உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –3
ரங்கநாதனுக்கு சமீப காலமாக காலை எழும்போதே வலது கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. கையில் சுத்தமாக சக்தியின்றி எந்த வேலையும் செய்ய முடியாத வகையில் யாரோ கையைப் பிடித்து ஆட்டி விடுவது போல் ஆடிக்கொண்டிருக்கின்றது. கை நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொள்கிறார். சரியாக வேலைக்குச் சென்று எட்டு மாதத்திற்கு மேல் இருக்கும். பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் கூட கை நடுக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதற்கான அறிகுறிகள் இல்லை என்று அறிந்தும் ‘சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்’ நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஒரு கை நடுங்கிக் கொண்டே ஆலோசனை அறைக்குள் அழைத்து வரப்பட்ட ரங்கநாதனுக்கு ஏன் இப்படி?
உளவியல் உண்மைகள்:
மருத்துவர்களின் சோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, ரங்கநாதனைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் மெதுவாக ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன். அவருக்கு தற்போது 47 வயது, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். நடுத்தர குடும்பத்தை சார்ந்த இவர் ஓர் நூற்பாலையில் கோன் வைண்டிங் எனும் பிரிவில் பணியாற்றுகிறார். ரங்கநாதனின் மனைவி வீட்டில் சும்மா பொழுதை ஏன் போக்க வேண்டும் என்றெண்ணி நாண்காண்டுகளாக அரிசி வியாபாரம் செய்து வருகிறார். வாராவாரம் வசூல் செய்து கொள்ளும் வகையில் தவணை முறையில் அரிசி மூட்டைகளை சுற்றுப்புறத்தில் உள்ள மக்களிடம் விற்பனை செய்து வருகிறார். தவனை முறைத் திட்டம் என்பதால் வியாபாரம் நன்றாக நடந்து வருகிறது. கை நடுக்கத்தின் காரணமாக வேலைக்குப் போக முடியாமல் விடுமுறை எடுத்துக் கொள்ளும் நாட்களில் ரங்கநாதன் மனைவிக்கு அவர் வியாபாரத்தில் உதவி செய்வார். சைக்கிளில் சென்று தவணை செலுத்த வேண்டியவர்களிடம் பண வசூல் செய்து வருவார். ரங்கநாதனுக்கு குடிப்பழக்கம் உண்டு. வசூல் செய்த பணத்தை மனைவியிடம் நேர்மையாக ஒப்படைத்துவிட்டு தனக்கு குடிப்பதற்கு பணம் கொடுக்குமாறு கேட்பார். நேர்மையாக உதவி செய்யும் கணவனுக்கு மனைவி ஒரு சிறு தொகையை மதுவுக்காக கொடுத்துவிடுவார். பணத்தை பெற்றுக்கொண்ட ரங்கநாதன் உடனே மதுக்கடைக்குச் சென்று மதுவருந்திவிடுவார். காலை 6 மணிக்குத் தொடங்கும் தீவிர கை நடுக்கம் மதுவருந்தியவுடன் 11 மணியளவில் மெதுவாக குறையத் தொடங்கும். நண்பகலில் முற்றிலுமாக நடுக்கம் நின்று விடும். ரங்கநாதன் அதன் பிறகு நன்கு ஓய்வெடுக்கத் தொடங்கிவிடுவார். மீண்டும் அடுத்த நாள் தூங்கி எழும் போதுதான் கை நடுக்கம் துவங்கும். நாட்கள் செல்ல செல்ல மதுவருந்தினால் கைநடுக்கம் நின்று விடுவதை உணர்ந்துகொண்ட ரங்கநாதனின் மனைவி தானாகவே முன்வந்து மதுவருந்த பணம் கொடுக்க ஆரம்பித்தார். மதுவே மருந்து என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் எப்போதும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிப்பதெல்லாம் கிடையாது. அளவுக்கு மீறாமல் அடக்கமாகவே இருப்பார் ரங்கநாதன். மதியத்திற்கு மேல் பிறரை அடிக்கும் அளவுக்கு கை உறுதியாகிவிடும்.
மேலும் பேசியதிலிருந்து ரங்கநாதன் தன் வேலையைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். நூற்பாலையில் கோன் வைண்டிங் எனும் பிரிவில் பணியாற்றும் அவருக்கு தினசரி கூலி 80 ரூபாய். பல ஆண்டுகளாக இவ்வேலையில் இருக்கிறார். வேலை சுவாரசியமில்லாமல் அலுப்பைத் தருவதாக அவர் கூறினார். தொடர்ந்து கேள்விகள் கேட்டதிலிருந்து தான் வேலையை விட்டு விலகிக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார் ரங்கநாதன்.
உளவியல் முறைப்படி ஆய்வு செய்தபின் ரங்கநாதனின் பிரச்சனைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய முடிந்தது. அவருக்கு தான் வேலையை விட்டு விட வேண்டும் என்ற ஆசை. மனைவியின் அரிசி வியாபாரம் நன்றாக நடக்கிறது. நாமும் அதையே பார்த்துக் கொண்டால் ஆயிற்று. ஏன் வீணாக வெளியில் வேலைக்குச் செல்ல வேண்டும். மேலும் தன் மனைவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் போது தான் என்பது ரூபாய் கூலி வேலைக்கு செல்வது அவ்வளவு கெளரவமாக இல்லை என்ற எண்ணம் ரங்கநாதன் மனதில் ஏற்பட்டுள்ளது. நேரடியாக வேலைக்குச் செல்ல விருப்பமில்லை விலகிக்கொள்கிறேன் என்றால் மனைவியும் பிறரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எனக்கு கை நடுங்குகிறது, என்னால் வேலை செய்ய எப்படி முடியும். என கேட்கும் விதமாகவே அவருக்கு தற்போது கை நடுக்கம் தோன்றியுள்ளது. மேலும் மது அருந்தும் பழக்கமும் ஆசையும் கொண்ட ரங்கநாதன் அதை வீட்டார் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கணக்குப் போட்டு கை நடுக்கத்தையும், அது மது குடித்தால் நின்று போகும் என்பதையும் உருவாக்கி விட்டார். இவையாவும் அவர் ஆழ்மனதில் நடந்துள்ள விசயங்கள். அவர் நனவு மனதிற்கு இவையாவையும் தெரியாது. இவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்புண்டா? தானாக ஆழ்மன அளவில் விருப்பப்பட்டு ஒருவரால் உடல் நோயை வரவழைத்துக் கொள்ள இயலுமா?
இயலும். ரங்கநாதனுக்கு ஏற்பட்டிருப்பது உடலியக்க மாற்று நோய் (Conversion Hysteria) ஆகும். இந்நோய் சில நோயாளிகளிடத்தில் உடல் நோய் போலவும், சில நோயாளிகளிடத்தில் மன நோய் போலவும் காணப்படும். நோய் தோண்றியவுடன் உடலின் பாகங்கள் முழுமையாக செயலற்றுப் போவதோடு உணர்ச்சியும் மரத்துப் போகும். ஆழ்மனதில் இருக்கும் மன அழுத்தத்தைத் தரும் எண்ணங்கள் திடீரென மேலெழுந்து நோயாளியைத் தாக்குகின்றன. அதன் விளைவாகவே உடல் நோய்கள் தோன்றுகின்றன. முழங்கைக்கு கீழே செயலற்றுப் போகலாம், கை கால்களில் நடுக்கமும் தசைகளில் இறுக்கமும் ஏற்படலாம். சிலருக்கு திடீரென நிற்கவோ நடக்கவோ முடியாமல் போகும். பேச முடியாமல் போகலாம். அல்லது பேச்சில் தடுமாற்றம் இருக்கும். சிலருக்கு அடிக்கடி மயக்கமும் அதைத் தொடர்ந்து வலிப்பும் ஏற்படும். ஆனால் முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தால் நரம்புகளும், எழும்புகளும், தசைநார்களும் எவ்வித பாதிப்புமின்றி இருக்கும்.
உடலின் பல பாகங்கள் செயல் இழப்பது போல், புலன்கள் செயலற்றுப் போவது உண்டு. சிலருக்கு திடீரென பார்வை மங்குதல் அல்லது கண் தெரியாமல் போவதும் உண்டு. காது மந்தமாகிவிடும் அல்லது காது கேட்காமல் போய்விடும். பரிசோதித்துப் பார்த்தால் நரம்புகள் எதுவும் பாதிக்கப்பட்டிருக்காது. ஆராய்ந்து பார்த்தால் மேற்கூறிய நோய்கள் அனைத்துமே மன அழுத்தம் கொண்ட நோயாளிக்கு பாதுகாப்பு கவசங்களாக அமைகின்றன எனபதை உணர்ந்துகொள்ளலாம். உதாரணமாக மனதிற்கு பிடிக்காத காட்சியை காண்பதைத் தவிர்க்க கண் தெரியாமலும், பிடிக்காத பேச்சுக்களைத் தவிர்க்க காது கேட்காமலும் போகும்.
இவைகளைப் போன்று தான் மனதுக்குப் பிடிக்காத வேலையைச் செய்வதில் இருந்து தப்பித்துக்கொள்ள ரங்கநாதனுக்கு கை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழ்மனதின் தூண்டுதலாலும் ஆக்கிரமிப்பாலுமே இது ஏற்பட்டுள்ளது. இது நடிப்பு இல்லை.
நான்கு அமர்வுகளில் ரங்கநாதனுக்கு அவர் மனைவிக்கும் நோயின் காரணத்தை விளக்கிச் சொன்னேன். உண்மையை விளங்கிக் கொண்ட ரங்கநாதன் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை ஒத்துக்கொண்டார். அவர் வேலையிலிருந்து விலகிக் கொள்வதால் குடும்பத்திற்கு பாதிப்பு எதுவுமில்லை. அவர் நலமுடன் இருந்தாலே போதும் என்று கூறி ரங்கநாதனின் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டார். மன அழுத்தம் தரும் ஆழ்மனப் பிரச்சனை தெளிவானவுடன் சுமுக சூழ்நிலை பிறந்தது. கை நடுக்கமும் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கை நடுக்கம் நின்று விட்டது. தற்போது அரிசி வியாபாரம் சூடுபிடித்திருக்கலாம்.
சென்ற வாரம் கேள்வி கேட்ட வைதேகி அவர்களுக்கு...
உங்களின் மகனுக்கு எத்தனை வயது? வீட்டில் எத்தனையாவது பையன்? வயது? படிக்கும் வகுப்பு? நீங்களும் உங்கள் கணவரும் செய்யும் தொழில்? கூட்டுக்குடும்பமா அல்லது தனிக்குடும்பமா? படிக்க அமரும் நேரம்? மகனுக்கு சொல்லிக்கொடுப்பது நீங்களா அல்லது உங்கள் கணவரா? டியூசன் எதுவும் செல்கிறானா? போன்ற விபரங்களை தெரிக்கவும். |