அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - காலபைரவன்
காலபைரவன்
எல்லோருக்கும் முன்பாக ஒரு நெடுஞ்சாலை நீண்டுகொண்டேயிருக்கிறது
சற்றைக்கு முன்னர் புணர்ந்த
அவளின் கருங்கூந்தலை ஒத்திருக்குமந்த
நெடுஞ்சாலையின்
ஒருபுறம் நீங்கள்
அதற்கு நேரெதிரே மெல்ல ஊர்ந்து
வருகிறது ஓர் நத்தை
நிலைத்துப் பரவும் வெயிலைப் போல
நகரின் பிரதான நெடுஞ்சாலையைக் கடக்கிறோம்
என்ற அச்சம் சிறிதுமின்றி
மெல்ல முன்னேறுகிறது அது
ஆனால் உங்களால் அவ்வாறு இருக்கமுடிவதில்லை
பெருஞ்சீற்றத்தோடு பாய்ந்து செல்லும்
வாகனங்கள், சாலைவிதிகள்
விடைத்த குறிகளென நிற்கும் கட்டடங்கள்
சடுதியில் கடந்து செல்லும் ஒரு
மரணவூர்தியைப் பற்றியான
பிரமிப்பில் ஆழ்ந்துபோகின்ற கணத்தில்
நாகத்தின் பிளவுண்ட நாவெனத் தோன்றுகிறது
அந்நெடுஞ்சாலை
அனைத்தையும் அலட்சியம் செய்தபடி
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அந்நத்தையிடம்
அதன் சுதந்திரம் குறித்து
பயமின்றி சாலையைக் கடக்கும் நுட்பம் குறித்து
கடக்க வேண்டியதன் தேவைகுறித்து
உங்களின் விசாரணையைத் துவக்குகிறீர்கள்
அந்நத்தை தலையுயர்த்திப் பேசத் தொடங்குகிறது
கேள்வி கேட்பதைப் போன்று அவ்வளவு
சுலபமானது அல்ல ஒரு நெடுசாலையைக் கடப்பது
ஒரு பயிற்சிக்காக நான் தீவிரத்துடன்
பழகிக் கொண்டிருக்கிறேன்
இன்று
நீர்நிலையாய் இருக்கும் என் வசிப்பிடம்
நாளையும் அவ்வாறே இருக்கும் என்பது
என்ன நிச்சயம்
மேலும் இதிலெல்லாம் சுணக்கம் காட்டமுடியுமா
எனக் கூறி
வெயில் ஊர்கிற சாலையில் மெல்ல நகர்கிறது
யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நெடுஞ்சாலையில் சிவப்பு அணைந்து மெல்ல
மஞ்சள் ஒளிரத் தொடங்குகிறது
- காலபைரவன்
(ஆதிராவின் அம்மாவை ஏன்தான் நான் காதலித்தேனா? தொகுப்பு பக்கம் 18-19)
ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதி வடிவமாக, விரிவான அர்த்தத்தில் குறியீடாக நிற்கும்போது மட்டுமே அது இலக்கியத்தில் இயல்பான இடம் பெறுகிறது.
ஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன் சார்பதிவுகள் மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குறியீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறியீடுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அவற்றைப் பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை அது உருவாக்கிக்கொண்டு அதனூடாகப் பேசுகிறது.
இலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குறியீடுகள்தான். அவை அவற்றுக்காக மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்திநிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்திறங்கும் ரயிலும் ரயில்நிலைதல்°தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில் நிலையம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாக ஆகிறது.
அந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான்.
-ஜெயமோகன்
(உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் மதிப்புரையிலிருந்து அகநாழிகை
(டிசம்பர் 2009)
ஏதார்த்தத்தின் மேல் புனைவுகொண்டு கட்டப்பெற்ற கவிதை. முதல் இரு பத்திகளும் எதார்த்தமென்றால், அடுத்த இரு பத்திகளும் புனைவு இறுதிப்பத்தி சித்தரிப்பு (எதார்த்தம்).
நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தையை முன்வைத்து வாழ்க்கை குறித்த விசாரம் (விஷயம் என்று பார்த்தால்)
தலைப்பே சுட்டிக் காட்டுகிறது பொருளை.
நந்தையின் பதில்களில் கவிப்பார்வை.
பார்க்கப்போனால், கவிதையே கவிப்பார்வை விசேஷம்தான்.
நிலைத்துப் பரவும் வெயிலைப்போல
நாகத்தின் பிளவுண்ட நாவென என்ற உவமைகளும்
வெயில் ஊர்கிற சாலையில் என்ற அவதானிப்பும்
கவனம்கொள்ள வேண்டியவை கவித்துவமானவை.
சரியான மொழிதல்.
எளிமையாகவும் நேரடியாகவும் கூடச் சீரிய பொருளைச் சொல்ல முடியும் என்பதை இந்தக் கவிதையை வைத்தே நிறுவலாம்.
(பின்னே ஏன் கவிஞர்கள் சிலர் ஜிம் பாய்° வேலை காட்டுகிறார்கள்.)
நல்ல கவிதை. காலபைரவன்க்குக் கவிதை வசப்பட்டுவிட்டது. அவர் சிறுகதை எழுதுவதோடு தொடர்ந்து, தோன்றும் போது கவிதை எழுதவேண்டும். கவித்துவம், பேணப்பட வேண்டியது. பாராட்டுகள்.
|