அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - தூரன் குணா
ஏக்கப்புலி
நமது ஏக்கம்
ஒரு வாடாத
அழுகிய மலராக
இருக்கிறது
நள்ளிரவில்
நடை சாத்தப்பட்ட
ஆலயத்தின் முன்னால்
அது கடவுளை சபிக்கிறது
கூட்டம் நிரம்பி வழியும்
உணவகத்திற்கு முன்னால்
அது சட்டைப்பையை
வெகுநேரம் தடவிக்கொண்டு நிற்கிறது
பின்னிரவுகளில்
கழிவறையில் குந்திக்கொண்டு
நெஞ்சடைக்கும் ஒன்றை
வெளியேற்ற முயல்கிறது
அத்தனை மனிதர்கள் சூழ்ந்திருக்க
முன்னால் நடக்கும் பெண்ணின்
இடுப்பில் தொற்றிக்கொள்கிறது
இரத்தம் உறையத்துவங்கும்
துயர மரணத்தின் முன்னால்
வாழ்வை இறுகப்பற்றிக்கொள்கிறது
நான் சாம்பலிலிருந்து
தசையை வடிப்பேன்
என்று உரத்துக் கூவிக்கொண்டு
மதுப்புட்டிக்குள் அலைவீசுகிறது
வெகு தனிமையில் கண்ணீரை மட்டும்
அருந்தும் சாதகபட்சியாகவும் இருக்கிறது
ஏக்கத்தின் பூரண தினமொன்றில்
நாம் வாசிக்கும்
ஊருக்குள் இறங்கும் பசித்த புலி
நமது ஏக்கத்தின் பூரண மலரை
கண்ணுற்று
திரும்பி கானகத்திற்கே
பறக்கிறது மெல்ல.
-தூரன் குணா
(361 காலாண்டிதழ், ஆடி-ஐப்பசி 2011)
தீவிரமான மனநிலைகளினூடாக, உடையும் வாழ்வை உடைதலுடன் எழுதக்கூடியவர்கள் மிக முக்கியமானவர்கள். பொதுவாக. அந்த வரிசை காலியாக இருக்கிறது. அல்லது புகார்க் கடிதங்கள் எழுதுபவர்கள் அந்த வரிசையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இயல்பான துயரமும் இயல்பான பெருமகிழ்வும் சேர்ந்த படிமங்களைப் புறந்தள்ளிவிட்டு, மாறுதலான உலகத்தின் உடைந்த சிதைவையோ உடையாத பல தருணங்களையோ அடையும் ஒருவருக்காகவோ பலருக்காகவோ நவீன தமிழ்க்கவிதை காத்திருக்கிறது.
அழிவின் நிறக்கோவையைப் பிளந்த விரல்களால் தீட்டக்கூடியவர்கள் பாக்கியவான்கள்.
-கவிஞர் பாலைநிலவன்
(நீரின்றி அமையாது உலகு மதிப்புரையில், சாம்பல் சிற்றிதழ், (மார்ச்-ஏப்ரல் 2004)
ஏக்கப்புலி-தலைப்பு-பொருத்தமான உருவகம்.
ஏக்கம் என்பது புலிபோலத்தானே.
கவிதையின் தொடக்கத்தில் அதுவே ஒரு வாடாத/அழகிய மலராக உருவகிக்கப் பெறுகிறது இதுவும் சரிதான்.
அடுத்தடுத்து, நமது ஏக்கம் எந்தெந்த சமயத்தில் எப்படியெப்படி வெளிப்படும் என ஏழு அடுக்குகளில் விவரிப்புகளாக.
எல்லாமே உள்ளதுதான்.
இறுதி ஏழு வரிகளில் அபூர்வமாக முற்றுப்பெறுகிறது, கவிதை.
ஏக்கத்தின் பூரண தினம்
ஏக்கத்தின் பூரண மலர்
சரியான உருவகங்கள்.
எளிமையான/நேரடியான கவிதைதான்
என்றாலும் அருமை.
நல்ல மொழிதல்.
அநேகமும் ஈரிது சீர்கள், முச்சீரும் ஒரு சீரும் விரவ உருவகக் கவிதை என்று குறிப்பிடுகிற அளவுக்கு உருவகங்கள்.
ஆயின் உறுத்தலாக இல்லை.
வாழ்வியல் கவிதைதான்.
ஏதார்த்தமான விஷயம் புனைவு வடிவில்.
ஏதோ ஒன்று இந்தக் கவிதையைக் கவனிக்க
வைக்கிறதே என்ன என்று பார்த்தால், உண்மை.
உண்மை, அழகுபடச் சொல்லப்பட்டால் கவிதை.
தொடர்ந்து, தூரன் குணா நல்லநல்ல கவிதைகள்
எழுதவேண்டும் இந்த அமைப்பு தக்கவைத்துக்
கொள்ளப்பட வேண்டியது.
அவருடைய சுவரெங்கும் அசையும் கண்கள் தொகுப்பு தந்த ஏமாற்றத்திலிருந்து ஏக்கப்புலி மீட்டு வந்துவிட்டது. இதுதான் முக்கியமானது. அது சரி, கவிதை பிடிபட பத்து வருஷமாவது வேண்டாமா. தூரன் குணவுக்குக் கவிதைக்கான காலம் கனிந்து விட்டது. வாழ்த்துக்கள்.
|