உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –11
9 வயது சிறுவன் சுத்தமாக படிப்பதே இல்லை. மற்றவர்களைவிட அறிவு வளர்ச்சி குறைவாக இருப்பதுபோல் தோன்றுகிறது. படிக்கும் பள்ளியில் ஆசிரியர்கள் சிறுவனின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளதாக புகார் கூறுகிறார்கள் என கூறிக்கொண்டு நீண்ட தொலைவில் இருந்து ஓர் தந்தை தன் மகனை அழைத்து வந்தார். அச்சிறுவன் மிகவும் ஒல்லியாக முழங்கைகள் சற்று வளைந்து சற்றே மன வளர்ச்சி குன்றியது போல் தோற்றத்தைக் கொண்டிருந்தான்.
சிறுவனின் ஐக்யூ எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வதற்காக அவனை சோதனை கூடத்திற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகளுக்கான ஐக்யூ சோதன ஒன்றினை கொடுத்துச் சோதித்துப் பார்த்தபோது அச்சிறுவனுக்கு சராசரிக்கும் குறைவான ஐக்யூ மட்டுமே இருப்பதைக் கண்டறிந்தேன். ஐக்யூ குறைந்து மன வளர்ச்சி குன்றியவர்களை பல தடவை சொல்லிக்கொடுத்து மேம்படுத்தும் வகையினர், பயிற்சியளித்து மேம்படுத்தும் வகையினர், ஒன்றும் செய்ய முடியாத உதவாக்கரைகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இச்சிறுவன் பயிற்சி அளித்து மேம்படுத்தும் அளவுக்கு ஐக்யூ கொண்டிருந்தான். அவனிடம் உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய் என்பது போன்ற எளிய கேள்விகளை கேட்ட போது அவனால் சரியான முறையில் பதில் கூற முடியவில்லை. மேலும் பேசும் போது வேறு பலவற்றில் கவனம் கொண்டு துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டேயிருந்தான். பள்ளியிலும் குறைந்தாற்போல பத்து நிமிடம் கூட பாடத்தில் கவணம் செலுத்துவதில்லை. பிற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறான். எப்போதும் அமைதியின்றி துறுதுறுவென இருக்கிறான் என்பன இச்சிறுவனைப் பற்றிய புகார்கள் என அவர் தந்தை கூறினார். இவையாவும் மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்.
இச்சிறுவன் இவ்வாறு மனவளர்ச்சி குன்றியிருக்க என்ன காரணம் என்பதை அறிய குடும்ப பின்னனியைப் பற்றிய விவரங்களை அவன் தந்தையிடம் சேகரித்தேன்.
அவன் தந்தைக்கு தற்போது நாற்பத்தி ஏழு வயது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. முதல் பெண் எந்த பிரச்சனையும் இன்றி எட்டாம் வகுப்பில் நன்றாக படித்துக்கொண்டு இருக்கிறாள். இரண்டாவது மகன் பிறப்பதற்கு முன் அவர் மனைவி இரண்டு முறை கர்ப்பம் தரித்து குழந்தை வேண்டம் என கருக்கலைப்பு செய்து கொண்டிருக்கிறாள். இச்சிறுவன் மூன்று மாதம் கருவாக வயிற்றில் இருந்த போதும் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்காக மருந்துகளை உட்கொண்டிருக்கிறார். கரு கலையவில்லை என்பதால் சரி இருந்துவிட்டு போகட்டும் என நினைத்து குழந்தயை பெற்றுகொண்டிருக்கிறார்.
சிறுவனின் தாய் தந்தையர் இருவரும் துவக்கப்பள்ளி வரை மட்டுமே கல்வி கற்றுள்ளனர். அவர்கள் இருவர் குடும்பத்திலுமே கல்வி கற்றவர்கள் குறைவு. பெரும்பானமையான ஆண்கள் விவசாயிகள். பெண்கள் வீட்டிலிருப்பவர். ஆயினும் இவர்கள் இருவர் குடும்பத்திலுமே மனவளர்ச்சி குன்றியவர் என யாரும் கிடையாது.
சிறுவனின் மனவளர்ச்சியின்மைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு தலைமுறையில் மனவளர்ச்சி குன்றியவர் இருந்திருக்கலாம். பல தலைமுறைகுப் பிறகு இவர்கள் குழந்தை விஷயத்தில் மரபணு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். கருவில் குழந்தை இருந்த போது கருக்கலைப்புக்காக உட்கொண்ட மருந்து எதேனும் குழந்தையின் மூளையில் உள்ள செல்களை கொன்று அதன் மூலம் மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இச்சிறுவன் பிறக்கும் போது அவன் தந்தைக்கு ஏறக்குறைய நாற்பது வயது. வயதான தாய் அல்லது தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மன வளர்ச்சி குன்றிப்போக அரிதான வாய்ப்பு உள்ளது. இவற்றில் எது உண்மையான காரணம் என்பதை உறுதியாக கூறுவது இயலாது. எது வேண்டுமனாலும் காரணமாக அமைந்து இருக்கலாம்.
குழந்தைகளின் ஐக்யூ பிறப்பிலேயே குறைவாக இருப்பின் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்க இயலாது. அவர்கள் சொல்லிக்கொடுத்து மேம்படுத்த வேண்டியவர்கள். அல்லது பயிற்சி கொடுத்த மேம்படுத்த வேண்டியவர்கள். எந்த வகையில் அடங்குகின்றனர் என கண்டறிந்து தக்க கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண்டும். சரியான சூழ்நிலையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை வளர்ப்பது மிகவும் முக்கியம். இச்சிறுவனை மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு எனவுள்ள சிறப்பு பள்ளியில் சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும். சாதாரண பள்ளியிலும் படிக்க வைக்கலாம் ஆனால் ஆசிரியர்கள் இச்சிறுவனின் மனவளர்ச்சி குறைப்பாட்டை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவனுக்கு கல்வி புகட்ட வேண்டும்.
நன்கு விவரங்களை சேகரித்து நல்ல பள்ளியில் சேர்த்து நல்ல சூழ்நிலையில் வளர்த்தால் இச்சிறுவனை சாதாரண குழந்தைகளைப்போல் வளர்த்து ஆளாக்கி விடலாம் என்பதைக் கூறி சில மன வளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளிகளின் விலாசங்களையும் கொடுத்து அச்சிறுவனையும் அவன் தந்தையையும் அனுப்பி வைத்தேன். |