அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - தூரன் குணா
திரும்ப முடியாத காட்டின் ராஜா
புள்ளினமும் பூக்களும் அடர்நிழலும்
வதியும் காட்டில்
சதா அலைந்து திரியுமவன்
வயிற்றை உத்தேசித்து
விற்பனைப் பிரதிநிதியாகத் தன்னைப்
பணியமர்த்திக் கொண்டான் ஒரு நாள்
வணிகக் கட்டடங்களுக்கு நறுமணம்
சுமந்து சென்று முழு கேலிச் சித்திரமாகினான்
நல்ல உச்சி வெயிலில்
புராதனப் பெருமைவாய்ந்த பெருநகரத்தில்
துண்டு நிழலைத் தேடியலைந்து
தண்ணீர் பாக்கெட்டுகளில் தாகம்
தீர்த்துக்கொண்டான்
மேலிடத்திற்குப் பறவைமொழியில்
தின அறிக்கை சமர்ப்பித்து நன்றாக
வாங்கிக் கட்டிக் கொண்டான்
ஆடி நடுநீசியில் மிகுபோதையில் படுக்கையில் விழும்
அத்தனிக் காட்டு ராஜாவுக்கு
என்றும் காடு திரும்ப முடியாததாயிருந்தது.
-அகச்சேரன்
361 காலாண்டிதழ்
ஐப்பசி 2011
சிக்கித் தவித்தல்தான் விஷயம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலையென்பதோர் படிவங்கொள்ளும் எனும்
சிலம்பின் வரிகள் மனசுள் ஒலிக்கின்றன.
பொறியில் மாட்டிக்கொள்கிற எலிபோலவா மனிதவாழ்வு.
கவிதை, எளிமையும் நேரடித்தன்மையுமாகத்தான் இருக்கிறது.
இறுதி மூன்று வரிகளிலுள்ள குரூர ஏதார்த்தம்?
திரும்ப முடியாமல் போவது என்ன கொடுமை,
என்ன அவலம், எவ்வளவு வெப்புராளம், எவ்வளவு துயரம்.
சமகால வாழ்வை ஒரு ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.
நவீன கவிதையில் வாழ்வியலைக்
கொண்டு வரும் கவிஞர்கள், சங்கக் கவிஞர்கள் போல
என்றும் நின்று நிலைத்திருப்பார்கள்.
அகச்சேரன், இன்னும் உத்வேகத்துடன் எழுதுவாராக. |