வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. எழுத்தாளர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தொடர் பற்றி
---------------------


தமிழ் எழுத்தாளர்களை பற்றிய முழுமையான தொகுப்பை உருவாக்குவது என்பது இமைமுடியை கட்டி இமயமலையை இழுப்பதற்கு ஒப்பாகும். இந்த பேருண்மை புரிந்தும் நாங்கள் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருப்பதற்குக் காரணம், எவ்வித சார்பும் அற்று இதுவரை இதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தான். இதுவரை நிகழ்ந்துள்ள தொகுப்பு முயற்சிகள் ஏதேனும் ஒரு துறை சார்ந்தோ, பிரிவு சார்ந்தோ, அல்லது ஒரு இசம் சார்ந்தோ மட்டுமே நடந்துள்ளன. நாங்கள் எந்த இசத்துக்குள்ளும் சிக்காதவர்கள். இப்பணி தமிழின் செழுமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சிறிய தொடக்கப்புள்ளி. படைப்பாளிகளுக்குள்ளான பகிரதலுக்கும், படைப்பு மேம்பாட்டுக்கும் இது உதவக்கூடும்.

இதுவும் பல காரணங்களால் சர்ச்சைக்குள்ளாகலாம். ஆனால் தவறுகள் சுட்டப்படுமானால் அவைகளை திருத்திக்கொள்வதில் நமக்கு எந்த பிரச்னையும் இருக்கப்போவதில்லை. கூடுமானவரை அத்தகைய சூழல் ஏற்படாத வண்ணம் உழைக்க சித்தமாக இருக்கிறோம். இது நீண்டகால வேலை. உங்களின் விமர்சனங்கள் இப்பணியை மேம்படுத்தவும், எங்களை ஊக்கப்படுத்தவும் உதவும்.

மூன்று பிரிவாக எழுத்தாளர்களை வரிசைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 1. பாரதிக்கு முன்னான எழுத்தாளர்கள். 2 பாரதிக்கு பின்னான எழுத்தாளர்கள். 3. சமகால எழுத்தாளர்கள். தொடக்கத்தில் வரிசைப்படுத்துவதில் சில தவறுகள் நேரலாம். ஆனால் எதிர்காலத்தில் உன்னதமான வெளிப்பாடாக இது அமையும் என்று நம்புகிறோம். அதைக் காலமும், வாசகர்களும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள்.

 

 

 
     
     
     
   
எழுத்தாளர்கள்
1
 

ஆசிரியர் பற்றி

முடச்சிக்காடு புதியபாரதி

எழுத்தால் இந்த சமூகத்தை புணரமைக்க முடியும என்று நம்பும் இளம் பத்திரிகையாளர். பெரும் பின்புலம் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து பலத்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவரை தற்காலிகமாக மீட்டுள்ளது சென்னை மாநகரம். அரசியல் ஈடுபாடு மிக்கவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

 
   
   
  ---------------------------------  
 

புதுமைப்பித்தன்

உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

 
  ---------------------------------  
  ல. ச. ராமாமிர்தம்  
 

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. லா. சா. ராமாமிர்தம் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

 
  ---------------------------------  
  சி.சு.செல்லப்பா  
     
 

சி.சு.செல்லப்பா தமிழின் சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் வாயில்

ஸ்டாலின் சீனிவாசன்

முடச்சிக்காடு புதியபாரதி,  ilamurasu@gmail.com  

தமிழ் இலக்கியம் மற்றும் இதழியல் துறைகளில் தவிர்க்க முடியாத மற்றுமோர் ஆளுமை சீனிவாசன். சிறுகதை மற்றும் கவிதை இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய மணிக்கொடி இதழின் பிதாமகன்களில் முதன்மையானவர். கம்பீர தேகம், ஆர்ப்பரிக்கும் மீசை என மொத்த உருவமும் கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினை நினைவூட்டுவதால் நெருங்கிய நண்பர்களால் ஸ்டாலின் சீனிவாசன் என்றும், இலக்கிய உலகில் மணிக்கொடி சீனிவாசன் என்றும் அழைக்கப்படுபவர்.

உணர்வை தட்டியெழுப்பும் வன்மை மிகுந்த எழுத்தால் சுதந்திரப் போரை உக்கிரப்படுத்தியவர். தஞ்சாவூரை அடுத்துள்ள சீர்காழியில் 1899, மே 30ம் தேதி அன்று பிறந்தார் சீனிவாசன். தந்தை வெ.குப்புச்சாமி சாஸ்திரி. தாய் பாகீரதி அம்மாள்.

தொடக்க கல்வியை சீர்காழியிலும், பட்டப்படிப்பை சென்னை, மாநிலக் கல்லூரியிலும் முடித்த சீனிவாசனுக்கு இதழியல் துறையில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. டெய்லி எக்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழில் அவரது இதழியல் பணி தொடங்கியது. சன், டான் ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளில் பணி புரிந்தார். அவரது எழுத்துக்களில் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கை நெடி அதீதமாக இருந்தது. எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல், தனக்கு சரியெனத் தோன்றியதை தைரியமாக எழுதிய சீனிவாசனுக்கு இதழியல் உலகில் மிகுந்த மரியாதை இருந்தது. மும்பையில் ஃப்ரீபிரஸ் என்ற இதழில் பணிபுரிந்த போது, அவரது எழுத்து பிரிட்டிஷ் அரசால் ஆட்சேபிக்கப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தின் பிரசாரக் கருத்துக்களை தனது எழுத்தில் முன்நிறுத்திய சீனிவாசனை, ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டி நாசிக் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. சீனிவாசன் அந்த தண்டனையை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.

சிறையை சீனிவாசன் கல்விக்கூடமாக மாற்றிக்கொண்டார். நிறைய வாசித்தார். தத்துவமேதை பிளேட்டோவின் தத்துவங்களை மொழிபெயர்த்தார். அரசியல், சமூகம் சார்ந்து சில நூல்கலையும் எழுதினார்.

நாசிக் சிறைவாசம் சீனிவாசன் பற்றி நாடு தழுவிய கவனத்தை உண்டாக்கியது. அவரது எழுத்துக்கு வரவேற்பும், மதிப்பும் கூடியது. விடுதலை செய்யப்பட்ட சில மாதங்களில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார் சீனிவாசன். ஏற்கனவே தனக்கு அறிமுகமான கருத்தொத்த நண்பர்களான வ.ராமசாமியையும், டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் சந்தித்தார். மற்றவர்களின் இதழ்களில் பணியாற்றுவதை விட நாமே ஏன் ஒரு இதழைத் தொடங்ககூடாது என்ற கேள்வியை முன்வைத்து மூவரும் விவாதித்தினர். முடிவில் இலக்கியம் சார்ந்தும், சமகால சமூக பிரச்னைகளை முன்னிறுத்தியும் ஒரு இதழ் தொடங்க முடிவெடுத்தனர்.

லண்டனில் இருந்து வெளிவந்த சன்டே அப்சர்வர் இதழை ஒத்து மணிக்கொடி சிற்றிதழை 1933, செப்டம்பர் 17ம்தேதி தொடங்கினார்கள்.

"பொதுவாழ்விற்கு கண்ணும், காதும் பத்திரிகை தான். இந்நாட்டில் இன்று தோன்றி பயன்தந்து கொண்டிருக்கும் எல்லா பொது இயக்கங்களுக்கும் பத்திரிகை தான் ஆதாரம். இத்துறையில் சேவை செய்து வரும் மூத்த பத்திரிகைகளோடு மணிக்கொடியும் இணைகிறது. மொத்த பாரத்தில் ஒரு பாகத்தை மணிக்கொடியும் சுமக்கும். தூய்மையையும், நேர்மையையும், வீரத்தையும், மக்களிடம் பரப்புவதே மணிக்கொடியின் நோக்கம்" என்று முதல் இதழில் தலையங்கம் தீட்டி இதழின் கொள்கையை வெளிப்படுத்தினார் சீனிவாசன்.

தொடக்கத்தில் மணிக்கொடிக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தாலும் தொடர்ந்து நடத்துமளவுக்கு பொருளாதாரப் பின்புலம் இல்லாததால் 6 மாதத்திலேயே தள்ளாடத் தொடங்கியது. ஆனால் சீனிவாசன் இதழை தொடர்ந்து நடத்துவதில் உறுதியாக இருந்தார். மணிக்கொடியை வ.ரா, சொக்கலிங்கம் ஆகியோரின் பொறுப்பில் விட்டுவிட்டு மும்பைக்கு சென்ற சீனிÔவாசன், அங்கு ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி பொருளீட்டி மணிக்கொடிடியின் ஜீவன் வளர்த்தார். இவ்வாறு 2 ஆண்டுகள் தட்டுத்தடுமாறி பயணித்தது மணிக்கொடி இதழ். இடையே, சொக்கலிங்கத்துக்கும், வ.ராவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. வ.ரா மணிக்கொடியில் இருந்து விலகி, வீரகேசரி இதழில் பணியாற்ற கொழும்பு போய்விட்டார். சிறிது காலத்திலேயே சொக்கலிங்கமும் மணிக்கொடியில் இருந்,து விலகி தினமணி இதழின் ஆசிரியராகி விட்டார். மும்பையில் இருந்த சீனிவாசன், இனிமேல் மணிக்கொடியை நடத்துவது சாத்தியமில்லை என்று உணர்ந்து அந்த இலட்சிய இதழை நிறுத்தி விட்டார். இது குறித்து தனது வருத்தத்தை பின்வருமாறு பதிவு செய்தார் சீனிவாசன்.

"நான் ஒரு லட்சியக்கூடாரம் அடித்தேன். திடீரென வீசிய ஒரு காற்று அந்த கூடாரத்தின் முளைகளை பிய்த்துக் கொண்டு போய்விட்டது. டேராத் துணியும் காற்றோடு போய்விட்டது.."

2 ஆண்டுகள் மூவர் கூட்டணியில் வெளிவந்த மணிக்கொடி, தமிழ் இலக்கியத்தில் அசைக்க முடியாத ஆழமான பல பதிவுகளை விதைத்து சென்றது. இன்றளவும் மணிக்கொடிக் காலம் என்று இலக்கிய வரலாறுகள் பேசும் அளவுக்கு அதன் வீச்சு கனமாக இருந்தது. பல புதிய படைப்பாளிகளை தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியது மணிக்கொடியின் பிரதான சாதனைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

மணிக்கொடி இதழ் தனது மனதில் கருக்கொண்ட விதம் பற்றி சீனிவாசனே சொல்லக்கேட்பது சுகம்.

"ஃப்ரீபிரஸ் இதழில் நிருபராக வேலை செய்தபோது, 'அப்ஸர்வர்' பத்திரிகை என்னை வெகுவாக கவர்ந்தது. அதன் பரந்த நோக்கம், கொள்கை திட்டம், செய்திச்செறிவு, கலையார்வம், கட்டுரை வன்மை ஆகியவை அந்த பத்திரிகை மீது மோகம் கொள்ளச் செய்தது. ஞாயிறு தோறும் வரும் வார இதழ் அது. அதைப் போல தமிழில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 1930ல் உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தீவிர தேசிய லட்சியங்களை ஆதரிக்கவும், மக்களிடன் அந்த வேட்கையை கொண்டு செல்லவும் தமிழில் பத்திரிகைகள் இல்லை. சொக்கலிங்கம் தமிழ்நாட்டை விட்டு விலகி, காந்தி என்ற காலணா விலை பத்திரிகையை நடத்தி வந்தார். சுதந்திரச் சங்கும், காந்தி இதழுமே அப்போது காங்கிரஸ் போராட்டத்தை ஆதரித்தன. இந்த தருணத்தில் ப்ரீபிரஸ் இதழில் எழுதிய கட்டுரைகளுக்காக கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டேன். சிறைவாசத்தை முடித்து விட்டு சென்னை வந்தேன். அப்போது வ.ரா திருப்பழனத்தில் இருந்தார். போய் அவரை அழைத்து வந்தேன். வ.ரா, சொக்கலிங்கம், நான் மூவரும் லட்சியப் பத்திரிகைக்கு திட்டமிட்டோம். இதழுக்கு பெயரிடுவது பற்றி தீவிரமாக விவாதித்தோம். ஒருநாள் கம்பனை புரட்டிபோது, அவன் மிதிலையில் மணிக்கொடிகளை கண்டதாகச் சொன்னது மனதை நெருடியது. அன்றுமாலை, கோட்டைக்கு அருகே கடல்மணலில் அமர்ந்து நாங்கள் மூவரும் பத்திரிகையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கோட்டை கொடிமரத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடி திடீரென கீழே அறுந்து விழுந்தது. அதைக்கண்ட எங்களுக்கு உணர்ச்சி பொங்கிற்று. அகன்றது ஆங்கிலக்கொடி. இனி அங்கே பறக்க வேண்டியது நம் மணிக்கொடி என்றேன். அப்போது தான் இதழுக்கும் மணிக்கொடி என்று பெயர் வைக்க முடிவு செய்தோம். இதழின் கொள்கையாக, பாரதியின் சத்தியப் பிராமண சொற்பதங்களான, பொருள் புதிது, முறை புதிது, நடைபுதிது ஆகிய பதங்களை வைப்பதென முடிவெடுக்கப்பட்டது.."

பிற்காலத்தில் சீனிவாசன் திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும் பணியாற்றினார். பராசக்தி படம் வெளிவந்த போது தணிக்கைக்குழுவுக்குள் பலத்த கருத்து வேறுபாடுகள் தோன்றின. படத்தை முடக்கவும், பல வசனங்களை தடை செய்யவும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சீனிவாசன், கடுமையாக வாதிட்டு பராசக்தியை சேதாரம் இல்லாமல் வெளிக்கொணர்ந்தனர். இது தொடர்பாக கணையாழி செப்டம்பர் 2000 இதழில், சிட்டி.பெ.கோ சுந்தர்ராஜன் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி கீழே.

"தணிக்கை அதிகாரியாக இருந்த சீனிவாசன் அனுமதித்த ஒருபடம் சர்ச்சைக்கு உள்ளாகி திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டது. அதுதான் பகுத்தறிவு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பராசக்தி. நமது கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் குறிப்பாக பார்ப்பனியத்தையும் சாடும் முறையில் அந்தப்படம் தயாரிக்கப்பட்டது என்று சிலர் கருதினார்கள். திரைப்பட தணிக்கைக்குழுவில் அரசாங்க முறையில் அல்லாமல் மக்கள் பிரதிநிதியாக இடம் பெற்றிருந்த பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவர், சீனிவாசனை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ராஜாஜி கூட தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு இதுபற்றி புகார் எழுதினார். காஞ்சி பராமாச்சாரியாரும் தன் பிரிதிநிதிகளை அனுப்பி படம் பார்க்க வைத்தார். ஆனால் அந்த பிரதிநிதிகள் படத்தில் எந்த ஆட்சேபகரமும் இல்லை என்று மடாதிபதிக்கு அறிக்கை அளித்தார்கள்..:"

ஒரு இதழாளனாக, போராளியாக, எழுத்தாளனாக, அரசியல் விமர்சனாக, திரைப்பட அறிஞனாக பல பரிமாணங்களில் தன் பெயரை ஆழப்பதிவு செய்தவர் சீனிவாசன். அவரின் ஆளுமைத்திறன் இன்றைய சலசலப்பு இலக்கியவாதிகளுக்கும், மிதப்பு இதழாளர்களுக்கும் ஒரு பாடம்.

சீனிவாசன் சிறந்த இதழியலாளர், எழுத்தாளர் மட்டுமின்றி, இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதத்தூண்டும் சிறந்த முன்னோடியும் கூட. ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இலக்கிய கூட்டம் ஒன்றை நடத்துவார். இக்கூட்டத்தை வெள்ளிவட்டக் கூட்டம் என்பார்கள். இக்கூட்டத்தில் தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், சிட்டி உள்ளிட்ட பல படைப்பாளிகள் பங்கேற்று தங்கள் படைப்புகளை கூர் தீட்டிக் கொண்டார்கள். அழுத்தமான விவாதங்கள், ஆழமான விமர்சனங்கள், ஆவேசமான கருத்துப் பரிமாற்றங்கள் என மிகப் பயனுள்ள இலக்கிய வட்டமாக அது வளர்ந்தது.

தொடர்புடைய சுட்டிகள்: 

http://www.maalaimalar.com/2009/12/24114044/sivaji.html


http://maravantu.blogspot.com/2005_05_01_archive.html


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.