வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஜெ. பிரான்சிஸ் கிருபா

விக்ரமாதித்தன் நம்பி  

புனைவின் கொடுமுடியில் நின்று கூத்தாடும் கவிஞன்

(ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் வலியோடு முறியும் மின்னல்
கவிதைத் தொகுப்பை முன்வைத்து . ..)

நவீன தமிழ்க்கவிதையின் வளர்ச்சி, மெய்யாலுமே வியப்புத் தருவதாக இருக்கிறது. புதியவர்களின் கைகளில் அது புதுப்புது விதங்களில் வெளிப்பாடு கொள்வதைப் பார்க்கையில், உண்மையிலேயே, மலைப்புத்தான் தோன்றுகிறது. சமீபகாலமாக, இதுபோல அனுபவம் லஷ்மி மணிவண்ணன் கவிதைகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இப்பொழுது, வலியோடு முறியும் மின்னல் தொகுப்பில் பிரான்சிஸ் கவிதைகளில்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் அநேகமும் புத்தம் புதியவையாகவும் பேரனுபவம் நல்குபவையாகவும் இருக்கின்றன. இன்னொன்று, புனைவு இது, பிரான்சிஸ்க்கு நன்றாக வசப்பட்டிருக்கிறது புனைவுக் கோலத்தில், கவிதை மொழியே கனிவு கொண்டுவிடுகிறது.

தமிழ் மரபுக்கேயான ஓர் எளிமையும் இயல்பும் பிரான்சிஸ் கவிதைகளில் இசைந்து வந்திருக்கின்றன பிற நவீன கவிஞர்களிடமிருந்து புரித்து அறியக்கூடிய ஈரமும் பச்சையமும் உள்ள கவிதைமொழியும் வாய்த்திருக்கிறது.

பெரும்பாலான கவிதைகள் நேரடியானவைதாம் சொல்லிப் பகிர்ந்து கொள்தலாக, வாக்குமூலம் போல, முறையீடு செய்வதாக, அறிக்கையிடுதலாக அமைந்தவைதாம் உண்மையின் குரலாக இருப்பதனாலேயே உயர்ந்த கவிதைகளாகி விடுகின்றன, அவை.

யதார்த்தமாகவே சொல்லப்படும் கவிதைகள், யதார்த்தத்தையே புனைவுபடுத்திப் பேசும் கவிதைகள், கனவுத்தன்மையுள்ள கவிதைகள், கற்பனாவாதக் கவிதைகள் என வடிவு கொண்டவை பிரான்சிஸ் கிருபாவின் கவி ஆளுமை, புனைவில்தான் குடிகொள்கிறது. புனைவுக்கவிதைகள்தாம் மாயக்கவர்ச்சியும் வசீகரமும் கொண்டிருக்கின்றன. சொல்முறையே அருமையாகிவிடுகிறது வடிவச்சிறப்பு அமைந்துவிடுகிறது ஒரு தனி அழகே வந்து விடுகிறது.

பேருந்துபூக்காரி

இரவுக்குள் நுழைகிறது பேருந்து.
பயணிகள் களைப்பிலிருக்கிறார்கள்.
பலர் இருக்கையில் இறந்திருக்கிறார்கள்.
சிலருக்கு நின்ற நிலையிலேயே உயிர் பிரிந்திருக்கிறது.

நடத்துனர் விளக்குகளை எரியவிடுகிறார்.
வெளிச்சம் எல்லோர் முகத்திலும் பரவுகிறது.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி
பூக்கட்டும் ஒருத்தியைப் பார்க்கிறேன்.

வெண்ணிறச் சரங்கள் மடியில் முயங்கி வட்டமடிக்கின்றன.
உதிரிப்பூக்களின் வாசம் கடைசி இருக்கைவரை அலைகிறது.
பூக்கட்டும் விரல்களில் காட்டுமான்கள்
கொம்பைச் சிலுப்புகின்றன.
இணைந்து சுழலும் இரண்டு பற்சக்கரங்களாக
கை மணிக்கட்டுகள் மாறுகின்றன.
பேருந்து செல்கிறது செல்கிறது செல்கிறது . ..
ஒலியெழுப்பினால் ஓட்டுனர் சாலையில் உரையாடுகிறார்.
முன் கண்ணாடிச் சதுரங்களுக்கு வெளியே
மலைமலையாக இருள் மறைகிறது.

புறக்காட்சிகள் அழிந்து குகைப்படலத்தில் வேகம் படபடக்கிறது
காற்றில் புரளும் சேலையாக நெளிந்து ஓடும் பாதையை
ஓட்டுனர் துரத்துகிறார்.
பற்கள் நெரிபடும் சப்தம் கேட்கிறது-
கவிழ்ந்த முகத்துடன் பூக்காரி அடிக்கடி புன்னகைக்கிறாள்.
அவள் கைகள் நூல் கண்ணிகளை சுறுசுறுப்பாக இறுக்குகிறது
மெதுவாக நான் கேட்கிறேன்
ஒரு முழம் பூவுக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில்
இந்தப் பேருந்து செல்கிறது அல்லது
ஏழு மைல் தூரத்திற்கு எத்தனை முழம் சரம் வளர்கிறது?
யாரோ தெளிவுபடுத்திய பதிலைச் சீழ்க்கையொலி கிழிக்கிறது.
நிறுத்தத்தில் இறங்கி நடக்கிறேன்.
பரிசோதகர் மறித்து கையை நீட்டுகிறார்.
பையிலிருந்து பயணச்சீட்டை எடுத்துத் தருகிறேன்.
அதை வாங்கி முகர்ந்து பரிசோதித்த மாத்திரத்தில்
பரிசோதகர் நாய்க்குட்டியாக மாறிப் பேருந்தைத் துரத்துகிறார்.
கவிழ்ந்த முகத்துடன் பூக்காரி அப்போதும் புன்னகைக்கிறாள்.
இப்போது நான் பேருந்துக்குள் இல்லை.

(பக்கம்-16)

ஒரு தருணம் புனைவுடன் விவரிக்கப்படுகிறது. சரி, எப்படிக் கவிதையாகிறது. சொல்லும் விதத்தால்தான். ஒரு யதார்த்த நிகழ்வுதான் இப்படி மாயக்கவிதையாக மாற்றப்பட்டிருக்கிறது. கவிஞனின் அவதானிப்புதான் இந்தக் கவிதையின் அடிப்படையே சர்ரியலிஸமாக்கிச் சொல்கிறான் கவிஞன்.

அதையே விவரணங்களால்தாம் கவிதை கட்டப்பட்டிருக்கிறது (திருமணங்கள் நிகழ்வுகளை விவரித்தாலே விவரணங்களாவது தவிர்க்க முடியாதது அப்படித் தோன்றுகிறதா?

இரவுக்குள் நுழைகிறது பேருந்து.
எப்படி. எதார்த்தம்தான் புனைவுபட.
வெண்ணிறச் சரங்கள் மடியில் முயங்கி வட்டமடிக்கின்றன.
உதிரிப்பூக்களின் வாசம் கடைசி இருக்கைவரை அலைகிறது.
வெறும் விவரணங்களா இவை. இல்லை, தற்குறிப்பேற்ற அணி.
பூக்கட்டும் விரல்களில் காட்டுமான்கள்
கொம்பைச் சிலுப்புகின்றன.
என்ன ஒரு ரொமான்டிசிஸம்.


ஒரு முழம் பூவுக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் இந்தப் பேருந்து செல்கிறது அல்லது ஏழு மைல் தூரத்திற்கு எத்தனை முழம் சரம் வளர்கிறது.

பேருந்து பூக்காரி, கவிதைக்குள் வந்தவிதமே இந்தவிதம்தான்.

நான் கூடக்/கண்டிருக்கிறேன், சென்னை மாநகரப் பேருந்துகளில் அதிகாலைப் பொழுதுகளில்-இதுபோல. அவர்களின் கைவண்ணம், தொழில்நுணுக்கம், வேகம் அத்தனையும் மானுட உழைப்பை/சிரத்தையை கவன ஒருமையைக் காட்டுகிறது. நம்பிக்கையை உண்டுபண்ணுபவை – வாழ்வின் மீது.

பிரான்சிஸ், ஆவணப்படம் போலக் காட்சிப்படுத்தி, கவிதையாக்கிவிட்டார். ஆளை விரட்டும் புதுக்கவிதைகளுக்கு மத்தியில், இது போலும் அருமையான புதுக்கவிதைகள் வந்து கொண்டிருப்பதும், தமிழ் வாழ்வின் நிகழ்வுகள் பதிவு பெறுவதும் கொண்டாடப்பட வேண்டியவை.

புதிதாக வரும் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்யப் பத்துப் பதினைந்து கவிஞர்களும் ஒரு நூறு கவிதைகளுமா இருந்தால்தானே நன்றாயிருக்கும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தது
கழுத்துக்கும் கீழே கூந்தல் வளர்த்திருந்த ஒருவன்
ஒரு கிழமையைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்திருந்தான்.
சவரக் கத்தியைக் கழுவுகையில் நிலைக்கண்ணாடியில்
எனக்குப் பின்னே தோன்றி காலை வணக்கம் சொன்னான்.
ஞாயிற்றுக் கிழமை வியாபாரியா என்றேன்.
எல்லாக் கிழமைகளும் விற்பவன்தான்
ஒரு நாளுக்கு ஒரு கிழமை விற்பது என் வழக்கம்.
இன்று ஞாயிற்றுக் கிழமை,
இதை வாங்கி நான் என்ன செய்யட்டும்
தாடையின் வழுவழுப்பை வருடியவாறு கேட்டேன்.

மன்னியுங்கள் பரிவுள்ள வாடிக்கையாளரே
உங்களிடம் வானத்தைத் தந்தால் என்ன செய்வீர்கள்?

உன் கேள்வி பதிலுக்கெட்டாத
உயரத்துக்குப் போய்விட்டது என்றேன்.
மன்னியுங்கள் பரிவுள்ள வாடிக்கையாளரே
உங்களிடம் இந்த பூமியைத் தந்தால் என்ன செய்வீர்கள்
சின்ன குழந்தையிடம் கொடுத்துவிட்டு
பொரி உருண்டை பெற்றுக்கொள்வேன்.

உங்களிடம் சூரியனோ சந்திரனோ சிக்கிவிட்டால்…. ..
வழியில் எதிர்ப்படும் முதல் பிச்சைக்காரிக்கு அளிப்பேன்.

உங்கள் முன் ஒரு கடவுள் வந்து தோன்றினால்
என்னைக் கட்டிப்போட்டுவிட்டு திருடிச் செல்ல அனுமதிப்பேன்.

உயிர்ப்புடன் துள்ளும் ஒரு முத்தம் என்றால்
கருனையுள்ள விபசாரியிடம்
குறைந்தவிலைக்குத் தள்ளிவிடுவேன்.

மன்னியுங்கள் பரிவுள்ள வாடிக்கையாளரே
உங்களிடம் ஒரு தேவதையின் முகவரி தந்தால். ..
முடிந்த அளவு இறந்து பார்ப்பேன்.
ஈரமான வறுமை விழியோரம் பளபளக்க கெஞ்சலாகக் கூறினான்.

மன்னியுங்கள் பரிவுள்ள வாடிக்கையாளரே
ஆசைகள் மேல் இத்தனை தெளிவும்
வாழ்க்கை மீது இவ்வளவு அன்பும் கொண்ட நீங்கள்
இந்த ஒரே ஒரு ஞாயிற்றுக் கிழமையே
ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது?

(பக்கம் 69)

முற்றிலும் புனைவேயான கவிதை. கவிதை, நூதனமானதாக – மாயமுற்றதாக – வினோதமானதாக இருப்பது ஒரு வசீகரம் தான். இது, அப்படியானது.
சரி, கவிதை சொல்லும் விஷயம்?

கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்களைச் சற்றே ஊன்றிக் கவனித்தால், புரியும்.

ஆசைகன்மேல் இத்தனை தெளிவும்
வாழ்க்கை மீது இவ்வளவு அன்பும் என்பனதாம்
கவிதையின் பொருள்.
இதுதான் செய்தி. இது தான் கவியுளம

யாரும் எழுதாத விதத்தில்/எழுதத் தோன்றியிராத முறையில் எழுதுகிறவனே மேலான கவிஞன் அப்படி எழுதப் பெறவதுதான் உயர்கவிதை.

பிரான்சிஸ், ஒரு தனிக் கவிஞன் அவருடைய புனைவுக் கவிதைகள் தமிழிலேயே புதிதானவை.

மரணத்தின் நிறம்
உலகம் விடிந்து பூமியொளிர்ந்ததும் பச்சோந்தி
என் வீட்டு ஜன்னலை வருடி நிற்கும்
மரக்கிளையின் நுனிக்கு வந்துவிடும்.
வாரத்தின் பல நாள்கள் நான்
அதிகாலையே எழுந்துவிடுவேன்
அல்லது எழுப்பப்பட்டுவிடுவேன்.
புதன் என் கிழமை
அன்று நான் பகலின் மீதும் படுத்துறங்குவேன்.
மதியத்தில் மாலையில் அல்லது
இரவில்கூட காலை காப்பியை அருந்துவேன்.
அந்தப் புதன்கிழமைகள் மீதுதான்
பச்சோந்திக்கு அலாதி காதல்,
பசி பட்டினியோடு அது
என் பதிலுக்காகக் காத்துக் கிடக்கும்.

குறிப்பாக எந்நாளும் ஒரு கேள்வியைத்தான் கேட்கும்
இப்போது நான் என்ன நிறத்திலிருக்கிறேன்?
கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்வேன்
எனக்குப் பிடித்த நிறங்களை நம்பிக்கையூட்டும் தொனியில்.
பெரும் மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்லும பச்சோந்தி
ஒரு புதன்கிழமையில் நான் தாமதமாக விழித்திருக்க
கவலையோடு அதன் நிறத்தைக் கம்மிய குரலில் கூறினேன்,
திருப்தியின்றி திரும்பிச் செல்ல விரும்பாமல்
அது அங்கேயே இருக்கிறது.
ஜன்னலை மென்மையாகச் சாற்றிவிட்டு
உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்
எல்லா நாளும் பச்சோந்தி என் நிறத்தில்தானிருந்தது.

(பக்கம் 101)

யதார்த்தம்தான் புனைவாக மொழியப்பட்டிருக்கிறது.
கவிதைத் தலைப்பு மரணத்தின் நிறம் கவனியுங்கள்.
கடைசி வரி எல்லா நாளும் பச்சோந்தி என் நிறத்தில்தானிருந்தது,
இப்போது நான் என்ன நிறத்திலிருக்கிறேன்?
கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்வேன்
எனக்குப் பிடித்த நிறங்களை நம்பிக்கையூட்டும தொனியில்.
பெரும் மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்லும் பச்சோந்தி.
ஒரு புதன்கிழமையில் நான் தாமதமாக விழித்திருக்க
கவலையோடு அதன் நிறத்தைக் கம்மிய குரலில் கூறினேன்.
திருப்தியின்றி திரும்பிச் செல்ல விரும்பாமல்
அது அங்கேயே இருக்கிறது.
இந்த வரிகளை இணைத்துப் படித்தால், விஷயம் புலப்படும்.

பிரான்சிஸின் நிறையக் கவிதைகள் தற்சார்பானவை அல்லது தன்னிலை கொண்டவைதாம். காரணங்கள் இருக்கின்றன இந்த மன்பதையின் பிரம்மாண்டத்தில், கவிஞன் எளிய பிராணியாகிவிடுகிறான், அப்பொழுதுதான், அவன், தான்/தன் என்று எழுத நேர்கிறது. நமது சமூகச் சூழலில், உண்மையான கவிஞன் பற்றிக் கொள்ள ஒன்றுமில்லை, இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் எழுதவும் நேரிடுகிறது. நவீன வாழ்விலும் நவீன கவிதையிலும் இப்படி இப்படி வெளிப்படுவது நேரக்கூடியதுதான்.

படுக்கையறையை பல்லியோடு பகிர்ந்துகொள்ளல்
தொலைபேசியில் வந்தது யார்?
யாரோ தூக்கம் கெட்ட சனியன் என்றது
யாரைக் கேட்டது?
உன்னைத்தான் என்றது
என்ன சொன்னாய்?
இல்லை என்றேன்
ஏன் அப்படிச் சொன்னாய்?
அகாலமாகிவிட்டது என்றது
ஆணா பெண்ணா?
பெண்
எரிச்சலோடு தன்னிடத்திற்குத் திருமபிப்போனது.
படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டேன்.
கண்ணீர் நாறிய தலையனையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுத்து
மேகரதம் செலுத்தும் கற்பனையை

மூட்டைப் பூச்சியைப் போல் நசுக்கினேன்.
நேற்றிரவு ருசித்த நித்திரையில்
கீழுதட்டோடு தொண்டையையும் கிழித்த
நிலைக்கண்ணாடித் துண்டுகள் இன்று மழைத்தன.
கனவுகளுக்கஞ்சி கண்களை இறுக மூடிக்கொண்டேன்.
தொலைபேசியில் மீண்டும் மணியடித்தது.
நாற்காலையில் அமர்ந்து போரும் அமைதியும்
புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த மரப்பல்லி
பேராவேசத்தோடு எழுந்து சென்றது
தொலைபேசியை எடுத்து அமைதியாகப் பேசியது.
இந்த முறை நான் உறங்கிவிட்டதாகத் தெரிவித்தது.
நான் விhத்திருப்பதை நிரூபிக்க முயன்று
போர்வையை கோபத்துடன் உதற
அது கிழிந்து இரண்டு சிறகுகளாக விரிந்தது.
சாம்பல் நிறக் கண்ணையுருட்டிய மரப்பல்லி
அருகில் சீறி வந்து நின்ற பூச்சியை எடுத்து
வாயிலிட்டு மென்றவாறு பேச்சைத் தொடர்ந்தது.

*(பக்கம் 92)

படுக்கையறையை பல்லியோடு பகிர்ந்துகொள்ளல் கொடுமைதான்.

கண்ணீர் நாறிய தலையனையறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன.
இருக்கும் ஸ்திதி.
மின்னல் கொடியிழுத்து
மேகரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கினேன்.

யதார்த்தத்தில் நிலைகொள்ள விழைவது?
நேற்றிரவு ருசித்த நித்திரையில்
கீழுதட்டோடு தொண்டையையும் கிழித்த
நிலைக்கண்ணாடித் துண்டுகள் இன்று மழைத்தன.
கனவுகளுக்கஞ்சி கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

கனவுகளுக்கும் அச்சம்.
போர்வையை கோபத்துடன் உதற
அது கிழிந்து இரண்டு சிறகுகளாக உதிர்ந்தது.
உள்ள நிலை.

நமது நவீன கவிதையில், தன்னிரக்கம், விரக்தி, மன முறிவு எல்லாம் ஏற்கெனவே கொண்டு வந்து கொட்டப்பட்டு விட்டன, இனிமேல் அவற்றுக்கெல்லாம் இடமில்லை இதைப் புரிந்துகொண்ட இன்றைய கவிஞர்கள், தங்கள் கவிதையில் ஓர்மையோடு இருக்கிறார்கள் புனைவின் மடியில் போய் அமர்ந்து கொள்கிறார்கள் கவிதை, வேறு ரூபம் கொள்கிறது, கவிஞன், புகார்க்கு ஆளாகாமல் இருக்கிறான் நல்லது தானே.

கவிதையிலேயே கருத்தாக இருக்கும் கவிஞர்கள் இன்றைய நாளில் – கைக்கொள்ளும் உத்திதான் புனைவு எந்த விஷயத்தையும் நயத்தக்க முறையில் சொல்லிவிடலாம்.

இப்பொழுது, இந்தக் கவிதை, புரிந்திருக்கும் இதுபோலக் கவிதைகளுக்குப் பின் உள்ள உழைப்பும் சிரத்தையும்கூட.

நேற்று ஞாயிற்குக்கிழமை வந்திருந்தது, மரணத்தின் நிறம், படுக்கையறையை பல்லியோடு பகிர்ந்து கொள்ளல் ஆகிய மூன்று கவிதைகளுமே உலகக் கவிதைக்கு இணையானவை, மொழிபெயர்த்தால் அகிலம் கொண்டாடும் வெளிநாட்டார் வணக்கம் செய்வார்கள். நிச்சயம்.

பிரான்சிஸ், நம் காலத்துக்கவிஞன், இவன் கவிதைகள், இந்த இனத்துக்கும் மொழிக்கும் கிடைத்திருக்கும் சம்பத்துகள்.

அயனான கவிதைகளைக் கண்டுகொள்கிறவர்கள்தாம் அறிஞர்கள்.

கவிராஜ சிங்கங்களை அறிந்து கொள்கிறவர்கள் தாம் பேரறிஞர்கள்.

சும்மா, பஞ்சுமிட்டாய்க் கவிதைகளையே படித்துக் கொண்டும் பாராட்டிக்கொண்டும் இருப்பவர்கள், பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவிப்பவர்களே ஆவார்கள், இந்த இனத்துக்கும் மொழிக்கும் கொடை நல்கியிருக்கும் கவிஞனைக் கொலை செய்பவர்களும்தாம். இன்றும் என்ன சொல்ல.

-----------------------------------------------------------------------------------------------

கிடைக்குமிடம்

தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை
ராயப்பேட்டை
சென்னை - 600 014.

விலை ரூபாய் 50/*-


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</