வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
வலது புறம் செல்லவும்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


அகத்தியன்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில் முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன். இவரது இயற்பெயர்கருணாநிதி என்பதாகும். இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் பேராவூரணி ஆகும். இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த "மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991 ஆண்டு வெளிவந்தது. 1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த "மதுமதி' வெளிவந்தது. இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார். மூன்றுஆண்டுகள் டைவெளிக்குபின்னர்1996
இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த வான்மதி"
படத்தை இயக்கினார்.

தேவா இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அதே1996 ஆண்டு வெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரை உலகத்தை இவர்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. படம்மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்கம்
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அகத்தியனுக்கு மட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப்படம் தமிழ்சினிமாவின் டிரென்ட் செட்டராக அமைந்தது. பின்னர் இதே ஆண்டில்
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை"படம் மூலம் மீண்டும் தான்
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் . இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது.

நடிகர் கார்த்திக்கும் இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்
சுவலட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்.1997 இல் "விடுகதை வெளியானது. 1998 இல்பிரசாந்த் இஷாகோபிகர் நடிப்பில் வெளிவந்த "காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கி
தந்தது. இளையராஜா இசையில்இந்தப்படத்தின்
பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல் "காதல் சாம்ராஜ்யம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து "ராமகிருஷ்ணா" 2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

அகத்தியன் கடைசியாக எடுத்த படம்
விக்ராந்த், பாரதி நடிப்பில் வெளிவந்த
"நெஞ்சத்தைகிள்ளாதே". சரவணன் நடித்த "சந்தோசம் " படத்தின் திரைக்கதை இவர் எழுதியதே. சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார்.

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி
சென்னை 28 , கற்றது களவு, அதே
நேரம் அதேஇடம், அஞ்சாதே ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு
"சுல்தான் திவாரியார்" அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இன்னொரு மகள் நிரஞ்சனி
costume designer ஆக இருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின்
கணவர் திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தின் இயக்குனர் ஆவார். அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை
படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS வலது புறம் செல்லவும் TS அகத்தியன் தொடர்கள் வாயில்

வலது புறம் செல்லவும் - 10


இயக்குனர் அகத்தியன் 31-05-2011, 11:58 PM

நண்பர்களே உங்களின் கருத்துப் பதிவுகளுக்கு நன்றி. ஒவ்வொரு வாரமும் இயன்றவரை சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யவே முயல்கிறேன். கடந்த இரண்டு வாரங்களை நண்பர் அருண் தவறவிட்டார். இந்த வாரம் என்னால் இயலாமல் போனது. இனி தொடரும் வாரங்களில் திங்கள் அன்றே பதிவேற்றம் செய்யப்படும். மன்னிக்கவும்.

பெண்களைப் பற்றிய பதிவுகள் புத்தகங்களில் ஏராளமாகக் காணக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் திரட்டித் தருவதில் எனக்கும், என்னை எழுதப் பணித்தவர்களுக்கும் உடன்பாடில்லை. எனவே இயன்ற வரை புதிய செய்திகளையும், பழைய செய்திகளை புதிய கோணத்திலும் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

வரலாற்றில் பெண்கள் நிறையவே மறைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளைப் பராமரிப்பது, கால் நடைகளில் பால் கறப்பது, வயலில் வேலை செய்வது, துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, நோயாளிகளைப் பராமரிப்பது, இறந்தவரைச் சுற்றி நின்று அழுவது என்று இன்று வரை பெண்கள் விதிகளுக்கு உட்படுத்தப்பட்டே வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

வரலாற்றுப் புகழ்பெற்ற மேஃபிளவர் கப்பலில் பயணம் செய்த பதினெட்டு பெண்கள் பற்றிய உண்மை மறைக்கப்பட்டதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

முதன் முதலாக லண்டன் நாடக மேடையில் தோன்றிய பெண்கள் இழிவாக விமர்சிக்கப்பட்டனர். அந்தப் பெண்கள் ஆணவமானவர்கள் என்றும் வேசிகள் என்றும் பதிவு செய்யப்பட்டனர்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே தனது முதல் திரைப்படத்திற்கு ஒரு நாயகி கிடைக்காமல் அவதிப்பட்டார். நடிக்க வந்த ஒரு பெண்ணும் மிரட்டித் தடுக்கப்பட்டார். ஒரு ஆணையே பெண்வேடமிட்டு கதாநாயகி ஆக்க வேண்டிய சூழ்நிலையே அன்று இருந்தது.

1431ல் ஆண்களின் உடைகளை அணிந்ததற்காக மட்டுமே ஜோன் ஆப் ஆர்க் பிரான்சில் தண்டிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டாள். இப்படி செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்று வரை பெண்களின் கன்னித்திரை என்பது ஆண்களின் கனவாகவே இருக்கிறது. ஒரு பாலியல் தொழிலாளியைச் சந்திக்கிற ஆண் அவளிடம் கேட்கும் முதல் கேள்வி "நீ புதுசா" என்பதுதான். ஒரு பெண்ணைப் பயன்படுத்துகிற மனிதன் அவளை இன்னொருவன் பயன்படுத்தி இருக்கிறாளா என்று அறிந்து கொள்வதில் ஆவல் உள்ளவனாகவே இருக்கிறான். கற்பு என்பது ஒரு பெண்ணின் இரண்டு கால்களுக்கு இடையில் இருக்கிறது என்பதே ஆணின் கருத்தாக உள்ளது.

திரு ஜெயகாந்தன் "அக்னிப் பிரவேசம்" என்று ஓர் சிறுகதை எழுதினார். கல்லூரியில் இருந்து திரும்புகிற ஒருபெண்ணை ஒருவன் வன்புணர்ச்சி செய்து விடுகிறான். வீட்டுக்கு வந்து அவள் தன் பாட்டியிடம் சொன்னபோது தலையில் தண்ணீர் ஊற்றி "இது கங்கை நீர் உன்னைப் புனிதமாக்கி விட்டது. உனக்கு ஒன்றும் நேரவில்லை" என்று சொல்கிறார் பாட்டி.

உடனே தமிழ் கூறும் நல்லுலகம் கொதித்துப் போனது கெட்டுப்போனவள் தலையில் தண்ணீர் ஊற்றினால் சுத்தமாகி விடுவாளா? என்று கேள்வி கேட்டது. அன்றைய சமுதாயச் சூழலில் ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்கும் அவளை மேம்படுத்துவதற்குமான அந்த சிந்தனையைக் காயப்படுத்தியது.

அப்படி வந்த ஒரு பெண்ணை நான்கு பேர் அறிய இழிவுபடுத்தினால் அவள் என்ன ஆவாள்? அவரே அதையும் எழுதிக் காட்டினார். "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற நாவலின் மூலமாக. கங்காவின் வாழ்க்கை கண்ணீர் நிறைந்ததாக மாறிப்போனது. எங்கேயோ சந்தோஷமாக வாழவேண்டிய கங்கா சந்தித்த சங்கடங்கள் கொஞ்சமில்லை.

"வேறு இடம் தேடிப்போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறுமுறை இவள் புறப்பட்டாள் - விதி
நூலிழையில் இவள் அகப்பட்டாள்",
என்று அது படமானபோது கங்காவைப் பற்றி ஜெயகாந்தன் எழுதிய பாடல் இது.

மீண்டும் தொடர்ந்து கங்கை எங்கே போகிறாள் எழுதினார்.

கல்ப் இட் பேபி கல்ப் இட். எரியும். கசக்கும், குமட்டும். தட் இஸ் லைப்.

என்று ஆரம்பிப்பார் அந்த நாவலை. ஒரு தந்தையின் இடத்திலிருந்து கங்காவை ஜெயகாந்தன் பதிவு செய்திருப்பார். என்னதான் பெண்ணைப் பற்றி பேசினாலும், அவளின் வேதனைகளைச் சொன்னாலும் இன்றும் கற்பு என்பது இரண்டு கால்களுக்கு இடையே இருப்பதாகத்தான் ஆண்கள் எண்ணுகின்றனர்.

ஒரு விசித்திரமான நிலை பெண்களுக்கு இங்கே உருவாகி விட்டிருக்கிறது. மனைவியாக அவமானப்படுத்தப்படுகிறாள். தாயாகப் போற்றப்படுகிறாள். தன் கணவன் தன்னைத் துன்பப்படுத்தும்போது தன் மகனை உயர்த்த துன்பங்களைத் தாங்குகிறாள். உயர்ந்த நிலைக்கு வரும் மகன் தாயைப் போற்றுகிறான். தன் மனைவியை துன்பத்திற்குள்ளாக்குகிறான். இங்கே பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகி விடுகிற சூழ்நிலை வேறு. அப்படி சித்தரிக்கப்படும் பெண்களை பெண்களே விரும்புவது வேடிக்கையாகவே இருக்கிறது. இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில் பெண்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகிறார்கள். எந்தப் பெண்கள் அமைப்பும் பெண்களை உடல் ரீதியாக காட்டும்போது மட்டுமே போராடுகின்றனர். மனரீதியாக அவர்கள் கேவலப்படுத்தப்படும்போது ரசிக்கின்றனர்.

"தன் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யும்போது,
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?"

என்று பாடும் பட்டினத்தார்.

"எத்தனை பேர் நட்டகுழி? எத்தனைபேர் தொட்டமுலை?
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ்?
நித்தம் பொய்யடா பேசும் புவியில் மட மாதரை விட்டு
உய்யடா! உய்யடா! உய்!"

என்று இன்னொரு பெண்ணை இழிவு செய்கிறார்.

ஒரு பெண்ணிடம் காமத்தில் வீழ்ந்து கிடப்பது ஆணின் தவறா? பெண்ணின் தவறா? மாதவியா கோவலனை அழைத்தாள். "நீயே வலியச் சென்று மயங்கி மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள்" என மாதவியைச் சொல்வது என்ன நியாயம். தேடிப்போய் அனுபவித்து திரும்பி எத்தனை பேர் நட்ட குழி என்றால் யாருமே நடாமல் இருந்தால் உத்தமி என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா?

"கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து" என்று தாயைப் போற்றுகின்ற பட்டினத்தார், அதே கட்டிலில் வைத்துக் காதலித்த இன்னொரு பெண்ணைவிட்டு, "உய்யடா! உய்யடா! உய்!" என்கிறார்.

பெண்கள் பாசம் காட்ட வேண்டும். காமம் தணிக்க வேண்டும். இரு நிலைகளில் மட்டுமே ஆணால் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள்.

அந்தப்புரங்களில் இருந்து அனுப்பப்பட்ட பெண்கள். போர்க்காலங்களில் கவர்ந்து செல்லப்பட்டு அனுபவித்த பின் கைவிடப்பட்ட பெண்கள். ஆண் சமூகத்தினால் உறவுகளில் இருந்து ஒதுக்கப்பட்ட பெண்கள். இப்படி ஒரு கூட்டம் உருவானபோது பிழைப்பதற்கு தங்கள் உடலை விற்கும் தொழிலும் உருவாகி இருக்க வேண்டும்.

உடல் ரீதியாக வலிமை கொண்ட பெண் இல்லற வாழ்வில் ஏமாற்றம் அடையும்போது தவறு செய்கிறாள். பெண்ணின் தவறுக்கு ஆணின் பலவீனமே காரணம். ஆண் தன்னை பலவீனமாக ஒப்புக் கொள்வதில்லை. அதை மறைக்க வேறு பெண்ணை நாடுகிறான்.

உடலை விற்கும் ஒரு பெண் அப்படித் தன்னைத் தேடி வரும் ஆணின் பலவீனங்களை தனக்கு சாதகமாக்கி தன் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சாகசத்தைக் கற்றுக் கொள்கிறாள்.

இரத்தக் கண்ணீர் படத்தில் நடிகவேள் திரு எம். ஆர். ராதா பேசும் "அடி காந்தா தேவடியாள் பெற்ற திருமகளே" என்ற வசனம் இன்று வரை உலவுகிறது. பெண்கள் எல்லோரும் அந்த கதாபாத்திரத்தைத் திட்டினார்கள். உளவியல் ரீதியாக ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு காந்தா இருந்து கெண்டுதான் இருக்கிறாள். தலையணை மந்திரம் என்பது கூட காந்தாவின் செயல்தான். ஒரு பெண் சொன்னார். "என்னைத் தேடி வரும் உயர் பதவி வகிப்பவர்களை, இந்த சமுதாயமே கொண்டாடுபவர்களை, நிர்வாணப்படுத்திவிட்டு நான் ஓடி ஒளிந்து கொள்வேன். நிர்வாணமான, சமுதாயத்தின் அந்த உயர்ந்த ஆண், என்னிடம் கெஞ்சும்போது, இவனெல்லாம் அந்த இடத்திற்கு தகுதியானவனா என்று யோசிப்பேன்" என்றார்.

இரவெல்லாம் பாலியல் தேவைக்காக மனைவியிடம் கெஞ்சி உதைவாங்கும் ஒரு ஆணை என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். பெண் செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தும்போது தான் எத்தனை பேர் நட்ட குழி என்றும் சொல்லத் தோன்றிவிடுகிறது போலும்.

காமம் இல்லாது பூமி இல்லை. காமத்தைப் பெண்கள் ஆயுதமாகப் பயன்படுத்தும்போது வெறுக்கப்படுகிறார்கள். மகன் உறவில் அது பாசம் என்று வடிவம் கொள்ளும் போது நேசிக்கப்படுகிறார்கள். இதனால்தான் பெண் பாசம் காட்ட வேண்டும். காமம் தணிக்க வேண்டும் என்ற இரு நிலைகளில் மட்டுமே ஆணால் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள் என்று மேலே சொன்னேன்.

குடும்ப உறவிலும் சமூக உறவிலும் பெண்ணுக்கு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டபோது ஆணை எதிர்த்துப் போராட அவளுக்கு எந்த ஆயுதமும் கிடைக்காமல் போனது. வேறு வழியில்லாமல் ஆணுக்கான உடல் தேவையை உணர்ந்த பெண், தன் உடலையே ஆயுதமாக்கிக் கொண்டாள். அந்த ஆயுதத்தால் காயமடைகிற மனிதன் பெண்ணைத் தவறு என்கிறான்.

வாழ்க்கையின் தேவைக்காக பெண் தன் உடலைப் பயன்படுத்தும்போது சாகசம் தெரிந்தவளாகவே இருக்க வேண்டி இருக்கிறது. அவள் இளமை முடிந்த பிறகு ஆண்களால் ஒதுக்கப்பட்டு விடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆண்கள் பெண்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். தன் அந்தரங்க உணர்வுகளுக்கு ஒரு பெண்ணைப் பயன்படுத்தும் ஆண் அவள் இளமை மாறி விட்டால் வேறு ஒரு பெண்ணை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறான். தன் மனைவியிடம் "உனக்கு வயதாகி விட்டது. அதனால் நான் அவளை வைத்திருக்கிறேன்" என்று சொன்ன ஒருவரை எனக்குத் தெரியும்.

ஜெயகாந்தன் ஒரு இலக்கிய வாதியின் கலை உலக அனுபவங்கள் என்ற புத்தகத்தில் ஒரு விஷயத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

சிலர் தங்களுக்குள் இன்று பிரியாணியா? பழைய சோறா? என்று பேசிக் கொள்வார்கள். பிரியாணி என்பது வேறு பெண். பழைய சோறு என்பது மனைவி. "ஒருவனுடைய பழைய சோறு இன்னொருவனின் பிரியாணி என்பதை இவர்கள் உணரவில்லை" என்பார்.

(பல வருடங்களுக்கு முன்பு படித்தது. உதாரணம் மாறிப் போய் இருக்கலாம். ஆனால் செய்தி இதுதான்)

இப்படித்தான் பெண், ஆணால் உறவில் நிலைநிறுத்தப்படுகிறாள். எனவே தான் பெண்கள் சாகசம் புரிய வேண்டி இருக்கிறது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணுக்கு அவள் தாய் சொல்லும் அறிவுரைகளை ஒரு புத்தகம் பட்டியல் இருக்கிறது.

இளமை நிலையானதல்ல. இங்கு இளமையும் அழகும்தான் முதலீடுகள். ஒரு ஆண் எவ்வளவு அழகானவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இல்லை என்றால் ஒதுக்கிவிடு.

உள்ளுரில் இருப்பவன் வந்தால் பேரம் பேசாதே. வாடிக்கையாளன் ஆக்கிவிடு. தினமும் வருவான்.

காமக்கலையில் வல்லவர்களாக இருக்கும் ஆண்களை படுக்கையில் சேர்க்காதே. அவனிடம் நீ மயங்கி விடுவாய். வருமானம் கெடும்.

உன் இளமைக் காலத்தில் எவனுக்கும் ஆசை நாயகியாக இருக்க சம்மதிக்காதே. அப்படி ஆசை நாயகி ஆகிவிட்டால் அடுத்தவனிடம் பொருள் கிடைக்காது. முன்பின் தெரியாதவனிடம் படுக்கை அறையில் விழிப்போடிரு. உன் பொருளை திருடிக் கொண்டு போய்விடுவான்.

பணம் உள்ளவன் வந்துபோகும்போது நான் உங்களுடன் தான் வாழ்வேன் என்று அழுது அடம்பிடி. மீண்டும் வர வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அனுப்பு.

செல்வாக்கு உள்ளவர்களை கையில் போட்டுக் கொள். அப்பன் வருவான். பின் மகன் வருவான். தப்பு என்று மட்டும் எண்ணிவிடாதே.

என்னிடம் உறவு கொண்டவர்கள் உன்னைத்தேடி வந்தால் மறுக்காதே. ஊனமுற்றவனின் பொன் பொருளில் ஊனம் இல்லை.

வெறியோடு நடந்து கொள்பவர்களை அனுமதிக்காதே. இந்தத் தொழிலில் மட்டும் பகல் இரவு பார்க்கதே. மார்பைத் தளரவிட்டு விடாதே. மதுக்குடித்துப் பழகு.

பதவியில் இருப்பவன் காசு கொடுக்காமல் அழைத்தால் மாதவிலக்கு என்று சொல்லிவிடு. வசதியுள்ளவன் மாதவிலக்கு சமயத்தில் வந்தாலும் கூட மறுக்காதே. சொந்த மாமனே வந்தாலும் காசு வாங்கிவிடு.

இப்படி ஏராளமாகச் சொல்கிறாள். ஒரு பெண்ணின் சாகசம் இதில் வெளிப்படுகிறது. ஆனால் எல்லாவற்றிலும் ஆண் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்றுதான் உள் அர்த்தம் தொனிக்கிறது. இது சாகசமா? இல்லை ஆணிடம் இருந்து தொழில் ரீதியாக தன்னைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகளா?

பல நூற்றாண்டு காலமாக ஆண்களின் தேவைகளுக்கு பயன்பட்டு வந்த பெண்ணினம் தொழிலுக்கு வைத்துக் கொண்ட சட்டதிட்டங்களே சாகசங்கள் என்று ஆண்களால் சொல்லப்படுகிறது.

என் வாழ்வின் வழி நெடுகிலும் பல பாலியல் தொழிலாளிகளைச் சந்தித்திருக்கின்றேன். பல்வேறு உறவுமுறைகளில். இங்கே ஒன்றைப் பதிவு செய்யவேண்டியது அவசியமாகிறது. என்னைப் பற்றிப் பேச அல்ல. அந்தப் பெண்ணைப் பற்றிப் பேச.

நான் திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். 1976. பறவைகள் இல்லத்தில் தங்குமிடம். ஊரிலிருந்து அன்பழகன் வந்திருந்தார். ஒரு திரையரங்கில் மாலை காட்சி பார்த்து விட்டு விடுதி திரும்பும்போது இரவு சுமார் 10 மணி. விடுதிக்கு சற்று தள்ளி நான்கு சாலைகளின் சந்திப்பில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.

மிக அழகான சேலையில் தலைநிறைய மல்லிகை சூடி கவர்ச்சிகரமாக காட்சியளித்தார். சுமார் 22 வயதிருக்கும். அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் எந்தத் தவறும் தோன்றவில்லை. அன்பழகன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நான் பதிவு செய்தேன்.

ஒரு வாரம் கழித்து அதே இடத்தில் நின்ற அந்தப் பெண்ணைப் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி "அவர் ஒரு பாலியல் தொழிலாளி" என்பது. நெருங்கிப் பேசினேன். முறைத்து விட்டுப் போய் விட்டார்.

அந்த வயதுக்கே உரிய ஒரு பெண்ணை அறிய வேண்டும் என்ற ஆவல். அவர் மேல் இனம் புரியாத ஈர்ப்பு. நான்கைந்து முறை பல்வேறு இடங்களில் சந்தித்து எல்லா சந்திப்புக்களும் மோதலில் முடிந்தது. இடைவிடாமல் துரத்தினேன். இறுதியில் ஒரு நாள் நண்பர் ஒருவர் எங்களிடையே சமரசம் செய்து வைத்தார்.

இருவரும் வெளியில் செல்வதாக முடிவெடுத்தோம். மாலை 3 மணிக்கு வருவதாகச் சொன்னவர் வரவில்லை. பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தேன். அழுது வீங்கிய கண்களுடன் நான்கு மணிக்கு வந்தார். காரணம் கேட்டேன். "நான் உடலைவிற்றுத்தான் என் அப்பா அம்மாவுக்கு சோறு போடுகிறேன். தம்பியைப் படிக்க வைக்கிறேன். தங்கையை படிக்க வைக்கிறேன். நான் அவர்களை வசதியாக வைத்திருக்கிறேன். ஆனால் என்னை வீட்டில் கூப்பிடுவது கூட தேவடியா என்றுதான். இன்று என் தம்பி பலர் முன்னிலையில் தேவடியா என்று திட்டிவிட்டான். இந்த உலகத்தில் என்னைச் சகோதரியாக பார்க்க, நடத்த ஒரு ஆண் கூட இல்லை". சொல்லிவிட்டு பஸ் நிறுத்தத்தில் அழ ஆரம்பித்து விட்டார்.

மனம் வலித்தது. ஒரு விஷயம் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றேன். என்ன என்றார். நான் உடலுக்கு ஆசைப்பட்டுத்தான் வரச் சொன்னேன். அதை நான் மறந்து விடுகிறேன். நீயும் மறந்து விடு. இந்த நிமிடம் முதல் நாம் இருவரும் அண்ணன் தங்கையாக பழகுவோம் என்றேன். நம்ப முடியாமல் அழுகையை நிறுத்தி என்னைப் பார்த்தார்.

"வா" என்று என் விடுதி அறைக்கு அழைத்துச் சென்றேன். மனதில் இருந்த காமத்தை சுத்தமாகத் துடைத்துப் போட்டு விட்டு அறை நண்பர்களுக்கு "என் தங்கை" என்று அறிமுகப்படுத்தி, நடந்ததைச் சொல்ல, அவர்கள் அந்தப் பெண்ணை மரியாதையாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

விடுதி நம்பவில்லை. "எப்படி மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தாய்" என்றுதான் எல்லோரும் கேட்டார்கள். ஞாயிறு என்றால் காலை 7 மணிக்கு வந்து விடுவார். நான், மகேந்திரன்.. இன்னொரு நண்பர் எல்லோரும் கிளம்பி திரைப்படம் ஓட்டல் என்று சுற்றிவிட்டு மாலையில் திரும்புவோம்.

நான் திருச்சியில் படித்த இரண்டு வருடமும் "அண்ணா அண்ணா" என்று அழைத்து தன் சந்தோசத்தைப் பதிவு செய்து கொண்டே இருப்பாள் அந்தத் தங்கை.

என்னிடம் பணம் இல்லாத போது தான் உழைத்த காசை உரிமையோடு செலவழிப்பாள்.

ஒரு முறை நாங்கள் திருச்சி ஜங்சனை கிராஸ் செய்தபோது ரயில்வே புரொடெக்ஷன் போர்ஸ் உதவி ஆய்வாளர் ஆனந்தன் என்பவர் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்து போனார். ஏற்கனவே அந்த பெண்ணை அழைத்து, அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்ட கோபம். எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை. நான் ரயில்வே தண்டவாளம் திருடியதாக என்மேல் வழக்குப் பதிவு செய்தார்கள்,

பிரச்சினையை காவல்துறை உதவி கண்காணிப்பாளராக இருந்த பாண்டியன் என்பவரிடம் எடுத்துச் சென்றேன். "அவளா? உனக்கு தங்கையா? வெளியே போ. இல்ல கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ளிடுவேன்" என்றார்.

ஜனாதிபதி முதல் ரயில்வே அமைச்சகம், உயர் ரயில்வே அதிகாரிகள் வரை புகார்கள் அனுப்பினேன். திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே புரொடெக்ஷன் போர்ஸ் அழைக்கப்பட்டது. மரியாதையான விசாரணை, அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

இறுதி வரை அந்தப் பெண்ணை நான் தங்கையாக நினைக்கிறேன் என்பதை மட்டும் நம்பவே இல்லை.

திருச்சி வாழ்க்கை முடிந்து சென்னை வந்து உதவி இயக்குனராக வாய்ப்புத் தேடி அலைந்தபோது இரண்டு முறை அந்தத் தங்கையை சந்தித்தேன். "இப்பவும் நான் உங்க தங்கச்சிதானே" என்றார். "என்றுமே நீ என் தங்கைதான்" என்றேன்.

சில வருடங்கள் கழித்து ஒரு சிலருடன் அவர்கள் காரில் திருச்சி போகும்போது பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தனர். அந்தப் பேச்சில் அந்தத் தங்கையும் இடம்பெற்றாள். விசாரித்தேன். இறந்து போய்விட்டதாகச் சொன்னார்கள். அனேகமாக தற்கொலையாக இருக்கலாம்.

இறைவன் படைப்பில் எல்லாப் பொருட்களும் விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன. பெண்ணும் இறைவன் படைப்புத்தான். விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் தவறே இல்லை.

அன்னையர்களை வணங்கி ..
அகத்தியன்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.