ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 11
மாலதி மைத்ரி – ஒளவை மொழி வெளிச்சம்
அன்புமிக்க தமிழ்ஸ்டுடியோ வாசக நண்பர்களுக்கு,
வணக்கங்களும் நன்றிகளும்.
ஒவ்வொரு முறை கட்டுரைக்கு இடப்படும் எல்லா கருத்துரைகளுக்கும் பதிலளிக்க விரும்பினாலும் நேரம் அனுமதியாததால் அதைச் செய்ய இயலவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் ஒவ்வொருவரின் கருத்துரையையும் கருத்தூன்றி வாசித்துவிட்டுத்தான் நகர்கிறேன்.
கடந்த கால என் இலக்கிய வாழ்க்கையில் பெற்றிடாத உரையாடல் வெளியையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளையும் எதிர்வினைகளையும் நான் இங்கு பெற்றதன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே இக்கடிதம். இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தின் பின்பான எனது மனப்போக்கு முற்றிலும் மாறுபட்டிருப்பதையும் நான் உணர்கிறேன்.
அதிலும், கவிதை பற்றிய இக்கட்டுரைத் தொடரை நீங்கள் ஆர்வமுடனும் அக்கறையுடனும் கேட்டுப் பெறுவது என்னை இன்னும் அதிகமாய் ஊக்கப்படுத்துகிறது. நம்பிக்கை கூட்டுகிறது. ஒவ்வொருவரையும் அவர்களின் கருத்தால் நான் நினைவில் வைத்துக் கொள்வேன்.
தொடர்ந்த உரையாடலுக்குத் திசைகள் ஏற்படுத்திக் கொடுக்கும், தமிழ்ஸ்டுடியோவிற்கும் அதன் இயக்குநர்களுக்கும் கூட என் நன்றிகள்!
அன்புடன்,
குட்டி ரேவதி
--------------------------------------------------------------------------------------------------------
ஆணுடல் விதையை உருவாக்குதல் போலே தான் பெண்ணுடலும் கருவை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்றில்லாமல் பெண்ணின் சிறப்புத்தகுதி வெளிச்சம் பெறுவதில்லை. என்றாலும், பெண்ணுடலின் சிறப்புத் தகுதி கருவுறுதலும் அதைப் பேணிக்காத்து இனத்தைப் பெருக்குதலும்.
பெண்ணின் இனப்பெருக்க ஆற்றல், சிறப்பு வெளிப்பாடாய் இருப்பதால் அதைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, பொறாமையுற்று பெண்ணின் இனப்பெருக்கு உறுப்பையும் ஆற்றலையும் நசிக்கும் வேகங்கள் காலம் தோறும் எழுச்சிபெற்று வந்திருக்கின்றன. அப்பொழுது தான், பெண்ணின் உடல் நோக்கங்கள் திரித்துக் கூறப்பட்டன. அதாவது, பெண்ணின் உடல் ஆணுக்கே சொந்தமென்றும், அது குழந்தைகளை உற்பத்திச் செய்வதற்குமேயானது என்றும் தொனி மாற்றி, பொருள்விளக்கம் தரப்பட்டது.
மற்றெந்தப் போரும் ஏற்படுத்திய தாக்கத்தை விட, பாலியல் போர் பெண்ணுடல் மீது ஏற்படுத்திய தாக்கங்களும் ஊனங்களும் அதிகமானவை. நிரந்தரமானவை. இத்தகைய போர் அவளுடலின் தலை முடி முதல் உள்ளங்கால் வரை செயல்படுத்தப்படுகிறது. அவள் தலைமுடியின் அழகு பாலின்ப வேட்கையைத் தூண்டும் ஆற்றல் கூடியது என்பதாலேயே தேவாலயங்களிலும், இதர வெளிகளிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை மறைத்துக்கொள்ளல் அல்லது மழித்துக்கொள்ளல் எனும் பண்பாட்டு நிர்ப்பந்தங்கள் திணிக்கப்பட்டன. ’பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு’ எனும் பழமொழி போல. இம்மாதிரியான திணிப்புகள் வழியாகவெல்லாம், அவளின் உளவியல் வெளி வரை புகுந்து, அவள் மனதில் இலங்கும் அடிப்படையான பெண் சமத்துவ நிலையைக் கூடத் திருகிவிட முடியும் என்ற தந்திரமே.
இத்தகைய போர்த்தந்திரங்களில், முதன்மையானவை, பெண்ணின் கருப்பைமீதும் கருவாய் மீதும் செலுத்தப்பட்ட சமூக அடக்குமுறை உத்திகள். ஏனெனில், ஆணின் உறுப்பு வலுப்பெற்றதும் அவன் பெண்ணின் கருப்பையை உபயோகிப்பதில் ஈடுபடுகிறான். அவன் வேட்கை தீர்ந்ததும் அவன் சோர்ந்து வெளியேறுகிறான். ஒவ்வொரு முறையும் வீழ்த்தும், வெற்றிபெறும் ஆயுதமாகப் பெண்ணின் கருப்பையே இருக்கிறது. அதுமட்டுமன்றி, பெண்ணின் கருப்பை மாதாந்திர இரத்தப்போக்குகளால் உழப்பட்ட புது நிலமாயும், அதே சமயம் ஆணின் உயிர் ஆற்றலை வேட்கையுடன் பெற்றுச் செழித்த விளைநிலமாயும் மாறுகிறது. ஆற்றலைப் பெருக்கிக் கொண்ட பெண்ணின் இருப்பும், அவள் தன்னைச் சோர்வுறச் செய்பவள் என்றும் மிரட்சியுறும், ஒரே மனித இனத்தின் பகுதியான ஆண் சமூகம் அவள் மீது கொண்ட மிரட்சியை அழிப்பதற்கு ஏற்ற தந்திரங்களை உருவாக்கியது. அவற்றை, பெண் கருப்பை மற்றும் கருவாய் மீது நிரந்தர ஆட்சி செய்யும் போர் உபாயங்களாக்கி நிரந்தர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது.
இது அடிப்படையாக, எங்கிருந்து தொடங்கியது என்றால், பெண்ணின் இயல்பான உடல் மாறுபாடுகளே கூட தீட்டிற்கு உட்பட்டவை என்றும் இம்மாதிரியான புத்துயிர்ப்பின் வெளிப்பாடுகளுக்கு உள்ளான பெண்ணின் உடலே அபாயங்களை கொண்டு வரக்கூடிய புதிர்ப் பிண்டம் என்றும் நம்பும்படியான சடங்குகளும் வழக்கங்களும் பெண் நம்பிக்கைகளுக்குள் புகுத்தப்பட்டன. இம்மாதிரியானவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட வழக்கங்களாயிருந்தன என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அதிலும், பெண்ணின் உடலில் தோன்றி ஒழுகும் இரத்தம் சம்பந்தமான கதையாடல்களாகவே பெரும்பாலும் அவை இருந்தன. பெரும்பாலான தேசங்களில், கன்னிப்பெண்ணுடன் கொள்ளும் முதல் உடலுறவு என்பது மிகவும் அவலமான செயலாகவே இருந்தது. இந்தியாவில் உயர்சாதி ஆண்கள் ஓர் இரும்புக்கழியினால் கூட பெண்களின் முதலுறவைத் தொடங்கிவைப்பார்கள் என்பதற்கான ஆதாரத்தை எட்வார்டஸ் என்பவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். சோமாலியாவில் உடலுறவுக்காகப் பெண்ணுறுப்பு கத்தியால் திறக்கப்படுவதுடன் பெண்ணின் இரத்தம் தோய்ந்த கத்தியைக் கணவன் எல்லோருக்கும் பகிரங்கப்படுத்துவதும் வழக்கம். இவை மீறி, பெண்ணின் கருச்செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் கட்டுப்படுத்தவுமான விதிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து முறைப்படுத்துவதே ஆணின் ஆண்மை என்று வியக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னடக் கவி அக்கம்மா தேவியின் கவிதை வரி ஒன்று என் நினைவிற்கு வருகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் கவிப்பெண் இவர். ‘இன்பத்தையும் துன்பத்தையும் பேராவலுடன் குடிக்கும், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாக நான் வந்திருக்கிறேன்’. எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாகவும், மேற்கண்ட துன்பங்களைத் தின்றவாறே இன்பங்களைப் பருகிவந்திருக்கிறேன் என்பது தான் அவரது வாதம். பெண்கள் தம் யோனிகளுடன், அவற்றின் இனப்பெருக்க வல்லமையுடன் மாறாத் தொடர்பு கொண்டு இயங்கத் தொடங்கினர். பெண்கள் உருவாக்கும் குழந்தைகளுடனும் சமூகத்தின் உடைமை விதிகள் ஆண் சாய்வுடையதாக இருந்த போதிலும், தாய்மை எனும் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.
தாய்மை என்பது, படைப்பூக்கங்கள் மற்றும் தன்னுடலின் பாலூக்கங்கள் குறித்த சிந்தனையைக் கட்டுப்படுத்தும் ஒடுக்கு முறை என மேலைத்தேயச் சிந்தனை தாய்மை எனும் கருத்தாக்கத்தை மறுத்தாலும், ‘தாய்த்தெய்வம்’, ‘தாய்மொழி’ போன்ற தொல்மரபார்ந்த கருத்தாக்கங்களை, யோனிகளின் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் போராட்டத்தில் கிழக்குலகப் பெண்கள் வென்று வருவதாகவே உணர்கிறேன். மாலதி மைத்ரியின் கவிதைகள், தாயுடலுக்கும் மகளுடலுக்கும் இடையிலான கருத்தாக்க உறவையும், தொடர்ச்சியையும், நீட்சியையும், நிலைத்தன்மையையும் தன் மொழியில் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.
இன்றும் பெண்ணியக்க அலையைத் திசைத் திருப்பும் வேலை, இத்தகைய கருத்தாக்கத்தைச் செழுமையுறச் செய்வதன் வழியாகவே அடைய முடியும் என்பதான சிந்தனைகள் என்னையும் பீடிக்கத் தொடங்கியிருக்கின்றன. உலகமயமாக்கம், நகரமயமாக்கம், தன்னையே தான் வியாபாரமயமாக்கும் வாழ்க்கைக்குள் தன்னை உந்தித்தள்ளிச் செல்லும் மனித வேகத்தில் தாய் எனும் கருத்தமைவு, உடலார்ந்த பொதுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அதை உடலுக்கு வெளியிலும் இயங்கக்கூடிய ஒரு சிந்தனையாக, உயிரெழுச்சியாகவே நான் பார்க்கவிரும்புகிறேன். ஏற்கெனவே, ‘தாய்மை’ என்பதை, இந்த ஆணுக்கு இவள் பெற்றெடுத்த பிள்ளை இவன் என்பதாக அடையாளம் பெறும் உடைமைச் சிந்தனையின் அடிப்படையிலேயே, ஒற்றை யோனியை ஒடுக்கும் இடத்திற்கு இச்சிந்தனையை நாமும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாய்மை என்பது இரத்தம் பாயும் எல்லா உயிர்களிலும் பரவும் உணர்வெழுச்சி!
மேற்கண்ட புரிதலுடன், மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் உடல் பற்றிய மொழியையும், பால்நிலை அரசியலையும் அணுகுவது நம் எல்லோருக்கும் வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய புத்துயிர்ப்பான உடல், முழுவதும் நமது மொழிக்கும் நவீன இலக்கியத்திற்கும் பிரத்யேகமானது என்பதால், உதிரியான நமது உடல்களையும் கூட பாலியல் போரிலிருந்து மீட்டுக் கொள்ள உதவக்கூடும் என்றும் நம்புகிறேன்.
மாலதி மைத்ரியின் கவிதைகள், அத்தகைய உடலின் பல தருணங்களை நமக்குச் சுட்டிக் காட்டினாலும், இக்கட்டுரைத் தொடருக்குப் பொருத்தமான சில கவிதைகளை மட்டுமே இங்கு அளிக்கமுடிகிறது. மானுடத்தின் பதைப்பைக் குருவியின் மீது ஏற்றிச் சொல்லும் குருவி கவிதை, ஒரு தாவரப்பட்சி மாமிசப்பட்சியாக மாறும் இடத்தையும் சுட்டுகிறது. இதன் இடைவழியில் துளிர்க்கும் கண்ணீர் பாலியல் போருக்கான முதல் ஆயுதம். தாய்மை எனும் கருத்தாக்கத்தின் முழுப்பரிமாண புரிதலின் விளைச்சல் இக்கவிதை.
குருவி
முதல் குண்டு விழுந்தபோது அந்தத் தாய்க்குருவி
அவயத்தில் இருந்தது
தனது முட்டைகளில் செயற்கையாக
வீறல்கள் விழுவது கண்டு கலவரப்பட்டது
கட்டடங்கள் சரிந்துவிழும் பேரிரைச்சல்களினூடாக
ஓடுகளைத் திறந்து கொண்டு தமது
குழந்தைகள் வெளிவருவதைக் கண்டு
மேலும் பதற்றம் கூடிய அது
பறந்து சென்று இரை பொறுக்கிவரப் பயந்தது
குழந்தைகளின் ஈர உடம்புகளில்
சிமெண்ட் புழுதிகள் படியத் தொடங்கின
தனது கூடு நிலைத்திருப்பது பற்றிய
நிச்சயமற்றிருந்த தாய்
புழு பூச்சி தானிய மணிகள் தேடி வெளிச்செல்ல
நகரமெங்கும் இடிபாடுகளுக்கிடையில்
ரத்தம் கசிந்து கொண்டிருந்தது
கவச வாகனங்களும் இரும்புத் தொப்பிகளும்
இயந்திரப் பறவைகளும் நகரத்தை
சுற்றி வளைத்திருப்பதைக் கண்ட தாய்ப்பறவை
வெறுங்கையோடு கூட்டுக்குத் திரும்பியது
பசிகொண்ட குழந்தைகள் அம்மாவைக் கொத்தின
அம்மாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது
நீர் கோத்த அதன் கண்களுக்கு எட்டும் தூரத்தில்
ஆயுதத்தைப் பற்றியபடி அறுந்து விழுந்த
ஒரு மாமிச உறுப்பு சில நாட்களாக
அழுகிக் கொண்டிருப்பதை
மீண்டும் பார்த்தது – பசியின் நடுக்கத்தோடு
ஒளவையிலிருந்து ஒளவைவரை
ஒளவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து
சென்று கொண்டிருக்கும் ஒளவையின்
மகள் நான்
ஒளவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும்
மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித் தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க்கொடியைக்
கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்து போகிறேன்
நான் மழலை
என்னைத் தூக்கி அமுதூட்ட
என்னெதிரே நின்று தவிக்கிறது
பால் சுரப்பு அடங்காத முலையிரண்டு
நிலவுக்குள்ளிருந்த என் முதல் ஒளவை
இன்றைக்கும் எனக்கு
கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்
திசையெல்லாம்
ஒளவை மொழி வெளிச்சம்
ஒளவையெனும் நினைவு ஓங்கிய, பெண்ணியச் சிந்தனையின் காலக்கட்டமாய் நவீனப் பெண்ணிய இலக்கியம் இருந்திருக்கிறது. ஒளவை எனும் பெண், உடலற்ற ஆனால் புத்தியின் மண்டை வீங்கிய பெண்ணாக நூல்களின் பக்கங்களிலும், செவிகளின் அருகிலும், நாக்குகளின் மொழிதலிலும் உழன்று கொண்டே இருக்கிறார். என்றாலும், இன்றும் அவர் உடலற்ற பெண்ணாகவே பார்க்கப்பட்டு தமிழ் அறிவுஜீவி, பேராசிரிய, படைப்பு வர்க்கம் ஒளவையின் வெளிக்குள் நுழைய முடியாத தடித்த இரும்புக்கழிகளாகவே இருந்திருக்கின்றனர். இங்கு மாலதி மைத்ரி, ஒளவையின் உடலை தன் தனித்ததொரு, தாய் – மகள் உடல் பிணைப்புக் கருத்தாக்கத்தால் தெள்ளியதாக உருவாக்கியிருக்கிறார். விளக்கம் ஏதும் கோராமலேயே இக்கவிதை அதன் துல்லியமான அலகுகளை முன் வைத்திருக்கிறது.
விஸ்வரூபம்
ஏதோ ஒரு பருவமாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரை போலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் அலையத் துவங்கின
நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன
யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்
‘விஸ்வரூபம்’ கவிதையை, ‘ஒளவையின் மகள்’ கவிதையின் தொடர்ச்சியாகவே வாசிக்கலாம். இது இவரது பிரபலமான கவிதை. யோனியின் விட்டு விடுதலையான கட்டற்ற நிலையைக் காட்சியாக்கி இருக்கிறார். உடலை ஒரு வெளியாகவும், காலமாகவும் மாற்றும் முயற்சியில் அவர் கண்டடைந்த காட்சியின் சித்திரம் இக்கவிதை. உடலின் உறுப்புகளைக் குலைத்து மாற்று அடுக்கும் உரிமையும் கற்பனையும் பெண்களுக்கு காலந்தோறும் வாய்த்துக் கொண்டே தான் இருக்கின்றன என்பதற்கு, அக்கம்மா தேவியின் கவிதை வரிகளைப் போலவே இக்கவிதையும் ஒரு சாட்சி. அக்கற்பனையின் காட்சியை நிலைப்படுத்தும் போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனரா என்பது இன்னொரு தொடருக்குக் கருப்பொருளாக இருக்கலாம். கவிதை மொழி வழியாகப் பெற்ற வெற்றிகள், ஆதிக்கச் சக்தியை அபகரித்து அனுபவிக்கும் ஆணாதிக்கத் தந்திரங்களைப் பயிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட இனப்பெண்களை விடுவிப்பவை.
இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் மீனவச் சமூகத்தின் வழக்காற்று மொழியும் அவர்களின் வாழ்வெளியான கடலும் பற்றிய முழக்கங்கள். இவ்விடத்தில், மீனவசமூகத்தின் அரசியல் ஒடுக்குமுறை சமகால அரசியல் நிகழ்வுகள் வழியாக, எல்லோரும் அறிந்ததே என்பதால், அதைக் கடந்து அச்சமூகத்தின் கருத்தாக்க வெளிக்குள் நாம் நுழையலாம் என்று நினைக்கிறேன். ஆதிக்கச் சமூகப் பெண்ணியம் என்பதும் அதன் கோரிக்கைகளும் பார்ப்பனீயப் பெண்ணியத்தை முன்மொழிவதே. வெறுமனே பார்ப்பன சமூகத்தை மட்டுமே குறிப்பதன்று. கடந்த காலம் தந்த கல்வி, வாழ்க்கை முறை, பட்டறிவு, நுகர்வுப் பண்பாடு வழியாகப் பிற சமூகப் பெண்களும் பார்ப்பனீய அறிவுச்சுமையைப் பெற்றுத் தான் ஒழுகி வருகின்றனர். இவர்களின் ஆதிக்க வினை என்பது தொடர்ந்து பார்ப்பனர்களின் ஆதிக்கப்பணிகளைக் குறைகூறிக் கொண்டே இருக்கும் அதே சமயம், தான் பிறசமூகப் பெண்கள் மீது பிரயோகிக்கும் ஆதிக்கச் செயல்பாடுகளை மறைத்துக் கொள்ளும் தந்திரம். இத்தகையவர்களின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட, மரபார்ந்த இம்மண்ணின் சமூகப்பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களே தக்கவைத்துக் கொண்ட ஊடகச்சிதைவிற்கான காலக்கட்டத்தில், மாலதி மைத்ரியின் கவிதைகள் மீனவ வழக்காற்று வெளியைத் தொடர்ந்து மொழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
மீன்காரி
காட்டுக் குதிரையென பறப்பாள்
தினமும் முப்பது மைல்களாவது
தலைச் சுமையுடன்
மழை வெயிலில்
சிதறாப்பனை போல
மீன் விற்று திரும்புகையில்
கூடையில் சிரித்துக் கொண்டிருக்கும்
(ரொம்ப சிரிச்சா புளிப்பேறிவிடும்)
ஒரு மொந்தை கள்
ஆனாலும்
சுலகில் மறைந்திருக்கும்
ஒரு கொடுவாக்கத்தி
கடலை அழைத்து வருதல்
கடல் தன் தடயங்களால்
வீட்டை வளைய வந்துகொண்டிருக்கிறது
துவைக்கப்படாத குழந்தையின் ஆடை
கடலின் வாசனையோடு
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூலையில் ஒதுங்கிவிட்ட குத்துமணல்
எதையாவது தேடும்பொழுது
கலகலக்கும் சங்குச் சிப்பிகள்
சட்டைப்பையில் கைவிடும்பொழுதெல்லாம்
விரல்களில் ஒற்றி வரும் மணலென
ஓவியரின் கழுவப்படாத நிறக்கிண்ணங்களைப் போல்
கடல் ஒவ்வொருவரிடமும் தங்கிவிடுகிறது
அலைகளின் வீடு நங்கூரமிட்ட
தோணியென அசைந்து கொண்டிருக்கிறது
கல்யாணமும் கட்டுமரமும்
அவளின் திருமண வயதை
வேலியில் நிற்கும் கல்யாணமுருங்கை சொல்லும்
அந்த மரமும் அவளும்
வேறு வேறு திசையிலிருந்து
வெட்டி நடப்பட்டவர்கள்
இந்த நிலத்தில் ஒரே நாளில்
அவளைப் போலவே அதுவும்
பட்டும் துளிர்த்தும் – இப்போது
பெரிய தாய்மரமாக தனது வாரிசுகள்
தோட்டம் முழுதும் செழிக்க நிற்கிறது – நின்றது
வசந்தம் முழுதும் ஒரு திருவிழாப் போல
பூத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகில்
சுற்றிச் சுற்றி வருவாள்
அடிக்கும் காற்றுக் கெல்லாம்
காய்கள் குலுங்க சிரித்துக் கொண்டிருந்த அது
அடிமண்டை பிளந்து காற்றாடக் கிடக்கின்றது
இன்று
எங்கோ ஒரு திசையில்
கடலில் மிதக்கிறது
யாருடைய வாழ்க்கையையோ சுமந்து கொண்டு
(முகூர்த்தக் காலாக மணமகள் வீட்டில் நடப்படும் கல்யாண முருங்கை கிளை வளர்ந்து மரமான பிறகு அது கட்டுமரமாகப் பயன்படுத்தப்படுவது மீனவ சமூகத்தின் நாட்டார் வழக்காகும்)
’கல்யாணமும் கட்டுமரமும்’, ஒரே சமயத்தில் பெண்ணின் வாழ்வும் பொருளும் செயற்பொருளும் பொருளற்ற வாழ்வுமாக மாறும் நிலை பற்றிய கவிதை. ‘வார்த்தைகளின் பேரரசி’ என்ற கவிதையில்,
சினைக்கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்
புன்னை மர நிழலில்
பொரித்த உளுவை மீன்களுடன்
கள்ளுண்ட நாம்
கொக்குகளை விரட்டித் திரிவோம்
வெள்ளிக் கெண்டைகள் பாயும் மதகடையில்
வெள்ளிவீதி
உனது மடியில்
நானும் படர்ந்திருப்பேன்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து யாழிசையைக் கேட்டபடி
சினைக் கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்
என்ற பகுதியால் கடலும் கடல் சார்ந்த மொழியும் மாலதி மைத்ரியிடம் தீவிரம் பெற்றிருக்கின்றன. ‘சங்கராபரணி’, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தன் முதல் இரண்டு தொகுப்புகளில் கடல் என்பதை முக்கியமான கருப்பொருளாயும் உடலுக்கான வெளியாகவும் கட்டமைத்து, தன் மொழியை நீர்மைப்படுத்திக் கொண்டிருந்த மாலதி மைத்ரி, தனது மூன்றாவது தொகுப்பான ‘நீலி’யில் உலகப்பொதுப் பிரச்சனைகளை உரக்கப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்றாலும், உலகப்பிரச்சனைகள் தொடர்ந்து அடையாளம் பெறுவதற்கான அமைப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உலகெங்கும் எப்பொழுதுமே இருக்கும்பட்சத்தில் மீனவச் சமூகக்கருப்பொருட்கள் மீதான விருப்பீர்ப்பை இன்னும் அவர் தனக்குள் தக்கவைத்திருக்கலாமோ என்ற ஏக்கம் மேலிடுகிறது. அச்சமூக வாழ்வின் நுணுக்கங்களையும் இயல்பான உரிமைகளையும் மொழிப்படுத்தும் அவசியம் உக்கிரம் பெற்றிருக்கும் ஆண்டைத்தானே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்! பிராந்திய, அந்தரங்க அரசியலை உலகப்பொது அரசியலின் அக்கறைக்குக் கவனப்படுத்துவது தான் இன்றைய படைப்பிலக்கியவாதிகளின் சவால்!
அதே போல், தமிழ் நவீனக் கவிதையை சிறுகதையின் குறுக்கப்பட்ட வடிவம் என்று கருதியோர் அதன் பரப்பில் கைவைத்த போதெல்லாம், அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்துக் கொண்டது. அதே போல, கவிதை மொழியை உரைநடையாக்கி, நடை வண்டியில் பழக்கியபோதும் தன் முதுகெலும்பை ரப்பர் சுருளைப் போல தொய்வுப்படுத்திக் கொண்டது. கவிதை மொழி, கருப்பொருளின் முக்கியத்துவத்தை, கவிஞன் சிந்திப்பதற்கு ஒத்த சொற்களிலேயே படைத்து எல்லோருக்கும் கடத்துவது என்பது என் நம்பிக்கை. மேற்குறிப்பிட்ட, இரண்டு சிக்கலையும் அணுகுவதற்கான கவித்துவ விசாரணையை எழுப்பாத, விமர்சன உரையாடலை நிகழ்த்தாத வெளியில் ஒரு வாசகன், அது கவிதையா அல்லவா என்பதைக் கண்டடையும் பயிற்சியை அடைவதற்கான வாசிப்பைத் தானே தான் நிகழ்த்தவேண்டியிருக்கிறது. மாலதி மைத்ரி, தன் தொடர் கவிதை இயக்கத்தால் பெண்ணியச் சிந்தனை வெளியை விரித்துக் கொண்டே இருக்கும் அவர், கருத்தாக்கத்தின் வெப்பத்தைப்பதிவு செய்யும் அவசரத்தில், மொழி தன் நடையை மாற்றிக் கொண்டதையும் மொத்தத் தொகுப்பையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.
மாலதி மைத்ரியின் உச்சபட்ச பெண்ணிய, பாலிய மொழி வெளிப்பாட்டின் நேர்மையான பதிவை அவரது பெரும்பான்மையான் கவிதைகளில் காண முடிந்தாலும், அதன் எல்லைகளைக் கடந்து பறக்க அவர் விரிக்கும் சிறகுகள், தன்னுடலை ஒடுக்குதலை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே தன்னுடல் விரிக்க உதவக்கூடியவை.
ஒரு கோப்பை தேனீர்
கண்ணாடியில் வெட்டுப்பட்ட இறக்கைகளுடன்
சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி
என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேனீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன்
உனது சிமிழுக்குள் அடைப்பட்ட
கிளியல்ல உயிர் – அது
விசையற்ற கோளம் போல்
அலைந்து கொண்டிருக்கிறது
உன்னால் ஏழுகடல் மட்டுமே தாண்டமுடியும்
கோப்பைக்குள் நீ- அதன்
விளிம்புக்கு வெளியே
எல்லையற்ற என்னுடல்.
அருட்பெருஞ்சோதி
நெருப்பைத் தொடும் ஆவல்
எல்லா உயிரினத்திற்குமுண்டு
நெருப்பைத் தொட்டு வளர்த்தவள் நீ
நெருப்பு.
அணைந்த பூமியில் உருவாக்கப்பட்ட
முதல் நெருப்பு
இன்று வரையிலும் உன் உடலின்
வெம்மையோடே நீடிக்கிறது.
ஒவ்வொரு துளி நெருப்பிலும் நீ
தீ பெண்ணிலிருந்து பிறந்ததென்பாள்
என் தாய்
எனக்குள் தீயைத் தொட்டறியச் சோதித்தேன்
யோனி தகித்தது
’அருட்பெருஞ்சோதி’ கவிதை, இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திற்கும், ஒளவை மொழி வெளிச்சத்தைக் கவிதை மொழியால் பரப்புவதைத் தன் தொழிலாகக் கொண்ட ஒரு கவிஞருக்கும் ஏன், என் சுய விருப்பத்திற்குமே கூட நியாயம் பாராட்டும் கவிதை!
----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: மாலதி மைத்ரி, சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர, கட்டுரை எழுதுவதிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ‘அணங்கு’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி வரும் இவர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர். |