யாவரும் கேளிர் - 1
செல்லப்பா வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து செல்லத்துக்கு அப்பாவாகி போனவன். ஆறு முடிந்து ஏழைத் தொடும் வயது. தண்ணீரை கையால் அள்ளி தனக்கு மட்டுமே சொந்தமென சுயநலம் கொண்டாடும் குணம். அவன் வயது பிள்ளைகள் அவன் விரும்பியதை வைத்திருந்தால், அதைப்பிடுங்கி தன்னுடையது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, தனது பெட்டகமாக வைத்துள்ள குடிசை வீட்டினுள் குன்றுபோல நிற்கும் குளுமைக்கும், குட்டிச்சுவருக்கும் இடையில் மறைத்து வைத்துக்கொள்வான்.
மே மாதம் பிறந்து மேகமூட்டமும் கருமை கட்டத் தொடங்கிவிட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்தாயிற்று. செய்தித்தாளே அறியாத வேலாயிகூட தண்ணீர் வருவதை விளாவாரியாக, தேனீர் அருந்திக்கொண்டு (காந்திக்கணக்கில்) திண்ணைக்கடையில் கதையளந்துக் கொண்டிருக்கிறாள். காத்து வாங்கப்போன அய்யாக்கண்ணு டீக்கடைக்கிட்ட குய்யோ மொய்யோவென கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து ஆச்சர்யத்தோடு வருகிறார். புலவன்காட்டு வெளங்கொண்டார் போனவருஷம் அறுவடை முடிஞ்சி, வட்டியும் மொதலும் வாங்கி வேட்டியில முடிஞ்சிக்கிட்டு பொய்கை கிராமத்தைவிட்டுப் போனவரு இப்பதான் வந்துக்கிட்டு இருக்காரு.
அவர் எப்பவுமே பல கலர்ல டவுசர் போட்டுகிட்டு, தன்னோட வேட்டிய தாமரை ஏரியில நனச்சி, தலைக்கு மேல இரண்டு கையிலும் பிடிச்சு, காத்துல காயவச்சிக்கிட்டுதா வருவாரு. அவர பின்தொடர்ந்து வெள்ளையன், தம்பிக்கண்ணு, சின்னுமொய்ந்தார், தனபால் கவுண்டர் எல்லோரும் வெள்ளையும் சொள்ளையுமா கதர் வேட்டிசட்ட மினுமினுக்க கடன் வாங்க வந்துகிட்டு இருக்காங்க.
ஆனா ஒண்ணு வெளங்கொண்டார் எப்பவுமே கந்துவட்டி கலாச்சாரம் பண்ணுவதே இல்ல. நெல் அறுவடை முடிஞ்சுவுடனே அவர்கிட்டதான் கொள்முதல் பண்ணணும். அவரும் ஆத்து தண்ணி வருமுன்னே கடன் கொடுக்க வந்துட்டாரு. பொன்டுவசட்டி ராமையா வெளங்கொண்டாரப் பார்த்து ‘வாய்க்குள்ளே வந்துட்டான் வட்டிசெட்டி…ஒரு வருஷமா ஊருகுள்ள வராதவன் ஆத்துல தண்ணி வந்ததும்…அறுத்தவுடனே மரக்காள்ல நெல்ல அளவில்லாம அள்ளிக்கிட்டுப் போறதுக்கு’ என்று முணுமுணுக்க….
"என்ன ராமையா வாய்க்குள்ளயே பேசிக்கிற?
என்று வெளங்கொண்டார் கேட்க,
"அது ஒன்னுமில்லன்னே... அதெல்லாம்...அதான் வந்துட்டீங்களே மேட்டூர் தண்ணியோட கடன் கொடுக்க..."
சாரதாம்பாள் கேழ்வரகு சமைக்க, காஞ்சமுள் பொறுக்க, கருவேலங்காட்டுக்கு செல்கிறாள்;. முள்பொறுக்கப்போகும் தாயின் முந்தானயப் புடிச்சிகிட்டு செல்லப்பனும் போகிறான். உச்சிவெயில் முடிஞ்சு பொழுது சாய்கிற நேரம். அவசர அவசரமா முள்ளப்பொறுக்கி முந்தானயில மூட்டைக்கட்டி, தலையில சுமந்துகிட்டு வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள் சாரதாம்மாள், பின்தொடர்ந்து செல்கிறான் செல்லப்பனும். தலையில குத்துற முள்ளின் வலி தாங்க முடியாமல் ஓட்டமும் நடையமுமாக தாய் செல்ல, சப்பாத்திக்கள்ளிப் பழத்த தின்னுக்கிட்டு இரத்த சிவப்பா செவந்துப்போன வாயோட செல்லப்பனும் ஓடுகிறான். வீடு சேர்ந்தாள்; சாரதாம்மாள், சமையல் வேலை முடிந்து வீடே பரபரப்பாகிறது. பலமாதம் கழுவ மறந்த மாட்டுத்தொழுவத்த சுத்தம் செய்து சீர்படுத்துகிறாள். வெள்ளிச்சந்தைக்கு மாடுவாங்கப்போன சாமி அய்யா மயிலக்காளையுடன் விளக்கு வைக்கும் முன்னே வந்துகொண்டிருப்பதை தெருவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனது அப்பா வாங்கிவந்த மாயவரத்து காளைய பார்க்க கன்றுக்குட்டி துள்ளி ஓடிவருவதைப்போல ஓடிவருகிறான் செல்லப்பா. பகலை மறைக்க இரவும் வந்துவிட்டது. மழைய துரத்த மேகமும் கூடிவிட்டது.
சாமி அய்யா மாடுகளுடன் வாசலில் வந்து நிற்கிறான். ஒரு பக்கம் நாய் குரைக்க மறுபக்கம் மாடுகளுக்கு ஆராதணை செய்து மாட்டுத்தொழுவத்தில் கட்டி விட்டு, மாடு வருமுன்னே அறுத்து வைத்திருந்த புல்லை போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே மாடுகளைப்பற்றி கதை அளந்துகொண்டிருக்கிறான் மகனிடம்.
“டேய் செல்லா…” (சாமி அய்யா செல்லப்பனை செல்லமாக இப்படிதான் கூப்பிடுவான்)
“என்ன அய்யா?” (கிராமங்களில் அப்பாவை அய்யா என்றழைப்பது வழக்கம்.)
“நீ அந்த மச்சக்காளைகிட்ட மட்டும் போயிடதே. அது பாச்சக் காள. தரவு பாக்க வந்தவனையே பாய்ஞ்சிரிச்சி…”
(பாவம் மாடுகள். சந்தைக்கு வருபவர்கள் எல்லாரும் மாடுகள பல்லப்புடுச்சி பார்க்கிறது; தொடையில தட்டுறது; வாலை முறுக்கிறது; முதுகுல கிள்ளிப்பார்க்கிரதுன்னு கொடுமைகளை பண்றாங்க. அப்புறம் மச்சக் காளைய ஒரு தரவுப்பாக்கற பய வாலை அதுக்கு வலிக்கிறமாதிரி கிள்ளிப்புட்டதால வலி பொறுக்கமுடியாமல் முட்டி தள்ளிடுச்சி அந்த வாயில்லா ஜீவன். முட்டுற மாட்ட வாங்க ஆளில்லாம வீச்சு வெலையில சாமி அய்யா வாங்கிவந்தது வேறு விஷயம்) சாமி அய்யா சாப்பிட்டு முடிக்குமுன்னே, ‘ஏய் செல்லம் போய் படுத்துத் தூங்கு. நாளைக்கு வெள்ளென எந்திரிச்சு படிக்கணும். நாங்களெல்லாம் நாலு எழுத்து படிக்காம பட்டாம் பூச்சி புடிச்சிகிட்டு திரிஞ்சதாலதான், அஞ்சுக்கும் பத்துக்கும் அலையறோம். நீயாவது நல்லாபடிச்சி நாலுபேருக்கு சோறு போடணும்…’
என்று சொல்லி முடிக்கும் முன்னே உறங்குவதைப் போல கண்களை மூடிக்கொண்டு, விடிந்தவுடனே காளையை நன்றாகப் பார்த்துவிட வேண்டுமென்ற நினைவுடன் தூங்கிவிடுகிறான். கிராமத்து வீடுகளில் எப்போதும் நடுவீட்டுக்குள் அழுக்குச்சேலை தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு சேலையை எடுத்து திரைச்சீலைபோல தொங்கவிட்டு, மறுபக்கம் படுத்துறங்கும் செல்லப்பாவை மறைத்துவிட்டு, சாமி அய்யாவும் சாரதாம்மாவும் சலனமில்லாமல் சரசமாடத் தொடங்கினா... செல்லப்பா மெதுவாக கண்விழித்தான். திரைச்சீலைக்கு அந்த பக்கம் கிசுகிசு சத்தம் கேட்டது. சில்லென்று மழைக்காற்று கதவு இல்லாத நிலை வழியாக வந்து அவனைத் தழுவியது. படுக்கையைவிட்டு மெல்ல எழுந்து பாய்ச்சக் காளையைப் பார்க்க மாட்டுத்தொழுவத்திற்கச் சென்றான்.
தொடரும்... |