யாயும் ஞாயும் யாரா கியரோ- 5
பின்நவீனத்துவம்-1
பின்-நவீனத்துவம் பற்றி இன்று நிறைய பேர் பேசுகிறார்கள்.
பல இடங்களில் இந்த வார்த்தையைப் பார்க்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். எனவே பின் நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள பலர் விரும்புகிறார்கள்.
இதற்குமுன் நான் தமிழ்ச் சூழல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
கல்வி என்பது அறிவைப் பெற வழிசெய்யவில்லை. கல்வியின் ஒரு பிரிவான தமிழ்க் கல்வி பற்றித்தான் தெரியுமே. ஆனால் தமிழில் எழுதுபவர்களும் முக்கியமான விசயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் ஆங்கிலம் மூலமே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். நவீனமாகச் சிந்தித்தலைப் பொறுத்தவரையில் தமிழ் ஆங்கிலத்தின் உப மொழியாக இருக்கிறது. தமிழில் அதிகம் போனால் ராணிமுத்து, அல்லது வேறு ஒரு நேரப்போக்கு இதழைப் படிக்கமுடியும். உலக அறிவைப் பெறமுடியாது. சீரிய விசயங்களைப் படிக்க இன்டர்நெட் மூலம் படிக்கிறோம் அல்லது ஆங்கிலத்துக்குப் போகிறோம்.
ஆங்கிலத்தில் வரும் விசயங்களைத் தமிழில் எழுதுகிறோம். அதாவது தமிழில் எந்தெந்த விசயங்களைக் கூறவேண்டுமோ அவற்றைத ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஏற்றவிதமாகக் கூறுகிறோம். அதாவது மாற்றவும் குறுக்கவும் செய்கிறோம். இப்படித்தான் உலகப் பின்-நவீனத்துவத்தை ஏற்கிறோம். பின்பு அதைத் தமிழிற்கு ஏற்ற விதமாக விளங்கிக் கொள்கிறோம்.. "தமிழிற்கு ஏற்ற "என்பதில் தான் தமிழ்ச்சிந்தனை அடங்கி இருக்கிறது. எனவே பின் நவீனத்துவம் கூட தமிழ்த்தன்மை ஏறிய சிந்தனையாகவும் உள்ளது. உலகம் முழுவதும் பின் நவீனத்துவச் சிந்தனை வரும் போது தமிழிலும் அது பரவத்தான் செய்யும். குவலயமாகும் தமிழின் (Globalizing Tamil) மீது பின் நவீனத்துவம் எங்குத்தாக்கம் செலுத்துகிறது எங்குத் தாக்கம் செலுத்தவில்லை என்று நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
முக்கியமாகத் தமிழர்கள் சினிமாவுக்கு அடிமைகளாக இருப்பதால் பின்-நவீனத்துவம் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இவைகளை எல்லாம் பற்றிப் பார்க்குமுன் ஏற்கனவே நான் போன கட்டுரையில் சொன்னதுபோல் பின்-நவீனத்துவம் நவீனத்துவத்தின் எதிராகவும் அதன் தொடர்ச்சியாகவும் அமைகிறது. எதிராக எப்படி அமைகிறது என்று முதலில் பார்க்கலாம்.
நவீனத்துவம் அறிவுக்கு (Knowledge) முக்கியத்துவம் கொடுத்தால் பின்-நவீனத்துவம் 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகம் கொண்டாடிய அறிவைத் தாண்டிப் போகிறது. அறிவு என்பது தர்க்கத்தையும் நிரூபணத்தையும் ஆதாரமாகக் கொண்டது. அதாவது அறிவல்ல என்று கருதிய விசயங்களைப் பின்-நவீனத்துவம் ஆதரிக்கிறது. Postmodern Condition என்ற நூலை எழுதிய லையோத்தார் (Lyotard) என்ற பிரஞ்சு தத்துவவாதி கதையாடல்களை (Narrativity) அறிவை விட முக்கியமானவை என்று கூறுகிறார். கதைகள் அவற்றைக் கேட்பவனையும் அதைச் சொல்பவனையும் ஒரு சொல்லாடலில் இணைக்கிறது என்பார் லையோத்தார். தமிழில் நிரம்ப ஆட்கள் லையோத்தார் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் லையோத்தார் பற்றி ஏதும் தெரியாத பொய்யர்கள்; பாசாங்குகாரகள்.
லையோத்தார் நமக்கு - தமிழர்களுக்கு முக்கியமான பெயர் என்பது என் கருத்து. ஏனென்றால் அவர் தான் பெரியாருக்கு மாற்றான கருத்தைக் கூறுகிறார். பெரியாருக்கு எதிரான கருத்து முக்கியம் என்று நான் கூறுகிறேன் என்று தப்பாக எடுக்கக் கூடாது. பெரியார் நம்மிடம் அகில உலகம் அன்று பின்பற்றிய அறிவு வழிபாட்டைக் கொண்டு வந்தார். பகுத்தறிவு மூலம் தான் நாம் முன்னேறமுடியும் என்ற கருத்தைக் கொண்டுவந்தார். அது அன்று ரொம்ப நல்ல காரியம். சந்தேகமே இல்லை. பெரியார் அன்று உலகம் ஏற்றுக்கொண்ட "அறிவை" மக்களிடம் பரப்புவது தன் கடமை என்று கருதினார். தன்னைப் பகுத்தறிவுவாதி என்று அழைத்தார். அக்காலத்தில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய் பகுத்தறிவு வழியாகப் பல நல்ல கருத்துக்களைக் கொண்டு வந்தார். மேற்கில் விஞ்ஞானம் வளர்ந்ததற்குக் காரணம் அறிவு வழிபாடுதான். உலக யுத்தங்களைப் பார்த்த பின்பு தான் பகுத்தறிவுடன் வேறுவித அறிவும் இணையவேண்டும் என்று உலகம் கண்டுகொண்டது.
இந்தப் பகுத்தறிவுக்கு எதிராக அன்று நடந்துகொண்டவர் அயோத்திதாசர். தமிழில் தலித் சிந்தனையை முதன் முதலில் கொண்டுவந்தவர். இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது புனைகதைகளைச் சார்ந்த சொல்லாடல்களை (சொல்லாடல் என்ற சொல்லைப் பற்றி பிறகு பார்க்கலாம்) கொண்டுவந்து தலித்தினரைத் தமிழிலக்கியச் சரித்திரத்தில் மையமாக்கினார். பௌத்தச் சிந்தனையைப் பகுத்தறிவுக்கு எதிராகக் கண்டுபிடித்தவர் அயோத்திதாசர். பெரியாரின் கடவுள் மறுப்பு கிராமக் கடவுளர்களை மறந்துவிட்டது. பெரியார் அண்ணன்மார் சுவாமி வழிபாட்டைப் பற்றிப் பேசவில்லை. அதனால் நாட்டுப் புறவியல் தமிழகத்தில் அழிந்தது. நாட்டுபுறவியல் கதையாடல் அறிவுமுறையை அடிப்படையாகக் கொண்டமைந்தது. திராவிடக் கழகம் / திராவிடமுன்னேற்றக் கழகம், இவைகள் இலக்கியத்தில் கோட்டைவிட்டதும் அவர்களின் மிகையான அறிவு வழிபாட்டால்தான். எல்லாவற்றையும் தர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியாது. அன்றைய அறிவியலும் அன்றைய சமூகச் சிந்தனையும் பகுத்தறிவுக்கு மிகையான முக்கியத்துவத்தைக் கொடுத்தன. ஆனால் இவ்வியக்கங்கள் பரப்பிய கருத்துக்களால் நல்ல விளைவு ஏற்பட்டது; மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் எதிர்த்த மூடநம்பிக்கையைக் குறைசொல்லக்கூடாது. மூடநம்பிக்கை எதிர்ப்பு தருக்கத்தால் வந்தது. பகுத்தறிவு ஒருவகை அறிவை மட்டும் ஆதரித்தது. அதனால் அது தவறுகளுக்கு இட்டுச் சென்றது என்று கூறியது பின்- நவீனத்துவம். பின்-நவீனத்துவம் பல்வித அறிவை நாடியது.
இந்த இடத்தில் அமைப்பியலும் பகுத்தறிவை ஏற்கவில்லை என்பதைக் கூறவேண்டும். எப்படி என்று இப்போது விளக்கமுடியாது. தேவை ஏற்பட்டால் பிறகு பார்க்கலாம்.
அதாவது நான் சொல்ல முயல்வது ஒரே ஒரு கருத்துதான். அது பகுத்தறிவு என்பது ஒரு சொல்லாடல்; அவ்வளவுதான். அதுதான் ஒரே உண்மை அல்ல. தருக்கம் முக்கியம்; தருக்கம் மரபான அறிவிலும் உண்டு. தொல்காப்பிய அறிவுமுறையில் வியக்கத்தக்க தருக்கம் இருக்கிறது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் பகுத்தறிவு அப்படியே தொல்காப்பியத்தில் இல்லை.
அடுத்து மிகமுக்கியமான ஒரு சிந்தனை பற்றிப் பேசவேண்டும். அது பெருங்கதையாடல் (Grand Narrative) என்ற சிந்தனை. லையோத்தார் தான் இதைச்சொன்னவர். உலகம் முழுசும் செல்லுபடியாகும் சிந்தனையென்று ஒன்று இல்லை என்றது இச்சிந்தனை. கதைவழிச் சிந்தனை பற்றி யோசித்த இவர் கம்யூனிசத்தின் தந்தையென்று கருதப்படும் மார்க்ஸ் மற்றும் ஜெர்மன் தத்துவவாதி ஹெகலை மறுத்தார். மார்க்ஸ் ஆகட்டும் ஹெகல் ஆகட்டும் இவர்கள் உலகப் பொதுச்சிந்தனை ஒழுங்கமைவு என்று ஒன்று இருக்கிறது என்றனர். லையோத்தார் இதனை மறுத்தார். இது உலகப் புகழை லையோத்தாருக்கு கொடுத்தது. இங்கு ஒரு விசயத்தை நாம் மறக்கக் கூடாது. மார்க்ஸியத்தைப் பல வழிகளில் புரிந்து கொள்ள முடியும். சிலர் மார்க்ஸியம் ஒரு முழுமைக் கோட்பாடு என்று கருதினர். அவர்களை மட்டுமே லையோத்தார் மறுத்தார். மார்க்ஸியத்தை அல்ல. (மார்க்ஸியத்தைப் பற்றி இன்னொரு சந்தப்பத்தில் பேசலாம்). ஹெகலின் சிந்தனையிலும் முழுமைக் கோட்பாடு இருந்தது. முழுமைக் கோட்பாடு ஹெகலிடமிருந்து மார்க்சுக்கு வந்தது. அதாவது ஒரு கிரமமான மாற்றம் உலகத்தின் உள் இயக்கத்தில் இருக்கிறது என்ற மார்க்ஸின் சிந்தனையின் ஒழுங்கை லையோத்தார் கேள்விக்குட்படுத்தினார். அதுபோல் மார்க்ஸ் எல்லாத்துறைகளிலும்-வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் தத்துவத்திலும் என்று பலதுறைகளில் தன் சிந்தனைமுறை ஒன்றை உருவாக்கினார். அதையும் லையோத்தார் கேள்விக்குட்படுத்தினார். இவ்வாறு மார்க்ஸின் உலக முழுமைச்சிந்தனையை லையோத்தார் பெருங்கதையாடல் என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட பெருங்கதையாடல்கள் பல எழுந்தன. உலகளாவியகோட்பாடு உருவாக்குவது அன்று வழக்கமாக இருந்தது. மனிதனை உய்விக்கவேண்டும் என்ற ஆசையில் தோன்றும் கோட்பாடுகள் ஆசையைப் பிரதானமாக வைப்பதால் அவை பெருங்கதையாடல்களாகின்றன. மனித ஆசையிலிருந்து கோட்பாடு விடுபடவேண்டும்.
இந்தப் பெருங்கதையாடல் என்ற விசயமும் தமிழில் பேசப்பட்டது. புதிய விசயங்களைப் பாஷனுக்குப் பேசும் சிலர் இருக்கிறார்கள். அப்படிப் பேசுபவர்கள் மத்தியில் இப்பேச்சு அடிபட்டது.
அதுபோல் முக்கியமான இன்னொரு விசயம் பற்றி அமெரிக்க மார்க்சிய விமரிசகரான பிரடரிக் ஜேம்சன் (Frederic Jameson) கூறுகிறார். அவர் மார்க்சிய சிந்தனையாளரான எர்னஸ்ட் மென்டல் (Ernest Mendal) என்பவரின் "பிந்திய முதலாளியம் (Late Capitalism)" என்ற கருத்தாக்கத்தை ஏற்கிறார். இவர் முதலாளியம் தன் பண்பை மாற்றிக்கொண்டு வளர்கிறது என்று கூறினார். மார்க்ஸ் அறிந்த முதலாளியம் இன்று உலகில் பெரும்பாலும் இல்லை என்றார் இவர். இவரின் விளக்கத்தைப் பின்பற்றும் ஜேம்சன் அமெரிக்காவில் நார்த் கரலினா நரத்தில் உள்ள டுயூக் பல்கலைக் கழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். உலகப் புகழ் பெற்ற இலக்கிய விமரிசகர். எனக்கும் அவருக்கும் கடிதப் பரிமாற்றம் இருந்தது. அவரைப் பற்றி ஏன் கூறுகிறேன் என்றால் அவர் எழுதி அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பாடபுத்தகமாக இருந்த Postmodernism, Cultural Logic of Late காபிடலிசம் (பின்-நவீனத்துவம் பிந்திய முதலாளியத்தின் பண்பாட்டு வெளிபாடு) என்ற நூல் உலகப் புகழ் பெற்ற பின்-நவீனத்துவ விளக்கமாகும். இவரது விளக்கம் சற்று வேறு விதமானது. பின்-நவீனத்துவம் இவருக்கு ஒரு பண்பாட்டு வெளிப்பாடாகும் .சென்னையில் கார் சொந்தமாக வைத்திருப்பவன் பின்பற்றும் பண்பாடு ஒன்று; குடிசையில் வாழும் கூலித்தொழிலாளி பின்பற்றும் பண்பாடு இன்னொன்று. பொருளாதாரத்துக்குத் தக்கபடி பண்பாடு அமையும். மாறும்.
அதாவது "பிந்தியமுதலாளியம்" என்பது முதலாளியத்திலிருந்து சற்று மாறுபட்டது. முதலாளியத்தில் உடல் உழைப்பை வலியுறுத்தினால் "பிந்திய முதலாளியம்" அறிவு உழைப்பைப் பற்றிக் கூறும். அதாவது கணினி முறை உழைப்பு பற்றிக் கூறுகிறேன். அந்தப் பிந்திய மார்க்சியத்தின் பண்பாட்டு வெளிப்பாடுதான் பின்-நவீனத்துவம். இவ்விளக்கம் லையோத்தாரின் விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் கவனித்திருப்பீர்கள். பழைய மார்க்சியக் கருத்தான (Orthodox Marxist idea) பொருளாதாரத்தினடிப்படையில் உருவாவதுதான் பண்பாடு என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. பின்-நவீனத்துவத்தை மார்க்சீயர்கள் ஏற்கவேண்டும் என்பது ஜேம்சன் கருத்து. இந்திய மார்க்சீயர்கள் ஏற்பதில்லை என்பதை அறிந்திருப்பீர்கள்.
இன்றைய எல்லாச் சிந்தனைகளும் மார்க்சியத்தை அறிந்தே நடையிடுகின்றன. அந்த அளவுக்கு மார்க்சியம் இன்று முக்கியமாகிவிட்டது. ஆனால் மார்க்சியமும் வளர்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்சியம் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் வேண்டிய ஒன்றல்ல.
அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com
தமிழவன் கட்டுரை மாதமிருமுறை (15 நாட்களுக்கு ஒருமுறை) பதிவேற்றப்படும்
|