அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - கலாப்ரியா
விக்ரமாதித்யனின் கவிதை அனுபவம் - கலாப்ரியா
விதி - கலாப்ரியா
அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்,
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை
-கலாப்ரியா
(`மற்றாங்கே' தொகுப்பு, பக்கம் 8)
தீவிரமான அனுபவ உணர்த்துதலின் மூலம், வாழ்க்கையின் இருள் பிரதேசத்தில் ஓர் ஒளிக்கீற்றைப் பாய்ச்சிவிடும், கவிதை. அந்த ஒளிக்கீற்றின் வெளிச்சத்தில் வாழ்க்கையின் உள்ளார்ந்த ஏதேனும் அர்த்தங்கள் பிடிபடும். அல்லது அது சார்ந்த கேள்விகள் எழுப்பப்படும். அவ்வகையில் சிறுகதையை விடவும் செறிவான நுட்பமான கலை வெளிப்பாடாக கவிதை அமைகிறது. மேலான கவிதையை இவ்விதமாக இனம் காணலாம்.
- ராஜமார்த்தண்டன்
- (காலச்சுவடு காலாண்டிதழ், ஏப்ரல் – ஜீன் 99)
கலாப்ரியாவின் இந்தக் கவிதை, எளிமையானது நேரடியானது சொல்கிற செய்தி, வினோத முரணானது. அந்திக் கருக்கலில், திசைதவறிய பெண்பறவை தன் கூட்டுக்காகவும் குஞ்சுக்காகவும் அலை மோதிக் கரைவதைக் கண்டு பதற்றம் கொள்கிறார், கவிஞர். அந்தப் பறவையின் கூடும் குஞ்சும் தெரிந்திருந்த போதிலும், அதன் மொழி தெரியாது அதுதான் பிரச்சனை.
நம்முடைய தொல்கதைகளில் பறவைகளின் பாஷை, விலங்குகளின் மொழி தெரிந்து வைத்திருக்கும் மாந்தர்கள் பற்றி படித்திருக்கிறோம், அஃது உண்மையாகவும் இருக்கலாம். அது போல அறிந்திருந்தால், அந்தப் பெண்பறவையின் துயரத்தை நிவர்த்தி செய்திருக்கலாம் நிம்மதியாய் இருந்திருக்கும்,
ஆதி கவி வால்மீகி, வேடனாக இருந்த காலத்தில், இணைப்பறைவகளில் ஒன்றை அம்பெய்து, அஃது உயிரிழந்துபோக, துணைப்பறவையின் ஓலம் கேட்டுத் தாளமுடியாத துயருற்று, கவியானார் என்பது ஐதிகம், அஃது தான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
தனக்கு நேரும் துன்பம் மட்டும் பிரச்சனையல்ல, பிற உயிருக்கு ஏற்படும் கஷ்டமும் வருத்தம் தருவதுதான்.
மனிதன், சகமனிதனிடம் மட்டுமல்லாமல், சகல ஜீவராசிகளிடத்தேயும் தயையும் பிரிவும் உடையவனாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிறான் தனது ஆறாவது அறிவு காரணமாக. (அஃது இல்லையென்றால் பிரச்னையில்லை, அப்படியும் அநேகம் பேர் இருக்கிறார்கள் தாம் பகுத்தறிவு இல்லாத குறையில் அவர்களிடமும் பொருத்தி காண்பிக்க வேண்டியவன் மானுடன்.)
புத்தர், இயேசு, வள்ளுவர், வள்ளலார் எல்லோரும் வாழ்ந்து காட்டியதும் போதித்ததும் சக உயிர்களிடத்தே அன்பு என்பதுதானே.
கவிஞனின் கருணை உள்ளம் கவலை கொள்கிறது. அந்தப் பறவையின் ஆற்றாமைக் குரல் கேட்டு அதன் அரற்றல் மனசைப் பாதிக்கிறது. என்ன செய்யக் கழியும் அந்தப் பெண்பறவையின் மொழி தெரியாதபோது, விதிதான்,
பன்னிரெண்டே வரிகள்தாம், சங்கப்பால்களில் அநேகமும் குறைந்த வரிகளில் இருக்கின்றன.
குறைந்த வரிகளில் கூறத் தெரிந்தவனே மேலான கவிஞன். அளவே ஓர் அழகு.
கலாப்ரியாவின் தொடக்ககாலக் கவிதைகள் பலவும் திட்டமான வரிகளுள்ளவைதாம் அந்தக் கவிதைகள் யாவும் சங்கச் சித்திரங்கள் போலத்தாம்.
கவிஞனின் தனி அனுபவம் பொது அனுழுவமாக மாறியிருப்பதே, அஃதை அடையாளம் காண வழிசெய்யும் உண்மையான/உணர்வார்ந்த கவிதைகளை உலகம் எப்போதுமே ஏந்தி வாங்கிக் கொள்ளும், மானுட உள்ளத்தில் இடம் பெறுபவனே மகாகவி. விதி அதுபோலும் ஒரு கவிதை கலாப்ரியா, அப்படியான ஒரு கவிஞன்.
நவீன தமிழ்க் கவிதை, பத்து, பன்னிரெண்டு கவிஞர்களாலேயே நின்று நீடித்து வருகிறது அவர்கள் காட்டும் உலகமே இன்றைய தமிழ்க் கவிதையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுமிருக்கிறது. இலக்கிய வரலாறு இதையே மெய்ப்பிக்கும். |