வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


தமிழவன் கூடு இணையதளத்திற்காக எழுதும் இக்கட்டுரையின் நோக்கம் தமிழின் புதிய தலைமுறைக்கு இலக்கியத்தை எடுத்துரைத்தலும் பொய்மையாக இலக்கியமென வியாபாரிகளால் கட்டமைக்கப்பட போலி பிரதிகளின் கட்டமைப்பை உடைத்தலும். அமைப்பியலிலும் பின் நவீன போக்கின் வழியிலும் திறனாய்வை நவீன வாசகர்களும், மொட்டுவிரிக்கும் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்தலே இதன் அடிப்படை. விவாதங்களும் தத்துவ மோதல்களும் என்பதே இக்கட்டுரைகளின் ஊடாட்டமாக இருக்கும். இதன் வழி தமிழில் திறனாய்வை கற்றுக் கொடுத்தல், சரியான இலக்கியப் புரிதலை ஏற்படுத்துதல், உலக இலக்கியங்களைக் காட்டிலும் தமிழில் ஒரு சிறந்த படைப்புமுறைமையை உருவாக்குதலே இதன் எண்ணம்.

 
     
     
     
   
யாயும் ஞாயும் யாரா கியரோ
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


தமிழவன்

இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.

இயங்கிய களங்கள்

ஆய்வாளர்.

சிற்றிதழ் இயக்கத்தில் பங்காற்றிய இலக்கியப் படைப்பாளி.

கட்டுரையாளர்.

நவீன தமிழ் இலக்கிய விமர்சகர்.
இலக்கியக் கோட்பாட்டாளர்.

தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர்.

நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர்.
இலக்கு என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர்.

எண்பதுகளில் கலைஇலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.

ஆய்வு நூல்கள்

புதுக்கவிதை நான்கு கட்டுரைகள் - முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்தது.

ஸ்ட்ரக்சுரலிசம் - 80களில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்துவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது.

அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் அமைப்பியலும் அதன் பிறகும் என மறுவெளியீடாக வந்திருக்கிறது.

படைப்பும் படைப்பாளியும் - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
தமிழும் குறியியலும் - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.

தமிழில் மொழிதல் கோட்பாடு - ருஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.

மேற்கண்ட கட்டுரைகள், இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் கவிதை என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.

தமிழுணர்வின் வரைபடம் என்ற புதிய நூலும் வெளியாகியிருக்கிறது. உயிரோசை இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

படைப்பிலக்கியங்கள்

சிறுகதைத்தொகுப்பு

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - [ஸ்பானிஷ்] இலக்கிய உத்தியான மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.

சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள் - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதிய புதினம்.

ஜி.கே. எழுதிய மர்மநாவல் - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.

வார்ஸாவில் ஒரு கடவுள் - போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக்கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதிய புதினம்.

இதழியல் பங்களிப்புகள்

படிகள் - எண்பதுகளில் வெளிவந்த சிற்றிதழ். ஆசிரியக்குழு.

இங்கே இன்று - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.

மேலும்

பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.
வித்யாசம் - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்திய இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.

தற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இணைப்புகள்

1. வார்சாவில் ஒரு கடவுள் நாவல் பகுதிகள் மற்றும் நாகார்ஜுனன் எழுதிய விமர்சனம்


2. தமிழவனின் நேர்காணல்

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாயும் ஞாயும் யாரா கியரோ தொடர்கள் வாயில்


யாயும் ஞாயும் யாரா கியரோ- 1

அமைப்பியல், எந்திரன், இலக்கிய மகான்கள்

தமிழவன்  

நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உலகம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.அறிவு இன்று முக்கியம். உலகை ஆள்வது அறிவு.இலக்கிய அறிவு நாம் எப்படி வாழவேண்டும் என்று கூறும்.அதாவது அது புத்தி சொல்லும் என்று தப்பாக நினத்து விடவேண்டாம்.புத்திசொல்லும் எழுத்து குப்பை. இலக்கியம் எதையும் கூறாமலே நம் வாழ்க்கையைச் செப்பனிடும். அதாவது கூறாமல் கூறுதல் இலக்கியத்தின் செயல்.அதாவது இன்றைய போஸ்ட்மாடர்னிச இலக்கியம் பற்றிச் சொல்கிறேன்.

சுஜாதா போன்ற இலக்கியமல்லாத எழுத்தைப் பற்றிச் சொல்லவில்லை நான். அந்த ஆளை வியாபாரிகள் தவறாகப் பயன்படுத்து கிறார்கள்.நான் சொல்வது இலக்கியம் பற்றி.செத்துப் போன மனுசனை வைத்து வியாபாரம் செய்வது பற்றிச் சொல்லவில்லை நான்.

இன்று அறிவு என்பது கலைத்துறை அறிவு என்றும் விஞ்ஞான அறிவு என்றும் பிரிந்து நிற்கவில்லை.

இலக்கியம் தரும் அறிவும் தத்துவம் தரும் அறிவும் ஒன்றாய் இணைந்துள்ளன. இத்தகைய புதிய தொடக்கம் அமைப்பியலிலிருந்து வருகிறது என்பதுதான் என் கருத்து.அதைத்தான் இங்கே சொல்லப் போகிறேன்.அமைப்பியல் தமிழுக்கு வரும் வரை இலக்கியவிமரிசனம் என்றபெயரில் சல்லியடித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு பட்டியல் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் பழையமாதிரி இலக்கிய விமரிசனம் ஏற்றுக் கொண்ட இலக்கியம் மேல்சாதிக்காரர்கள் எழுதியது.

அதுவரை தமிழில் சிலர் மனதில் தோன்றியதையெல்லாம் இலக்கிய விமரிசனம் என்று எழுதினார்கள். இது எண்பதுகளில் கேள்விக்குள்ளாக்கப் பட்டது.நிரம்பவும் உணர்ச்சிவயப் பட்டு எழுதுவார்கள். பிறரைத்தாக்கி யெல்லாம் எழுதுவார்கள்; மடையன் முட்டாள் என்றெல்லாம் எழுதுவார்கள்.நீ சிங்கப்பூர் மைனர் என்றெல்லாம் எழுதுவார்கள். இதெல்லாம் அமைப்பியல் தமிழில் எண்பதுகளில் வருவதுவரை இருந்தது. பின்னாடி இது மறைந்தது.

அமைப்பியல் என்றால் என்ன என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும்.

அமைப்பியல் என்பது மொழியை அடிப்படைச் சிந்தனை முறையாகக் கொண்டது. மொழி என்றால் அதுக்கு இரண்டு அம்சங்கள் இருக்கும்.ஒன்று விளக்கக் கூடியது; இன்னொன்று விளக்க முடியாதது.

விளக்கக் கூடியதை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி அறியமுடியும். தமிழில் இருக்கும் இலக்கிய அறிவு நிலப்பிரபுத்துவ காலகட்டத்திலிருந்து வந்தது. கொஞ்சம் சமஸ்கிருதத்திலிருந்தும் கொஞ்சம் அலங்காரநூல்களிலிருந்தும் கிடைத்தது.தமிழில் முதலில் அலங்கார நூல்கள் இருக்கவில்லை. மத்தியகாலத்தில் தான் அலங்கார நூல்மரபு வந்துசேர்ந்தது. மகாராசர்களின் மரபு அது.அமைப்பியல் தொல்காப்பிய மரபை மீட்டுக்கொண்டுவந்துள்ளது. சங்ககாலத் தத்துவம் அது.சங்ககாலக் குறுநிலமன்னர்கள் சனநாயக மனநிலை கொண்டவர்கள்.தொல்காப்பியம் சொல்லும் "பொய்டிக்ஸ்"இந்த சனநாயக பொய்டிக்ஸ். சம்ஸ்கிருதத்திற்கு மாற்றானது.

தமிழகத்தில் புதியவகுப்பினர் படித்துவந்தபின் பழைய தமிழைத் தன் அறிவுக்குப் பயன்படுத்தினார்கள்.

இன்று கவிதையையும் சினிமாவையும் நாவலையும் ஒரேவித அளவுகோல்களால் பார்க்கிறது அமைப்பியல்.தொல்கப்பியத்தில் உள்ளுறைந்து இருக்கும் பார்வை இது.கிரிஸ்டியான் மெட்ஸ் என்ற பிரஞ்சு திரைப்பட கோட்பாட்டாளர் ஒருவர் சினிமாவையும் நாம் ஒரு மொழிபோல் பார்க்கவேண்டும் என்கிறார்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் மொழியாய் நாவலையும் கவிதையையும் சினிமாவையும் பார்க்கலாம். கட்டடக் கலையையும் இப்படிப் பார்க்கலாம்.உலகம் ரொம்பதூரம் வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு துறையும் பலவருட பயிற்சிக்குப் பிறகே புரியும்.இலக்கிய விமரிசனமும் அப்படித்தான்.அமைப்பியலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் நூல்படிப்பு வேண்டும்.தமிழில் பரிதாபம், இலக்கியம் படிக்காதவர்களிடம் மட்டிகொண்டது. முதலில் அப்படி இருக்கவில்லை. க.நா.சு. ரொம்ப படித்தவர்.கடந்த பத்து வருடமாய் ஒரு ஆங்கில நாவலைக் கூட படிக்காத நபர் தமிழ்நாவல் பற்றி எழுதினால் நான் அதைப் புன்னகையோடு ஒதுக்கிவிடுவேன்.உலகநாவல் அறிவின் ஒரு பகுதிதான் தமிழ் நாவல்.

ஆங்கிலம் தெரியாத கோணங்கி கூட உலக நாவல் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். வலைப்பூவில் ஒன்றும் தெரியாத "ப்ராட்"கள் எல்லாம் பெரிய இலக்கிய மேதை போல வேசம் போடுகிறார்கள்.இதைதட்டிக் கேட்க யாரும் முன்வருவது இல்லை.பொய்சொன்னால் யாரும் கண்டுபிடிக்காத துறை தமிழிலக்கியம் தான்.

தமிழ் இலக்கியவிமரிசனத்தில் சமூகப் பார்வைக்காரர்கள் இருந்தார்கள்;கலைப் பார்வையாளர்கள் இருந்தார்கள்.அமைப்பியல் இரண்டையும் இணைத்தது. எண்பதுகளில் அமைப்பியல் வந்தது. அது சமூகத்துக்குத் தேவையாக இருந்தது. எவ்வளவு கேலி செய்தார்கள்?இன்று கட்டமைப்பு என்றும் சொல்லாடல் என்றும் சொல்லாதவர்களில்லை. இவைகள் எல்லாம் அமைப்பியலில் இருந்து வந்தவை தானே?

அதாவது நான் சொல்லவருவது கணினி வந்தபிறகுள்ள புதிய காலத்தில் நாம் வாழவேண்டும் என்பது தான். அதற்கு அமைப்பியல் தமிழில் வந்து வழிகாட்டியது.எனவே நாம் நம் கண்ணைத் திறக்கவேண்டும் என்று கூறுகிறேன்.நிலப்பிரபுத்துவ மனோநிலையைக் களையவேண்டும். வலைப்பூ வைத்திருப்பவர்களில் நாகார்ச்சுனன் போன்றவர்களின் வலைப் பூவை எத்தனைபேர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதைநான் ஏன் சொல்கிறேன் என்றால் இன்றையகாலம் மாறிவிட்டது.விளம்பரங்கள் புதிய அழகியலாகிவிட்டது.உதாரணமாக எந்த்ரன் திரைப்படத்தை விமரிசித்த இலக்கியக்காரர்கள் எலோரும் எந்திரனை ஒரு ART என்று பார்த்தார்கள்.அடிப்படையே தவறு.அப்படிப் பார்க்கக் கூடாது. ஒருத்தர் ரஜனிகாந்த் ரோபோவாக வரும் போது போட்டிருந்த வேஷம் சரியில்லை என்றார். நம்மூரில் சினிமா தியேட்டரில் சினிமாபார்த்துவிட்டு வருபவர்களை வெளியில் டிக்கட் எடுக்க காத்திருப்பவர்கள் "அண்ணே, படம் எப்படி "என்று கேட்பார். அதுக்கு அவர் " நல்லா இருக்கு, நாம பாக்கிறது படத்தில அப்படியே இருக்கு " என்று காரணம் சொல்வார். அதாவது எதார்த்தவாதம் கிராமம் வரை தத்துவமாய் பரவியிருக்கிறது.

நம் இலக்கிய பிரம்மாக்களும் இதையே வேறுவிதமாகச் சொல்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட கிறிஸ்டியன் மெட்ஸ் திரைப்படத்தை இப்படி பார்க்கக் கூடாது என்கிறார். சிமியாட்டிக்ஸ் முறையில் சினிமாவைப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர். அதாவது சிமியாட்டிக்ஸ் அமைப்பியலில் ஒரு பிரிவு. அந்த காட்சியை ஒரு குறியியல் (சிமியாட்டிக்ஸ்) முறையில் பார்த்தால் எந்திரனாக வரும் ரஜனியின் வேஷம் ஒரு அ-மனிதத்தைக்(Non-human) காட்டுறது. இதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அதாவது நம் மக்களுக்குத் தெரிந்தது கூட இலக்கிய மகான்களுக்குத் தெரியவில்லை.

இப்படத்தை எடுத்த முதலாளிகளுக்கு இந்தமாதிரி "கான்ட்ரொவர்ஸி" வேண்டும்.சிலவருடங்ககளுக்கு முன்பு அமிதாப் பச்சன் பெங்களூரில் நடத்திய அழகு போட்டிக்கு எதிர்ப்பை அவர்களே செட்-அப் செய்து விளம்பரம் தேடியது சிலருக்காவது ஞாபகம் இருக்கும்.

பாவம் நம் போலி இலக்கியவாதிகள்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.