வலது புறம் செல்லவும் - 5
இயக்குனர் அகத்தியன் |
25-04-2011, 22:58 PM |
நண்பர்களே...
நான் எழுதுவது ஆதாரங்களின் அடிப்படையில்தான். ஆதாரங்களைத் தேடாதீர்கள். தக்க சமயத்தில் வெளிப்படுத்துவேன். நம்பிக்கையும் வரும். அவநம்பிக்கையும் சூழும். அதை அப்போது எதிர்கொள்வேன்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மலையேறிப் போய் விடுவார். அடிக்கடி எங்கோ காணாமல் போய்விடுவார். வந்து எனக்குச் செய்திகள் கிடைத்தது என்பார். அவரைச் சற்று வித்தியாசமாகப் பார்த்தார்கள் சுற்றி இருந்தவர்கள். கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு வியாபாரி, ஒரு வியாபாரக் குடும்பம், பொருள் ஈட்டுவதில் முனைப்பான குடும்பம். அத்தகைய ஒரு மனிதன் ஏதோ ஒன்று எளிதாய்க் கிடைத்துவிட்டதுபோல் வனாந்திரங்களிலும் மலைப்பிரதேசங்களிலும் தனிமனிதனாய் அலைந்து திரிவதை அவர்கள் கவலையுடன் நோக்கினார்கள். ஒருநாள் நான் இரை தேடிச் செல்லவில்லை. இறை தேடிச் சென்றேன் என்றார். அந்த இறை என்ன. சொன்னார் அந்த மாமனிதர். அவர் சொன்னதை எல்லாம் பொழுதுபோகாமல் கேட்டார்கள். யோசித்தார்கள். இப்படியெல்லாம் யோசிக்கிறாரே என்று. இவர் ஞானிகள் வம்சத்தைச் சேர்ந்தவர் இல்லையே என்று. இந்த பாக்கியம் இதற்கு முன்னால் இவருக்கு இல்லையே என்று. வேகமாகப் பரவிவரும் கிருத்துவக் கோட்பாடும் இவரிடம் இல்லை. வேறு ஏதோ சொல்கிறார். கூட்டம் கூடி யோசிக்கத் துவங்கினார்கள்.
மீண்டும் மீண்டும் அவர்பேச, இவர் ஞானிகள் வம்சத்திலும் பிறக்கவில்லை. இதற்கு முன் இவருக்கு இந்தப் பக்குவமும் இல்லையே என்று பேசினார்கள். பலருக்கு இவனாக இருந்த அவர் இவராகி, இவர்கள் ஆகிப்போனார்.
அவர்களிடம் நபிபெருமானார் உயர்ந்த மனிதனாகத் தோன்ற ஆரம்பித்தார். எதையும் காதில் வாங்காத, பொருள் ஈட்டுவதிலேயே குறியாய் இருக்கும் அரபுக்கூட்டதில் தனியாகப் போய் பேசுகிறாரே துணைக்குச் செல்வோம் என்றுதான் அவரோடு போனார்கள் கூடியிருந்தவர்கள். அவர் பேசியதை மிரட்சியோடு கேட்டார்கள். அவர் பேசியதெல்லாம் தினார் விளையாடும் கூட்டத்தில். பொழுது போக தினார்கள் கேட்டன. தினார்கள் சிரித்தன. தினார்களை அள்ளிக் கொண்டு தினார்கள் போய்க் கொண்டிருந்தன.
பெருமானார் கவலைப்படவில்லை. அடுத்த சந்தையில் வேறு விதமாகப் பேசுவார். தினார்கள் கேட்டுவிட்டுப் போய்விடும். அடுத்த சந்தைக்கு போகும்போது வழியில் தன் கூட்டத்தோடு அமர்ந்து விடுவார். ஒரு மணிநேரமோ இரண்டு மணி நேரமோ தாமதம் செய்வார். பின் புறப்படுவார். பொழுதுபோகாத தினார்கள் பெருமானைத்தேடிக் கொண்டிருப்பார்கள்.
“இன்னாப்பாலேட்டு” என்பார்கள். சென்னைத் தமிழ் போலத்தான் அவர்களின் பேச்சுமொழி இருக்கும்.
பெருமானார் அமைதியாக மற்றவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொல்வார். “நான் சொன்னால் கேட்கவா போகிறீர்கள்? வியாபார நேரத்தில் உங்களுக்குப் பொழுது போக வேண்டும்.
“அப்படி இல்லப்பா… நல்லாத்தான் பேசுறே. ஆனா கிருத்துவர்கள் பேசுற மாதிரியும் இல்லையே. நீ பேசுறது வேற என்னமோ மாதிரியில்ல இருக்கு”.
“கிருத்துவைப் போல் பேச நான் எதற்கு? கிருத்துவின் பேச்சைக் கேட்டு திருந்தியா விட்டீர்கள்?.”
“அப்பிடினா நீ இன்னாதான் சொல்ல வர்றே?”
இரண்டு முறை சந்தைக்கு சென்றவர் மூன்றாவது முறை தாமதமாகச் சென்று அவரைத் தேட வைத்துதான் பெருமானாரின் முதல் வெற்றி. இஸ்லாத்தின் முதல் வெற்றி.
அடுத்த முறை நான் இங்கு வரமாட்டேன். வேறு ஒரு இடத்தில் பேசப் போகிறேன். பிரியமானால் வாருங்கள். நூறில் இருபது பேர் வந்தார்கள். பேச்சைக் கேட்டு கிளர்ந்து அடுத்த முறை நாங்கள் எங்கு வர எனக் கேட்டார்கள். இங்கேதான் இருப்பேன். இருபது நாற்பதாய் வாருங்கள் என்பார். இரவு நேரங்களில், நிலவொளியில் வீதியில் நின்று பேசுவார். தான் கண்ட அதிசயத்தை தான் கண்ட ஒளியை.
அடுத்த நாள் நம்மை எங்கோ அழைத்து போகப் போகிறார் என்று ஹுக்கா பிடித்தபடி அவரின் தோழர்கள் காத்திருப்பார்கள். பெருமானார் வியாபாரத்திற்கு சென்றிருப்பார். மாலையில் வருவார்.
“இப்படியெல்லாம் சொல்லி நான் உங்களிடமா வாங்கிச் சாப்பிட முடியும்? அல்லாவின் பிள்ளை அவன் உணவை, அவனே தேடிக் கொள்ள வேண்டும். அவன் பாதரட்சையைக் கூட அவனே தைத்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் மாபெரும் மன்னனாக இருந்த பொறுப்பாளன் ஔரங்கசீப் செருப்புத் தைத்துக் கொண்டார். சிறுசிறு வேலைகள் செய்தார். தன் உணவுக்குத் தானே உழைத்தார்.
நபிபெருமானார் காலத்தில் வேலைப்பாடுகளோடு தோலில் பாதரட்சைகள் செய்து விற்பார்கள். பெருமானார் அதே தோலைக் கிழித்து கிட்டத்தட்ட பாதரட்சைகள் போல் செய்து மாட்டிக் கொள்வார். தனி ஒரு மனிதனாய் paulகள் இல்லாமலேயே இஸ்லாம் என்ற மாபெரும் மதத்தைத் தோற்றுவித்தது பெருமானாரின் தனிபட்ட முயற்சியே. தனி ஒருவரின் பேச்சே இன்றைய உலகின் இரண்டாவது மதம். அதனால் தான் உலகின் தலைசிறந்த நூறு மனிதர்களைப் பற்றிப் பேசிய “THE HUNDRED” என்ற புத்தகம் அவருக்கு முதலிடம் கொடுத்தது.
இதை எனக்குச் சொன்னதும் ஒரு தேவதூதன் தான். ஓர் ஆச்சரியம். எனக்கானது அல்ல. உங்களுக்கானதாக இருக்கலாம். அந்த தேவதூதன் பூமியில் இந்துவாக வாழ்ந்த ஓர் வானுலகப் பொறுப்பாளர்.
இதை ஏன் நான் நட்பு பற்றி எழுதுக் கொண்டிருக்கும்போது சொல்கிறீர்கள் என்றேன்.
நட்புபாராட்டுவது மனிதர்களுக்கு மட்டுமல்ல. மதங்களுக்குமானது. மதங்கள் மனிதர்கள் சார்ந்தனவே என்றாலும் அந்தந்த மதங்கள் தம் மக்களை தனிமைப் படுத்தும்போது, அதாவது தனிமை என்பது கலாச்சார ரீதியாக அமையும் போது, அங்கு நட்பு பொருள் வழுவி தன் இனத்துக்குள் அடங்கி விடுகிறது என்றார்.
நியாயமாகப் பட்டது. என் அம்மாவின் இறப்புக்குச் சென்றிருந்தேன். பேராவூரணி என்னை உருவாக்கிய உலகம். 1978ல் சென்னைக்கு வந்த நான் அந்த ஊரின் கலாச்சாரங்களிருந்து… திருவிழா முதல் இறப்புவரை வெகுதூரம் விலகியே வாழவேண்டிய சூழ்நிலை. இறப்புக்கு ஆள் அனுப்பி சேதி சொல்லும் நிலைபோய் ஆட்டோவிலோ, காரிலோ ஒலிபெருக்கி மூலமாக ஒலியெழுப்பும் பழக்கம் வந்தது கூட நான் அறியவில்லை.
வீட்டுவாசலில் நின்று வருவோர்க்கு கைநீட்டி வருகையை அங்கீகரிக்கும் மௌனமான அந்த பழக்கம் கூட எனக்கு அந்நியமாய் இருந்தது. நான் அப்படி நின்றபோது என் அன்பிற்கினிய நண்பர் M.A. லத்தீப் என்னருகே வந்தார். காதில் ரகசியமாக “கருணாநிதி (என் இயற்பெயர்) செருப்பைக் கழட்டிவிட்டு நில். செருப்பு போட்டுக் கொண்டு வருபவர்களுக்கு கைநீட்டுவது நமது கிராமத்தின் பழக்கம் இல்லை. சற்று மரியாதைக் குறைவாக கருத்தில் கொள்ளப்படும்” என்றார்.
நான் மதங்களை கடந்த கலாச்சாரத்தின் நெறிமுறைகளை நட்பினால் உணர்ந்து கொண்டேன்.
அதே பேராவூரணியில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. கோவிலுக்கு அருகிலேயே முஸ்லிம்கள் வாழும் தெரு உண்டு. தேரோட்டம் அன்று அந்த முஸ்லிம் தெரு வழியாக சாமி வரும். அவர்களும் விரதமிருப்பார்கள். அல்லா எனக்கான கடவுள்போல பிள்ளையார் அவர்களுக்கான கடவுளாகவும் இருந்தார். இருக்கிறார்.
என்னை முதன் முதலில் உதவி இயக்குனராக சேர்ந்துக் கொண்டதே ஒரு முஸ்லிம்தான். என் மரியாதைக்குரிய அந்த குரு M.A. காஜா அவர்கள். இன்று வரை அவர் மட்டுமே எனக்கு குருவாக இருக்கிறார். கிருத்துவ நண்பர்கள் யோசிக்க வேண்டாம். நான் இன்னும் என் புரட்சிக்காரன் இயேசுவைப்பற்றிப் பேசவே இல்லை.
என் ஊரில் மட்டும் இல்லை. வரலாற்றிலும் முஸ்லிம்கள் இந்துகளை நண்பர்களாகப் போற்றி இருகின்றனர். படையெடுத்து வந்து கைப்பற்றிச் சென்றவர்களை நண்பர்களாக நடத்தியதை வரலாறு மறந்துதான் போயிருக்கிறது.
மொகலாய மன்னர்கள் கொடுங்கோலர்கள். ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம் இல்லாதவர்கள். வாள்முனையில் மதம் மாற்றியவர்கள். பகை என்று வரும் போது பங்காளிகளையும் பதம் பார்ப்பார்கள். வரலாற்று ஆசிரியர்கள் கூறும் செய்திகளின் சாராம்சம் இது.
கஜினி முகம்மது தொடர்ந்து தோற்பவருக்கு உதாரண புருஷன். பதினேழு முறை பாரதத்திற்கு படை எழுத்து வந்து பொன், பொருளை அள்ளிச் சென்றார். இதுவும் வரலாற்றுச் செய்திகள். கஜனியாகட்டும், முகம்மது கோரியாகட்டும் தைமூராகட்டும், அலெக்ஸ்சாண்டராகட்டும் வந்து, வென்று திரும்பும் போதெல்லாம் பொன், பொருளை மட்டும் அள்ளிச் சென்றதில்லை. அழகிய கட்டிட வல்லுனர்கள், ஓவியர்கள், எழுதுபவர்கள், பன்மொழி விற்பனர்கள், தையற் கலைஞர்கள், வானியல் சாஸ்திரத்தில் சிறப்புப் பெற்றவர்கள் எனப் பார்த்து பார்த்து அவர்களையும் அள்ளிச் செல்வார்கள். அவர்கள் அடிமையாக நடத்தப்பட்டதும், சவுக்கால் வேலை வாங்கப்பட்டதும், அதில் மரணங்கள் நிகழ்ந்ததும் வரலாறாக இருந்தாலும் இந்தியக் கட்டிடக் கலையின் நுட்பங்கள் அறிந்தோர் இடப்பட்ட பணியை பாதுஷா எதிர்பார்த்ததற்கும் மேலாக, நுணுக்கி நுணுக்கி. நேரம் காலம் பார்க்காமல். கட்டிடங்களை எழுப்பினர்.
அவர்களை அடித்து வேலை வாங்கினான். அதேநேரம் அவர்களின் ஈடுபாட்டை, உண்மையான உழைப்பை. நுணுக்கத்தைக் கண்டு வியந்தான். அவர்களை நேசித்தான். தன் சொந்த மண்ணில் ஒரு கோட்டையை எழுப்பினான். அது இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களால் அழகு மிளிர எழுப்பப்பட்டது. ஸ்தூபியும் கட்டியாகி விட்டது. கஜனிக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அந்த இந்திய வல்லுனர் “பல்தேவ்” ஸ்தூபியை இடியுங்கள் பாதுஷா என்கிறார். பாதுஷாவிற்கு ஆச்சர்யம். “ஏன்?” என்கிறார். கோட்டை முடிந்தால் விடுதலை என்பது ஒப்பந்தம். ஆனால் விடுதலைக்காக காத்திருக்கும் கலைஞர்களோடு பல்தேவ் ஸ்தூபியை இடிக்கச் சொல்கிறார். பாதுஷாவோ ஆச்சரியத்தோடு.
ஸ்தூபியில் பளிங்குச் சில்லுகளைப் பொருத்தியபோது ஒரு சில் பொருந்தாது அடம்பிடித்தது. சமாளித்து விடும் என்று நினைத்தேன். அதோ பாருங்கள் அந்த சில் மட்டும் தனியாய்த் தெரிகிறது. பார்த்தான் கஜனி. தெரியாவிட்டாலும் edho உணர்த்தியது.
அதனால் என்ன?
சில்லுக்கு உட்புறச் சுவரில் அந்த காங்கிரீட் கலவையோடு பறவையின் எச்சங்கள் சேர்ந்திழுக்கின்றன. நூறு வருடங்கள் கழித்துக் கூட அது உயிர் பெற்று துளிர்க்க வாய்ப்பிருக்கிறது.(விஞ்ஞான காரணம் பின்னால்) துளிர்த்தால் ஸ்தூபியில் கீறல் விழும்.
ஒரு நிமிடம் ஆடிப்போனான் பாதுஷா. இப்படி எல்லாமா கற்ற கலையில் விசுவாசம் கொள்ள முடியும்? இடித்து கட்டினார்கள். மூன்று வருடங்கள் பிடித்தது.
“உமக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன். அதைச் செய்கிறேன். எனக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன். அதைச் செய்வீரா?”
இந்தியர்கள் எல்லோரும் விடுவிக்கப்பட வேண்டும்.
பொன் பொருளோடு விடுவிக்கப்பட்டார்கள்.
“உமக்கு என்ன வேண்டும்?”
“உமது நட்பு இங்கே இருந்தாலும் தொடரவேண்டும். பாரதம் சென்றாலும் தொடரவேண்டும்.”
அங்கேயே இருந்து நட்பு தொடர்ந்தது, பதினெட்டாவது முறை கஜனியின் பாரதப் படையெடுப்புக்கு நட்பு தடை போட்டது.
சாகும் வரை பல்தேவிடம் கட்டிடம் பற்றியோ, தொழில் சம்பந்தமாகவோ பாதுஷா பேசியதில்லை. பல்தேவ்விற்கு அழகிய கல்லறை இருந்தது. பின் காணாமல் போனது.
வாணிபத்தில் சிறந்து விளங்கிய அரேபியர்களுடன் பிரச்சனை வந்த பிறகு தங்கள் வர்த்தகத்திற்காக மாற்றுவழிப் பாதையைத் தேடினர் ஐரேப்பியர். ஆப்பிரிக்காவைத் தற்செயலாக அறிந்தனர். ஆப்பிரிக்க மக்கள் வாணிபப் பொருளாயினர். அமெரிக்காவில் அடிமை விற்பனை ஆரம்பமானது.
மனித இனம் என்று மதிக்கபடாத இனமாக அந்தக் கறுப்பு வண்ணச் சகோதரர்கள் மாறிப்போயினர். மனிதன் தனக்குத்தானே தேடிக்கொண்ட முதல் அவமானம் பூட்டைக் கண்டுபிடித்தது. அடுத்த அவமானம் மனிதன் மனிதனையே அடிமையாக வைத்திருப்பது. அந்த அடிமை முறையை ஒழிக்கும் புரட்சிக்கு வித்திட்டவர் ஆப்ரஹாம் லிங்கன்.
அமெரிக்க நிலப்பிரபுக்கள், பண்ணையாளர்களால், கறுப்பு வண்ணச் சகோதரர்கள், அடிமைகளாக தினம் தினம் துன்பத்திற்கு ஆட்பட்டனர். மாண்டு போயினர். வன்புணர்ச்சிகளுக்கு கறுப்பு வண்ணச் சகோதரிகள் ஆளாயினர். இவை எல்லாமே வரலாற்றுப் பதிவுகள்.
லிங்கன் ஆரம்பித்து வைத்த அடிமை முறை ஒழிப்பு அவ்வளவு சீக்கிரம் அந்த மண்ணைவிட்டு அகலவில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் பிறகு மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) பேசினார். I have a dream என்ற அந்தப் பேச்சு வரலாற்றில் பதியப் பட்டது.
“I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character “ என்றார்.
கறுப்புவண்ண இளைஞர்களும், யுவதிகளும் வெள்ளை நிற இளைஞர்களோடும், பெண்களோடும், சகோதர, சகோதரிகளாகக் கைகோர்த்து நடந்து செல்வதைக் கனவு கண்டார்.
இவை எல்லாமே வரலாற்றுப் பதிவுகள். ஆனால் எத்தனையோ பண்ணைகளில் கறுப்பு வண்ணச் சகோதர சகோதரிகளை நட்பாக நடத்தினர். வேலை செய்வதற்கு சரியான ஊதியமும் சரியான உணவும் ஓய்வும் அளிக்கப்பட்டது என்பது வரலாறு அறியாத உண்மை.
வண்டிஓட்டும் கறுப்பு வண்ணச் சகோதரனும், வண்டியில் அமரும் வெள்ளை வண்ணச் சகோதரனும் எத்தனையோ இடங்களில் நண்பர்களாக இருந்திருந்தனர். அந்த இல்லத்தின் வளாகத்துக்குள் நுழையும் போது இல்லத்து மூப்பர்களின் கண்முன் மட்டும் பெயரளவிற்கு பிரபுவாக நடத்துகொள்வார்கள். பண்ணைகளில் சிரிப்பும், விளையாட்டுமாக இரு வண்ணங்களும் நிறைய இடங்களில் களிகூர்ந்தன.
அடிமை எண்ணங்கள் பொங்கி எழுந்து வசதி இனங்களைக் கொல்லும் போதெல்லாம் எத்தனையோ நல்ல வசதியினங்கள் கறுப்பு வண்ண மனங்களால் தப்பித்திருக்கிறன. கறுப்பு வண்ணத்திற்கு துன்பம் நேர்கையில் எத்தனையோ பிரபுக்கள் தங்கள் வாகணங்களில் ஏற்றி அவர்களைத் தப்பிக்கச் செய்திருக்கின்றனர். புரிந்து கொள்ளுதலும் நட்பும் அங்கு ஒளிர்ந்திருக்கிறது.
ரூபின் ஹரிக்கேன் கார்ட்டர் (Rubin Hurricane carter) இந்த கறுப்பு வண்ண மனிதன் அமெரிக்காவின் பிரபலமான குத்துச் சண்டைவீரன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பத்தொன்பது வருடங்கள் சிறையில் கழித்தவர். இவரின் சிறைவாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து, இவர் விடுதலை ஆகக் காரணமாக இருந்தது வெள்ளை வண்ண நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில் இவரின் விடுதலைக்கு பாடுப்பட்ட அந்த வெள்ளை வண்ணத் தோழி இவர் கனடா நாட்டுக் குடியுரிமை பெற இவரைத் திருமணம் செய்து கொண்டார். உலக வரலாற்றில் நட்பு எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.
சுஜாதா இப்படி எழுதுவார். இரண்டு நாட்டுப் படை வீரர்கள் உக்கிரமாக மோதுவதற்குக் காரணம் தேசப்பற்று என்பது இரண்டாம் பட்சம்தான். ரத்தமும் சதையுமாகக் கூடவே இருந்த தோழன் கண்முன்னே சிதறிச் சாகும்போது அந்த வெறியும், வேகமும் உக்கிரச் சண்டைக்கு காரணம்.
பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் செங்கொடி நாடுகள் சகமனிதனைத் தோழராய் பார்த்தன. சகோதரர்களுக்குள் சொத்துப் பிரச்சனை உண்டு. எனவே சகமனிதனைத் தோழனாகப் பார்த்தார்கள்.
தோழமை என்பது உயர்வு
தோழமை என்பது மேன்மை
தோழமை என்பது தெய்வீகம்
தோழமை என்பதே படைப்பு
நட்பு என்பது தெய்வீகமானது என்றால் அந்த தெய்வீகத்தை உண்மையான நட்போடு பழகும்போது மட்டுமே உணர முடியும். அனுபவிக்க முடியும். சரி… உண்மையான நட்பை எப்படி உணர்வது? எப்படி அனுபவிப்பது? காத்திருப்போம்..
நட்புடன்
அகத்தியன்.
|