உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –4
எழுபத்தி ஐந்து வயதுக்கும் மேற்பட்ட ராமசுப்பு கடந்த நான்கைந்து மாதங்களாக மிகவும் சோர்வாக மனநிலை மாற்றம் கொண்டு காணப்படுகிறார் என்று கூறி தன் மகனை உளவியல் ஆலோசனை பெற அழைத்து வந்தார். மனச்சோர்வுடன் காணப்படும் தன் மகனுக்கு என்ன பிரச்சனை எனக் கண்டறியுமாறும், அவரை மகிழ்ச்சியானவராக மாற்றும்படியும் கேட்டுக்கொண்டார்.
ராமசுப்புவின் மகன் ராஜதுரைக்கு தற்போது 52 வயது. அவர் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரே மகன். ஓர் நல்ல கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படித்து வருகிறார். நன்கு படிக்கும் அவர் தன் படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சென்று விடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் அவரைப் பற்றி தம்பதியருக்கு கவலை ஏதும் இல்லை. ராஜதுரை 32 ஆண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்றவர். கிடைத்த பணத்தில் கணிசமான தொகையை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்துள்ளார்.
மகனை அழைத்து வந்த தந்தையை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு ராஜதுரையிடம் பேசத் துவங்கினேன். அவர் தனக்கு மனச்சோர்வு உள்ளது என அவர் தந்தை கூறுவதை திட்டவட்டமாக மறுத்தார். தான் இயல்பாக எப்போதும் போல் இருப்பதாகவும் தன் நடவடிக்கையில் மாற்றம் ஏதும் இருப்பதாக தனக்கு தோன்றவில்லை என்றும் கூறினார். இயல்பிலேயே மிகவும் அமைதியானவரான ராஜதுரை யாரிடமும் அதிகம் பேசமாட்டார். கேட்ட கேள்விக்கு பதில் அவ்வளவுதான். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அளவான சாப்பாடு. அவருக்கு ஒரு தம்பி உண்டு. தம்பியும் அவர் மனைவியும் நல்ல சம்பளம் பெறும் பணியில் உள்ளனர். ஆனால் ராஜதுரை தன்னை எப்போதும் பிறரிடம் ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை கொண்டதில்லை. காலை எழுந்து பங்கு மார்கெட் செல்வது, பிற வேலைகளைப் பார்ப்பது என தன் வேலைகளைப் பார்க்கத் துவங்கி விடுவார். தம்பியும் இவரும் தாய் தந்தையருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களிடையே மனக்குறை எதுவுமின்றி மகிழ்ச்சியாகவே உள்ளனர். எல்லா குடும்ப விசேசங்களிலும் கலந்து கொள்ளும் ராஜதுரைக்கு உறவினர்களிடம் சுமுக உறவு உண்டு. அனைவரிடமும் அளவாக பேசுவார். பிறரைப் பற்றி குறை கூறுவது அறவே கிடையாது. மேலும் பேசியதிலிருந்து ராஜதுரைக்கு எவ்வித உளவியல் அலோசனையும் தேவையில்லை அவர் இயல்பானவர் என்று உறுதியாயிற்று.
ஒருவருக்கு மனச்சோர்வு நோய் உள்ளதெனில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்படுவார். மகிழ்ச்சியை தரக்கூடிய எந்த செயல்களிலும் ஆர்வம் காட்டமாட்டார். உடல் எடை குறையும், பசி எடுப்பதும் குறையும். சரியாக தூக்கம் வராது. உடல் சக்தியற்றுப் போகும். எந்த விஷயத்திலும் மனதை ஒருமுகப்படுத்தி ஈடுபட இயலா வண்ணம் கவனச்சிதைவு ஏற்படும். தன் மீதே கோபமும் குற்ற உணர்ச்சியும் பெருகும். மரணத்தைப் பற்றிய நினைவுகளும் தற்கொலை எண்ணமும் அடிக்கடி தோன்றும். ஆறு மாத காலத்திற்கு மேல் இவ்வறிகுறிகள் தொடர்ந்து இருக்கும். ஒரு முறை மனச்சோர்வு தோன்றினால் எதிர்காலத்தில் மீண்டும் மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்புகள் உண்டு. ராஜதுரைக்கு மேற்கண்ட நோய்க் குறிகளில் ஒன்று கூட இல்லை.
மகனை வெளி அறையில் காத்திருக்கும்படி கூறிவிட்டு தந்தை ராமசுப்புவை அழைத்தேன். இவர் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தன் குடும்பத்தை சரியான முறையில் மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டு வந்துள்ளவர். தற்போது சில மாதங்களாக தன் மூத்த மகன் மனச்சோர்வுடன் காணப்படுவதாக ராமசுப்பு உணர்ந்து உளவியல் ஆலோசனை பெற அவரை அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர் மகன் ராஜ்துரை மனச்சோர்வுடன் காணப்படுவதாக அவர் தாயாரோ, மனைவியோ, மகனோ அல்லது வேறு யாருமோ புகார் சொல்லவில்லை. ராமசுப்பு மட்டுமே அவ்வாறு நினைப்பதாக ஒத்துக்கொண்டார்.
இப்பிரச்சனையில் உளவியல் ஆலோசனை தேவைப்படுவது ராஜதுரைக்கு அல்ல. அவரை அழைத்துவந்த தந்தை ராமசுப்புவுக்குத்தான் உளவியல் ஆலோசனை தேவை. வயதான காலத்தில் வேலைகள் குறைவு. அப்போது புதுப்புதுப் மனப் பிரச்சனைகள் பல தோன்றலாம். ராமசுப்புவுக்கு தோன்றியிருப்பது குழந்தைகளைப் பற்றி பெற்றோருக்கு ஏற்படும் மனத்தவிப்பு. இத்தனை வயதாகியும் தன் மகன்களை கூட்டுக்குடும்பமாக வைத்திருப்பதிலிருந்து அவர் தன் மகன்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். திடீரென்று, ஓர் நல்ல தந்தையாக தன் மூத்த மகனுக்கு தான் தன் கடமையை ஆற்றவில்லையோ என அவர் மனதில் ஓர் தவிப்பு ஏற்பட்டுள்ளது. அவன் மூத்த மகன் குழந்தையாக இருந்த போது கூட, அக்குழந்தையை இன்னும் நன்றாக கவனிக்க வேண்டும், ஆனால் அது தன்னால் இயலவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்திருக்கலாம். தற்போது அவருக்கு அவ்வென்னம் பற்றிய நினைவு ஏதும் இல்லை அழ்மனதில் உள்ள முழுமை பெறா விருப்பம் கூட அவரின் தற்போதைய செய்கைக்கு காரணமாக இருக்கலாம். தான் இன்னும் தன் மகனை அக்கறையோடுதான் கவனித்து வருகிறேன் என்பதை மற்றவர்களுக்கும் தன் மகனுக்கும் உணர்த்துவதற்காகவும், முழுமை பெறாமல் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் எண்ணத்தை முழுமையாக்கிக் கொள்ளவுமே தன் மகனுக்கு ஐம்பத்தியிரண்டு வயது என்பதையும் கூட மறந்து அவரை உளவியல் ஆலோசனைக்கு அழைத்து வந்துள்ளார்.
இவ்விசயங்கள் அனைத்தையும் ராமசுப்புவுக்கு எடுத்துக் கூறி உங்கள் மனத்தவிப்பே உங்கள் மகனை நீங்கள் சோர்வுற்றவர் எனக் கூற காரணம், உண்மையில் அவருக்கு மனச்சோர்வு ஏதுவும் கிடையாது. இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்ட உங்கள் மகன் நன்றாகவே உள்ளார். அவ்வாறு உங்கள் மகன் மனச்சோர்வு கொண்டுள்ளதாக நீங்கள் கருதினால் தொடர்ந்து அவரை கண்காணிது வாருங்கள். தேவைப்படும் சமயத்தில் தக்க ஆலோசனை வழங்கி அம்மனச்சோர்வை சரிபடுத்திக்கொள்ளலாம் என ராமசுப்பூக்கு ஆலோசனை வழங்கி அவரை அனுப்பி வைத்தேன்.
திரு.வைதேகி அவர்களுக்கு
மற்ற விஷயங்களில் எல்லாம் மிகவும் புத்திசாலித்தனமாக உங்கள் மகன் இருக்கிறார் என்றாலே அவருக்கு நன்றாக படிக்குமளவுக்கும் நுண்ணறிவு இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு குழந்தை நன்கு படிப்பது அதன் குடும்ப சூழ்நிலை மற்றும் பள்ளிச் சூழ்நிலை ஆகிய இரண்டையும் பொறுத்ததாகும். இவ்விரண்டில் எது ஒன்றில் ஏதேனும் குறையிருந்தாலும் அக்குறை குழந்தையின் படிப்பை பாதிக்கலாம்.. ஆறு மணிக்கு படிக்க அமரும் நீங்கள் உங்கள் மகன் படித்து முடிக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து தேவையான உதவிகளை செய்து வாருங்கள். கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபெறும் அனைத்தையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள் செல்போன் அலறல், இடையிடையே நீங்கள் எழுந்து சென்று சிறுசிறு வேலைகளை முடித்துவிட்டு வருவது, வேறு ஏதேனும் அலுவல்கள் இருந்தால் அதை செய்து விட்டு வருவது ஆகியவற்றை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களால் உங்கள் மகனின் பாடங்களை புரிந்து அவருக்கு சொல்லிக்கொடுக்க இயலாவிடினும் சும்மாவாகவாது அருகில் அமர்ந்திருக்க வேண்டும். பள்ளியில் நடக்கும் விஷயங்கள், தேர்வுகள் போன்றவற்றைப் பற்றி ஆர்வமாக விசாரியுங்கள். அதே சமயத்தில் வேறு பல விஷயங்களில் உங்கள் மகன் செய்யும் சாகசங்களை இனிமேற்கொண்டு நீங்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் கேட்பதையும், அதைப் பிறரிடம் சொல்லி சிலாகிப்பதையும் விட்டு விடுங்கள். படிப்பது முக்கியம், அதுவும் வாழ்க்கையில் வெற்றிகரமாக திகழ அவசியம் எனபதை அடிக்கடி சொல்லி வாருங்கள்.
பள்ளியில் நன்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்,
• குழந்தைகள் படிக்கும் சமயத்தில் அவர்கள் படிக்க உதவி செய்கின்றனர், படித்துக் காட்டுகின்றனர், குழந்தைகள் கூறும் படிப்பு தொடர்பான விஷயங்களை ஆர்வத்துடன் கேட்கின்றனர்.
• குழந்தைகளின் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு உதவுகின்றனர்.
• படிப்பு, உறக்கம், வீட்டுப்பாடம் போன்றவைகளுக்கு நேரம் ஒதுக்கி அதை தங்கள் குழந்தைகள் கடைபிடிக்கிறார்களா? என்று பார்த்து வருகிறார்கள்.
• பள்ளியில் நடக்கும் பெற்றோர் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தவறாமல் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.
என உளவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இவற்றை நீங்களும் செய்கிறீர்களா என சோதித்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் குழந்தையின் மீதும் அவர்களின் படிப்பு விஷயத்திலும் தாய் ஆர்வம் காண்பிக்கும் அளவுக்கு தந்தை ஆர்வமில்லாமல் இருக்கலாம். அவ்வாறிருப்பினும் குழந்தை தந்தையின் கவனத்தை தன் மீது திருப்ப படிக்காமல் போகும். தந்தை கவனம் செலுத்தும் பட்சத்தில் குழந்தை நன்றாக படிக்க ஆரம்பித்து விடும். மேலும் உங்களுக்கு ஒரே மகன் என்பதாலும், நீங்கள் வீட்டில் உள்ளவர் என்பதாலும் எபோதும் உங்கள் மகனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதையும், பேசிக் கொண்டிருப்பதையும் தவிருங்கள்.
உங்கள் குழந்தையின் பள்ளி சூழ்நிலையையும் ஆராய வேண்டும். சரியாக படிக்காத பட்சத்தில் அவரின் ஆசிரியர்கள் எவ்விதம் உங்கள் மகனை நடத்துகிறார்கள் என்பதையும், சரியாக படிக்க வைக்க என்ன முயற்சி எடுக்கிறார்கள், தண்டனை ஏதேனும் கொடுக்கிறார்களா என்பதையும் கண்டறிய வேண்டும். சில வேலைகளில் ஆசிரியர்களின் கவனத்தை தன் மீது திருப்ப வேண்டி கூட அறிவுள்ள மாணவர்கள் படிக்காமல் போகலாம். எனவே மகனின் பள்ளிக்குச் சென்று இதுபோன்ற விவரங்களை சேகரிக்கவும். ஆசிரியர்களுடன் உங்கள் மகனின் படிப்பு பற்றி விவாதிக்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்கள் மகளின் படிப்பு மேம்படலாம். உங்கள் மகனின் படிப்பு பிரச்சனை தொடரும் பட்சத்தில் நேரில் சந்தித்தால் இன்னும் பல விவரங்களை சேகரித்து ஆலோசனை வழங்க உதவியாக இருக்கும்.
|