|
'பேனா மன்னன்' என்று இலக்கியம் மற்றும் இதழியல் உலகத்தால் அழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் தன் இறுதிக்காலம் வரையிலும் போராளியாகவே வாழ்ந்தவர், சுதந்திரப் போரில் சொக்கலிங்கம் தனது எழுத்தால் எழுப்பிய கனல், போராட்டத்தை நின்று கனன்றெரியச் செய்தது. சொக்கலிங்கத்தின் போராட்ட வாழ்க்கையை ஆங்கிலேயர்களுக்கு எதிராக, வணிக இதழ்களின் சுரண்டலுக்கு எதிராக என இரண்டு வகையாக பிரித்து அணுகலாம். காந்திய அரசியலில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21 வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார். |
காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் முதன்மை பெற்று சிறை சென்றார். இதழியல்துறை வணிகமாக தலையெடுக்காத காலக்கட்டத்தில், அத்துறைக்கு வந்த சொக்கலிங்கம் வெளிப்படையாகவும், நேரடியாகவும் ஒரு கருத்தை சொல்லும் இதழியலின் புதிய வடிவத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தார். சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த தமிழ்நாடு இதழில் தான் சொக்கலிங்கத்தின் இதழியல் அறங்கேற்றம் நடந்தது. தமிழ்நாடு இதழில் தன்னை இணையற்ற பத்திரிகையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம், வரதாராஜூ நாடுயுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்நாடு இதழில் இருந்து வெளியேறினார். பின்னர், 'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார்,. பின்னர், வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி இதழை தொடங்கினார்.
ஓரிரு வருடங்களில் மணிக்கொடி இதழில் இருந்து வெளியேறி, எழுத்தாளர் சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராக பொறுபேற்றார்,
'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும் தான்' என்று முதல்நாள் வெளிவந்த தினமணியின் தலையங்கத்தில் எழுதி தினமணியின் தரத்தையும், கொள்கையையும் திறன்பட வெளிப்படுத்தினார் சொக்கலிங்கம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலைப் போராளிகளின் குரலாகவும், ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகவும் தினமணியில் தலையங்கங்களை தீட்டினார் சொக்கலிங்கம்.
சொக்கலிங்கம், தினமணியில் ஆசிரியராக இருந்த தருணத்தில், ஏ.என்.சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். பத்திரிகையாளர் சதானந்தத்தால் தொடர்ந்து தினமணியை நடத்த முடியாமல் போனதன் காரணமாக, கோயங்கோ குழுமத்திற்கு கைமாறியது அந்நாளிதழ். அதன்பிறகு நிர்வாகத்தில் கடைபிடிக்கப்பட்ட நெருக்கடியான அணுகுமுறைகள், ஆசிரியர் குழுவை நிர்வகித்த விதம் ஆகியவை பிடிக்காமல் தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம்,. புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் சொக்கலிங்கத்துடனே வெளியேறினர். பின்னர் தினசரி என்ற நாளிதழை தொடங்கினார். வியாபாரத்துக்காக சமரசங்களை கையாளாமல், நேர்மிகு பார்வையுடன் தினசரியை நடத்தியதால் சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.
சொக்கலிங்கம் போற்றத்தகுந்த பத்திரிகையாளராகவும், சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்ததோடு, தனக்குக் கீழ் பணியாற்றிய பிற பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மிகவும் கவலைப்பட்டவர்,.பிற படைப்பாளர்கள் மீதான சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்பினார், இதழியல் மற்றும் இலக்கியத்துறையில் தொழிற்சங்க மனோபாவத்துடன் இயங்கினார்.
எழுத்தாளர்களின் பதிப்புரிமை, ஊதியம் போன்றவற்றை முறையாகவும், முழுமையாகவும் பெறுவதற்காக நிர்வாகங்களுடன் போராடினார். இவர் தினமணியில் பணியாற்றிய நேரத்தில், ஒரு தயாரிப்பாளர் ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை திருடி திரைப்படமாக்கி ஏமாற்ற முயன்றதை அறிந்து, அக்கதையை தினமணியில் தொடராக வெளிவரச்செய்து பதிப்புரிமையை அந்த எழுத்தாளருக்கே பெற்றுத்தந்தார்.
புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க முழுப்பெரும் காரணம் சொக்கலிங்கம் தான். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட தான் பணியாற்றி அத்தனை இதழ்களிலும் புதுமைபித்தனுக்கு வாய்ப்பளித்தார்.
எந்த இதழில் பணியாற்றினாலும், பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் சுதந்திரத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் செயலாற்றியனார். சிறந்த இதழியலாளராக மட்டுமில்லாமல் சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கி.யவாதியாகவும் திகழ்ந்தார். லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான வார் அன்ட் பீஸ் நாவலை போரும், அமைதியும் என்ற பெயரில் தமிழாக்கம் செய்தது மிகச்சிறந்த இலக்கியப்பணியாகும். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை பரிமாணத்திலும் வெகுசிறப்பாக பங்களித்துள்ளார் சொக்கலிங்கம்,.
எழுத்தாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் பதிப்பகங்களை அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டித்தவர் சொக்கலிங்கம். எழுத்தாளரிடமே படைப்பையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு கொஞ்சமே கொஞ்சமாக புத்தகங்களை வழங்கிவிட்டு கொள்ளைக்காசு பார்க்கும் பதிப்பகங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இன்றைக்கும் சொக்கலிங்கத்தின் குரலுக்கு தேவையிருப்பது குறிப்பிடத்தக்கது.
உதவி ஆசிரியர்களின் ஊதியக்குறைபாடு காரணமாக தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், தனது ராஜினாமா குறித்து எனது ராஜினாமா என்ற நூலை எழுதினார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தினமணி நிர்வாகம் தன்னிலை விளக்கப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டது. சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் முதன்மை சீடரான சிவராமன் வந்தார்,
தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், பிறிதொரு நேரத்தில் மீண்டும் தினமணிக்கு பணிக்கு வர நேர்ந்த சூழலில் தினமணி நிர்வாகம் அவருக்கு அலுவலக நிர்வாகத்தில் இடம் அளித்தது குறிப்பிடத்தகுந்தது.
டி.எஸ்.சொக்கலிங்கம் மணிமலர், பேனா மன்னர் சொக்கலிங்கம் (டி.ஜி.ஏகாம்பரம்), டி.எஸ்.சொக்கலிங்கம்-அரசியல், இதழியல் (பா.மமதிவாணன்) உள்ளிட்ட பல நூல்கள் சொக்கலிங்கத்தின் இதழியல், சமூக வாழ்க்கைக்கு சான்றாக உள்ளன.
தன் இறுதிக்காலம் வரையிலும் போராளியாக வாழ்ந்து மறைந்த சொக்கலிங்கம், இதழியல், இலக்கியம் மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு குறிப்பிடத்தகுந்த பங்காற்றிய மாமனிதர் என்றால் மிகையில்லை..
தொடர்புடைய சுட்டிகள்:
http://www.kalachuvadu.com/issue-81/mathippurai02.htm
|