வெங்காலூர் என்றால் சிலருக்கு அது எந்த ஊர்? என்று வியப்பாகக் கேட்கத் தோன்றும். கர்நாடக மாநிலம் பெங்களூரு தான் அது. அங்கிருந்து எட்டாம் ஆண்டாக ‘தமிழர் முழக்கம்’ என்னும் இதழ் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதழின் ஆசிரியராக வேதகமாகும், இதழ் பொறுப்பாளராக பால – நல்லபெருமாளும் உள்ளனர். கருநாடகத் தமிழரின் உரிமைக்குரல் என்ற முழக்கத்தோடு கருநாடகத் தமிழர் இயக்கத் திங்கள் இதழாக வருகிறது. கருநாடகத்தில் வாழும் தமிழருக்காகக் குரல் எழுப்புவதாகக் கூறிக்கொண்டாலும் ஒட்டுமொத்த தமிழருக்காகவும், தமிழ் மொழிக்காகவுமே பாடுபடுகிறது.
உழைப்பதற்காகத் தமிழன் எங்கெல்லாமோ சென்று, உதைபட்டு வாழ்விழந்து பரிதவிக்கிறானோ அங்கெல்லாம் நிகழும் இன, மொழி, அரசியல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரிமைக் குரலை உயர்த்தி ஒலிக்கிறது. மூடி மறைக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளையும், உண்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
ஒவ்வொரு திங்களும் இதழின் அட்டையில் உயர்வான கருத்துக்களை முன் வைக்கும் அருமையான கவிதை இடம் பெறுகிறது. காவிரி நதிநீர் சிக்கல், நீதிமன்ற தீர்ப்புகளின்போது கருநாடகத்தில் உருவாக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள், நிகழும் வெறியாட்டங்கள், அங்கு வாழும் தமிழர்கள் படும் துயரங்கள் என இதழின் மூச்சாக எடுத்துக் கொள்ளப்பட்டு உரிமைகளை உணர்த்துகின்றது ஆசிரியவுரை.
தனிச் சிறப்புமிக்க ஆசிரியர் உரைகளைப் பற்றி ‘தமிழர் முழக்கம்’ இதழைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் (இதழ் மார்ச்சு – ஏப்ரல் 2008) கட்டுரையில் பாவலர் அரசேந்திரன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
“ஆசிரியர் உரைகள் அனைத்தும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. அவைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிட்டால் மிக்கப் பயனுடையதாக விளங்கும். குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பயன் அளிக்கும். இம் மாநிலத்தில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் எல்லா வகையான செயல்பாடுகளையும் போக்கினையும் கண்டுணர்ந்து அவைகளில் உள்ள மெய்ப்பொருள்களை விளக்கித் தமிழ் மக்களிடையே பாதுகாப்புணர்வையும், விழிப்புணர்வையும், எழுச்சியையும் உண்டாக்கி வளர்க்கின்றன’.
இதழ் தோலும் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் எழுதப்பட்டுள்ள ஆசிரியவுரை மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்களை மெய்ப்பிக்கின்றன.
இதழ் முழுவதும் கட்டுரைகளும், மரபுக் கவிதைகளுமே கோலோச்சுகின்றன. பெரும்பாலான கட்டுரைகள் கருத்து விளக்கங்களும், விவாதத்திற்குரியவையுமாக இருப்பதால் தொடர் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இணைய தளத்திலிருந்தும், மற்ற இதழ்களிலிருந்தும் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் குரலெழுப்பும் கட்டுரைகளை எடுத்து மறு பிரசுரம் செய்கின்றனர்.
முத்து செல்வன், மறை முதல்வன், பறம்பை அறிவன், பொறிஞர் அகன், பாவலர் கருமலைத் தமிழாழன், புலவர் மகிபை பாவிசைக்கோ, புலவர் தி.நா. அறிவுஒளி, முனைவர் தமிழப்பனார், பிரகாசம், கோகுலன், பருத்தியன், பாவலர் வீ. இரத்தினம், ஆரணி அறவாழி, புதுவைத் தமிழ்நெஞ்சன், உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலர், கவிதைச் சித்தர் இளங்கம்பன், பரணிப்பாவலன் ஆகியோரது கவிதைகளும், கட்டுரைகளும் தமிழ் மொழியின் செழுமையை கருத்துச் செறிவோடு உணர்த்துகின்றன.
தமிழா நீ ஒன்றுபடு!
ஈழத்தில் போராடும் புலிப் படைகள்
இராவணின் வழித்தோன்றல் மறக்க வேண்டாம்
ஆழ்கடலைத் தாண்டிவந்த அடிமை நாய்கள்
சீழ்போன்ற சிங்களரைத் துடைத்து வீசு!
பாழான பகை நம்மைச் சுற்றிச் சூழ்ந்து
பகைவர்களாய் அரசியலில் மாறி விட்டோம்
வேழத்தின் பிளிறலெனக் குரலைத் தந்து
ஈழத்தின் விடியலுக்கு வழியைத் தேடு!
தமிழா நீ தாய்மொழியை மறந்தி டாதே
தமிழாய்ந்த தமிழனாகத் தலைநி மிர்ந்து
தமிழ்கின்ற சங்கத்தமிழ் வீரம் கற்றும்
கடைக்கால இலக்கியங்கள் பலவும் கற்றும்
தமிழர்களின் மரபுகளை உலகம் காண
இமைபோன்று இனம் காக்க எழுந்து நிற்பாய்!
நமக்கென்ற வரலாற்றின் புகழைக் காப்போம்
தமிழ்ஈழம் விடுதலைக்குக் குரல்கொ டுப்போம்!
தமிழாநீ ஒன்றுட்டு தமிழால் சேர்ந்து
தயக்கமின்றிப் போராடு இனைத்தைக் காக்க!
உமிழ்கின்ற எச்சிலான பகையைத் தள்ளு
உறவான தமிழனத்தை முனைந்து காப்போம்!
அமிழ்கின்ற சாதிமதப் பூசல் தாண்டி
அனைவரும் தமிழரென்றே ஒன்று கூடு
குமிழ்போன்ற அரசியலின் காட்சி தாண்டி
குலமென்றே தமிழரென பகைந டந்து!
போர்முனையின் தாக்கத்தால் துவள வேண்டாம்!
வாள்முனையாம் தூவல்முனை ஒன்றால் தாக்கு!
ஆரணி அறவாழியின் கவிதை, நடப்பியலுக்கு ஏற்ற கருத்தையும், தமிழின் இனிமையையும் உணர்வூட்டும் எழுச்சியையும் ஒருசேரத் தரும் கவிதை.
வெற்று அலங்காரங்களோ, மயக்கமோ தராத செறிவார்ந்த தமிழ்ப் பாக்களைத் தரக்கூடிய சிற்றிதழ்களில் தமிழர் முழக்கம் இதழும் ஒன்றாகத் திகழ்வதில் தமிழை நேசிப்போர் பெருமைப்படலாம்.
பொறிஞர் அகனின் அக்கரைப் பச்சைப் பித்தும், அயலின் இச்சைப் பணியும் என்ற நீண்ட நெடிய கட்டுரை தமிழ்க்கேடு புரிந்தோரைப் பட்டியலிட்டுக் கூறுகிறது.
ஈழப் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை மதங்களால் ஏற்பட்ட சீர்கேடு என சமுதாய விழிப்புணர்வுக்குத் தேவையான கருத்துக்களையே இதழின் கொள்ளையாகக் கொண்டுள்ளனர். மேல் அட்டை முதல் பின் அட்டை வரை இலகுவாகப் படித்துத் தூக்கிப்போடும் இதழ் அல்ல ‘தமிழர் முழக்கம்; வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம் உரிமைகளை உணர்ந்து கொள்ளலாம்; என்றைக்கும் உதவும் வகையில் உண்மைகளை உரைப்பதினால் இதழினைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
இதழ் ஆசிரியர்: வேதகமாகு
இதழ் முகவரி:
Editor, THAMIZHAR MUZHAKKAM,
NO.487, 15TH CROSS, II STAGE,
INDIRA NAGAR,
BANGALORE – 560 038.
PH. 080-2525 0252/09341875503 FAX: 080-25290919.
email : thamizharmuzhakham@yahoo.com
|