அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - கேத்தம்பட்டி செல்வா
உள்வட்டம்
பொன்னரளி செடி பிடித்து
மயிர் உலர்த்தும் செம்போத்து
அடிமரத்தில்
கொழுப்பெடுத்தாட்டும்
வாலறுந்த ஓணான்
தென்னம் ஓலை தறியெடுத்து
ஜிவ்வென்று பறக்கும்
கூடுகட்ட தூக்கணாங்
மல்லித் தோப்பு தாண்டி
பொன்னரளிப் பூக்கள்
தரையிறங்கும் தென்றல்
எங்கிருந்மோ வந்து சேர்ந்த
வெள்ளாடு மேய்க்கும் பூதாளன்
ஆக்கறுவாள் நீட்ட..
பருத்திக்காட்டு வரப்பில் தூங்கும்
பாப்பம்மாள் குழந்தை
வீறிடும் முலைக்காம்பு தேடி.
- கேத்தம்பட்டி செல்வா
(விருட்சம் கவிதைகள் தொகைநூல் இரண்டு பக்கம் 11)
ஆறு பத்திகள். பதினேழு வரிகள். முதல் நான்கு பத்திகளும் இயற்கை மற்றும் ஜீவராசிகள் பற்றிய வர்ணணைகள். அவற்றின் வாயிலாக சித்தரிக்கப்படும் சூழல். கடைசி இரண்டு பத்திகளிலும்தாம் கவிதைப்பொருளே பூடகமாக. வாழ்வுக் கோலத்தைக் காண்பிக்கும் வினயமான கவிதை. இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா. கவிதையின் கனத்தைத் தெரியப்படுத்திவிட்டதாக ஆகிவிடுமா.
பொன்னரளி செடி பிடித்து மயிர் உலத்தும் செம்போத்து ஒரு நல்ல தொடக்கம்.
அடிமரத்தில்
கொழுப்பெடுத்தாட்டும்
வாலறுந்த ஓணான்
ஓணான் இருப்பது போலவேயான படப்படிப்பு.
தென்னம் ஓலை தறியெடுத்து
ஜிவ்வென்று பறக்கும்
கூடுகட்ட தூக்கணாங்
தூக்கணாங்குருவி, கண்முன்னேயே கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மல்லித் தோப்பு தாண்டி
பொன்னரளிப் பூக்கள்
தரையிறங்கும் தென்றல்
தென்றல், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவும் வெளிவட்டம். இனி உள்வட்டம்.
எங்கிருந்மோ வந்து சேர்ந்த
வெள்ளாடு மேய்க்கும் பூதாளன்
ஆக்கறுவாள் நீட்ட..
யாரிடம் நீட்டப்படுகிறது. ஆக்கறுவாள். ஏன்.
பருத்திக்காட்டு வரப்பில் தூங்கும்
பாப்பம்மாள் குழந்தை
வீறிடும் முலைக்காம்பு தேடி.
பாப்பம்மாள் எங்கே. குழந்தையின் அழுகுரல் கேட்டும் அவள் வராதிருப்பதேன்.
கவிதைத்தலைப்பு. உள்வட்டம். விஷயத்தை விளக்கும் பொருளாழமுள்ள தலைப்பு. வெளிவட்டம் விவரிக்கப்படுகிறது முதலில். அது இயல்பானது. கவிதைப் பொருள் அதுவல்லவே. கடைசி அறுவரிகளில் இருக்கிறது.
கிராமத்துக்கு வெளியேயுள்ள புஞ்சைக்காடு அப்படியே வார்த்தைகளில் வருகிறது. ஆரம்பமாக பிறகுதான் நிகழ்வுகள். காட்சி ரூபத்தில்.
கவிதையை முழுக்கமுழுக்கக் காட்சிகள்தாம் இயற்கை சார் காட்சிகள், மானுடம்சார் காட்சிகளாக. முந்தைய காட்சிகள் அழகானவை. இறுதிக்காட்சிகள் அப்படியானவை அல்ல.
சிறுகதை போத அமைந்திருக்கும் கவிதை, இது. இயற்கை சித்தரிப்புகள். மானுடச்சித்தரிப்புகள் எனும் இருமையிலும் முரணில் கட்டமைப்பு. எனிமையாகச் சொல்லியிருப்பது போலத் தென்பட்டாலும், எளிய கவிதையல்ல. அரிய கவிதைதான்.
நுட்பமான கவிஞன். விஷயம், வெளிப்படையாகச் சொல்லப் பெற்றால், விரஸமாகப் போய்விடுமென்று பூடகமாகப் பேசப்படுகிறது. புரியுமென நம்பி. புரிகிறதுதானே.
வெள்ளாடு மேய்க்கும் பூதாளன் நேரடியாகவே வருகிறான் கவிதையில். பாப்பம்மாளின் குழந்தையும் அதேபால . பாப்பம்மாள் இருக்கிறாள். குழந்தையை விட்டுவிட்டு அவள் எங்கே போவாள். பருத்திக்காட்டில் இருந்து கொண்டிருக்கிறாள். ஆனால் கவிதையில் நேரடியாகக் காண்பிக்கப் பெறவில்லை. அவள் இருப்பு. கவிதைத்தலைப்பு, எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது.
விருட்சம் கவிதைகள் இரண்டாவது தொகுதியின் அறிமுக உரையில் தொகுப்பாசிரியரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாசன் கூறியிருப்பனவற்றை இந்த சமயத்தில் இங்கே மொரிவது பொருத்தமாக இருக்கும்.
கவிதைகள் பணி பார்வையை முன்வைப்பதுதான். சொல் மற்றும் பொருளினூடே பிடிபட்டிருக்கும் பார்வை, கவிஞனின் அனுபவமாகவும் அவனுள் ஓர் உள்ளார்ந்த செயலினால் கவிதையாகவும் மீட்கப்படுகிறது. இதனால் கவிதையில் பார்வையும் அனுபவமும் சொற்களும் வேறு வேறல்ல எனும்படி ஒன்றாகின்றன. இயற்கையுடன் ஒட்டியும் சமூக வாழ்வினூடே இயங்கியும் செயல்படுகிற கவிமனதின் அனுபவங்கள் தோற்றுவிக்கும் நிதர்சனம் கவியின் மொழிகின்ற மனதினூடே கவிதையாக உருவெடுக்கிறது. இயற்கையும் சமூகச் சூழலும் தருகின்ற அனுபவத்தால் நேருகின்ற மறுவினையாக கவிஞனுக்குள் கவிதை தூண்டப்படுகிறது.
அப்படியான ஒரு கவிதை தான் இது.
இப்படி ஒரு கவிதை எழுதினால்கூட போதும். கவிவாழ்வு அர்த்தமுள்ளதாகிவிடும். சும்மா, கவிதை உலகில் பிரமுகர் ஆக வலம் வந்து என்ன புண்ணியம்.
திருவிழாக்கலால் நிலைநிறுத்தப்படுவதில்லை கவி இருப்பு காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
காலம், உதிர்த்துவிடாத கவிதையே கவிஞன். தேத்தம்பட்டி செல்வா, அப்படி ஒரு கவிஞன்தான்.
உள்வட்டம் கவிதையினால்.
--------------------------------------------------------------------------------------- |