வலது புறம் செல்லவும் - 3
இயக்குனர் அகத்தியன் |
11-04-2011, 23:58 PM |
கடவுளிடம் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். என்ன? என்று கேட்கவில்லை. மௌனத்தில் இருந்தார். சோகமா? கோபமா? என்று தெரியவில்லை. வெகுநேரம் கழித்து மௌனம் கலைத்தார். வேறு ஒரு தேவதூதனை அழைத்தார். இதைமட்டும் சொல்லி அவனிடம் விட்டு அவன் விரும்புவதை எழுதிக் கொள்ளச் சொல் என்றார்.
தேவதூதன் கூறியது.
"மதத்தை வைத்து இன்றைய தினம் அரசியல் செய்பவர்கள் இன்னும் பதினைந்து அல்லது இருபது வருடங்களில் மரித்துப் போவார்கள். அவர்கள் விதைக்கின்ற வித்து இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு விளைந்து பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். அரவணைப்பு என்ற மலர்க்கொத்தோடு இந்திய மண்ணில் ஒரு நபிகளோ, ஒரு இயேசுவோ, ஒரு புத்தரோ, ஒரு விவேகானந்தரோ, ஒரு காந்தியோ மீண்டும் வர வேண்டியிருக்கிறது. அதற்குள் இந்தியா ஆப்கானிஸ்தானாக மாறிப் போய்விடுமோ என்ற பயமும் இருக்கிறது.
கடைவிரித்தேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மக்களின் மனமாற்றத்திற்கு ஒரு தூதர் இங்கே கிளம்ப வேண்டும். தோன்ற அவகாசம் இல்லை, கிளம்பத் தான் அவகாசம். இதைப் படிப்பவர் அந்தத் தூதன் நான்தான் என்று நினைத்தால் எல்லாம் வல்ல இறைவன் அதை அகங்காரம் என்று சொல்லமாட்டான். உடனடியான அங்கீகாரம் தருவான் அவருக்கு.
சொல்லிவிட்டு தேவதூதன் மறைந்தான்.
நண்பா, நாம கொஞ்சம் கௌரவமாக குடிக்கக் கற்றுக் கொள்வோமா?
"நோவா பயரிடுகிறவனாகி திராட்சைத் தோட்டத்தை நாட்டினான்".
"அவன் திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்"
பைபிள் - ஆதியாகமம் - 9 21 22 வசனங்கள்.
பதிவு செய்யப்பட்ட முதல் குடிமகன் நோவா..
நோவாவை இறைவன் தேர்ந்தெடுத்தான்.
"உன்னை இந்த சந்ததியில் எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்’’ என்றார் கர்த்தர்.
நண்பா.. குடி இறைவனால் விலக்கப்படாத ஒன்று. நோவாவைப் போல் குடிக்கக் கற்றுக் கொண்ட நாம், நோவாவைப் போல் நீதிமானாக இருக்கக் கற்றுக் கொள்ள வில்லை. நோவா தன் ஆடை அவிழ்ந்து நிர்வாணமாக வீட்டில் கிடந்தான். இப்போது ரோட்டில் கிடக்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்னும் நோவாவின் சந்ததிகள்தான்.
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு", என்றார் கண்ணதாசன்
"ஓர் கையிலே மதுவும் ஓர்கையிலே மங்கையும்
சேர்ந்திருக்கும் வேளையில ஜீவன் பிரிந்தால்தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்’’ என்றார்.
"ஐயகோ காலமே போகின்றதையகோ
அருகில் வா மதுக்கிண்ணமே", என்றார்.
இப்படியெல்லாம் மதுவைப்பற்றிப் பேசியவரால் மனித வாழ்க்கைக்கு அர்த்தமுள்ள இந்துமதம் தரமுடிந்தது.
"10வது பாஸ் பண்ணிட்டேன். பார்ட்டி மச்சான்.."
"பிளஸ் டூ பாஸ் பண்ணிட்டேன் இன்னைக்கு பார்ட்டிடா"
"செமஸ்டர் முடிச்சுட்டேன்"
என்றெல்லாம் பார்ட்டி கொண்டாடும் படிக்கும் மாணாக்கர்களுக்கு..
கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞன் பள்ளிக்கூடத்துக்குப் போய் பார்ட்டி வைத்ததில்லை. ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாய் வைக்கின்ற காவியங்களை உருவாக்கினார். அந்த உருவாக்கத்துக்குள் மதுவாக்கமும் இருந்தது என்று தெரியுமா?
மது நிறையப் பேருக்கு ஊக்கம் கொடுக்கிறது. நமக்கு மட்டும் ஈரலில் வீக்கம் கொடுக்கிறது. ஒரு பாட்டிலைப் பகிர்ந்து குடிக்கும் இரு நண்பர்களில் ஒருவன் வீட்டிற்கு போகிறான். மற்றொருவன் ரோட்டிற்கு போகிறான். வம்பு செய்துவிட்டு காவல் நிலையமும் போகிறான். நமக்கு கண்ணதாசனைப் போல் பாட்டெழுத வர வேண்டாம். அமைதியாக வீட்டுக்குப் போக ஏன் புத்தி வருவதில்லை.
எனக்கு 14 வயதில் மது அறிமுகமானது. முறையாக அறிமுகம் ஆகவில்லை. இன்று வரை தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு எந்த இளைஞனுக்கும் முறையாக மது அறிமுகப்படுத்தப்படவில்லை. பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க நினைக்கும் நாம் மதுவைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முன் வரவில்லை. "ஆப்பிளை தின்னாதே" என்று சொல்லித்தான் இன்று வரை நம்மைத் தவறு செய்ய வைக்கிறார்கள்.
என்னுடன் அமர்ந்து எத்தனையோ பெண்கள் பாலியல் சிந்தனை இல்லாமல் மதுவருந்தி இருக்கிறார்கள். டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே சாத்தியமான ஒன்றாக அது இருந்திருக்கிறது. சென்னையில் ஒரு தோழி, முதல் அறிமுகத்தில் கொஞ்சமாய் அருந்தினார். இரண்டு வருடங்கள் கழித்து சந்தித்துபோது தோழியின் அளவு என் வழக்கமான அளவைக் கேலி செய்தது. எங்கு தவறு நடந்தது. "நிறைய நண்பர்கள். தெனம் பார்ட்டி சார்’’ .. அருந்தும்போது அளவு முக்கியம் என்பதை ஏனோ அவர் மறந்துபோனார்.
என்னுடைய பதினாலு வயதில் அரசு சாராயம் விற்றது. என்னைக் கடைக்கு அனுப்பி வாங்கி வரச் சொன்னார்கள். பின் எனக்காக நானே வாங்கப்போகும்போது யாரும் என்னைச் சந்தேகப்படவில்லை.
காற்றோட்டமே இல்லாத அறையில் கதவடைத்துக் கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து, பெரியவர்களுக்கு பயந்து, யாருக்கும் தெரியாமல், அளவும் புரியாமல் ஊற்றி, அதனுடன் காளிமார்க்கையோ, பவுண்டோவையோ கலந்து, அவசரமாய் குடித்து, குடிப்பதற்கு முன்பும் பின்பும் மிக்சர் தின்று, பதினைந்து நிமிடத்தில் மூன்று நான்கு முறை ஊற்றிக் குடித்து, உடனே வாந்தி எடுத்து, தலைவலி வந்து, வேண்டவே வேண்டாம் என்று சத்தியம் பண்ணி.. இப்படித்தான்.. என் மதுப்பழக்கம் ஆரம்பித்தது.. பெரும்பாலான இளைஞர்களுக்கும் இதுதான் நிகழ்ந்தது. நிகழ்கிறது.
அவசரப்பட்டு குடிப்பவர்களுடன் இப்போது நான் மது அருந்துவதே இல்லை. யாராவது நேரமாகிறது என்றால் அத்துடன் நிறுத்தி விடுவேன். மதுவையும் அதன்பின் அவர்களோடு மதுவருந்த அமர்வதையும்.
என்னிடம் ஒரு தோழி அவள் கணவனிடம், "I am not a toilet to sit and go’’ என்று சொன்னதாகச் சொன்னார். இது மதுவருந்துவதற்கும் பொருந்தும்.
கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் எழும்பூரில் இருக்கும் பெட்டிக் கடைகளில் வெளியூர்போகும் பயணிகள் வாங்கி வரும் மதுவை ஊற்றிக் கொடுப்பார்கள். ஒரு குவாட்டரை இரண்டாய் பிரித்து ஏதோ ஒரு கூல் டிரிங்ஸ் ஊற்றி, ஒரே மூச்சில் அதிக பட்சமாக 2 அல்லது 3 நிமிடங்களில் குடித்து முடிக்க வேண்டும். குடித்துவிட்டு பஸ்சில் ஏறும்போதே படி தடுமாறும். செங்கல்பட்டு தாண்டுவதற்குள் போதை இறங்கி தூக்கம் கெடும். இப்போதைய சாலைகளில் திண்டிவனம் வரைத் தாங்கும்.
"நீங்கள் மதுவை நேசித்திருக்கிறீர்களா?" "அதனுடன் பேசி இருக்கிறீர்களா?" எப்போதுமே மதுவுக்கென்று தனி குண நலன்கள் இல்லை. குடிப்பவனின் மனநிலையைத்தான் அது பெறுகிறது. நாம் எந்த மனநிலையில் குடிக்கிறோமா அந்த மனநிலையைத் தூண்டிவிடுகிறது. கவிதை எழுதுவதும் நடுரோட்டில் நின்று கத்தியைக் காட்டி மிரட்டுவதும் மனநிலையின் வெளிப்பாடுகளே.
சோகமாக இருக்கிறேன், கோபமாக இருக்கிறேன் என்றெல்லாம் காரணம் தேடுவதில்லை நான். என் நண்பர் ஒருவர் எழுதினார். "போதை பெறுவதை நியாயமாக்குவதற்காகவே காதலில் தோல்விபெறக் காத்திருந்த காலம்’’ என்று.
``மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்’’
என்பது எனது கோகுலத்தில் சீதை படத்தில் எனது பாடல் வரிகள். ஆனால் ஏதோ ஒன்று மதுவருகே நம்மை அழைத்து போகிறது. சந்தோசமோ, துக்கமோ, வெறுமையோ, ஏமாற்றமோ, தனிமையோ ஏதோ ஒன்றுதான் நம்மை அதனருகே கொண்டு செல்கிறது. ஆரம்பிக்கும் போது மட்டுமே ஆர்வம் இருக்கும். அதற்கு பின்பு காரணங்கள் இருக்கும், ஆனால் எந்த மனநிலையில் இருந்தாலும் கொஞ்சம் மதுவோடு பேசிப்பாருங்களேன்.
"நான் உன்னை சந்தோசத்திற்காக குடிக்கிறேன். என் தூக்கத்திற்காக குடிக்கிறேன். எனக்கு துக்கமில்லை. சோகமில்லை. "உன்னுடன் எந்த முரண்பாடும் இல்லை. எனக்கு அமைதி கொடு. நல்ல சிந்தனை கொடு’’ என்று சொல்லிவிட்டு ஒரு முறை குடித்துப் பாருங்களேன். நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாகக் குடிப்பவர்களுக்கு நான் சொல்வது சரிப்படாதுதான். ஆனால் யாருடன் சேர்ந்து குடித்தாலும் குடிக்கும் முறையை மாற்றிக் கொண்டால் இந்த அணுகுமுறை சாத்தியமே.
முதலில் குடிப்பதற்கு காற்றோட்டமான இடம் தேர்ந்தெடுங்கள். உங்கள் வீடாக இருக்கலாம். வேறு எங்காவது இருக்கலாம். சூழ்நிலை அமைதியாய் இருப்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். நல்ல பாடல்களைக் கேட்கலாம். சிந்தனையொத்த நண்பர்களோடு மட்டுமே குடியுங்கள். உங்களை இன்னும் கொஞ்சம் என்று கட்டாயப்படுத்துகிறவர்களை விட்டு உடனே எழுந்து விடுங்கள். பின்பு ஒருபோதும் அவரோடு சேர்ந்து அமராதீர்கள்.
உங்களுக்கு எந்த மதுவகை பிடிக்கிறதோ அதை மட்டும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்தது முடிந்து போனால், வேறு வகை மதுவை உடலுக்குள் கலக்காதீர்கள்.
சத்தம் போட்டு பேசுபவர்களை ஒதுக்கி விடுங்கள். விவாதத்திற்காக எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உடன்பாட்டுச் சிந்தனையில் உரையாடுங்கள். நல்ல கண்ணாடிக் குவளைகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் 180 எம்.எல். அதாவது குவாட்டர் குடிப்பவராக இருந்தால் மூன்று லார்ஜ் ஆக பிரித்துக் கொள்ளலாம். அதனுடன் எதைக் கலப்பது என்பது முக்கியம்.
கோழிச்சாற்றில் பிராண்டி ஊற்றி பிள்ளைபெற்ற பெண்களுக்கு கொடுப்பார்கள். அது பசியைத் தூண்டும். அதைப்போல ஒவ்வொன்றையும் கலப்பதற்கு தெரிந்து கொள்ளுங்கள். பாட்டில் டிரிங்ஸ் மதுவின் சுவையைக் கொன்றுவிடும். "(Scotch on the Rocks) ஸ்காட்ச் ஆன் தி ராக்ஸ் ’’ என்பார்கள். நைனிடாலில் ஒரு விருந்துக்கு போயிருந்தேன். Cognac பரிமாறினார்கள். தண்ணீர் கேட்டேன். Donot insult my cognac என்றார் ஒருவர். எனக்கு ஐஸ் ஒத்துக் கொள்ளாது என்றேன். ஏற்கனவே சைனஸ் பிரச்சினை. தேன் மற்றும் ஏதேதோ கொண்டு வரச்சொன்னார். கலந்து தந்தார். மூக்கடைப்பு சரியானது. வந்து தூங்கி எழுந்தபோது சளி நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தது. எந்த சூழ்நிலையிலும் வழக்கத்திற்கு மாறான ஒன்றை செய்யாதீர்கள்.
இன்னொரு முறை அதே சளிப்பிரச்சினை. ஒரு அறிவுரை கிடைத்தது. ரம்.. வால்மிளகை வறுத்து சிறிது பொடி, ஒரு துண்டு இஞ்சி, வெந்நீர். செய்து பார்த்தேன். முதல் லார்ஜ் முடியும்போதே மூச்சு குழாய் வழியே சுவாசப் பையை காற்று தொடுவதை உணர முடிந்தது. இந்த சேர்க்கை மிகவும் பிடித்துப் போனது. நான்கைந்து நாட்கள் தொடர, மறுபடியும் மூக்கு மூடிக் கொண்டது. அறிவுரை சொன்னவர் அன்பாய்ச் சொன்னார். "நான் உனக்குச் சொன்னது மருந்து நீ உண்டது விருந்து’’
பழச்சாறு உடன் சேருங்கள். வோட்கா என்றால் தண்ணீர் சரிதான். பழச்சாறும் சரிதான். வோட்காவில் ஒரு சிறிய பச்சை மிளகாயை ஒரு துளையிட்டுபோட்டு, ஒரு முட்டைக்கு போடும் அளவு உப்பு, 50 எம்எல் சோடா, ஒரு சிறு துண்டு எலுமிச்சை, தண்ணீர்... "வோட்கா உறுத்தாமல் இருக்கும்" உங்களுக்கு எது ஒத்துக்கொள்கிறதோ, உமட்டாமல் இருக்கிறதோ.. அதுதான் உங்களுக்கானது.
200 ரூபாய் மதுவுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு சைட் டிஷ் சாப்பிடுகிறவர்களைப் பார்த்திருக்கிறேன். மதுவோடு உண்பதற்கு பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி மிகவும் நல்லது. குடிப்பதற்கு முன் தக்காளி ஜூஸ் அருந்தலாம். காலை எழுந்தவுடன் தக்காளிச்சாறு குடிக்கலாம் (ரெண்டும் ஒண்ணுதான்). வெள்ளரி, கேரட், வெங்காயம் நலம் தரும். அசைவம் என்றால் மிக அளவோடு. எண்ணையில் வெந்த அசைவ உணவுகளைத் தவிருங்கள். உங்கள் உடல் எடை கூடிப் போவதில் குடிக்கும்போது உண்ணும் உணவு பெரும் பங்கு வகிக்கிறது.
உங்கள் அளவை எப்பொழுதும் அதிகரிக்காதீர்கள் 1987-88 களில் நானும் ஒரு கவிஞரும், ஒரு இசையமைப்பாளரும், எப்போதாவது சந்தித்து மதுவருந்துவதுண்டு. ஒரு குவாட்டரில் ஆளுக்கு 90 எம்.எல் சாப்பிடுவார்கள். இன்று வரை அவர்களின் அளவு அதிகரிக்கவே இல்லை. திடீரென அளவு அதிகரித்தால் நினைவுகளில் நிகழ்வுகள் அழிந்து போகும். காலை எழும்போது குற்ற உணர்ச்சி குடையும். என்றாவது உங்கள் அளவை அதிகரிக்க நீங்கள் ஆசைப்பட்டால் உங்களை முற்றிலும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைபேசியை அணைத்து விடுங்கள்.
நீங்கள் அதிகரிக்க வேண்டியது குடிப்பதற்கான நேரத்தை. ஒரு லார்ஜ் ஆக இருந்தால் குறைந்த பட்சம் அரை மணி நேரம் குடியுங்கள். உங்கள் அளவிற்கான நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியோடு அல்லது பிடித்த புத்தகத்தோடு இல்லை பிடித்த நண்பரோடு உங்கள் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். (நண்பியாகவும் இருக்கலாம்).
ஒருமுறை நண்பர்களோடு மது அருந்தும்போது ஒருவரை, இவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிமுகப்படுத்தினார்கள். அவர் முன் இருந்த பீர் பாட்டிலை எடுத்தேன். "அய்யோ என்னுடையது" என்று அலறியபடி பதறிப்போய் பிடுங்கிக் கொண்டார். தனக்கு மட்டுமே என்பவருடன் சேராதீர்கள். எப்படியாவது தான் அதிகமாக குடித்து விட வேண்டும் என்று நினைத்து குடிப்பவரை சேர்க்காதீர்கள்.
இல்லறத்தையும் மதுவையும் தொடர்புபடுத்தாதீர்கள். உங்கள் தேவைக்காக பாலியல் தொழிலாளியைக் கூடக் கட்டாயப்படுத்தி மது அருந்தச் சொல்லாதீர்கள். ஒரு நல்ல இல்லறம் பாலியல் தொழிலாளியிடம் கூட கிடைக்கும். மது அதைச் சிதைக்கும். என் நண்பர் ஒரு பெண்ணை ஒரு இரவு தன்னுடன் தங்க வைத்தார். அந்தப் பெண் எங்கோ ஆசிரியையாக இருந்து வேலை இழந்தவர். நிறைய மது அருந்திவிட்டு கையில் கம்பை எடுத்துக்கொண்டு "Stand up on the bench" என்று வகுப்பெடுத்தார். அக்கம் பக்கம் தெரிந்தால் அசிங்கம் என்று இரவு முழுவதும் A for apple, B for bat, என்று சொல்லிக் கொண்டு பெஞ்ச் மேல் நின்றார் நண்பர்.
என்னைப் பொறுத்த அளவு மது என்பது என் நண்பன். நண்பனைத் தினந்தோறும் சந்திப்பது உண்டு. மாதக் கணக்கில் சந்திக்காமல் இருப்பதும் உண்டு. எனக்கு போராடித்தால் இரண்டு மூன்று நாட்கள் படிப்பதை நிறுத்தி விடுவேன். குடிப்பதும் அப்படித்தான் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் எல்லாம் நிறுத்தி விடுவது உண்டு. நிறுத்தியது போராடித்தால் போரடிக்கும் வரை குடிப்பதும் உண்டு.
குடித்துக் கொண்டிருக்கும்போது இந்த டிரிங்கோடு நிறுத்துகிறேன் என்று பாட்டிலை எடுத்துக்கொடுத்துவிட்டு ஒன்றரை ஆண்டுகள் குடிக்காமல் இருந்ததுண்டு. அதிர்ச்சி தரும் சம்பவங்களால் விடிகாலைப் பொழுதிலும் உறக்கம் தொலைத்து மதுவருந்திய துண்டு.
நண்பர்களோடு குடிப்பது என்பது எப்போதாவது. அப்படியே குடித்தாலும் அங்கு ஏதாவது தொழில் சம்பந்தமாக கதை பேசுவேன். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. யாருடைய வற்புறுத்தலுக்கும் உட்பட்டுக் குடிப்பதும் இல்லை.
ஓசியில் குடிப்பது என்பதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். பார்ட்டிகளில் மாட்டிக்கொண்டு எனது ஓட்டுனரை சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்று சற்று அவசரப்படும்போது சில சமயங்களில் சங்கடங்களை சந்தித்திருக்கிறேன். கிராமத்தில் இளஞ்சூடாக சாராயம் குடிக்கும்போது எலுமிச்சை ஊறுகாய், நியூசிலாந்தில் "டகீலா" குடிக்கும்போது உப்போடு எலுமிச்சை பழம், இதுதான் வித்தியாசம்.
கையில் புத்தகத்தோடு ஏதோ ஒரு சிந்தனையோடு சில சமயம் எனக்கு நானே விவாதித்துக் கொண்டு (ள் இல்லை) என்னை நானே விமர்சனம் செய்து கொண்டு.. அதீதமாய் சிலசமயம் கடவுளிடம் கூட (கற்பனையில்) உரையாடிக்கொண்டு, என் அறையில் அமர்ந்து மது அருந்துவது எனக்கும் என்னை நேசிக்கும் எனது மூன்று தேவதைகளுக்கும் (என் பெண்கள்) பிடித்தமான ஒன்று. அடிக்கடி மதுவை நிறுத்தும்போது சிரித்துக் கொண்டு "அடுத்து எப்பப்பா ஆரம்பிப்பீங்க’’ என்று கேட்கும்போது, இனி இல்லை என்று, சொல்லத்தான் நினைக்கிறேன். சீக்கிரமே ஒரு நாள் நிச்சயம் சொல்வேன்..
"சரி சார். நாம எப்ப சந்திக்கலாம், அப்படின்னு" நீங்க இப்பக் கேட்டா. மன்னிக்கவும். தற்போது நான் நிறுத்தி இருக்கிறேன்.
மதுவை தொடருங்கள்..தொடர் தொடரும்.. நட்பாய்..மதுவுடனே..
அன்புடன்
அகத்தியன். |