உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 9
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் நவீனுக்கு புதிய வகையான பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்காக கடந்த இரண்டு மாதமாக ‘என்னை ஒரு உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று தன் தந்தையை வற்புறுத்தி வந்துள்ளான். எனவே நவீனின் தந்தை தன் மகனை ஆலோசனை வேண்டி அழைத்து வந்தார். நவீன் நன்றாக படிக்கும் மாணவன். அவன் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாணவர்களை கடுமையாக உழைக்க வைக்கின்றனர். வகுப்பில் பல்வேறு வகையான பயிற்சிகளும் உண்டு. நன்றாக படிக்க வேண்டும். செய்முறைத் தேர்வு பாடங்களை ஒவ்வொரு மாணவரும் வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் ஒப்பிக்க வேண்டும். அதில் தான் நவீனுக்கு பிரச்சனையே. ஒவ்வோர் நாளும் வகுப்பில் மற்றவர் முன்னிலையில் செய்முறை பாடங்களை மனப்பாடமாக சொல்லும் போதும் நவீனுக்கு வியர்த்துக் கொட்டும், கை கால் நடுங்கும், இதயம் படப்படவென அடித்துக் கொள்ள ஆரம்பிக்கும். வாய் குழறி பேச முடியாமல் திக்க ஆரம்பித்துவிடும். கடும் பதட்டத்துக்குள்ளான நவீனால் எந்த பதிலையும் சரியாக சொல்ல முடியாது. பிரச்சனை அதிகமாக அதிகமாக நவீனே ஒர் மனநல மருத்துவரை சந்திப்பதே நல்லது என முடிவெடுத்திருக்கிறான்.
நவீனை தனியறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவனின் தந்தையிடம் விவரம் சேகரிக்க தொடங்கினேன். நவீனின் தந்தை ஓர் பத்திரிக்கையில் நிருபராக இருக்கிறார். நவீனின் அம்மா ஓர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நவீனுக்கு ஓர் தங்கை உண்டு. அம்மா மிகவும் கண்டிப்பானவர். எதையும் துணிவுடன் எதிர்கொள்பவர். எடுத்தெறிந்து பேசக் கூடியவர். அதனால் சிறு வயதில் இருந்தே நவீன் தந்தையிடம் அதிக பாசம் கொண்டு தந்தையால் கவனித்து வளர்க்கப்பட்டவன். கூச்ச சுபாவம் மிகவும் அதிகம். வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட சற்று ஒதுங்கி இருப்பவன். நிறைய நண்பர்கள் உண்டு என்று சொல்ல முடியாது, ஆனால் மிக நெருங்கிய நண்பர்கள் வட்டம் உண்டு. ஓரிரு நண்பர்களின் வீட்டிற்கு செல்லும் அளவுக்கு அவர்களிடம் நெருங்கிய நட்பு உண்டு. மற்றபடி தங்கையிடம் இயல்பாக பழகுதல், சண்டையிடுதல் ஆகியவையும் உண்டு. நவீனின் தங்கை மிகவும் தைரியமானவள். பிறரிடம் பழகும் போது கூச்சமோ பயமோ கொள்வது கிடையாது. இயல்பான பெண்.
அடுத்து காத்திருந்த நவீனை அழைத்து சில விவரங்களைப் பெற்றேன். நவீனுக்கு வகுப்பில் அனைவர் முன்னிலையில் பாடங்களை ஒப்பிப்பது தான் பெரிய தலைவலியே தவிர படிப்பில் திறமைசாலிதான். எப்போதும் எழுத்துத் தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறையாமலே தான் மதிப்பெண் எடுத்து வருகிறான். ஆயினும் அவனின் வகுப்பாசிரியர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் அவன் படிக்காததால் தான் பாடங்களை வகுப்பில் பிறர் முன்னிலையில் சரியாக சொல்ல முடியவில்லை எனவும், இன்னும் சில ஆசிரியர்கள் அவனின் பயத்தை தெளிய வைக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் நவீன் சரியாக சொல்லும் வரை அவனை விடுவதில்லை. சில சமயம் அவனை அடித்தும் விடுகின்றனர். இவையெல்லாம் சேர்ந்து பிரச்சனைகளை அதிகப்படுத்திக் கொண்டே வந்து தற்போது சமாளிக்க முடியாத நிலைக்கு வந்து விட்டது.
உளவியல் உண்மைகள்
நவீனுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது சமூகத் தவிப்பு (Social Anxiety) என்னும் மனப்பிரச்சனை. இந்நோய் கொண்டவர்கள் மிகுந்த வெட்கம் கொண்டவர்களாகவும், தனக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பர். எல்லா செயல்களையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என விரும்பும் இவர்களால் பிறரின் கேலி கிண்டல்களை பொறுத்துக் கொள்ள முடியாது. பொது இடங்களிலும் புதியவர்கள் உள்ள இடங்களிலும் சற்று அடக்கமாக, அமைதியாக்வே இருப்பர். புத்திக் கூர்மையும் சிறப்பான சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட இவர்கள் தன் நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பயமின்றி அளவளாவுவர். எனவே நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே இவர்களின் அறிவுக் கூர்மை பற்றித் தெரியும். பெரும்பாலும் புதிய பொது இடங்களுக்கும், நான்கு பேர் கூடும் இடங்களுக்கும் செல்வதை தவிர்த்து விடும் இவர்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் அதிக மனப்பதட்டத்துடனும் மிகுந்த வெட்கத்துடனும் நடந்து கொள்வர். எல்லாவற்றையும் வேகவேகமாக முடித்து விடுவர். மனப்பதட்டமும் உடல் நடுக்கமும், மெதுவாக பேசுவதும், வாய் குழறுவதும் இவர்களிடத்தில் இயல்பாகத் தோன்றும் அறிகுறிகள். சிறுவயது முதலான வளர்ப்பு முறை, குடும்பத்தில் பிறர் யாருக்காவது இம்மன நோய் இருத்தல் ஆகியவற்றின் காரணமாகவே இம்மனப்பிரச்சனை ஒருவருக்குத் தோன்றுகிறது.
நவீனுக்கு இம்மனப்பிரச்சனை தோன்றக் காரணம் அவனின் தந்தைக்கும் இம்மனப்பிரச்சனை இருப்பது தான். விசாரித்த வரையில் நவீனின் தந்தை பள்ளிப் பருவம் முடியும் வரையில் மிகுந்த கூச்சம் உள்ளவராகவும், பொது இடங்களில் பிறரோடு பழகும் போது மனப் பதட்டம் கொண்டவராகவும் இருந்துள்ளார். பின்னர் அவர் கல்லூரியில் சேர்ந்த பின்னர்தான் மெல்ல மெல்ல இப்பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆயினும் அவரின் சமூகப் பயம் கொண்ட ஆளுமை அவர் மகனுக்கு முன்மாதிரியாக அமைந்து விட்டது. சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த நவீன் மிக எளிமையாக தந்தையின் நடத்தைகளைக் கற்றுக் கொண்டுவிட்டான் (Modelling).
சமூகத் தவிப்பு எனும் இம்மனப்பிரச்சனையில் இருந்து வெளிவர நவீனுக்கு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினேன்:
தினமும் காலையில் எழுந்ததும் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து மனதிற்குள் சில தீர்மானங்களை சொல்லிக் கொள்ள வேண்டும். உதாரணமாக
· என் தந்தை பிறர் முன்னிலையில் மிகுந்த வெட்கத்துடன் நடந்து கொள்ளும் நடத்தையைக் கொண்டுள்ளார். இவ்வளவு நாட்களாக நான் விழிப்புணர்வின்றி அவரின் நடத்தையை பின்பற்றி வந்துள்ளேன். ஆனால் இனிமேல் அவரின் நடத்தையை நான் பின்பற்ற மாட்டேன்.
· நான் எல்லா செயல்களையும் மிகச் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவ்வாறு மிகச்சரியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதில்லை. நான் தவறே செய்தாலும் நல்லதுதான். ஆனால் அத்தவறில் இருந்து சரியானதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
· வகுப்பில் நான் துன்பப்படுவதற்கு நான் மட்டும் காரணமல்ல. என் மன இயல்பை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் என் ஆசிரியர்களும் என் பிரச்சனை தீவிரமானதற்குக் காரணம்.
மேற்கண்டவாறு தனக்குத் தானே ஒருவர் மனதிற்குள் பேசிக் கொள்வதற்கு தற்கருத்தேற்றம் (Auto-Suggestion) என்று பெயர். இப்பயிற்சி நல்ல பலனை தரக்கூடியதாகும்.
நவீன் இனிமேற்கொண்டு வகுப்பறையில் பிறர் முன்னிலையில் பாடங்களை ஒப்புவிக்கும் சூழ்நிலையில் யாருக்கும் தெரியாதவண்ணம் தன் இடதுகை சுண்டு விரலில் ஓர் இரப்பர் பேண்டை சற்று இறுக்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இரப்பர் பேண்டை இறுக்கி போட்டுக் கொள்ளும் போது ஒருசில நிமிடங்களிலேயே சுண்டு விரலில் வலி தோன்றிவிடும். நவீன் பாடங்களை ஒப்புவிக்கும் போது தன் கவனம் முழுவதையும் சுண்டு விரலின் வலி மீதே வைத்திருக்க வேண்டும். அப்போது மனப்பதட்டமும், அதிக இதய துடிப்பும் இன்னும் தோன்றும் பிற எதிர்மறை உடல் மாற்றங்களும் தோன்றுவது படிப்படியாகக் குறையும். நாளடைவில் முற்றிலும் மறைந்து விடும். இம்முறைக்கு Rubberband-Technique என்று பெயர்.
நவீன் மேற்கண்ட முறைகளை கையாளும் போது அவன் பிரச்சனை சிறிது சிறிதாக குறையலாம். ஒவ்வோர் முறை பிரச்சனையின் தீவிரம் குறையும் போதும் அல்லது நவீன் பதட்டம் இன்றி நன்முறையில் நடந்து கொள்ளும் போதும் தன்னைத் தானே ஊக்க்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக நவீன் தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் விதமாக தனக்குப் பிடித்த சாக்லெட் ஒன்றை வாங்கி உண்ணலாம் (Self-Reinforcement).
மேற்கண்ட முறைகளைப் சொல்லியவாறு பின்பற்றி வந்தால் நவீன் விரைவில் தன் மனப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
|