவன்தான் என்பதை உணர்ந்த சாரதா கதவை திறக்கிறாள். சாரதாவைப் பார்த்தவுடன் சாமிஅய்யா தன்குடும்பத்துக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை , ஊர்ஜிதபடுத்திக்கொண்டு அவன் அவளிடம் “ஏன்? என்னாச்சு... என்றான்.
“ம்... ஊருக்குள்ள ஒரே போலிஸ்கூட்டமா இருக்குது... ஆமா எப்பதான் இந்த கமுனாட்டி பய ஊர்ல எழவு விழல, அதவுடுங்க. வாங்க வந்து நீங்க மொதல்ல சாப்புடுங்க... புள்ள எப்படி இருக்கான்? தங்கறதுக்கு இடமெல்லாம் வசதியா இருக்கா? நம்பளவிட்டுட்டு எப்படி தனியா இருக்கப்போவுதோ? என சாரதா சொல்ல “எனக்கும் புள்ளயவிட்டுட்டு வர மனசே இல்ல.. புள்ள தேம்பி தேம்பி அழுதான். நானும் அழ, பாதர் புள்ளய ஆறுதல் சொல்லி ஆஸ்டலுக்குள்ளே அழைச்சிக்கிட்டுப் போனாரு. ஆஸ்டலுக்குள்ள போறவரைக்கும் புள்ள என்னையே திரும்பி திரும்பி பாத்துக்கிட்டுப்போச்சி. அப்புறம் கொஞ்சம் நேரம் அங்கயே நின்னுப்புட்டு திரும்பிப் பாக்காம வந்துட்டேன்” என சாமிஅய்யா சொல்ல சாரதா கண்ணீர் சிந்திக்கொண்டே “எனக்கு காலும் ஒடல, கையும் ஒடல.... சாப்பிடவும் முடியல வயிறெல்லாம் பெசையுது... ...எல்லாம் புள்ள ஞாபகமாவே இருக்குது...இந்தாங்க நீங்க ஒருவாய் சாப்புடுங்க” என சாப்பாடுதட்டை அவனருகே வைத்துவிட்டு, அருகிலேயே குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அவன் சாப்பாட்டை பிசைந்துகொண்டே “நீ கொஞ்சம் சாப்புடு” என்று சொல்ல, அதற்கு சாரதா “மொதல்ல நீங்க சாப்புடுங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பிசைந்த சாதத்தை சாமிஅய்யா சாரதாவுக்கு ஊட்ட, அவள் தன்னைமறந்து வெட்கப்பட்டுக்கொண்டு அவன் ஊட்டிய சாதத்தை மென்றுகொண்டு,போதும் போதும் இளமை ஊஞ்சலாடுதோ? நீங்க சாப்பிடுங்க...பொறவு நான் சாப்புறேன் என சொல்லிக்கொண்டே அவளும் சாப்பிட இளமை வயசுல இல்லடி மனசுலயும் தெம்புலயும்தான்டி இருக்கு,எங்க இப்பதான் ராத்திரியான மூச்சு வாங்குதே....என்றாள்.
சாமிஅய்யா இப்ப நான் ஒத்த கையால ஒன்னய தூக்கட்டுமா? என கண்மூடி கண்திறப்பதற்குள் சாரதாவை தூக்கினான்,அவள் மேலும் வெட்கத்துடன் ம்....சரிசரி நீங்க ரொம்ப இளமையோடுதான் இருக்கீங்க...விடுங்க” என அவனிடம் விடுபட்டு, “புள்ள இன்னேரம் சாப்பிட்டுச்சோ இல்லியோ? என சாரதா கேட்க, சாமிஅய்யா” புள்ளக்கி ஆறு மணிக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து தூங்க வச்சு இருப்பாங்க, அவன் தூக்கத்துல இப்ப நடு சாமம் ஆயிருக்கும் (நடுசாமம்-நடுஇரவு) ஏங்க கதையகேட்டீங்களா” சொல்லு....காலையில ஒங்கள அனுப்பிச்சுட்டு நான்வீட்டு வேலையை பாத்துக்கிட்டு இருந்தேன் அப்ப வேலாயி கெழவிபோட்ட சத்தம் ஊரையே கூட்டிச்சி...என்ன ஏதுன்னு பாத்தா அய்யாக்கன்னு வீட்டு செவளநாயி சுடுகாட்டு பக்கமா இருந்து ஒரு ஆளோட கைய மட்டும் ரத்தம் சொட்ட சொட்ட கவ்விகிட்டு ஓடியாந்துச்சி,அத பாத்த எல்லாரும் தொரத்துனாங்க....அது ஊரவிட்டு ஓடி சுடுகாட்டையும் தாண்டி காட்டாத்துக்குள்ள ஓடிச்சு, அத தொரத்துன ஊருசனம் எல்லாரும் காட்டாத்துக்குள்ள போனோம், அங்க போயி பாத்தா, ஊரு நாயெல்லாம் ஒரே கூட்டமா...?அய்யோ சொல்லவே பயமா இருக்கு...ரெண்டு தலையில்லாத முண்டம் கெடந்துச்சு.......?
தொடரும்...
|