வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
வலது புறம் செல்லவும்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


அகத்தியன்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில் முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன். இவரது இயற்பெயர்கருணாநிதி என்பதாகும். இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் பேராவூரணி ஆகும். இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த "மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991 ஆண்டு வெளிவந்தது. 1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த "மதுமதி' வெளிவந்தது. இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார். மூன்றுஆண்டுகள் டைவெளிக்குபின்னர்1996
இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த வான்மதி"
படத்தை இயக்கினார்.

தேவா இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அதே1996 ஆண்டு வெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரை உலகத்தை இவர்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. படம்மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்கம்
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அகத்தியனுக்கு மட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப்படம் தமிழ்சினிமாவின் டிரென்ட் செட்டராக அமைந்தது. பின்னர் இதே ஆண்டில்
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை"படம் மூலம் மீண்டும் தான்
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் . இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது.

நடிகர் கார்த்திக்கும் இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்
சுவலட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்.1997 இல் "விடுகதை வெளியானது. 1998 இல்பிரசாந்த் இஷாகோபிகர் நடிப்பில் வெளிவந்த "காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கி
தந்தது. இளையராஜா இசையில்இந்தப்படத்தின்
பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல் "காதல் சாம்ராஜ்யம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து "ராமகிருஷ்ணா" 2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

அகத்தியன் கடைசியாக எடுத்த படம்
விக்ராந்த், பாரதி நடிப்பில் வெளிவந்த
"நெஞ்சத்தைகிள்ளாதே". சரவணன் நடித்த "சந்தோசம் " படத்தின் திரைக்கதை இவர் எழுதியதே. சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார்.

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி
சென்னை 28 , கற்றது களவு, அதே
நேரம் அதேஇடம், அஞ்சாதே ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு
"சுல்தான் திவாரியார்" அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இன்னொரு மகள் நிரஞ்சனி
costume designer ஆக இருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின்
கணவர் திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தின் இயக்குனர் ஆவார். அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை
படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS வலது புறம் செல்லவும் TS அகத்தியன் தொடர்கள் வாயில்

வலது புறம் செல்லவும் - 8


இயக்குனர் அகத்தியன் 16-05-2011, 01:58 PM

சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஒரு தோழி அனுப்பி இருந்தார்.

ஒரு தாயின் திருவயிற்றில் குடியிருந்த ஒரு குழந்தையிடம் நீ நாளை பூமியை தரிசிக்கப் போகிறாய் என்று கடவுள் சொன்னார்.

குழந்தை அழுதுகொண்டே கேட்டது. நான் எப்படி அவர்களோடு பேசுவேன்?

உனக்கு பேச்சைக் கற்பிப்பதற்காக ஒரு தேவதையை நான் ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார் கடவுள்.

நான் எப்படி உங்களை வணங்குவேன்?

அந்த தேவதை உனக்குச் சொல்லித் தருவாள்.

நான் நல்லனவற்றை எப்படிக் கற்றுக் கொள்வேன் ?

அதையும் அந்த தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள்.

நான் துன்பப்படும்போது என்ன செய்வேன்?

அந்த தேவதை உன் அருகிருப்பாள். துன்பம் தீர்ப்பாள்.

நான் எப்படி அந்த தேவதையைக் கண்டு கொள்வேன்?

பூமியில் அந்த தேவதையின் பெயர் அம்மா.

பூமியில் அன்னையாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக இன்னும் பல்வேறு வடிவங்களில் உறவின் பெயர் தாங்கி தேவதைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் எப்போதோ படித்த இரண்டு கதைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன.

ஒரு எகிப்தியக் கதை. கி.மு. 4800 ஐச் சார்ந்தது. THE TALE OF KHAFRI என்பது கதையின் தலைப்பு.

ஒரு அரசன் தன் பணியாளர்களோடு கோவிலுக்குச் செல்கிறான். அவனோடு அரசவை மந்திரக்காரனும் உடன் செல்கிறார். கோவிலில் அந்த மந்திரக் காரனின் மனைவி அரசனின் பின்னால் நிற்கும் ஒரு மெய்க்காப்பாளனைப் பார்க்கிறாள். காதல் வசப்படுகிறாள். தன் பணிப்பெண் மூலம் அழகிய ஆடைகளை அவனுக்கு பரிசாக கொடுத்தனுப்புகிறாள். அந்த மெய்க்காப்பாளன் மந்திரக்காரனின் மனைவியைச் சந்திக்கிறான்.

மந்திரக் காரனுக்கு ஒரு அழகிய ஏரியின் அருகில் ஓய்வில்லம் இருக்கிறது. அங்கு அவர்கள் நாள் முழுவதும் குடித்தும் காமக்களிப்புற்றும் இருக்கின்றனர். மாலையில் அந்த மெய்க்காப்பாளன் நீர்நிலையில் நீந்திக் களிக்கிறான்.

ஓய்வில்லத்தின் பணியாள் இதை மந்திரக்காரனுக்கு தெரிவிக்கிறான். மந்திரக்காரன் மந்திர வார்த்தைகள் அடங்கிய புத்தகத்துடன் ஏரிக்கு வந்து மெழுகால் ஏழு அங்குல நீளமுள்ள ஒரு முதலையைச் செய்து புத்தகத்தில் உள்ள மந்திரங்களை உச்சரித்து மெழுகு முதலையைப் பணியாளிடம் தந்து மீண்டும் அவன் இங்கு வந்து குளிக்கும்போது இதை நீரில் விட்டுவிடு என்கிறான்.

அடுத்தமுறை மெய்க்காப்பாளன் அங்கு வந்து குளிக்கும்போது பணியாள் அதை நீருக்குள் எறிய மிக நீண்ட உயிருள்ள முதலையாக மாறி அவனை நீருக்குள் இழுத்துப்போய் விடுகிறது.

சில நாட்கள் கழித்து மன்னனை அங்கு அழைத்து வரும் மந்திரக்காரன் மன்னனிடம் நடந்ததைக் கூறி அவனை வெளியே கொண்டு வா என முதலைக்கு கட்டளை இடுகிறான். அது அவனை வெளியே கொண்டு வருகிறது. கோபமுற்ற மன்னன் அவனை உன் உணவாக்கிக் கொள் என்று முதலைக்கு ஆணையிட அது அவனை நீருக்குள் இழுத்துக் கொண்டு போகிறது. மன்னனின் ஆணைப்படி மந்திரக்காரனின் மனைவி உயிரோடு எரிக்கப்பட்டு அவள் சாம்பல் ஆற்றில் வீசப்படுகிறது.

சற்றேறக்குறைய 6800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை இது. உண்மையில்லாத மனைவிக்கும் பழிவாங்கும் கணவனுக்கும் இடையேயான கதையாக இது மேலோட்டமாகத் தெரியலாம். ஆனால் மனித கலாச்சாரத்தின் ஒரு பதிவாக இது இருக்கிறது.

வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் பெண் சொத்துக்கு உரிமை உடையவளாக இருந்தாள். ஆணிண் வருமானமோ உடமைகளோ பெண்ணுக்கே உரிமையுடையனவாக இருந்தன. அந்தக் காலக்கட்டம் தாயுரிமைச் சமுதாயமாக இருந்தது. நதிக்கரை நாகரிகம் தோன்றிய நேரத்தில் பெண் நிலத்தில் விளைவிப்பவளாகவும் ஆண் உணவுக்கு வேட்டையாடுபவனாகவும் மாற்றம் கொண்டிருந்தனர். விளைநிலங்களின் வருமானம் பெண்ணின் கையிலிருந்தது. ஒரு பெண் யாரையாவது மணம் செய்து கொள்ள விரும்பினால் மேலே சொன்ன கதையில் வந்ததுபோல் அவள் அவனுக்கு அழகிய ஆடைகளை அனுப்புவது வழக்கமாயிருந்தது. அவளுக்கு ஒரு கணவனைப் பிடிக்கமல் போனால் பிடித்த ஒருவனுக்கு ஆடைகளை அனுப்பி கணவனாக்கிக் கொள்வதும் வழக்கத்திலிருந்தது.

எகிப்தில் அரசன் ஆளும் ஆணாதிக்கம் வந்த பின்பு சொத்துரிமையும், திருமண உரிமையும் ஆண்களுக்குச் சாதகமாக மாற்றப்பட்டன. அந்தக் காலத்தில் பெண் தவறு செய்பவளாக இருந்தாள் என்று இங்கே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். தாய்வழிச் சமூகத்தின் உரிமையாக அது இருந்தது. அந்தப் பெண்ணின்காதலன் முதலைக்கு இரையாக்கப்பட்டதும், அவள் உயிரோடு எரிக்கப்பட்டதும் ஆணாதிக்க சமுதாயம், பெண்கள் தங்களின் தாய்வழிச் சமூக உரிமையை விட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் விதித்த தண்டனைகளாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு கதை. இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கிரேக்கம் சார்ந்தது. ஒரு பெண்ணின் கணவன் இறந்து போகிறான். அந்தப் பெண் நற்குணங்களோடு மற்றவர்களின் பொறாமையைத் தூண்டுவளாக இருந்தாள். அவர்கள் வழக்கப்படி கூந்தல் முடியாமல் திறந்த மார்பகங்களில் அடித்துக் கொண்டு அழுதாள். கிரேக்க முறைப்படி அவன் பெட்டியில் வைக்கப்பட்டு நிலவறையில் அடக்கம் செய்யப்பட்டான். துக்கம் தாளாத அவள் அந்த சவப் பெட்டியின் அருகில் இருந்து நகரவே இல்லை. பெற்றோரும் மற்றோரும் எவ்வளவு சொல்லியும் அவள் கணவனை விட்டு நகரவே இல்லை. அனைவரும் அவளை விட்டு விட்டு வீடு திரும்பினர். கணவன் உடல் மீது விழுந்து புரண்டாள். ஊன் இல்லை. உறக்கம் இல்லை. கற்புக்கும் காதலுக்கும் இலக்கணமான பெண் என்று அவளைப் பற்றி ஊரே பேசியது.

அந்தக் காலத்தில் குற்றம் செய்பவர்களை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை இருந்தது. அவ்வாறு தண்டனைக்குட்பட்ட சில திருடர்களை சிலுவைகளில் அறைந்து அந்த நிலவறைக்கு அருகில் நிறுத்தினர். திருடர்களின் உறவினர் உடல்களைத் திருடிச் செல்வதைத் தடுக்க ஒரு காவலன் நியமிக்கப்பட்டான்.

அந்தக் காவலன் அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டான். அவள் இடம் சென்றான். இறந்து போனவனை மறந்துபோகாத அவள் மேல் இரக்கம் பிறந்தது. கிறக்கமும் பிறந்தது.

அவளுக்காக உணவும் ஒயினும் வாங்கி வந்தான். அவன் இரக்கத்தை அவள் மறுத்தாள். இறந்தவனோடு இறக்கப் போகிறேன் என்று விரித்த கூந்தலோடும் அறைபடும் மார்போடும் கணவன் உடல்மீது மீண்டும் புரண்டு அழுதாள்.

அவன் ஏதேதோ பேசினான். ஆறுதல் சொன்னான். ஒரு புதிய ஆண் அருகிருந்து ஆறுதல் சொல்ல தேறினாள். தெளிந்தாள், மதுவுண்டாள். உணவுண்டாள். வயிற்றுப் பசியடங்க உடல்பசி கண்டது. இளைத்தாள். களைத்தாள்.

வெளியே இருந்த ஒருவனின் உடல் உறவினரால் திருடிச் செல்லப்பட்டது. அறிந்த காவலன் மன்னன் அறிந்தால் என்தலை வாங்கப்படும் என்றான். அன்பும் இரக்கமும் அந்தப் பெண்ணுள்ளத்தில் நிரம்பியது.

இறைவனிடம் பிராத்தித்தாள். இறைவா என்னால் ஒரே நேரத்தில் இரண்டு கணவர்களுக்காக அழமுடியாது. ஒரு கணவன் உயிர்வாழ இன்னொரு கணவன் உதவட்டும் என்றார். அந்தக் காவலனிடம் தன் கணவனை சிலுவையில் வைத்து அறைந்துவிடு என்றாள்.

காலங்காலமாக மேற்கத்திய கலாச்சாரத்தில் பெண்கள் சிலுவையில் அறையப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த விடுதலை உணர்வும் வலிமை மனமும்தான். கல்வியறிவுவும். அதன் விளைவாக வளர்ந்த நாகரிகமும் பெண்ணுக்கு கிடைத்தபோது ஆணாதிக்கத்தை உடைக்கின்ற குடும்ப உறவுகளை அது பெருக்கிக் கொண்டது.

நாமறிந்த வரலாறுகளில் புத்தரைப்போல், ஏசுவைப்போல், நபிகளைப்போல், ஜொராஸ்டியர், கன்ஃபூசியஸ்போல் எந்த ஒரு பெண்ணும் இந்த பூமியில் ஒரு மதத்தை உருவாக்கவில்லை.

பெண்களின் நீண்ட நெடிய வரலாற்றில் அதற்குத் தகுதியானவர்கள் இல்லாமல் இருந்திருக்க முடியாது. இந்த சமூகம் பெண்களுக்கு அதற்கான உரிமையை வழங்கவில்லை என்றே கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனோ தெரியவில்லை. பெண்ணை வைத்தே பெண்ணைத் தவறாக சித்தரிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது. சாலமோன் அரசவையில் ஒரு குழந்தைக்காக இரண்டு அன்னையர் உரிமைகோரும் வழக்கில் சாமோனுடைய புத்திசாலித்தனம் தெரியலாம். ஆனால் ஒரு பெண் ஒரு குழந்தையை இரண்டாக வெட்டித் தரச் சம்மதிப்பாளா என்பது கேட்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது.

புத்தர் கதையிலும் அதுதான். இரண்டு அன்னையர் ஒரு குழந்தைக்காக வழக்காடியபோது நடுவில் ஒரு கோடுபோட்டு குழந்தையை கோட்டிற்கு நேராகத் தூக்கிப்பிடித்து ஆளுக்குப் பாதியாக பிய்த்துக் கொள்ளச் சொல்கிறார். ஆனால் இங்கே இன்னொரு பெண் என்பது பிசாசு என்று உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரம்மச்சரியத்துக்கும் துறவு வாழ்க்கைக்கும் பெண் ஊறு விளைவிப்பாள் என்ற கருத்தே பெண்களை ஒதுக்கி வைக்க காரணமானது. வெளியே கட்டுப்பாடுள்ள மனமும், சீரிய ஒழுக்கமும் கொண்டு துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் ஆண்கள் பலவீனர்களாக இருந்ததே இதற்குக் காரணம் என்று ஆண் சமுதாயம் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளவே இல்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னதாக ஒரு கதை உண்டு. ஒரு குருகுலத்தில் மாணவர்கள் குருவிடம் கூட்டிப் பெருக்கவும், தண்ணீர் எடுத்து வைக்கவும், ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கின்றனர். குரு மறுக்கிறார். ஒரு வயதான பெண்ணையாவது வேலைக்கு வைக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நாளை பதில் சொல்கிறேன் என்று கூறி அனுப்பி விடுகிறார்.

இரவு அவர்கள் தங்கும் குடிலில் சாணம் கரைத்த தண்ணீரை குடிநீருக்குப் பதிலாக வைக்க ஏற்பாடு செய்கிறார். இரவில் தணியாத தாகம் ஏற்பட சாணநீர் தெளிய வைத்து குடிக்கப்படுகிறது. மறுநாள் குரு மாணவர்களிடம் சொல்கிறார். தாகம் என்று வரும்போது மனம் சாணம் கலந்த நீரைக்கூட ஏற்றுக்கொள்கிறது. காமமும் அப்படித்தான். இளம் பெண்கள் வயதானவர்கள் என்று பார்ப்பதில்லை.

இந்தக்கதை பெண் விலக்கப்பட்டது ஆண்களின் பலவீனத்தினாலேயே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

விஸ்வாமித்திரனுக்குள்ளும் ஒரு பலவீனம் இருந்தது. அதை இந்திரன் அறிந்திருந்தான். அவனுடைய தேவைகளே அடுத்தவனின் தேவையாக இருக்கும் என்று கணித்தான். மேனகை காரியமாற்றினாள்.

யூதமதம் பெண்ணை ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மதத்தில் பெண் கடவுளாக மதிக்கப்படவில்லை. வரலாற்றில் ஆன்மீகப் பாதையில் ஒரு பெண்ணை தன் பக்கத்தில் வைத்துக் கொண்ட முதல் மனிதன் ஏசு. புத்த மதத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் புத்தருடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தன் மனைவி, குழந்தை, அரசு என்ற பந்தங்களை அறுத்துவிட்டுத்தான் உலக பந்தங்களை அறுக்க வந்தார் புத்தர். ஏசு துணிந்து ஒரு பெண்ணை அருகிலிருத்தினார். அதுவும் ஒரு பாலியல் தொழிலாளியை.

நான் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்தபோது ஒரு நாள் மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பாதுகாப்புக்கு வந்த காவல்துறை அதிகாரி பேச்சின் இடையே சொன்னார். ஆண்கள் ஆயிரம் தவறு செய்யலாம். ஆனால் பெண்கள் உத்தமியாக இருக்க வேண்டும். ஓரு மாணவன் கேட்டான். அப்படியென்றால் ஆண் ஆடுமாட்டிடமா உறவு கொள்கிறான். பெண்கள் அனைவரும் உத்தமியாக இருப்பதற்கு.

எந்த ஆண்கள் தங்கள் தேவைக்காக பாலியல் தொழிலை அங்கீகரித்தார்களோ அதே ஆண்கள் மேரி மக்தலினைத் துரத்தி வரும் போது இது பெண்ணின் தவறல்ல ஆண் சமுதாயத்தின் தவறு என்று யோசித்த முதல் ஆண் ஏசு. அதனால்தான் ஆண்கள் சார்பாகச் சொன்னால் உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்.

ஆண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பதல்ல அது. ஆண் சமுதாயம் பெண்ணுக்கு இழைக்கும் தீங்கு அது. அதை உணர வைத்தார்.

ஆண் சமுதாயம் மேரிமக்தலீனை விட்டு ஒதுங்கியபோது அவரும் அந்த வாழ்க்கையை விட்டு ஒதுங்கினார். ஏசுவைப் பின் தொடர்ந்தார். அவரின் உரைகளைக் கேட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அருகில் இருந்தார். உயிர்த்தெழுந்த ஏசு முதலில் சந்தித்தது மக்தலினைத்தான்.

ஒரு ஏசு செய்த காரியத்தை அதற்கு முன் செய்ய ஏன் ஒரு ஆண் இல்லாமல் போனான். மேரி மக்தலீனைப் பற்றி மதகுருக்கள் ஏனோ பேச மறுக்கிறார்கள். பன்னிரெண்டு சீடர்களோடு இருந்த பெண்ணை ஆணாதிக்கம் மறுப்பதும் மறைப்பது இயல்பே. ஏசுவைப் பெற்றெடுத்த அன்னைமேரியை திருச்சபை அங்கீகரித்து வழிபாட்டு சின்னமாக ஆக்க காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேரி மக்தலீனுக்காக காலம் காத்திருக்கிறது. ஒருவேளை ஏசு இன்னொரு முறை வரலாம்.

நபிகள் பெண்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மதக்கோட்பாடுகளில் வைத்தார். அன்றைய அரேபியர்கள் காட்டரபிகள் என்று அழைக்கப்பட்டனர். குடிப்பதும், வன்புணர்ச்சியில் ஈடுபடுவதும் வியாபாரத்தைப் போல தொழிலாக இருந்தது அவர்களுக்கு.

ஆண்களின் பார்வையில் இருந்து தப்பிக்க உடல் மற்றும் முகம் மறைக்கச் சொன்னார். திருமணத்தை ஒழுங்குபடுத்தினார். ஆனால் இஸ்லாம் பெண்களை தள்ளியே வைத்திருந்தது. அண்மைக்காலத்தில் கூட பள்ளிவாசலில் பெண்ணுரிமை பேசிய ஒரு கவிதை கண்டனத்துக்குள்ளானது.

ராமகிருஷ்ணர் தம் துறவு வாழ்க்கையில் தம் துணைவியை அருகே வைத்துக் கொண்டார். அவரை விட ஒருபடி மேலே போனார் விவேகானந்தர். அவரைச் சுற்றிலும் நிறையப் பெண்கள். சகோதரிகள் ஆனார்கள். அமெரிக்காவில் ஒரு அன்னை சொன்னார். நரேந்திரா எனக்குப் பயமாயிருக்கிறது. உன்னை சுற்றி நிறையப் பெண்கள்.

விவேகானந்தர் சொன்னார். அரண்மனைப் பணிப் பெண்கள் சாமரம் வீச அரண்மனையில் தூங்கியிருக்கேன். இந்தியாவின் புழுதி படிந்த தெருக்களில் தூங்கியிருக்கிறேன். எந்த நிலையிலும் நான் இடர்பட்டதே இல்லை. கவலைப்படாதீர்கள் அன்னையே என்று.

தன் மேல் நம்பிக்கை கொண்ட மனிதன் தன்னைத் தானே வெல்லமுடியும் என்று நிரூபித்த ஆண் அவர். அவரைப்போல் வரலாற்றில் ஒரு சிலரே கண்ணுக்குத் தெரிகின்றனர்.

பைபிள் ஆதாம் தோன்றினான் என்கிறது. விலா எலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டாள். ஆதாமை தோற்றுவித்த கடவுளுக்கு ஏன் ஏவாளை தோற்றுவிக்க இயலாமல் போனது. ஒரு எலும்பில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குபவர் ஆதாமை மட்டும் ஏன் வேறு மாதிரி உருவாக்கினார். கடவுள் ஆண் என்பதாலா அல்லது பைபிள் ஆண்கள் தோற்றுவித்தது என்பதாலா?

வரலாறும் உண்மையும் வேறு விதமாக இருக்கிறது. முதலில் ஒரு பெண் பிறந்தாள். பின் சந்ததி தோன்றியது.

அறிவும் விஞ்ஞானமும் கேட்கும் கேள்வி. முதலில் எப்படி பெண் தோன்றினாள். வலதுபுறம் செல்லுங்களில் வேறு எங்கோ நாம் சிலவற்றைப் பேசும்போது மேலே சொன்ன வாக்கியத்திற்கான காரணங்களைத் தேடுவோம்.

இப்போது முதலில் தோன்றியது பெண். ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் பல்கிக் பெருகி குறைந்தது ஐநூறு பேராவது பெருகிய பின்பே சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்து அலைந்திருக்க வேண்டும்.

அந்தக் குறுஞ்செய்தியை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

நாளை நீ பூமியை தரிசிக்கப் போகிறாய்?

நான் எப்படி அவர்களோடு பேசுவோன்?

நான் உனக்கு பேச்சு கற்பிக்க ஒரு தேவதையை அனுப்பி வைத்திருக்கிறேன்.

மொழி என்பது ஒலிகளினூடாக தாய்க்கும் சேய்க்குமான பரஸ்பர புரிதலில் மட்டுமே முதலில் உருவாகி இருக்க வேண்டும். தாய்வேட்டையில் ஈடுபட்டிருக்கும்போது எங்கோ அலைந்து திரியும் போது.. குழந்தை மா.. மா என்று கத்தியிருக்கவேண்டும். பசியைத்தான் மனிதன் முதலில் உணர்ந்திருக்க வேண்டும். இன்று வரை பிறந்த குழந்தை முதலில் வெளிப்படுத்தும் தேவை உணர்ச்சி பசியாகத்தான் இருக்கிறது.

வேட்டையாடி, குழுவாகப் பிரிந்த மனித இனம் ஆற்றுப் படுகையில் குடி பெயர்ந்தபோது நாகரீகம் தோன்றியது. மொழி தோன்றியது. இங்கே எங்கிருந்து கடவுள் தோன்றினார். யாரையோ வணங்க வேண்டும் என்ற சிந்தனை அவனுக்கு எப்போது வந்தது.

ஆதி மனிதனுக்கு உணவைத் தவிர எதன்மேலும் பற்றில்லை. பொன்னை அவன் அறிந்திருக்கவில்லை. பின்னால் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்னபோதுகூட வீடும், விளைநிலமும்தான் மனிதனின் தேவையாக இருந்தது. அப்படி இருக்கும்போது எப்படி வழிபாடு இறை நம்பிக்கை மனிதனுக்குத் தோன்றியது.

மனிதன் இரண்டு இடங்களில்தான் வாழ்க்கையைப் பற்றி பயந்தான். யோசித்தான்.

வேட்டையாடி தனக்காக வாழ்ந்த தாய் மூச்சுப் பேச்சற்றுக் கிடந்து, எவ்வளவோ ஊளையிட்டும் அவளை எழுப்ப முடியாமல் போய், அந்த சடலம் நாற்றமெடுத்து, கோரமாகி, கண்முன்னே உடல் அழுகி மறைந்தபோது நடுங்கிப் போனான் மனிதன்.

அடுத்து, கையளவு சிசு பிறந்தபோது, பிறப்பிலும் இறப்பிலும்தான் என்னவோ இருக்கிறது. வேறு என்னவோ நடக்கிறது.

ஒரு ஆயிரம் வருடங்களுக்காவது அது என்ன என்பதை மனிதன் சிந்தித்திருக்கவேண்டும்.

அவன் சூரியனைப் பார்த்தோ நெருப்பைப் பார்த்தோ பயந்திருக்க காரணமில்லை. காலையில் வந்து மாலையில் போகும் ஒளி அல்லது வெளிச்சம் என்பதுதான் அவன் கருத்தாக இருந்திருக்கும். நெருப்பில் விலங்குகள் மாட்டி இறந்து போயிருக்கும். தின்பதற்கு எளிதாக இருந்திருக்கும். மீண்டும் நெருப்பு வராதா என்றுதான் ஏங்கி இருப்பான்.

இறந்துபோன சக மனிதனைப் பார்த்து பயந்து பயந்து யோசிக்கும்போது கோர உலகத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் போது கோரமாக செத்துப்போன தாயை இனிப்பார்க்கவே முடியாது என்று அவனுக்குத் தோன்றியபோது அந்த இறந்துபோன உடலை அழுக விடாமல் குழி தோண்டிப் புதைக்க ஆரம்பித்தான். புதைத்த இடத்தில் அடையாளத்திற்காய் பெரிய கல்லை வைத்தான். இனம் புரியாத உணர்வுகளால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த சமாதியில் அமர்ந்து வழிபாடு செய்தான். முதல் வழிபாடு என்பது தாயிடம் இருந்துதான் தோன்றியது. அதன்பின்தான் தந்தை வணங்கப்பட்டான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆயினர். மனிதன் முதன் முதலில் வணங்க ஆரம்பித்தது சக மனிதனைத்தான். இன்றளவும் ஏசு எனக்குச் சொந்தக்காரர் நபி பெருமானார் எனக்குச் சொந்தக்காரர் என்று கோடிக்கணக்கில் மனிதன் பல்கிப் பெருகி, சக மனிதனை வணங்கி அடித்துக கொள்வது நிற்கவில்லை. நாத்திகம் பேசி பகுத்தறிவு என்பவர்கள் கூட தலைவன் என்று சொல்லி அவன் பேரால் பிரிந்து அடித்துக் கொள்கிறார்கள் . வழிபாட்டின் இன்னொரு வடிவம்தான் அரசியலாகி இருக்கிறது. அன்று கூட்டமாக பிரிந்து அடித்துக கொண்டபோது குண்டு குண்டு கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டான். இன்று ரிமோட் குண்டுகளால் தாக்கிக்கொள்கிறான்.

ஏதோ ஒரு குழுவில் ஒரு பெண் இறந்துபோகும்போது மேலே கை நீட்டினாள். அந்த மனிதக் கூட்டம் தாய் இறக்கும்போது மேலே கை நீட்டினாளே. அப்படியானால் செத்துப் போனபின் தாய் மேலே போகிறாள். அது ஏன்? இது சற்று காலம் சிந்தனையில் நீடித்தது.

வேட்டையாடுவதும் அணையாமல் பார்த்துக் கொண்டே நெருப்பில் சுட்டுத் தின்பதும், மாதக்கணக்கில் மழை பெய்யும்போது குகைகளுக்குள் ஒளிந்து யோசிப்பதுமாக வாழ்க்கை நகர்ந்தது. காட்டாற்று வெள்ளத்திற்குப் பயந்து இடம் பெயர்ந்தபோது இன்னொரு குழு இறந்து போன தந்தையை, கைதட்டி, ஓலம் எழுப்பி கிட்டத்தட்ட மேலே பார்த்துக் கும்பிட்டான்.

புதிதாய் வந்த குழுவிற்கு என்ன ஏது என்று தோன்றி விசாரிக்க, ஒருவன் மேலே கை காட்டி மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது பெரியவரை அழைத்து போய்விட்டது. அந்த சக்தி தகதகவென்று எரியும் சூரியனிலிருநது வருகிறது. இரவானதும் தந்தையை வேறெங்கோ கூட்டி போய்விட்டு காலையில் வந்து விடுகிறது என்று முதல் கதையை எடுத்துவிட்டான். சூரியனை வணங்க ஆரம்பித்தனர்.

வயதானவர்கள் நோயுற்றபோது அவர்களை அடர்ந்த சூரிய ஒளி படாத இடங்களுக்கு அழைத்துபோய் ஒளித்து வைத்து கொஞ்ச நாள் திருப்திபட்டுக் கொண்டார்கள். எதேச்சையாக விலங்குகளின் கண்களில் ஒளித்து வைக்கப்பட்டவர்கள் மாட்ட அவர்களை குதறி இழுத்துபோக மரங்கள் செடி கொடிகளை வெட்டி நார்களாலும் வேர்கலாலும் பிணைத்து விலங்குகள் உட்புகாதவாறு அரண் அமைத்தான். குகை மனிதன் அரணுக்குள் தங்கினான். வசிப்பிடம் உருவானது.

மனிதன் ஆற்றுப்படுகைக்கு வந்தான். தேடி ஓடி அலுக்காமலேயே உயிரினங்கள் ஆற்றைத் தேடி வந்தன. மீன் உணவுகள் பரிச்சயமாயிற்று. நாகரிகம் வளர ஆரம்பித்தது. பெண்கள் கற்களை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. விளைவிக்க கற்றுக் கொண்டான். இருப்பிடங்களைத் தயார் செய்தான். அந்தக் குழுவில் ஒருவன் அந்த இடத்திற்கு அழைத்து வந்த முதல் தாயை அங்கே கிடைத்த களிமண்ணை வைத்து உருவம் செய்து வழிபட ஆரம்பித்தான். வாசனை மலர்கள், செடிகள் கொண்டு சுற்றிலும் அழகுபடுத்தினான். காட்டுத்தீயில் எல்லாம் எரிந்து போக தீயில் வெந்த மண்சிலை உறுதியாக மாற.. சிலை வணக்கமும் வந்தது. பாண்டங்கள் செய்யவும் முடிந்தது.

நிறைய செய்திகளை விட்டு விட்டு தாவித் தாவி ஓடிக் கொண்டிருக்கிறேன். நோக்கம் பெண்கள் என்பதால். இப்படியாக உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு மனித குழுக்கள் இனவிருத்தி செய்து கட்டிடங்கள் எழுப்பி ஆயுதம் தரித்து மனிதனுக்கு மனிதன் எதிரியாகி சண்டைபோட்டு, புரவிகளைப் பழக்கி, யானைகளைப் பழக்கி, ராஜாங்கம் உருவாக்கி, எல்லைகள் வகுத்து, நாம் ஒரு டைம் மெஷினில் ஏறி ஹரப்பா மொஹஞ்சோதராவுக்கு வந்தால் பசுபதி என்ற வழிபாடு வந்து நிற்கிறது. அது என்ன பசுபதி?

இதுவரை மனித குலத்துக்கு உழைத்து பசியாற்றியவர்கள் அம்மாக்கள். அடுத்து பசுக்கள் பாலைச்சுரந்து இரவு பகலாக பசியாற்றின. வாழ வான் வெளியையும் அண்டத்தையும் படைத்த பதி.. பசித் தீர்த்த பசுவையும் பதியையும் வணங்கினர்.

அப்படியே சிந்து நதி தாண்டி இந்தியா. ஆங்காங்கே சிறு சிறு தலைமைகளின் கீழ் பாதுகாப்புடன் மக்களின் வாழ்க்கை. தலைவனும் தலைவியும் பொறுப்புமிக்கவர்கள்.

மக்கள் சாப்பிடுவதையே அவர்களும் சாப்பிட்டு மக்களோடு மக்களாக தலைவனும் தலைவியும் வாழ்ந்தனர். மக்கள் தம்மைக் காக்கும் தலைமையைப் பராமரிக்க, மக்களை, பெற்றதாயைப் போல கவனித்துக் கொண்டாள் தலைவி.

பாம்புகள் குவிந்து கிடந்த அன்றைய காலகட்டத்தில் எங்கெல்லாம் புற்றுக்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சட்டி சட்டியாய்ப் பால் வைத்து அது குடிக்கிறதா இல்லையா எனறு கூடப் பார்க்காமல் என் மக்களைக் கடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்தாள்.

தேடிவரும் நாகங்களைப் பிடித்துக் கொண்டுபோய் வெகு தூரம் விட ஒரு குழுவை நியமித்தாள். நாகங்களைக் கையாண்டோர் நாகர்கள் ஆனார்கள். புதர்களை மலர்களால் அலங்கரித்து வணங்க ஆரம்பித்தனர். தலைவியை வழிபாட்டுக்குத் தலைமை ஏற்க வைத்தனர். நாகங்களிடமிருந்து காத்த அம்மா என்று அழைத்தனர். இறந்த பிறகும் அந்த அன்னையை வழிபடுவதும் புதிதாய் பதவியேற்ற அன்னையை வழிபடுவதும் வழி வழியாய் வந்தது.

இந்தியாவின் மத்தியப் பகுதியில், கடலோர பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில். கோடை காலத்தில் உடம்பெங்கும் கொப்புளமாய் அம்மை கண்டு வீழ்ந்தார்கள். அங்கு இருந்த தலைவி வைத்தியம் தெரிந்தவர்களை அனுப்பி மருந்து தேடி, வேப்பிலை மருந்தென்று கண்டறியப்பட, வெம்மைநோய் தணிந்த மக்கள் அந்த அன்னையை மரித்துப்போகாமல் காத்த அன்னையே என்று வணங்கினர்.

கல்லெறிந்து வேட்டையாடி உணவூட்டிய தாயினம் கற்களினால் உருவம் பெற்று வணங்கப்பட்டதில் வரலாற்று வியப்பு ஏதும் இல்லை. சரி. இரக்கமே உருவான தாய் கழுத்தில் மனிதத் தலைகளை மாலையாக்கிப் போட்டு, கையில் சூலம் ஏந்தி .. யோசிக்க அவகாசம் .. நீங்கள்.. சந்திக்கிறேன்.

அன்னையர்களை வணங்கி .. அகத்தியன்.

நட்புடன்
அகத்தியன்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.