அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - லஷ்மி மணிவண்ணன்
உள்ளத்தை உருக்கும் கவிதை - அப்பாவைப் புனிதப்படுத்துதல்
அப்பாவின் நண்பர்கள்
ஊடகங்களில் வருகிறார்கள்
திரைப்படங்களில் நடிக்கிறார்கள்
அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே
சிறுவன் பார்க்கிறான்
அப்பாவின் உறவினர்கள்
பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள்
பதவிகளிலிருக்கிறார்கள்
நிறுவனங்கள் இயக்குகிறார்கள்
சிறுமி கேள்விப்படுகிறாள்
அப்பா அன்புள்ளவரா
சொல்லத் தெரியாது
பண்புள்ளவரா
இல்லை
வீதிகளில் சண்டையிட்டு
வீட்டுக்கு வருபவர்
வீட்டில் சண்டையிட்டு
வீதிகளில் நுழைபவர்
அப்பா
எப்போது வீட்டுக்கு வருவார்
தெரியாது
எப்போது வெளியிலிருப்பார்
தெரியாது
கைகால் ஒடிந்தால் மருத்துவமனை
கலவரமென்றால் காவல்நிலையம்
மதிப்பெண் பட்டியலைச் சரிபார்க்கமாட்டார்
பள்ளிக்கூடத்துக்குத் துணைவரமாட்டார்
சாப்பாட்டில் குறி இவற்றைத் தவிர
அப்பா என்ன முடிவெடுப்பார்
தீர்மானிக்க முடியாது
அப்பா சண்டையா சச்சரவா
தெரியாது
வேண்டுமா வேண்டாமா
தெரியாது
அதிகமானால் அச்சம்
அப்பா அளவாய்ச் குடித்தால்
விளையாட வருவார்
அப்பாவுக்கு என்னென்ன பிடிக்கும்
தெரியாது
எது பிடிக்காது
தெரியாது
அப்பாவுக்கு என்னென்ன நோய்கள்
முற்றிய மனநோய்
ரகசியமான மருத்துவ அறிக்கை மட்டும்
தெருக்களில் கிடக்கிறது
-லஷ்மி மணிவண்ணன்
(அப்பாவைப் புனிதப்படுத்துதல் தொகுப்பு பக்கம் 11-12)
சொல்லித் தீருமோ தீ அழகு
அழகுதான் அதேவேளை தீ
தீதான் அதேசமயம் அழகு
மணிவண்ணன் கவிதைகள் இப்படித்தான்
அப்பாவைப் புனிதப்படுத்துதல் கவிதையைப் பற்றி என்ன
சொல்ல
உண்மையான கவிதை பூமி தாங்க முடியாதபடி
நவீன கவிதை இதுவரை கண்டிராதது.
வெள்ளைக்கவிதை மாதிரி விஷயம் வெளிப்படையானதுதான்
எதிர்கவிதை என்கிறார்போல அலங்காரம் துறந்ததுதான்
எனில், அப்படியெல்லாம் குறுக்கிவிடமுடியாது.
அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே
சிறுவன் பார்க்கிறான்
வீதிகளில் சண்டையிட்டு
வீட்டுக்கு வருபவர்
வீட்டில் சண்டையிட்டு
வீதிகளில் நுழைபவர்
ரகசியமான மருத்துவ அறிக்கை மட்டும்
தெருக்களில் கிடக்கிறது.
இப்படியான மொழிதல் அப்படிச் சொல்ல விடுவதாயில்லை.
சத்யம் சிவம் சுந்தரம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
புலியின் அழகு
பாம்பின் அழகு
அச்சமூட்டும் அழகு
அப்பாவின் ஸ்திதியா. அப்பாவைப் பற்றி எதுவும் நிச்சயிக்க முடியாதபடி இருக்கும் பிள்ளைகளின் நிலையாம் எது கவிதையின் விஷயம்.
இரண்டும்தான்
ஒன்றைத்தொட்டு ஒன்று
கவிதையில் காணப்படும் அப்பாவின் இருப்புநிலையா பிள்ளைகளின் வாழ்நிலையா, எது நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது.
இரண்டுமேதான்
அப்பாவைத் புனிதப்படுத்துதல் என்ற தலைப்பு சொல்லும் செய்தி என்ன.
யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது
இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில்
உதிரிப்பூக்கள் படத்தின் உச்சகட்டம் ஏன் நினைவுக்கு வருகிறது.
அந்தப் பிள்ளைகள் அப்பாவைப் பார்க்கும் பார்வையா அப்பா, பிள்ளைகளைப் பார்க்கும் பார்வையா எது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
இந்த வரிகள் இந்த நேரத்தில் எதற்கு மனசுள் கனன்று வரவேண்டும்.
ஒரு கவிதை இந்த பாடு படுத்துமா
உணர்வில் சலனங்களை உண்டு பண்ணுவதும் உள்ளத்தை உருக்குவதும்தான் அசலான கவிதையின் இயல்பே.
அந்த க்ஷணத்தை உறையவைப்பதும். அடுத்தாற்போல யோசிக்கவைப்பதும்தான் அதன் தன்மையே.
நகுலன் போன்ற நல்ல கவிதை ஈடுபாடுள்ளவர்கள் க.நா.சு. மாதிரி விமர்சகர்கள் இருப்பார்களெனில், மணிவண்ணன் கவிதைகள் உரிய கவனிப்புப் பெற்றிருக்கும். மணிவண்ணனுக்கான மரியாதையும் கிட்டியிருக்கும். இந்த இரண்டுமே நிகழாதபோது, நவீன இலக்கிய உலகு குறித்து நம்பிக்கையாக இருக்க முடியவில்லை.
போகட்டும்
உண்மையான கவிஞன் எவனும் எப்படி இருந்தபோதிலும், அவனுடைய கவிதைகள் சூரியசந்திரர்கள் உள்ளவரை பூமியில் இருந்து கொண்டிருக்கும்.
அவை, அவன் பெயர் சொல்லும். வரலாறு, அசலான கவிநாயகர்களைத்தான் வரித்துக் கொள்ளும்.
மணிவண்ணன் சிரஞ்சீவி...வாக்தேவி அறிவாள்.
|