வலது புறம் செல்லவும் - 12
இயக்குனர் அகத்தியன் |
13-06-2011, 07:10 PM |
யாரோ ஒரு ஆண்மேல் கோபமாக
இருக்கும் அன்புத் தோழி செல்விக்கு
உங்கள் கருத்துப் பதிவைப் பார்த்தேன்
பெண்களுக்கான தன்னம்பிக்கை கட்டுரை
போலவும் இருக்கிறது.
பெண்களை உயர்ந்த பீடத்தில் வைப்பதாக
உங்களுக்கு நினைப்பா?
எந்தக்காலத்திலும் பெண்களை உயர்த்த
முழு மனதோடு பாடுபட்டதில்லை. தயவு செய்து
அப்படிச் சொல்லாதீர்கள்
பெண்களுக்காக பெண்களேதான் போராட
வேண்டும்.
அதுதான் நியாயமும் கூட
.. இது நீங்கள் ..
.. இனி நான் ..
பெண்களுக்கான தன்னம்பிக்கை கட்டுரைபோலவும்
இருக்கிறது
நான் எந்த தன்னம்பிக்கை கட்டுரையும் எழுதவில்லை.
பெண்களை மிக உயர்ந்த பீடத்தில் வைப்பதாக உங்களுக்கு
நினைப்பா.
மிக உயர்ந்த பீடத்திலேயே வைத்திருக்கிறேன். உங்களுக்கு
பிடிக்கவில்லை என்றால் இறங்கிக் கொள்ளுங்கள்.
எந்தக் காலத்திலும் பெண்களை உயர்த்த முழுமனதோடு
பாடுபட்டதில்லை. தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள்.
பண்டித ஜவஹர்லால் நேரு அன்னை இந்திராவை உருவாக்கினார். திரு காமராஜர் பிரதமராக்கினார். நீங்கள் தோற்றுப்போகவேண்டும் என்று உங்கள் தந்தை விரும்புவாரா? இல்லை விரும்பினாரா?
பெண்களுக்காக பெண்களேதான் போராடவேண்டும். உண்மைதான். ஒரு வார்த்தையை விட்டு விட்டீர்கள்.
அது "பெண்களுடன்"
அதுதான் நியாயமும் கூட..
இப்போது உங்கள் கடைசி கருத்து நிறைவு பெற்று விட்டது. நன்றி தோழி
சிறுவயதில் பள்ளியில் கற்பிக்கப்பட்ட அனேக விஷயங்களைப் பின்னால் நானே சிந்தித்து சரி செய்து கொண்டிருக்கிறேன். என்ன தான் யோசித்தாலும் ஒன்று மட்டும் கேள்வியாகவே நெடுங்காலம் தங்கி இருந்தது. மிகுந்த தேடலுக்குப்பின்தான். அந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது.
ஒரு நாள் சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியே உலா வந்தார். நோய், மூப்பு, சாவு இவைகளைக் கண்டு மனம்மாறி அரண்மனையை விட்டு வெளியேறி புத்தரானார் என்பது அந்தச் செய்தி.
எனக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்கிய செய்தி. யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொன்னார்கள். எதைப் படித்தாலும் இதுதான் இருந்தது.
மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரின் புத்தரும் அவர் தம் தம்மமும் என்ற புத்தகம் படித்தபோது அது வேறு ஒரு கருத்தைச் சொன்னது.
அன்றைய சாக்கியர்களின் அரச எல்லையில் கோலியர்களின் அரச எல்லை இருந்தது. எல்லை ரோகினி என்ற ஆற்றால் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாடுகளுக்கும் நதிநீர் பிரச்சினையை முன்னிட்டு போர் மூளும் அபாயம். சித்தார்த்தனுக்கோ போரில் விருப்பம் இல்லை. எதிர் கருத்து கொண்ட சித்தார்த்தன் சாக்கியர் சங்கத்திற்கு எதிராக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டு அவருக்கான தண்டனையாக நாடு கடத்துதல் முடிவு செய்யப்பட்டு, இளவரசன் என்பதால் அதை நிறைவேற்றுவதில் சிக்கல் எழும் என்ற நிலையில் தானே துறவு வாழ்க்கை மேற்கொண்டு வெளியேறினார் என்றது அந்தப் புத்தகம்,
இந்தக் கருத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை. மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறி மக்களுக்காக சிந்திருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் தேடியது துறவு வாழ்க்கை அல்ல. "ஞானம்" மக்களை விடுதலை அடையச் செய்வதற்கான வழி. அந்த வழியை எந்த வலி யோசிக்க வைத்திருக்கும். வெகு காலத்துக்குப் பின் எனக்கு விடை கிடைத்தது.
புத்த பகவான் என்றால் சுருள் சுருளான ஓய்யாரக் கொண்டை, மடிப்பு மடிப்பான அங்கவஸ்திரத்துடன் உடை. பத்மாசன அமர்வு, தொடைகளில் கை பதித்த முத்திரை இது ஒன்றுதான் நம் கண்முன்னே வரும். அரண்மனையை விட்டு வெளியேறி உடனே பத்மாசனத்தில் புத்தர் அமர்ந்து விட்டாரா? எப்படி சாத்தியமாகும்?
இப்படிக் காலங்காலமாக மக்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்களே இவர்களை யார்தான் தேற்றுவது.
இவர்களைச் சரியான பாதையில் வளமான இடத்துக்கு மேய்த்துச் செல்ல யார் வரபோகிறார்கள்.
இந்த மக்கள் தங்களை உணரும் காலம் எப்போது வரும்.
இப்படியெல்லாம் யோசித்து மலையடிவாரங்களில் வயல் வரப்புகளில், காடுமேடுகளில், குடியிருப்புகளில் செய்வதறியாது நடந்தே திரிந்திருக்கிறார்.
அய்யோ இளவரசன் என்று அடையாளம் கண்டு பதறியவர்களிடம் நான் உங்களில் ஒருவன், உங்களைப் போல் ரத்தமும் சதையுமாகக் கிடந்தவன், அரண்மனை வேண்டாம், நீங்களே வேண்டும் என்று உங்களோடு உங்களாக வந்திருக்கிறேன். எனக்குத் தண்ணீரும் உணவும் தாருங்கள். பதறிச் சமைக்க மெதுவாக அருகே நடந்து சென்று இருககும் பழைய உணவைக் கேட்டு வாங்கி உண்டு விட்டு மீண்டும் மக்களைப் பற்றி யோசித்தபடியே வந்து எங்காவது விருட்சங்களுக்கு கீழ் காற்றுக்காய் திண்ணை சமைத்து சாணம் மெழுகப்பட்டிருந்தால் அங்கே தூங்கி விடுவார். தூங்கும் போதெல்லாம் வெளிப்பார்வைக்கு கண்கள் மூடி இருந்தாலும் உள்ளே இருக்கும் மனக் கண்கள் எதையோ பார்த்துக் கொண்டே இருக்கும்.
ராஜயோக அரண்மனை வாழ்வைத் துறந்து வெளியே வந்த ஒருவன் முகம் வற்றி களையிழந்துதானே காணப்படவேண்டும். ஆனால் சித்தார்த்தன் முகத்தில் நாளுக்க நாள் ஒளி வீசியது.
கிட்டதட்ட அறநூறு ஆண்டுகளுக்குப் பின் நானே உலகின் ஒளி என்று ஒரு குரல் ஒலித்தது.
அதே இடைவெளியில் அரபு தேசத்தில் ஒரு ஒளி பிறந்தது.
இவை தனித்தனி சூரியன்களா? இல்லை ஒரே சூரியன் உதித்து மறைந்து உதித்ததா?
கேள்வியை இருத்திக்கொள்வோம். எல்லாவற்றுக்கும் விடை கிடைக்காமலா போய்விடும்.
பசி, பிணி, மூப்பு என்று அனைத்தையும் ஒரே நாளில் பார்த்துவிட்டு வெளியேறிய விஷயம் இல்லை அது.
அரண்மனை, படாடோபம். கருந்தேக்கில் நூறுபேர் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவருந்தும் உணவு மேஜை, அரச விருந்தினர் என்ற பெயரில் எங்கிருந்தோ அழகிகளுடன் வரும் உல்லாசப் பேர் வழிகளுக்கு காலையில் சைனா உணவு, பதினோரு மணிக்கு திபெத்திய உணவு, ஒரு மணிக்கு மங்கோலிய உணவு, ஏழு மணிக்கு கொரியன் உணவு, அவர்கள் சாப்பிடுகிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
மேசையில் உணவு வகைகள் இறுதியாய் கை அலம்பும் நேரம் வரை வந்து கொண்டே இருக்கும். இறுதியாக இனிப்புக் கஞ்சி வெள்ளித் தம்ளர்களில் நிரப்பி வைக்கப்படும். நான்கு தேக்கரண்டி குடித்துவிட்டு ராஜ குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துவிட, அதைக் கூடைகளில் கொட்டி அரண்மனை வேட்டைநாய்களுக்குப் போட பணியாளர்களிடம் கொடுக்க, பணியாளர்கள் தூக்கு வாளிகளில் தங்களுக்காக அதை நிரப்பிக் கொள்ள பகீர் நெஞ்சோடு பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்தன்.
தேவைக்கேற்ப சமைத்து உண்ணுங்களேன்! இல்லை சித்தார்த்தா இது அரண்மனைச்சட்டம், ஒவ்வொரு நேரமும் என்ன சமைக்க வேண்டும். எவ்வளவு சமைக்க வேண்டும் என்பது கட்டளை.
அரண்மனைக்கு வெளியே கூழுக்கும், கிழங்குக்கும் சோள உணவுக்கும் மக்கள் அடித்துக் கொள்வதும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிகளில் நீண்ட வரிசையில் நின்று பசியின் கொடுமையால் கடைசிச் சொட்டுவரை வாயில் தட்டித் தட்டி உண்ணும் நிகழ்ச்சிகளையும் சித்தார்த்தன் பார்த்தான்.
ஏன் இந்த நிலை ஒருபுறம் வசதியான வாழ்வு, ஒருபுறம் வறுமை. சித்தார்த்தன் சிந்தித்த முதல் இடம் இதுதான்.
இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் எல்லா வசதிகயோடும் ஒரு அரசியல் வாதியின் மகன் 20 வயது வரை வளர்க்கப்பட்டு வாழ்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல முகூர்த்த நாளில் அவனை வெளியே காரில் அழைத்து வருகிறார்கள். வழியில் பிச்சைக்காரனைப் பார்க்கிறான். வயதான மூதாட்டியைப் பார்க்கிறான். சாவைப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மாலையில் லீ மெரிடியன் பாரில் ரெமிமார்ட்டின் சாப்பிட்டுக் கொண்டே அழுது வெளியேறி விடுவானா? ஞானம் பரப்புகிறேன் என்று புறப்பட்டு விடுவானா?
வறுமையையும், இறப்பையும், முதுமையையும் பார்க்கும் அன்றும் சரி இன்றும் சரி எந்த ராஜகுமாரனுக்கும் ஞானம் தேட வேண்டும் என்ற ஆசையெல்லாம் வந்து விடாது. அவனைப் பாதிக்கக் கூடிய தொடர்புடைய சம்பவங்கள், பாதிப்புகள் அரண்மனைகளில் நடந்தால்தான் அவனால் யோசிக்க முடியும்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகருக்கு கதை சொன்னேன். அவருக்குப் பிடிக்கவில்லை. எனக்குச் சொல்லப்பட்ட காரணம் பசி, வறுமை, குடிசை என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. அவர் படித்த லயோலா கல்லூரிக்கு வெளியே நிறைய குடிசைகள் இருந்ததை அவர் ஒருநாளும் கவனித்ததில்லை போலும்.
அன்றைய நாளில் இருவேறு நிலைகள். அரண்மனையில் சமைத்துப் போட சமையல் கலைஞர்கள். தின்றது செரிக்கவும் பசி வர வைக்கவும் வைத்தியர்கள்.
வெளியே பசியால் துடிக்கும் மக்கள். வெளி உலகம் பார்த்த சித்தார்த்தனுக்கு உள் உலகத்தின் மீது கோபம் வந்தது.
அடுத்து மரணம். மகாராணியின் உறவுக்கிழவன் இரவு நித்திரையின்போது நிஜ நித்திரை அடைந்து விட்டான் என்ற தகவல் வருகிறது. ராணியார் மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து வருவார். அடக்கத்திற்கு தயார் செய்யுங்கள் கலந்து கொள்கிறேன் என்று மன்னர் செய்தி அனுப்புவார். அரண்மனையில் ரத்தமும் சதையுமாய் கூடவே இருந்து உறவாடிய மனிதன் இறந்துவிட்டான் என்ற பதைப்பு இல்லை.
உடலில் பனிக்கட்டிகளை நிறைத்தாகிவிட்டது. அதிலும் ஜவ்வாதும் தூவியாயிற்று. சப்பரம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. அடக்கத்திற்கு தளபதிகள் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். உள்ளே வைத்து மூடுவதுதான் வேலை.
வெளி உலகில் இறப்பின் கோரமும், உறவுகளின் பதைபதைப்பும் கண்ணீரும் உறவுகளின் உள் அர்த்தமும் சமீபமாய் அறிந்த சித்தார்த்தனை வேதனைப்படுத்தி சிந்திக்க வைத்தன.
அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே அரசன் மனைவியைக் காணமுடியும். யாரைச் சந்திப்பதாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும். இயந்திரம் போல் வாழ்க்கை உண்பதும், உறங்குவதும், கற்பதும், கலைகள் அறிவதும், போர்பயிற்சியும் ஒரு இயந்திரத்தனமான வட்டமாகியது. வட்டத்துக்கள் சுற்றிச் சுற்றி வந்த சித்தார்த்தன் யோசித்தான்.
என்ன வாழ்க்கை இது? இறந்துவிட வேண்டும் அல்லது ஓடிப்போய் விடவேண்டும்.
காலம் அந்த மகானை இறந்துபோ என்று சொல்ல வில்லை. இறப்புக்கு பிறகும் வாழவேண்டும். வெளியேறு. உனக்கு வேறு உலகம் காத்திருக்கிறது என்றது.
மிக வசதியான ஒரு வீட்டில் வயதான ஒருவரைக் குளிப்பாட்டவும், உணவு கொடுக்கவும், படுக்க வைக்கவும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். அரண்மனை என்பது வசதிகளின் வசதி, அங்கே மூப்பு என்பது சங்கடப்படுத்தாத ஒன்று. அதன் கோரத்தைக் காட்டாது.
சித்தார்த்தன் வெளி உலகில் கண்டது மூப்பை அல்ல மூப்பின் கோரத்தை.
மரணத்தை அல்ல. மரணத்தின் வலியை.
பசியே அறியாத சித்தார்த்தன் கையேந்திப் புசிக்கும் அவாவையும் அதற்கான அழுகையும் கண்டான். `ச்சீ` என்றானது. வெளியேறினான்.
2600 வருடங்களுக்கு முந்தைய செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தேவைகள் மிகச்சிலவே அன்றைய மனிதனுக்கு பசிக்காக உழைப்பது. குடும்பம் பேணுவது. ஒரு 50 வயதிற்கு மேல் இறைவனைத் தேடி பரதேசம் போவது. பரதேசம் என்பது அன்னிய நாடுகளில் கோவில்களைத் தேடிப்போவது. சிறு சிறு நாடுகளாக பிரிந்து கிடந்த அன்றைய பூமியில் இறைவனைத் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருந்தனர். சன்னியாசிகள் என்பவர்கள் இளமையிலேயே துறவு வாழ்வை மேற்கொள்ளுபவர்கள். பரதேசிகள் அறம், பொருள், இன்பம் கண்டு வீடுபேற்றைத் தேடுபவர்கள். உலகெங்கிலும் மொத்தமாக இரட்சிக்கும் ஒரு கடவுளுக்காக காத்திருந்த நேரம் அது.
அப்போது தான் புத்தர் வெளிப்பட்டார். சதா மக்கள் பற்றியும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் பற்றியும் சிந்தித்தபடியே இருந்தார். பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே நாளெல்லாம் இருந்து தன்னைப் பேண மறந்தார். பஞ்சு மெத்தையும் பளபளப்பான ஆடைகளுமின்றி மர நிழலிலோ இடிந்த மண்டபங்களிலோ தூங்காமல் ஆகாயம் நோக்கிப் படுத்திருந்தார். கிடைக்கும் இடத்தில் அவரை நேசிக்கும் மனிதர்கள், பாலோ, பழங்கூழோ, மீனோ, அடைத்தேனோ எதைக் கொடுத்தாலும் விருப்பத்துடன் வாங்கி உண்டார். ஜாதி மத பேதமின்றி தோளோடு தோள் போட்டு அவர்களுடன் நடந்தார்.
ஆனால் மக்களில் சிலரின் பேச்சு அப்போது வேறாகத் தான் இருந்தது. ஒரு அரச குடும்பத்தில் இருந்து ஒருவர் ஞானியாகிறார் என்றால் அது மக்களை பல்வேறு விதமாகப் பேச வைத்தது.
அவருக்கு அரண்மனையின் அறுசுவை உணவு சலித்திருக்கும் வீதி உணவை ஏற்றுக் கொண்டார் என்றார்கள்.
ராஜ உடைகள் போட்டுப் போட்டு அலுத்திருக்கும். கச்சை கட்டிக் கொண்டு மரத்தடியில் அமர்ந்துவிட்டார் என்றார்கள்.
நேற்று வரைக்கும் ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தத்துவம் பேசுகிறார். அவர் மனதைப் புண்படுத்துவானேன். சரி என்று கேட்டு விட்டு நம் வேலையைப் பார்ப்போம் என்று பேசினார்கள்.
ஆனால் புத்தர் இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தார். அது மெல்ல மக்களைச் சென்றடைய ஆரம்பித்தது. அந்த சமூக விஞ்ஞானி ஒவ்வொரு விஷயத்தையும் பரிட்சார்த்தமாக மக்கள் மாற்றுக் கருத்தே சொல்ல முடியாவண்ணம் சொல்லி செய்து விட்டு வா என்பார். மக்களைத் திருத்த, அவர்களுக்கு போதிக்க வாழ்நாள் முழுக்க அதைத்தான் செய்தார்.
கொடும்பாவம் செய்துவிட்டேன். என்னில் இருந்து இறக்குவது எப்படி? ஒருவன் கேட்டான். அருகே வைத்திருக்கும். குவளையில் உள்ள பாலை எடுத்து நீட்டி இது ஆட்டிடம் இருந்து என் பசிக்காய் திருடியது. மனது உறுத்துகிறது. காம்பு மூலமாக இதை மீண்டும் உள்ளே செலுத்தி விட்டு வா. உன் பாவத்தைக் போக்குகிறேன்.
அது எப்படி பகவானே? காம்பு மூலமாக எப்படி உள்ளே செலுத்துவது? முடியாதே.
உள்ளே இருப்பவை வெளியே வந்துவிட்டால் வெளியே வந்தவை அதற்குரிய மாற்றத்தைப் பெற்றே தீரும்.
உனக்குள் இருக்கும் கொடுஞ்செயல் வெளியே வந்து விட்டது. அதன் கர்மாவை அது அனுபவிக்கட்டும். இன்னும் உள்ளே இருக்கும் கொடுஞ்செல்களை எல்லாம் தூய சிந்தனைகள் மூலம் நற்செயல்களாக மாற்று. கொட்டிய சிறு பாவத்திற்கு தண்டனையும் சிறிதாய் இருக்கும். போய் வா மகனே.. என்று புன்முறுவல் பூப்பார்.
காட்டாற்று வெள்ளத்தில் என் உடமைகள் எல்லாம் சென்று விட்டது. நான் எங்கு தேடுவது?
நீ போட்டிருக்கும் உடுப்பு எப்போது நெய்தாய்? எங்கு பெற்றாய்?
ஆறு மாதங்கள் ஆகிறது சாமி.
ஆறு மாதங்களுக்கு முன்னால் உள்ள உடுப்பு எங்கே.
கந்தையானது சாமி, எறிந்துவிட்டேன்.
அதற்குமுன்?
அதுவும் கந்தையாகிவிட்டது.
உடுப்பு கந்தையாகி விட்டது என்று என்னிடம் வந்தாயா? அடுத்தது வேண்டும் என்று வந்தாயா மகனே? புதிய உடுப்பைப் பெற நீ என்ன செய்தாயோ, புதிய உடமைகளைப் பெற அதையே யோசி.
ப்ராக்டிகல் என்பதையே வாழ்நாள் முழுதும் அதிலும் மகான் என்றால் மாயாஜாலம் புரிபவன் அல்ல மாற்று வழி சொல்பவன்தான் என்று ஆணித்தரமாகச் சொன்னவர் புத்தர்.
சாமி எம் புருஷன் தெனம் தெனம் அழுகிய கரும்பு ரசம் குடிச்சிட்டு தெனம் தெனம் என்னை அடிக்கிறான்.
பொறுத்துக் கொள் மகளே. இவன் முன் சொல்வான் நீ பின் செல்வாய்.
என்ன சாமி புத்தி சொல்லுவீங்கனுதானே உங்களைத் தேடி வந்தேன்.
இவனுக்கு புத்தி சொல்ல நான் யார் அம்மா. ஆனால் 70, 80 வயது வரை இவனிடம் அடி வாங்குவதை விட ஒரு 5 வருடம் அடி வாங்கு. பின் யாரும் உன்னைக் கை நீட்டமாட்டார்கள்.
அய்யோ அப்ப நான் 5 வருஷத்துல செத்துபோவேன்னு சொல்றீங்களா?
உன்னைச் சபிக்க நான் யார் மகனே. அதை நீ அருந்தும் ரசம் சொல்லும் போ..
நேபாளமும் இன்றைய மணிப்பூரும், ரங்கூனின் பகுதிகளும் புத்தர் காலடி பதித்த இடங்கள். அன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு அரசியலமைப்பும் தேச கட்டமைப்பும் இருந்தது. அரசனைப் போற்ற வேண்டும் என்பது மற்ற நாடுகளில் இருந்தாலும் அரசனைப் போற்றிப் பாதுகாத்துப் பேண வேண்டும் என்பது நேபாள முறை. பின்னாளில் மொகலாய ஆட்சியிலும் இந்த முறை இருந்தது.
அப்படிப் போற்றிப் பாதுகாத்து பேணுபவர்கள் விசுவாசிகள். விசுவாசிகளுக்கு ஊதியம் கிடையாது. அரசனைக் காத்து தானே உழைத்து தன்னையும் காத்துக் கொள்ள வேண்டும். அரண்மனையிலிருந்து ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தனக்காக உழைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வாதாரம் வயல்களில் உழைப்பதும், கோஸ், உருளைக் கிழங்கு விளைவிப்பதிலும் கரும்பு போன்ற பயிர்களிலும் இருந்து. இதிலிருந்து ஓய்வு கிடைக்கும்போது அரசு இமயம் நீரை கால்வாய் வெட்டிக் கொண்டு வருவது, அரண்மனைப் பராமரிப்பது, அரசுக்கு கட்டிடங்கள் கட்டுவது, ஆலயங்கள் ஏற்படுத்துவது என அவர்களைப் பயன்படுத்தும்.
இன்று வரை நேபாளிகளுக்கு இணையான உழைப்பாளிகளை காவல் காக்கும் திறனை, எதைச் செய்தாலும் அதில் காட்டும் ஈடுபாட்டை வேறு எங்கும் காண முடியாது. அவர்கள் உழைப்பும், விசுவாசமும், செயல் திறனும் பல நூற்றாண்டு பாரம்பரியம் உடையவை. இயற்கையிலேயே கரடுமுரடனான பகுதிகளில் வாழ்க்கை அமைந்ததாலோ என்னவோ அவர்கள் சதையும் மனதும் இறுக்கமாகவே இருந்தன. அந்த இறுக்கம் தான் சமீபத்தில் வெடித்தது. காலங்காலமாக அரண்மனை விசுவாசிகள் என்ற பெயரால் அவர்கள் பிழியப்பட்டு நசுக்கப்பட்டதன் விளைவுதான் அங்கு மன்னன் அடித்து விரட்டப்பட்ட நிகழ்காலப் பதிவு, மன்னன் ஞானேந்திரா வாடகை வீட்டில். இந்த அடக்குமுறை அரண்மனையில் நாற்பது சுவர்களுக்குள் ராஜபோகமாக வாழ்ந்த சித்தார்த்தன் நான்கு சுவர்கள் கூட இல்லாமல் வாழ்ந்த மக்களைப் பற்றி யோசித்த முதல் புரட்சிக்காரன். ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை சொல்லி மக்களை உணரச் செய்து அவர்கள் வாழ்விற்கு வழிகாட்டிய மனிதன்.
அரண்மனையால் சுரண்டப்பட்ட மக்கள் மனது வலித்தது. அதைக் கண்ட சித்தார்த்தன் மனது வலித்தது. புத்தன் பிறந்தான்.
சீனத்தின் ஒரு பகுதியும், தாய்லாந்து, பர்மா, கம்போடியா, தைவான் போன்ற ஆசிய நாடுகளில் ஒரு பகுதியும், ஜப்பான் வடகொரியா, தென் கொரியா இலங்கையில் ஒரு பகுதியும் மளமளவென்று புத்தக் கொள்கைகள் பிடித்துப் போக, மொத்தமாக கடவுளை எதிர்பார்த்திருந்த உலகத்தில் சரி பாதி புத்தமதத்திற்கு உடனடியாக மாறியது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று ஒவ்வொரு பௌத்தனும் சொல்லிக் கொண்டானே தவிர ஆசைகளை யாரும் விட்டதில்லை. ஆனாலும் பௌத்த பிக்குகள் கொஞ்சம் அமைதி காத்தார்கள். பேராசைப் பட்டுக் கொண்டிருக்கும் மனித இனம் பேராசைப் படக் கூடாது. ஆனால் ஆசைப்படலாம் என்ற முடிவுக்கு வந்ததே பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
மண்ணாசை, பெண்ணாசை. பொன்னாசை மூன்றும் கொண்டு மன்னர்களிடம் போட்டியும் பொறாமையும் வளர்ந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டது வீரர்கள் என்ற பெயரில் பொதுமக்கள்தான். புத்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எப்படியோ போர் வராமல் நாடும் மக்களும் அமைதியாக இருந்தால் போதும் என்ற மனநிலையில் ஆசிய நாடுகளில் மக்கள் புத்த மதத்தில் தீவிரமாக இணைந்தனர்.
அவர் தோன்றிய பாரதத்தில் அம்மதம் காலூன்ற முடியவில்லை. எண்ணற்ற சிறு தெய்வ வழிபாடுகளும், ஆடு, கோழி, மாடு போன்றவற்றை பலியிட்டு உண்பதுமாக வாழ்ந்த மக்களிடம் புத்தர் சென்றடைந்தபோது அவரின் கொல்லாமை அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக இருந்தது. புத்தரின் கருத்துக்களுக்கும், பலியிடும் தம் கடவுட்களுக்கும் இடையில் புத்தர் சைவ சாமி ஆனார். ஊருக்கு வெளியே புத்தரை வைத்தனர். ஒதுக்கப்பட்ட மக்கள் ஊருக்கு வெளியே நின்று புத்தரை வணங்கினர். புத்தர் ஒதுக்கப்பட்ட மக்களின் ஒதுக்கப்பட்ட கடவுளாக இந்தியாவில் மாறிப்போனார்.
புத்தருக்கு ஒரு வருத்தம் இருந்தது. அது அரண்மனையில் பிறந்ததனால் வந்த வருத்தம். வரலாறு பதிவு செய்யாத வருத்தம். இளமைக் காலத்தில் அரண்மனை சுகபோகங்களில் திளைத்து, வாலிபத்தை கொண்டாடி பின் ஞானம் தேடிப் புறப்படாமல் ஒரு ஏழைக்குடும்பத்தில் மிகச் சாதாரணமானவாய்ப் பிறந்து மக்களோடு மக்களாகக் கலந்து ஞானம் தேடி போதித்திருந்தால் இன்னும் மக்களை எளிதாகச் சென்று சேர்ந்து அவர்கள் வாழ்க்கையை சீரமைத்திருக்கலாமே என்று.
ஒரு சாதாரண மனிதனாக ஏழைக் குடும்பத்தில் பிறக்க அவர் ஆசைப்பட்டார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழைக் குடிசையில் ஒரு மக்கள் தலைவன் வெகுகாலம் கழித்துப் பிறந்தான். அவன் புத்தனா என்று தெரியாது. ஆனால் அவனும் புத்தனாக இருந்தான்.
வானுலகத்தை வணங்கி
அகத்தியன்.
|