வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TSஅரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - கைலாஷ் சிவன்

விக்ரமாதித்தன் நம்பி  


இருபத்தேழாம் நூற்றாண்டுக் கவிதை - இருபத்தோராம் நூற்றாண்டின் பலிபீடம்

மனிதனல்ல.. மிருகம்நான்
ஒரு எழுத்துக்கும் ஒரு எழுத்துக்குமென
கால இடைவெளி, உச்சரிப்பு. உடைபடும் மௌனம்
கவனத்தை ஈர்க்கும் மையத்தில் உளறும்
நசுங்கும் உயிர் மெய் இன் படபடப்பு

கொலைக்கருவிகளை வைத்திருக்கிறேன் அது
அன்பைப் போதிக்கிறது. அன்பு நான் அது
கடவுளோடு தர்க்கம் கொள்கிறது கடவுள் நான்
ஆதலால் கொலை செய்கிறேன் என்னையே நான்
அதிர்ச்சியூட்டும் அவலம் நிறைந்த எதையோ தெரிவிக்கிறது
எது - அதுதான் நன்றாகக் கூர்ந்து பார்
கையில் பளபளக்கும் கூரிய ஆயுதம்
தோளுக்கு மேலாகக் கண், செவி, மூக்கு வாய் மூளை
கொண்ட தலை, நன்றாகத் தலையை மேல்நோக்கி
புடைத்து நிற்கும் தொண்டைக்குழிக்குள் அது
இறங்குகிறது. பீறி அடிக்கிறது குருதி. விழிகளை உதறாதே
நன்றாகச் சிரிக்கிறேன் நான் இந்த
நூற்றாண்டின் சட்டவடிவங்கள் ஒழுங்குபடிகள்
போதிப்பது உடலின் அழிவை, தற்கொலை யை
என் குருதியால் நனைகிறது இந்த
நூற்றாண்டின் கொலைக்கருவி. தப்பித்துக் கொள்கிறேன் நான்
நான் .. நான்.. நான் .. நான்.. நான். நான்
என் கழுத்தை அறுத்து
கதறுகிறேன் நான். உளறுகிறேன் நான்
இயந்தரங்களுக்கிடையில் ஊர்ந்து தரிகிறது சிலது
அசையாமல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிலது
எல்லாம் மனிதஜீவிகள் மனிதப்பூச்சிகள் இந்த
நூற்றாண்டின் வண்ணப்பூச்சுமெருகு குமட்டுகிறது
வாந்தியெடுக்கிறேன் நான். அருவருப்பு
வாய் வழியாக வெளியேறும் நரகல்
கழுத்து அறுபட்ட சேவலின் உடலாகப் பறந்து
துடிக்கிறது எனது முண்டம்
விழிகள் பிதுங்கி நிற்கும் எனது தலை இது
இந்த நூற்றாண்டின் பலிபீடம்
தப்பித்து விட்டேன் நான்
காற்றையும் சூறையாடுகிறது என்னின் பெரும் ஓலம்
வலி.. வலி.. வலி.. வலி.. வலி

கைலாஷ் சிவன்
(சூன்யப்பிளவு தொகுப்பு பக்.88.

ஒரு கவிதையினின்றும் நாம் உருவாக்கிக்கொள்ளும் அனுபவம் என்பது பெரிதும் அந்தரங்மானது, வாசகனின் தன்னிலை சார்ந்தது. அவனுடைய கற்பனைச் சாத்தியத்தைப் பொருத்து விரிவடையக் கூடியது. அவ்வனுபவத்தை ஒரு எல்லைக்கு மேல் விளக்க முயல்வது பல சமயங்களில் அக்கவிதையின் தன்மைக்கே எதிரானதாக முடியும். ஆகவே ஒரு கவிதைக்கு கவிஞனின் நோக்கத்தைவிடவும் விமர்சகனின் பொருளைவிடவும். வாசகன் தனது சொந்த வாசிப்பு அனுபவத்திலிருந்து சுயமாக அடையும் அர்த்த்மே முக்கியமானது.

க. மோகனரங்கன்
(இரவுகளின் நிழற்படம் தொகுப்பு அறிமுக உரையில்)

இஃது இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் கவிக்குரல், இப்படித்தான் இருக்கும், யூஸ் அண்ட் த்ரோ கவிதைகளுக்கு நடுவே இதுபோலும் கவிதைகளைப் பார்க்க நேர்கையில் மிரட்சியாக இருக்கலாம். புரியாமல் போகலாம். என்ன இது எனத்தோன்றலாம். எதற்கு இதெல்லாம் என்று படலாம். எனில் நவீன கவிதை இப்படியெல்லாம் கோலம் கொள்வது தவிர்க்க முடியாதது.

நாம் வாழும் காலம் இதற்குமுன் இல்லாத நெருக்கடிகளும் சிக்கல்களும் மண்டியதாக மாறிவிட்டது. வாழ்வு அர்த்தமிழந்து போய்க்கொண்டிருக்கிறது. நம்பிக்கை கொள்ளப்பற்றுக்கோடு அருகிவிடுகிறது. அறமும் விழுமியமும் பேச்சளவில் சுருங்கிவிட்டன. மனம் பரிதவிக்கிறது. உயிர், வேதனை கொள்கிறது. கவிஞன் குரலொழுப்புகிறான்.

கைலாஷ் சிவனே எழுதியிருக்கிறார், தன்னுரையில்
புத்தியை தீண்டும் உயிர் அழகு , அது கவிதை
பால்ய வயதிலிருந்தே கவிதைமேலான நேசிப்பு.

அப்படியொரு வாழ்வுச்சூழல். முழுக்க முழுக்க கிராமியச் சூழல். முற்றிலும் இயற்கையோடு இயைந்த வாழ்விருப்பு. இயற்கையிலிருந்து என்னைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இன்றுவரை வானம் பார்த்த பூமியும் கரிசல்காடுகளும், இயற்கையே (மழை) பொய்த்துப் போனாலும் கரிசல்மனிதர்களின் இதயங்களில் வற்றிவிடாத ஈரம். எப்படியும் வாழ்வை அதன் அழகோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள். இயற்கை சார்ந்தது. வாழ்வு சார்ந்தது. அவர்கள் தம்மொழி, எம் நிலம் உஷ்ணம் தகிக்கும் நிலம்.

இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றம். முற்றிலும் இயற்கையிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட வாழ்வுகதி. இதில் என்னில் நிகழும் எதிர்வினை என்னின் கவிதா மனோபாவம்.

இங்கு வாழ்வு முற்றிலும் மையப்படுத்தப்பட்டு ஒரு தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும நிகழ்கொடூரம். இங்ஙனம் ஓர் அவலமான உயிரிருப்பை உயிர்நீக்கம் செய்யும். இந்த அமைப்பிற்கு எதிராகத் திசை திருகி வெறிகொண்டு வாழ்வது. இருப்பின் ஒவ்வொரு நொடியிலும் கலகத்தை விளைவிப்பது. ஒரு விளிம்பு நிலையில் நின்று முடிந்த மட்டும் மையத்தைச் சிதைப்பது. இந்த அமைப்பைக் கேலிக்குள்ளாக்குவது. இங்கு எல்லாவற்றையும் உடைத்தெறிவது. இதுவரையிலான அறிவுச்சேகரத்தின் பாசிசதன்மையை அறிவு அதற்கெதிராகக் கலகம் புரிவது. வாழ்வை ஓர் உயிரிருப்பாக நிகழ்த்திக்காட்டுவது. அது மட்டுமே. கலகம் அது எனது மொழி.

இங்கு படைப்பைக்காட்டிலும் வீர்யமானது வாழ்வு. படைப்பு இரண்டாம் பட்சமே.

இது ஓர் கானகத்து இதயம்.

எரிந்து
உருகி வழியும்
தீ
நிஜத்தில்
ஓர் கவிதை


கைலாஷ் சிவனின் கவிதை உலகை அணுகவும். இந்தக் கவிதையை(யே) விளங்கிக் கொள்ளவும். அவருடைய வாக்குமூலம் உதவியாக இருக்கும்.

இந்த நூற்றாண்டின் சட்டவடிவங்கள் ஒழுங்குபடிகள்
இந்த நூற்றாண்டின் கொலைக்கருவி
இந்த நூற்றாண்டின் வண்ணப்பூச்சு மெருகு
இந்த நூற்றாண்டின் பலிபீடம்

இந்த நூற்றாண்டின் என்றே திரும்ப திரும்பச் சொல்லப்படுவது ஏன்.

மனிதனல்ல .. மிருகம் நான்.
அன்பு நான்
கடவுள் நான்
கொலைசெய்கிறேன் என்னையே நான்
நன்றாகச் சிரிக்கிறேன் நான்
நான்.. நான் .. நான்.. நான்.. நான்
என் கழுத்தை அறுத்து
கதறுகிறேன் நான். உளறுகிறேன் நான்
வாந்தியெடுக்கிறேன் நான்
தப்பித்துவிட்டேன் நான்
இத்தனை நான் கள் எதற்காக
கவிஞன், வேண்டுமென்றே தான் இப்படி மொழிகிறான்

தன் வாழ்நிலையை உணர்வைச் சொல்லவரும் கவிஞன் ஒருவன் புரிதல் குறித்து பிரக்ஜை கொண்டேயிருபபான். சொல்முறையில் சிரத்தை கொண்டேயிருப்பான்.

பின்னே ஏன் கவிதை புரியாமல்போக நேர்கிறது
உத்தி
வரிகள் மாற்றிப் போடப்பட்டிருக்கின்றன அல்லது மாறிக்
கிடக்கின்றன

நமது கவிதை மரபில். கொண்டு கூட்டுப்பொருள் என்று கூறுவார்கள். மாறி அமைந்திருக்கும் கவிதைவரிகளை இசைத்துப் பொருள்கொள்வது.

இயற்திரங்களுக்கிடையில் ஊர்ந்து திரிகிறது சிலது
அசையாமல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிலது
எல்லாம் மனிதஜீவிகள் மனிதப்பூச்சிகள் இந்த
நூற்றாண்டின் வண்ணப்பூச்சி மெருகு குமட்டுகிறது
வாந்தியெடுக்கிறான் நான். அருவருப்பு
வாய் வழியாக வெளியேறும் நரகல்

அதிர்ச்சியூட்டும் அவலம் நிறைந்த எதையோ தெரிவிக்கிறது
எது

இந்த நூற்றாண்டின் சட்ட வடிவங்கள் ஒழுங்குபடிகள்
போதிப்பது உடலின் அழிவை. தற்கொலையை
ஆதலால் கொலைசெய்கிறேன். என்னை நான்
அதுதான் நன்றாகக் கூர்ந்து பார்
கையில் பளபளக்கும் கூரிய ஆயுதம்
தோளுக்கு மேலாகக் கண், செவி, மூக்கு, வாய், மூளை
கொண்ட தலை, நன்றாகத் தலையை மேல்நோக்கி
புடைத்து நிற்கும் தொண்டைக்குழிக்குள் , அது
இறங்குகிறது, பீறி அடிக்கிறது குருதி, விழிகளை உதறாதே

கழுத்து அறுபட்ட சேவலின் உடலாகப் பறந்து
துடிக்கிறது எனது முண்டம்
விழிகள் பிதுங்கி நிற்கும் எனது தலை இது
இந்த நூற்றாண்டின் பலிபீடம்
தப்பித்துவிட்டேன் நான்
காற்றையும் சூறையாடுகிறது என்னின் பெரும் ஓலம்
வலி. வலி.. வலி.. வலி.. வலி..

யதார்த்தமான விஷயமே சிரியசாமாக்கப்பட்டு விடுகிறது. உள்ளடக்கம் என்று பார்த்தால்

மனிதனல்ல மிருகம் நான் என்று தொடங்குகிறது கவிதை.
ஒரு எழுத்துககும் ஒரு எழுத்துக்குமான
கால இடைவெளி உச்சரிப்பு உடைபடும் மௌனம்
கவனத்தை ஈர்க்கும் மையத்தில் உளறும்
நசுங்கும் உயிர் மெய் இன் படபடப்பு

கொலைக்கருவிகளை வைத்திருக்கிறேன் அது
அன்பைப் போதிக்கிறது அன்பு நான் அது
கடவுளோடு தர்க்கம் கொள்கிறது கடவுள் நான்

கவிதை வடிவம் கட்டாகவே இருக்கிறது. உத்தியும் உயர்வானது. உள்ளடக்கம்தான் கவிதையே. சொல்முறைதான் முக்கியமானது.

இருபத்தோராம் நூற்றாண்டின் பலிபீடம், வார்த்தைகளால் கவிதை சொல்லும் மரபின் பாற்பட்டது எனினும் ஒற்றைப்பரிமானமாக இல்லாமல், பல பரிமாணம் கொண்டதாக கவிதை சிறப்புறக் காரணங்களே உத்தியும் சொல்முறையும் தாம் ஆகும்.

மிருகம் என்றும் கடவுள் என்றும் மாறுவது மாற்றுவது எதார்த்தமான விஷயத்தையே புனைகூட்டிச்சொல்லிவிடுவது, சிக்கலும் பின்னலுமான ஒன்றை நேர்த்தியாகவே கட்டமைத்திருப்பது எல்லாமே கவிதையாக்கத்தில் கவனமுள்ள கவிஞர் என்பதைத்தான் காட்டுகின்றன

ஒரு பொருளை எளிமையாகவே சொல்வது என்பதும் இருக்கிறது. வித்தகமாக விளம்புவதும் நடக்கிறது. சமயவேல், எவ்வளவு பெரிய விஷயத்தையும் சொல்லிச் செல்கிறார். கைலாஷ் சிவன், புதிர்வழிப்பாதையில் போய்வர விருப்பங்கொண்டிருக்கிறார். என்ன ஒரு சிரமமென்றால் இன்றும் கிராமப்புறங்களில் கழிப்பறையைப் பயன்படுத்தப் பிரசாரம் செய்து கொண்டும் மான்யம் வழங்கிக்கொண்டும் இருக்கிற ஸ்திதியில்தான் நாம் இருக்கிறோம் என்பதுதான். இதில் வித்தகத்தின் ரிலவன்ஸ் தான் என்ன. கொஞ்சம் பேர் அப்படியும் இருக்கலாம் என்பது சமாதானமாகிவிடுமோ. எதையுமே நிச்சயித்துச் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. எது எப்படியிருந்தபோதிலும் தமிழில் கைலாஷ் சிவன்தான் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கவிஞன் என்பதும் அவர் கவிதைகள் சீரிய நவீன கவிதைகள் என்பதும் இன்றியமையாதவைதாம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</