உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 7
மத்திய அரசு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் 34 வயது மதிக்கத்தக்க ரமேஷ் தன் பிரச்சனைக்கு உளவியல் ஆலோசனை வேண்டி வந்தார். எம்.ஏ, எம்.பி.ஏ, பி.எட் என நன்கு படித்த ரமேஷ் திருமணம் ஆனவர். ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வசதியான குடும்பத்தை சார்ந்த ரமேஷின் மனைவியும் ஓர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் ரமேஷ் பணிபுரியும் இடத்தில் அவருக்கு பிரச்சனையொன்று தோன்றி அவரை புயலில் சிக்கிய படகு போன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ரமேஷிக்கு அவரின் உயரதிகாரிகளைக் கண்டால் மனதிற்குள் பயம். அதனால் அவ்வப்போது விடுமுறை எடுத்து வந்துள்ளார். அடிக்கடி விடுமுறை எடுப்பவர் என்பதால் உயரதிகாரிகளுக்கு இவரைக் கண்டால் பிடிப்பதில்லை. எனவே அவருக்கு நிறைய வேலைகளை கொடுத்து வந்துள்ளனர். வேலைகள் நிறைய கொடுக்கும் சமயத்தில் விடுமுறையும் எடுப்பதால் ரமேஷால் சரியான நேரத்திற்கு வேலைகளை முடிக்க முடிவதில்லை. அதனால் உயர் அதிகாரிகளிடம் மேலும் மேலும் ரமேஷுக்கு அவப்பெயர் உண்டாயிற்று. கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரமேஷ் நீண்ட நாட்கள் மருத்துவ விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார். திடீரென அலுவலகத்திலிருந்து ஓர் கடிதம். ரமேஷ் மருத்துவ விடுப்பு எடுத்திருப்பது உண்மையாக உடல் நிலை சரியில்லாததால் தானா என்பதை ஆய்வு செய்ய மருத்துவ குழு முன்பு ஆஜராகுமாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திடீரென இப்படி ஒரு கடிதத்தை கண்டவுடன் ரமேஷ் நிலைகுலைந்து போய்விட்டார். மருத்து குழு முன்பு ஆஜராகி தன் உடல்நிலை நன்றாகவே உள்ளது என்பதையும் வெறுமனே தான் விடுமுறை எடுத்ததையும் கண்டறியப்பட்டால் தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயம் அனைவருக்கும் தெரிந்து பெருத்த அவமானமாகிவிடும். குடும்பத்தினர் தன்னைப் பற்றி தவறாக நினைக்கக்கூடும். மருத்துவக் குழுவினரை சந்திக்க தைரியமின்றி மிகுந்த மன அழுத்தத்துடன் “என்ன செய்வது என தெரியாத நிலையில்தான் ரமேஷ் உளவியல் ஆலோசனை வேண்டி வந்துள்ளார்.
நீங்கள் என்ன செய்வதாக தீர்மானித்து வைத்துள்ளீர்கள்? என ரமேஷிடம் வினவினேன். தான் வேலையிலிருந்து ராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக ரமேஷ் கூறினார்.
ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன? என ரமேஷிடம் நான் வினவிய போது அவர் கூறியது: “நான் எம்.பி.ஏ வரை படித்துள்ளேன். என் அலுவலகத்திலேயே அதிகம் படித்தவன் நான் தான். என் உயரதிகாரிகள் கூட என்னளவுக்கு படித்திருக்கவில்லை. அவர்களின் மனப்போக்கை நன்கு படித்த என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அனைவரும் அறிவு கெட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே வேலையை விட்டு விட்டு தனியார் கம்பெனிகளில் ஏதாவதொன்றில் மேனேஜராக சேர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.” என ரமேஷ் கூறினார். தன்னால் உயரதிகாரியிடம் பொருந்தி போக முடியாததற்கும், வேலைகளில் கவனம் செலுத்தி அவ்வப்போது அவற்றை முடிக்க முடியாமல் போனதற்கும் இதுவே காரணம் என்பதையும் ரமேஷ் கூறினார்.
இரண்டு விஷயங்கள் ரமேஷை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன. ஒன்று ரமேஷுக்கு பிற மனிதர்களைக் கண்டால் இனம் புரியாத பயம் உள்ளது. அவர் நடை, மெதுவாக பேசுவது, அவருக்கிருக்கும் மிகக் குறைவான நண்பர்கள் வட்டம், மென்மையான தோற்றம் ஆகியவை மூலம் அப்பயத்தை நான் உறுதி செய்து கொண்டேன். அவர் வளர்ப்பு முறை அல்லது இளவயதில் ஏற்பட்ட பிற மனிதர்களுடனான கசப்பான அனுபவங்கள் அவருக்கு இப்பயத்தை உண்டாக்கியிருக்கலாம். அதன் காரணமாகவே அவர் தன் மேலதிகாரிகளைக் கண்டு மிகவும் பயந்து போயுள்ளார். இரண்டாவதாக ரமேஷ் தன் கல்வித்தகுதியை நினைத்து அளவுக்கு அதிகமாக பெருமிதம் கொண்டுள்ளார். தான் மெத்தப் படித்த மேதாவியாக மாறிவிட்டதாகவும், இனிமேற் கொண்டு இளநிலை உதவியளராக வேலை செய்யக்கூடாது, மேனேஜராகவே வேலை செய்ய வேண்டும் எனவும் மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டுள்ளார். அதனால் தான் அவருக்கு தன் பணியில் ஈடுபாடும் திருப்தியும் இல்லை. அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வதெல்லாம் அதனால் தான்.
இவ்விரு விஷயங்களில்னால் தான் ரமேஷுக்கு தற்போது துன்பம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அதிலிருந்து வெளிவருவது எப்படி என்பதையும் பின்வருமாறு ரமேஷுக்கு விளக்கிக் கூறினேன்:-
சிறுவயது அனுபவங்களோ அல்லது வளர்ப்பு முறையோ உங்களை பிற மனிதர்களைக் கண்டால் பயந்து கொள்ள வைக்கிறது. யாரைக் கண்டும் மனதில் பயம் கொள்ளாதீர்கள். நாம் அனைவரும் சமமானவர். யாருக்கும் தாழ்ந்தவரல்ல என்னும் மனப்பாங்கை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் யாரிடமும் பேசாமல் இருக்கும் நிலையைக் குறைத்துக் கொண்டு மெதுவாக பிறருடன் சகஜமாக பழக ஆரம்பியுங்கள். உங்கள் சுற்று வட்டாரத்தில் பிறருடன் நன்றாகப் பழகுபவர்களை சில நாட்கள் உற்று கவணித்து வாருங்கள், அவர்கள் பிறரிடம் எப்படி சகஜமாகப் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இயல்பாக இருக்கின்றன என்பனவற்றை ஆராயுங்கள். அவற்றை நீங்கள் பிறருடன் பேசும் போது பின்பற்றுங்கள். விரைவிலேயே பிறரைப் பற்றிய உங்கள் மன பயம் போய்விடும்.
ரமேஷ் தன் பி.ஏ பட்டத்தைத் தவிர அனைத்து படிப்புகளையும் அஞ்சல் வழியிலேயே படித்து முடித்துள்ளார். அதுவும் தற்போதுள்ள பணியில் சேர்ந்த பிறகுதான். அஞ்சல் வழி படிப்புகளுக்கு நாட்டில் தற்போதுள்ள மதிப்பையும், அஞ்சல் வழியில் படித்தோருக்குள்ள அறிவையும், அவர்கள் பெறும் சம்பளத்தையும் ரமேஷுக்கு விவரமாக எடுத்துக் கூறினேன்.
நீங்கள் உங்கள் எம்.பி.ஏ படிப்பை பற்றி மிக பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அஞ்சல் வழிபடிப்புகளுக்கெல்லாம் நல்ல கம்பெனி நடத்துபவர்கள் மதிப்பு கொடுப்பதில்லை. மேலும் தனியார் கம்பெனிகளில் முறியாக கல்லூரி சென்று படித்து முடித்தவர்களின் பாடே படு திண்டாட்டமாயிருக்கிறது. மிக அதிகமாக படித்தவர்கள் கூட மிகக் குறைந்த சம்பளமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது இளநிலை உதவியாளர் எனும் உங்கள் மத்திய அரசு வேலை எவ்வளவோ மேலானது, பாதுகாப்பானது, லாபகரமானது. எனவே அநாவசிய தைரியத்தாலும், தேவையற்ற உயர்வு மனப்பான்மை காரணமாகவும் அரசு வேலையை விட்டு விடுவது நன்றல்ல. வேண்டுமானால் தற்போது பெறுவதைக் காட்டிலும் அதிக சம்பளமும் பணிப் பாதுகாப்பும் உள்ள வேறு வேலை கிடைத்தவுடன் இப்போதுள்ள வேலையை விட்டுவிடலாம். கவலைப்படாமல் பயமின்றி மருத்துவ குழு முன்பு ஆஜராகி உண்மை நிலையை விளக்கிச் சொல்லுங்கள். ஒன்றும் எதிர்மறையாக நடக்கவாய்ப்பில்லை எனக்கூறி அவரைஅனுப்பி வைத்தேன்.
இரண்டு வாரங்கள் கழித்து வந்த ரமேஷ் தான் மருத்துவக் குழு முன்பு ஆஜராகி நிலைமையை விளக்கி சொன்ன போது அவருடைய மேலதிகாரிகளே அவருக்கு உதவி செய்து காப்பாற்றிய அதிசயத்தை என்னிடம் சொன்னார். பிறகு இரண்டு மூன்று முறை வந்து என்னை சந்தித்த ரமேஷ் அலுவலகத்திலும் வெளியிடத்திலும் தன் அனுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும், நல்ல பலனிருப்பதையும் கூறி மேலும் சில அலோசனைகளை பெற்றுச் சென்றார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ரமேஷை ஒரு முறை அவர் நண்பர்கள் கூட்டத்துடன் வெளியிடம் ஒன்றில் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். ஆனால் என்னை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. உளவியல் ஆலோசனை பெற்றதை வெளியில் சொல்லிக்கொள்ள யாரும் விரும்புவதில்லை என்பது மீண்டும் எனக்கு நிரூபணமானது!.
|